உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5
கிருஷ்ணர் : சரி! வேற ஏதாவது route இருக்கா….
மேகலா : கிருஷ்ணா…, உயர்ந்த உள்ளம் கொண்டவர்களின் மனசைத்தான் கண்டுபிடிப்பதற்கு கொஞ்சம் மெனக்கெடணும் கிருஷ்ணா…. ஆனால், ’நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழி போல, லொட லொடனு பேசுபவர்களின் மனசு எப்படிப்பட்டது… எல்லாம் தன்னால்தான் நடக்கிறது என்ற கர்வம் உள்ளவர்களின் மனசு எப்படிப்பட்டது என்பதை easy-யா தெரிஞ்சிக்கலாம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : கர்வம் கொண்டவர்கள், உயர்ந்த மனம் கொண்டவர்களாக இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ’என்னைப் போல யாரும் அறிவுள்ளவன் கிடையாது…, எனக்கு நிகர் அழகு எவரும் கிடையாது…’ என்று சதா நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பிறரைப் பற்றி நினைக்க நேரம் எப்படி இருக்க முடியும். பிறர் நலன் மீது அக்கறையும், சமுதாய சிந்தனையும் உள்ளவர்களுடைய மனம் மட்டுமே, சமுதாய உயர்வைப் பற்றி சிந்திக்கும். சிந்திப்பவர்களின் மனம், யாரும் சொல்லாமலேயே உயர்ந்து நிற்கும்… சரி…, லொட லொடன்னு பேசுறவங்க எப்படி…, உயர்ந்த உள்ளம் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறாய்…
மேகலா : கிருஷ்ணா…., லொட லொடன்னு பேசுபவர்கள் இரண்டு வகை… ஒன்று…, தன்னைப் பற்றியே பீற்றிக் கொண்டே இருப்பவர்கள்… அதான் நீயே சொல்லிட்டயே… மண்டைக்கனம் பிடித்தவர்கள்…, அவர்களுக்கு உயர்ந்த மனசு வரவே வராது… என்று சொல்லி விட்டாய்… லொட லொடன்னு பேசும் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களிடம், விஷயமே இருக்காது கிருஷ்ணா…. தான் என்ன பேசுகிறோம்…, யாரிடம் பேசுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல்…, தானும் பேசணும் என்று…, தனக்குத் தெரியாததெல்லாம்…, நேரம், காலம் தெரியாமல்…, பின்விளைவுகளைப் பற்றிப் புரியாமல், கண்டதையும் பேசுவார்கள். இவர்களால், நாட்டுக்கும், வீட்டுக்கும் என்ன நன்மை வரப் போகிறது…. உயர்ந்த மனசுக்கும், இவர்களுடைய பேச்சுக்கும்…, விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையிலான தூரம் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : Oh! ஆமாம்ல….
மேகலா : ஆமாவா…., இல்லையா….
கிருஷ்ணர் : ஓஹோ…, எனக்கே பல்பு கொடுக்கறயா…. சரி…, ரொம்பப் பேசுறவங்க, நல்ல மனசுக்காரங்களா…, ஏன் இருக்க முடியாது….
மேகலா : கிருஷ்ணா…, இன்று ‘பலே பாண்டியா’ படம் பார்த்தேன். அதில், அண்ணனிடம், தங்கை, அத்தை மகனைப் பற்றி கூறுவாள். ‘அவர் நல்லா பேசுறார் அண்ணா…, அப்ப நல்ல மனசுக்காரராகத்தான் இருக்கணும்’. அதற்கு அண்ணன் சொல்லுவார், ‘நல்லா பேசுறவன்லாம்…, நல்ல மனசுக்காரன்னு நம்பாதே…, ஏமாத்திருவாங்க’ என்று சொல்லுவார்… இதுதான் உண்மை என்று நான் சொல்லவில்லை. ஆனாலும், இனிக்க இனிக்க பேசுறவங்க, பொய்யை, உண்மையாக்குவதற்கும் பேசலாம் இல்லையா….
கிருஷ்ணர் : சரி…, வேற ஏதாவது….
மேகலா : வள்ளுவரே சொல்லியிருக்கார் கிருஷ்ணா…
‘கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்’
கல்லாத ஒருவன், நல்லா படிச்சவங்க மாதிரி நாமும் பேசணும்னு நினைச்சால்…, அதுவே அவனுடைய மதிப்பைக் கெடுத்து விடும். இன்னும் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா…. ‘குற்றம் இல்லாத நல்ல சொற்களைப் பேசத் தெரியாதவர்கள்தான்…, ரொம்ப நேரம் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவர்’… என்று…
கிருஷ்ணர் : வள்ளுவரே சொல்லிட்டாரா…. அப்புறம்….
மேகலா : இன்று, மகாபாரதத்தில், ‘அனுசாசன பர்வத்தில்’, பீஷ்மரும் சொல்கிறார்… ‘ஒருவர் பேசுவது கேட்டு, மற்றொருவர் மனம் புண்படுகிறதா…, அப்படிப் பேசுபவர்கள், சிறந்த மனமுடையவர்கள் கிடையாது’ என்று…. ’அடுத்தவன் மனசு புண்பட்டாலும் சரி…, நான் பேச நினைப்பதை பேசியே தீருவேன்’ என்று சொல்பவன்…, எப்படி உயர்ந்த மனமுடையவனாக இருப்பான்….
கிருஷ்ணர் : பீஷ்மர்…, உபதேசம் பண்ணிட்டாரா… இனி, இதை நம்பாமல் இருக்க முடியுமா….
மேகலா : இது மட்டுமில்லை கிருஷ்ணா… சும்மா, பேச்சுக்கு மட்டும்…, ‘இதைச் செய்வேன், அதைச் செய்வேன்’ என்று புருடா விடுபவர்களை, ‘வாய்ச் சொல்லில் வீரரடி’ என்று நம்முடைய தமிழில் எகத்தாளமாகச் சொல்வார்கள் கிருஷ்ணா… நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்…, நாட்டு மக்களுக்கு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று சொல்பவர்கள்…, சொல்வதோடு சரி… அப்புறம், அவர்களுக்கு மக்கள் மீது சிந்தனையே இருக்காது கிருஷ்ணா…. எப்பொழுதும், தன் நலன் மீது மட்டுமே கவனம் கொள்பவர்கள், எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்…..
(தொடரும்)
Comments
Post a Comment