பக்குவம் - பாகம் 8

கிருஷ்ணர் : கிருஷ்ணரும், ‘என்ன உத்தங்கரே, உங்களுக்கு விஷயம் தெரியாதா… கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்த, பீஷ்மர், துரோணர், விதுரர், கிருஷ்ணர் அடங்கிய குழு எவ்வளவோ முயற்சி செய்தோம். துரியோதனனின் பொறாமையும்,பிடிவாதமும், சமாதானத்தை மறுத்து விட்டது…. இறுதியில் போர் மூண்டது…. கௌரவர்களில் பீஷ்மர் உட்பட அனைவரும் மாண்டனர். தர்மபுத்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து விட்டுத்தான் துவாரகை திரும்புகிறேன்’ என்று எடுத்துச் சொல்ல, அதற்கு உத்தங்கர், நீ இருந்தும் அவர்கள் பகையை மறந்து போரைக் கை விடவில்லையென்றால்…, இந்தப் போருக்குக் காரணமே நீதானோ என்று சந்தேகிக்கிறேன்… என் தவத்தின் வலிமையால், இதோ உம்மை சபிக்கப் போகிறேன்’ என்று கோபப்பட்டார். கிருஷ்ணரும் மெல்லச் சிரித்து விட்டு, ‘கடுமையாகத் தவம் புரிகிறவர்கள், என்ன நடந்திருக்கும் என்பதைக் கூட அனுமானிக்க முடியாமலா இருந்திருப்பார்கள்… நீரோ, தகவல் சொன்னவரையே சம்பந்தப்படுத்தி கோபப்படுவதால், அந்தக் கோபம் என்னை எதுவும் செய்து விடாது… நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்…. கிருஷ்ணராகிய நான் மனிதனாகப் பிறந்து, சகல குணங்களையும் வெளிப்படுத்தக் கூடிய மனிதர்களுடன் வாழுகிறேன். மனிதர்கள் மத்தியில், மனிதனாகத்தான் நடந்து கொள்வேன். அதன்படிக்கு, பாண்டவர்களின் உரிமைகளை பாண்டவர்களிடமே திருப்பித் தர வேண்டி, அஸ்தினாபுரத்திற்கு நானே தூதுவனாகச் சென்றேன். அங்கு பீஷ்மர், துரோணர், விதுரர், மற்றும் கிருஷ்ணராகிய நானும் எவ்வளவோ தர்மத்தை எடுத்துச் சொல்லியும், உங்கள் குலமே நாசமடையும் என்று எச்சரித்தும், துரியோதனன், ஒரு ஊசிமுனையால் குத்துமளவுக்கு நிலம் கூட பாண்டவர்களுக்குத் தர முடியாது…. யுத்தம் தான் இறுதி முடிவு என்று தீர்மானமாகக் கூறி விட்டான். அதற்குப் பிறகும், அவனை மிரட்டும் வகைக்கு, விஸ்வரூபம் எடுத்துக் காட்டினேன்…. என்னுடைய விஸ்வரூபத்தை, ‘மாயாஜாலம்’ என்று பரிகாசம் செய்தான். அவனுடைய பொறாமையும், அந்தப் பரிகாசமும், போர்க்களம் வரை சென்றது…, அதர்மம் அழிந்தது…, தர்மம் ஜெயித்தது. இது எதுவும் தெரியாமல், துரியோதனனின் பேராசையை புரிந்து கொள்ளாமல், தர்மத்தின் பக்கம் நின்றவனை சபிக்கப் போகிறாராம்… இன்னுமொன்றையும் புரிந்து கொள். தவம் செய்யும் முனிவர்கள், முதலில் தன் கோபத்தை அடக்க வேண்டும்…, பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மனிதர்களை சமமாகப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடிக்கப்பட்டாலும்…, அகம்பாவம் கொள்ளக் கூடாது – என்ற இவையெல்லாம் அணிகலனாக இருக்கும் ஒரு தவத்தில் சிறந்த முனிவருக்கு, நான் ஒரு கோடிட்டுக் காட்டும் போதே, அங்கு என்ன நடந்திருக்கும் என்று அறியும் ‘பக்குவம்’ இருந்திருக்கும். நீர் இன்னும் பக்குவமடையவில்லை’ – என்று சொல்லியதும், வெட்கித் தலை குனிந்தார்.. இந்த சம்பவத்தில், ஒரு மனிதன், முனிவராய் மேன்மை நிலை அடைவதற்கு, தன் மனதை எவ்வளவு பக்குவப்படுத்த வேண்டும் என்று புரிகிறதா மேகலா… மனசைப் பக்குவப்படுத்துவது…, மனசை மட்டுமல்ல, ‘இன்னது நடக்கலாம், இன்னது நடந்திருக்கும்’ என்று யூகிக்கும் திறமையையும் பக்குவமாய் வளர்த்துக் கொள்வது….

