ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 57

மேகலா : துரியோதனன், யுத்த களத்தில், பீஷ்மரிடம், ‘உங்களிடம் ஒரு தயக்கம் தெரிகிறது. என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றினால், யுத்தத்தை ஊக்கமாக நடத்துங்கள்’ என்று கூறியதும், பீஷ்மர் கோபமுற்று, ‘துரியோதனா! நான் வயது முதிர்ந்தவன். எதிரில் இருக்கும் பாண்டவர்கள், இந்திரனாலும் வெல்ல முடியாதவர்கள். இருந்தாலும், பாண்டவர்களைத் தனியே நின்றே தடுக்கப் போகிறேன்’ என்று கூறியவர், பெரும் பயத்தை உண்டாக்கக் கூடிய கோர யுத்தம் நிகழ்த்தினார். யுத்த களத்தில் ரத்த ஆறு ஓடியது. யானைகளும், குதிரைகளும் தரையில் விழுந்து கிடந்ததால், தேர்கள் நகர முடியவில்லை.

பீஷ்மர், ஒரு நெருப்பு வட்டம் போல் திகழ்ந்து, எதிர்த்து வந்தவர்களையெல்லாம் வீழ்த்திக் கொண்டிருந்தார். சுழன்று சுழன்று யுத்தம் புரிந்ததால், யுத்த களமெங்கும் பீஷ்மரே நிற்பது போன்ற ஒரு தோற்றம் உண்டாகி விட்டது. புயல் வேகத்தில் பாண்டவ சைன்யத்தை நாசம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையைக் கண்டு பொறுக்க முடியாத கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, ‘போர்க்களத்தில் எமன் போல பீஷ்மர் காட்சியளிக்கிறார். உன் வீரத்தால், வீரர்கள் அலறி ஓடுவதைத் தடுத்து நிறுத்துவாயாக’ என்றார்.
அர்ஜுனன், தன்னுடைய தேரை, அவரை எதிர்த்துச் செலுத்துமாறு, கிருஷ்ணரைக் கேட்டுக் கொண்டான். பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் மீண்டும் கடும் யுத்தம் நிகழ்ந்தது. பீஷ்மர், அர்ஜுனனின் போர்த் திறமையைப் பாராட்டிக் கொண்டே, கடுமையாகப் போர் செய்தார்.

அப்போது, கிருஷ்ணர், ‘இப்படியே சென்றால், பாண்டவர்கள் சேனையே இல்லாமல் போய் விடும். பீஷ்மர், ஒரு பகலிலேயே தேவர்கள், அசுரர்கள் எல்லோரையும் அழிக்கும் வல்லமை படைத்தவர். அப்படிப்பட்டவருக்கு, பாண்டவர் படை எம்மாத்திரம்? பாண்டவர்களைக் காப்பாற்றுவதற்காக, நானே கவசம் அணிந்து, யுத்தத்தில் இறங்கி, பீஷ்மரைக் கொல்ல வேண்டியதுதான். அர்ஜுனன், முனைப்பு இல்லாத யுத்தம் நடத்துகிறான்’ என்று தன் மனதில் நினைத்த மாத்திரத்தில், ‘சக்ராயுதம்’ அவர் கையை வந்தடைந்தது.

சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய கிருஷ்ணர், ரதத்தை விட்டுக் கீழே இறங்கி, பூமி அதிரும்படியாக நடந்து, பீஷ்மரை நோக்கிச் சென்றார். அர்ஜுனனுக்குத் தேரோட்டும் பணியை மட்டும் செய்து கொண்டு, யுத்தத்தில் தான் ஆயுதம் ஏந்தாமல் இருக்கப் போவதாக முதலிலேயே சொன்ன கிருஷ்ணர், தன் வார்த்தையை மீறி, தன்னை நோக்கி வருவதைக் கண்ட பீஷ்மர், பெரும் மகிழ்வுற்றார். தன்னுடைய வில்லில் நாணேற்றி கிருஷ்ணரை நோக்கி அம்பைச் செலுத்தத் தயாராகி நின்ற பீஷ்மர், ‘கிருஷ்ணரே, வாருங்கள்; இப்போது உம்மால் நான் கொல்லப்பட்டாலும் கூட, எனக்கு இகத்திலும் பரத்திலும் நன்மையே விளையும். நீரே என்னை எதிர்த்து வருவதால், மூவுலகிலும் நான் கௌரவிக்கப்பட்டவனாகிறேன்’ என்று கூறினார்.
கிருஷ்ணரின் நடத்தையைப் பார்த்து, அதிர்ச்சியுற்ற அர்ஜுனன், அவரைப் பின் தொடர்ந்து வந்து, அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு, ‘நீங்கள் கோபத்தை விட வேண்டும். நான் செய்த சபதத்திலிருந்து மீற மாட்டேன். கௌரவப் படையை நாசம் செய்கிறேன். நீர் யுத்தத்தில் இறங்க வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டான். கிருஷ்ணரும் அவனுடைய வேண்டுகோளை ஏற்று, மீண்டும் திரும்பி வந்து, தன் பணியை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, இதுவரை செய்து காட்டாத போர்த்திறமையை, யாரும் கேட்டிராத யுத்தத்தை அர்ஜுனன் செய்து காட்டினான். அர்ஜுனன் யுத்தத்தைப் பல அரசர்களும் புகழ்ந்தார்கள். இந்த நிலையில், மூன்றாவது நாள் யுத்தம் முடிந்தது.

