பேச்சுத்தமிழ் - பாகம் 16
கிருஷ்ணர் : அப்படியென்ன அந்த பால்காரர் சொன்னார்…
மேகலா : ‘பால்கோவா கிண்டப் போறேன்னு நேத்தே சொல்லியிருக்கலாம்ல; நான் வேற பால் கொண்டு வந்திருப்பேன்ல’ – என்று சொன்னாரே பார்க்கலாம்…
கிருஷ்ணர் : ஏன்? பாலில் வேற வேற quality இருக்கா…
மேகலா : அதுதான் எனக்கும் ஆச்சர்யமாப் போச்சு… ஒரு லிட்டர் பாலுக்கு 200 gm பால்கோவா வரணும்… நான் வாங்குன பாலுக்கு 300 gm பால்கோவா வந்தே தீரணும். அது அவர் கொண்டு வரும் special பால்லதான் 300 gm பால்கோவா… நான் வாங்கினது, தண்ணி கலந்த பால்… 150 gm பால்கோவாதான் கிடைத்தது….
கிருஷ்ணர் : ஹேங்! தண்ணி கலந்த பாலா…. இப்படீலாமா குடுப்பாங்க… நாங்கல்லாம், மாட்டுக் காம்புலயிருந்து, எங்க வாயில அப்படியே பீச்சிக் குடிப்போம்... சரி…, இதுல எங்க எச்சரிக்கையா நடந்த….
மேகலா : அவர் சொன்னத வச்சி கண்டுபிடிச்சிட்டேன்ல…. அதற்கு அடுத்த வருஷத்துல இருந்து, ஆரோக்யா பால் மட்டும் தான், பால்கோவா கிண்ட வாங்குவேன்…
கிருஷ்ணர் : அப்போ, ஒரு தடவை ஏமாந்துருவீங்க…
மேகலா : ஆம், அது அப்படித்தான்… Customers-ம், வியாபாரிகளும், ‘Tom & Jerry’ மாதிரி தான் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Oh! சரி…, எனக்கு ஒரு சந்தேகம்…. ‘நாலாயிர திவ்ய பிரபந்தங்களிலும்’, ‘பெரிய புராணத்திலும்’…, இவ்வளவு ஏன், கண்ணதாசன் பாடல்களிலும், தமிழ் இத்தனை வடிவமைப்பாக இருக்கும் போது, பேச்சுத்தமிழ் மட்டும் ஏன் தனி track-ல் போகிறது…. ஏதாவது காரணம் தெரியுமா உனக்கு….
மேகலா : கிருஷ்ணா…, பொதுவாக நாம் பேசும் போது, வேகமாகப் பேசுறோம்ல… சுத்தத் தமிழில் பேசுனா, நாக்கு தடுமாறும் கிருஷ்ணா… நகைச்சுவை நடிகர் விவேக் கூட, ஒரு படத்தில், ரொம்ப comedy-யாக, மேடைத் தமிழை…, பேச்சுத்தமிழில் translate பண்ணுவாரு… ஒரு கூட்டத்தில், அரசியல்வாதியாக வருபவர், ‘அனைவருக்கும் வணக்கம்’ என்பார். மொழிபெயர்ப்பாளர்…, ‘ஹாங், அல்லாருக்கும் வணக்கம்பா’ என்பார். நான் மகிழ்ச்சியடைகிறேன் என்பதற்கு, ‘மெர்சலாயிட்டேன்’ என்பார்… இப்படி, ஒவ்வொரு வார்த்தையையும் translate பண்ணும்போதுதான் தெரியும்…., அழகுத்தமிழுக்கும், பழகுற தமிழுக்கும் எவ்வளவு தூரம் என்று…. ‘சென்னைத்தமிழ்’னு ஒண்ணு இருக்கு… ‘காலையில் சாப்பிட்டாச்சா’ என்பதற்கு, ‘நாஷ்டா துன்னுட்டியா’ அப்படீம்பாங்க… சென்னைத்தமிழ் சில இடங்களில் எனக்கே இடறும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : என்னது…, சென்னைத்தமிழ் உனக்கும் தெரியாதா…. ஆமா…, ஒவ்வொரு area-வுக்கும் ஒரு தமிழ் உண்டா….
மேகலா : அட…, ஆமாங்கிறேன்… எங்க area-வுல பேசும் தமிழ், ‘மதுரைத்தமிழ்’…. ‘நெல்லைத்தமிழ்’, ‘நாஞ்சில் தமிழ்’, ’கொங்கு தமிழ்’… என்று ஒவ்வொரு area-விலும், ஒவ்வொரு தமிழ் பிரசித்தம் கிருஷ்ணா…
மேகலா : கிருஷ்ணா…., நெல்லைத்தமிழ். அது திருநெல்வேலியிலிருந்து, எங்க area வரைக்கும் பொதுவாக பேசப்படுவது… ஒரு பொண்டாட்டி, அதிகமாக செலவழிக்கும் புருஷனைப் பாத்து பேசுறது – ‘மனம் போனபடி, கண்டமேனக்கி செலவு பண்ணிட்டு, கண்ணத்தள்ளிட்டு நிக்காதீக’…
கிருஷ்ணர் : Oh! வாவ்! வாய்க்கு வந்ததை, ‘கண்டமேனக்கி பேசாதீக’ – அப்படீன்னு சொல்வீகளோ…
மேகலா : கிருஷ்ணா…, நீ எப்ப எங்க ஊரு வாசியான…. கண்டமேனக்கி, மானாங்கண்ணியா பேசுறது, எங்க ஊர்ல பொறணி பேசுறவங்களோட வழக்கம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : மேகலா…, Please, please…, கொங்கு தமிழ்ல பேசேன்….
மேகலா : கிருஷ்ணா…., ‘கொங்கு தமிழ்’ கேட்பதற்கு மிகவும் இதமாக இருக்கும் கிருஷ்ணா…. அந்தப் பகுதி மக்கள்…, யாரையும், ‘ஏனுங்கோ’ – அப்படீன்னுதான் கூப்பிடுவாங்க… செட்டிநாட்டுத் தமிழில், வீட்டின் மரியாதைக்குரிய பெண்களை, ‘ஆச்சி’ என்று கூப்பிடுவது போல, இங்கு, ‘அம்மணி’ – அப்படீன்னுதான் கூப்பிடுவாங்க… ‘என்ர கூடப் பொறந்த பொறப்பு, நல்லா இருக்கோணுமின்னு, நான் சாமிய வேண்டிக்கிறேனுங்க’ – என்று ரொம்ப வெள்ளந்தியா பேசுவதுதான், கொங்கு தமிழின் சிறப்பு…
(தொடரும்)
Comments
Post a Comment