கதை கதையாம், காரணமாம் - பகுதி 4

மேகலா : கிருஷ்ணா! உலகத்தைச் சுற்றி வந்து, அனுபவ அறிவை வெளிப்படுத்திய முருகனும், அம்மையப்பரைச் சுற்றி வந்து, புத்தியின் கூர்மையை வெளிப்படுத்திய பிள்ளையாரும், என் கதையில் நகைச்சுவையாக தங்கள் விளையாடலை எப்படி நடத்துகிறார்கள் பார்....

கிருஷ்ணர் : என்னம்மா! உன் comedy-க்கு பிள்ளையாரையும், முருகனையும் கூட விட வில்லையா...?

மேகலா : இல்ல கிருஷ்ணா! கார்த்தி, God கதை சொல்லுங்கன்னு கேட்பான். ‘உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ....’ என்று நான் ஆரம்பித்தவுடன், ‘ஐயாம்மா! stop....stop..... இந்தக் கதை எனக்குத் தெரியும்; வேற கதை சொல்லுங்க’ என்பான். நான் உடனே, ‘இது நீ கேட்ட கதையல்ல, இது வேற’ என்று சொல்லி ஆரம்பிப்பேன்.

கிருஷ்ணர் : ஓஹோ....... ஏற்கனவே சொல்லியிருந்த கதை என்றால் கூட கேட்பவருக்கு சுவாரஸ்யமாய் இருப்பது மாதிரி, ‘அதாவது புதிய மொந்தையில், பழைய கள்ளு’ என்பது போலச் சொல்லணும்..... அச்சச்சோ.... எனக்கும் interest கூடுதே...., எங்க சொல்லு பார்ப்போம்.....

மேகலா : சிவபெருமானுக்கு, Audi car manufacturer தன் புதிய தயாரிப்புக்களில் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறார். அன்னை பராசக்தியோ, ‘நமக்கு ஏற்கனவே ”ரிஷப வாகனம்” இருக்குதே; இந்தக் கார் நமக்கெதற்கு?” என்று சொல்லி விடுகிறார். அந்தச் சமயத்தில், முருகனும், பிள்ளையாரும் நெடுந்தூரம் பிரயாணம் செய்வதற்கு சௌகர்யமாக, Audi car வாங்கித் தரச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். அன்னையார் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட பிள்ளையார், ‘அம்மா, நான் தான் first child, நான் தான் பெரியவன்; எனக்குத்தான் இந்தக் கார் வேண்டும்’ என்று அடம் பிடிக்கிறார். அப்பொழுது அங்கு வந்த முருகனும், ‘மயில் மீது பறப்பது ரொம்ப risk ஆக இருக்கிறது. நான் தான் செல்லப்பிள்ளை. எனக்குத்தான் இந்தக் கார் வேண்டும்’ என்று உரிமையோடு கேட்கிறார். அப்பொழுது, சிவபெருமான் ஒரு plan போடுகிறார். பிள்ளையாரையும் முருகனையும் கூப்பிட்டு, ‘நீங்கள் இருவரும் உங்களுடைய ‘two-wheeler-ஐ’ எடுத்துக் கொண்டு, இந்த ஊரில் இருக்கும் ஒவ்வொரு சந்துக்களையும் விடாது சென்று எல்லா வீதிகளையும் ஒரு முறை கடந்து வந்து, இறுதியில் Audi showroom-க்கு வந்து சேர வேண்டும். யார் முதலில் வருகிறார்களோ, அவருக்குத்தான் இந்தக் கார்’ என்று சொல்லி விடுகிறார்.

கிருஷ்ணர் : அடிப்பாவி! Audi car என்றதுமே, கார்த்தி கிறங்கிப் போயிருப்பானே! சரி...., அப்புறம் சொல்லு...

மேகலா : முருகனும் ஓடோடிச் சென்று, தன் ‘ஹோண்டா’வை எடுத்துக் கொண்டு சந்து பொந்துகளில் புகுந்து வருகிறார். பிள்ளையாருக்கோ, two-wheeler-ஐக் கூட, driver வைத்து ஓட்டித்தான் பழக்கம். Driver, slow-வாக ஓட்டுகிறான். இதெல்லாம் வேலைக்காகாது என்று நினைத்த பிள்ளையார், சிவனும், பார்வதியும் showroom-ல் இருக்கும் போது, அந்த showroom-ஐயே சுற்றி வந்து, சிவனிடம் சென்று, ‘அப்பா, Audi showroom-ல் இருக்கும் உங்கள் இருவரையும் சுற்றி வந்தேன்; ஊரையே சுற்றிக் காட்டி விட்டது, அப்பா’ என்றவுடன், சிவபெருமான், காரின் சாவியை பிள்ளையாரிடம் கொடுத்து விட்டார். அப்போது, அங்கு வந்த முருகன், சாவியை பிள்ளையாரிடம் கொடுப்பதைப் பார்த்து கோபித்துக் கொண்டு, ‘பழனி’க்குத் தன் two-wheeler-லேயே சென்று விட்டார். எப்படி கிருஷ்ணா...., என் கதை....?