மேகலா : வாவ்! சூப்பர் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : விசுவாமித்திரர் இன்னும் ஒரு படி மேல… வசிஷ்டரின் அசாத்திய திறமையைக் கண்டு, பொறாமையுற்று, அவரைப் போல தானும் ‘பிரம்மரிஷி’ ஆக வேண்டும் என்ற ஆசையில்…, ‘கௌசிகன்’ என்ற க்ஷத்திரியன் தவம் செய்யத் தொடங்கினார்… தவம் என்றால், கடுமையான தவம்… அவருடைய பெரும் முயற்சியைப் பாராட்டி, பரமசிவனாரும், வரம் கொடுக்கத் தயாரானார். விசுவாமித்திரருக்கு, பிரம்மரிஷியாவதென்றால், யாரும் அறியாத அஸ்திரங்களை அறிந்து கொள்வது என்று நினைத்து விட்டார் போலும்…. என்ன வேண்டும் என்று கேட்ட பரமசிவனாரிடம், யாரிடமும் இல்லாத, யாரும் அறியாத அஸ்திரங்களைத் தனக்கு அளிக்க வெண்டும் என்றுதான் கேட்கிறார்…. பரமசிவனாரும், மனமுவந்து வரங்களை அளிக்கிறார். அதைப் பெற்றுக் கொண்டு விசுவாமித்திரர் திருப்தி அடைந்தாரா என்றால், அதுதான் இல்லை. தான் பிரம்மரிஷியாகி விட்டோம் என்று தனக்குத் தானே முடிவு செய்து, வசிஷ்டரை வம்புக்கிழுக்கச் சென்றார். இஷ்வாகு குலத்திற்கே குருவாக இருப்பவர். தன்னுடைய ஆலோசனையால், சக்ரவர்த்தி தசரதனையே வழி நடத்துபவர். இவரிடம் விசுவாமித்திரரின் ‘பாச்சா’ பலிக்குமா… இங்கு வசிஷ்டர் பேச வேண்டியதில்லை… விசுவாமித்திரரின் அஸ்திரங்களை, வசிஷ்டர் கையில் வைத்திருக்கும் ‘தண்டம்’ காலி செய்து விடுகிறது… விசுவாமித்திரருக்கு ஒன்றும் புரியவில்லை. இத்தனை நாள் தவம் செய்து, சிவபெருமானிடம் வரம் பெற்றது…, இந்த அஸ்திரங்களைப் பெறுவதற்கா… ‘பிரம்மரிஷி’ ஆவதென்றால், அஸ்திரங்களைப் பெறுவது கிடையாது…. பொறுமையாய் சென்று இன்னும் முயற்சி செய்து பாருங்கள்’ என்று வசிஷ்டர் சூசகமாக அறிவித்து, அனுப்பி வைத்தார்… இப்பொழுதுதான், விசுவாமித்திரருக்குள் ஒரு வைராக்கியம் உண்டாகிறது… ‘பிரம்மரிஷி’ ஆகியே தீருவது என்று மறுபடியும் தவம் செய்தார்…. உன்னை ஒன்று கேட்கிறேன்…. ‘பிரம்மரிஷி’ என்பது, thesis எழுதி வாங்கும் பட்டமா….

மேகலா : தெரியலயே கிருஷ்ணா….

(தொடரும்)

(அடுத்த பாகத்துடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

தன்னம்பிக்கை - பாகம் 3

தன்னம்பிக்கை - பாகம் 4