நான்காவது நாள் யுத்தத்திலும், பீஷ்மர் கடுமையாக போர் புரிந்தார். அன்றைய யுத்தத்தில், பீமன் மூர்ச்சையாகி விழுந்தான். அவனைக் காக்க, அபிமன்யு தலைமையில், பல வீரர்கள் வந்து சேர்ந்தனர். மூர்ச்சை தெளிந்த பீமனை மறுபடியும் பீஷ்மர் எதிர்ப்பதற்கு வீரர்களுக்குக் கட்டளை இட்டார். மறுபடியும் பீமன் மூர்ச்சையாகினான். அப்பொழுது அவன் மகன் கடோத்கஜன், பீமனுக்கு உதவ வந்தான். அவன் மாயை நிறைந்த யுத்தம் நடத்தியதால், அவனை எதிர்ப்பது கௌரவர்களுக்குக் கடினமாயிற்று. பீஷ்மர், துரோணரிடம், கடோத்கஜனை எதிர்ப்பது கடினம் என்ற தன் கவலையைத் தெரிவித்தார். அப்பொழுது, சூரிய அஸ்தனமாகி அன்றைய யுத்தம் நிறுத்தப்பட்டது.

பாண்டவர்கள் உற்சாகப் பேரொலி எழுப்பினார்கள். துரியோதனன் யோசனையில் ஆழ்ந்தான்.

மேகலா : கிருஷ்ணா! போர் என்றதும், அவரவர் தரப்பு வீரர்களை எப்படி உசுப்பி விடுகிறார்கள் பார்த்தாயா? தருமன் என்னடாவென்றால், மயங்கி விழுகிறான். ஸ்ரீ கிருஷ்ணரோ, ’யாரும் வேண்டாம், நானே களம் இறங்குகிறேன்’ என்று கோதாவில் இறங்குகிறார்.....

கிருஷ்ணர் : இதெல்லாம் தன் தரப்பு வீரர்களை உற்சாகப் படுத்தத்தானே! சிலர் வசனம் பேசுவார்கள்; தருமன் மாதிரி அழுபவர்களும் உண்டு; உன் மனம் கவர்ந்த ‘கிருஷ்ணன்’ அடியேனைப் போல, ‘போங்கடா, நானே பாத்துக்கறேன்’ என்று சொல்பவர்களும் உண்டு.

மேகலா : ராஜசூய யாகம் நடத்தும் முன், ’ஸ்ரீ கிருஷ்ணருக்கு ‘முதல் மரியாதை’ செய்பவரை இகழ்ந்து பேசுபவர்கள் தலையில் என் கால் வைக்கப்படுவதாக’ என்று பொங்கிச் சீறிப் பேசியவர், இன்று தன் வில்லால், கிருஷ்ணரை எதிர்த்து நிற்கிறார். எனக்கு அதைப் படிக்கும் போது, அந்தக் காட்சி visual ஆக, என் கண் முன்னே தோன்றி, சிலிர்த்துப் போகிறது, கிருஷ்ணா! அடுத்து, அர்ஜுனன் ஓடி வந்து, உன் கால்களைக் கட்டிப் பிடித்து, sorry சொல்லி, ‘ஒழுங்கா சண்டை போடுகிறேன்’ என்றானே. நான் என்னையே கட்டிப் பிடித்துப் பார்க்கிறேன், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : கிருஷ்ணன், உன் பிடிக்குள் அகப்பட்டானா....?

மேகலா : எனக்கு உடம்பெல்லாம் சிலுத்துப் போச்சி, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : சரி...., இது போர்க்களம்; நாம் ஐந்தாம் நாள் யுத்தத்தைப் பார்ப்போம். கடோத்கஜன் வேறு வந்து விட்டான்; என்ன நடக்கிறது, பார்க்கலாம்......

பீஷ்மரின் போர்த்திறன்

போர்க்களத்துச் செய்திகளை சஞ்சயன் விவரித்துக் கொண்டிருக்க, திருதராஷ்டிரனுக்குப் பெரும் கவலை ஏற்பட்டது. பீஷ்மர், துரோணர், கிருபர், போன்ற சிறந்த வீரர்களையெல்லாம் பாண்டவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? ஏன் இன்னும் கௌரவர்களின் வெற்றிச் செய்தி வரவில்லை என்று சஞ்சயனிடம் கேட்டான். அதற்கு சஞ்சயனோ, ‘பாண்டவர்கள் நியாயமாகவே யுத்தம் செய்கிறார்கள். அவர்கள் தர்மத்தை மீறி ஒரு செயலையும் செய்யவில்லை. உமது மகன்கள் செய்த பாவத்திற்கெல்லாம் இப்போது பலன் கிட்டத் தொடங்கியுள்ளன’ என்று கூறி, மேலும் யுத்த களத்துச் செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
அங்கு யுத்தத்தின் போக்கைக் குறித்து மனச் சோர்வு பெற்ற துரியோதனன், பீஷ்மரிடம் சென்று, ‘துரோணர், அஸ்வத்தாமா, நீங்கள் எல்லோரும் அற்புதமாக யுத்தம் செய்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கட்டத்திலும், பாண்டவர்கள் கையே ஓங்குவது போலத் தோன்றுகிறது. எந்த பலத்தினால் அவர்கள் நம்மை விட மிஞ்சி நிற்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை’ என்று மனம் புழுங்கிக் கேட்கிறான்.

அதற்கு பீஷ்மர், என்ன பதில் கூறினார் என்ற விவரத்தோடு அடுத்த பகுதியில் காணலாம்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1