கிருஷ்ணர் : சகிக்கல.... அனுபவ அறிவையும், புத்திசாலித்தனத்தையும் விளக்கக்கூடிய இந்தக் கதையை, உன் இஷ்டத்துக்குச் சொல்லிட்டயே... ஒரு கதையைச் சொல்லும் போது கூட, கேட்பவர் விருப்பத்திற்கேற்றாற் போல சொல்ல வேண்டியது அவசியமாகிறது, இல்லையா....? நாம கொஞ்சம் technical-ஆக யோசிப்போம்....., விஞ்ஞானக் கதைகளைக் கூட, சுவாரஸ்யமாக எப்படிச் சொல்லலாம் என்று....

மேகலா : கிருஷ்ணா! எனக்கு ஒரு பழைய காலத்துக் கதை, இந்தக் காலத்து மனிதர்களின் technical knowledge-ஓடு சம்பந்தப்பட்டு, புது வடிவான கதை ஒன்று தெரியும்.

கிருஷ்ணர் : புதுசா.... என்னவோ சொல்லுற..... நீ சொல்லாமலேயே இந்தக் கதை எனக்குப் புடிச்சிருக்கு.... சரி, கதையைச் சொல்லு....

மேகலா : அழகான ஒரு இளைஞன்..... ஒரு முனிவரின் சாபத்தால் தவளையாகிப் போகிறான். அவனுக்கு ரொம்ப வருத்தமாகிப் போகிறது. முனிவரிடம் ‘சாப விமோசனம்’ கேட்கிறான். அதற்கு முனிவர், ‘யார் உன் உருவத்தைப் பார்த்து அருவறுப்படையாமல், உன் உதட்டில் முத்தம் கொடுக்கிறாரோ, அந்தக் கணத்தில் நீ மீண்டும் அழகான இளைஞனாவாய்’ என்று சொல்கிறார்.

கிருஷ்ணர் : ஐயய்யோ..... அப்புறம்....?

மேகலா : காலம் உருண்டோடுகிறது..... தன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும், அந்தத் தவளை கெஞ்சிக் கேட்கும். ‘என்னைத் தூக்கி, என் உதட்டில் முத்தம் கொடு’ என்றவுடன், கேட்பவர்கள் பயந்து ஓடி விடுவார்கள். ஒரு நாள், அந்த வழியே software engineer ஒருவர், தன் laptop-ஐச் சுமந்து கொண்டு, தவளை இருக்கும் பகுதியின் அருகில் கிடந்த cement bench-ல் உட்கார்ந்து கொண்டு, laptop-ல் வேலை செய்யத் தொடங்கினான். அப்பொழுது அந்தத் தவளை, அவனருகில் வந்து, ‘Sir, என் உதட்டில் ஒரு முத்தம் கொடுங்கள்’ என்றதும், குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்று முற்றும் பார்த்தான். தவளை ஆர்வத்தோடு அவனைப் பார்த்தது. அவன், ‘தவளைதான் இப்படிப் பேசியதா’ என்று நம்ப முடியாமல் பார்த்தான். அப்பொழுது அந்தத் தவளை, தனக்கு நேர்ந்த சம்பவம் அனைத்தையும் கூறி, தனக்கு சாப விமோசனம் தரச் சொல்லியும், தன் மீது இரக்கம் காட்டுமாறும் கேட்டது. அவனுக்கு, பேசும் தவளையைப் பார்த்ததும், பெரும் ஆச்சர்யம்! உடனே அந்தத் தவளையைக் கையில் ஏந்திக் கொண்டு, உற்றுப் பார்த்தான். தவளையோ, முத்தமிடப் போகிறான் என்று மகிழ்ந்தது. ஆனால், அந்த இளைஞனோ, தவளையைப் ‘பாக்கெட்டில்’ போட்டுக் கொண்டே, ‘முத்தமிடுவதா....? நல்ல கதையா இருக்கே....., ’பேசுகின்ற தவளை’ என்பது எவ்வளவு அதிசயமான, தங்கப் புதையல்....! இந்த chance-ஐ எப்படி விடுவேன்....?! இதைக் காட்டி சில கோடிகளையாவது சம்பாதித்து விட மாட்டேன்...!” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தான், கிருஷ்ணா!
கிருஷ்ணர் : Super..... super..... மேகலா..... இப்படியெல்லாம் கதையை யார் உருவாக்குகிறார்கள், மேகலா....? மனிதர்களுடைய இன்றைய மனநிலையை படம் பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள், இல்லையா மேகலா....?

மேகலா : கிருஷ்ணா! இப்ப எல்லாம் ‘மாத்தி யோசி’ concept தான் கிருஷ்ணா..... marketing-ல் கூட ‘மாத்தி யோசி’ தான். நான் நினைக்கிறேன், marketing-ல் இருப்பவரில் ஒருவர் தான், பழைய கதையை, இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு யோசித்து, இந்தக் கதையை வடிவமைத்திருக்கிறார், கிருஷ்ணா.... இதே மாதிரி, ‘விறகு வெட்டி’ கதையையும், மாற்றி யோசித்து, கதை விட்டிருக்கிறார்கள், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அப்படியா....! எங்க, சொல்லு....

மேகலா : அடுத்த பகுதியை அந்தக் கதையுடன் ஆரம்பிக்கிறேன், கிருஷ்ணா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1