ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 58

மேகலா : குருக்ஷேத்திரப் போரின் நான்காம் நாள் யுத்தத்தின் போது, பாண்டவர்கள் கை ஓங்கியிருப்பதைக் கண்ட துரியோதனன், பீஷ்மரிடம், ‘எந்த பலத்தினால் அவர்கள் (பாண்டவர்கள்) நம்மை விட மிஞ்சி நிற்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை’ என்று மனம் புழுங்கிக் கேட்டதும், பீஷ்மர், ‘துரியோதனா! கிருஷ்ண பகவானால் காக்கப்பட்டிருக்கிற பாண்டவர்களை வெல்லும் திறமையுடையவர்கள் இப்பூவுலகில் யாரும் கிடையாது. நீ தர்மங்களை அறிந்தவன். உனக்கு ஒரு விவரம் கூறுகிறேன்’ என்று சொல்லி, ‘விச்வோபாக்யானம்’ என்ற மகத்தான சரித்திரத்தைச் சொல்லி, ஸ்ரீ கிருஷ்ணரின் மேன்மையை துரியோதனனுக்கு விளக்கினார்.

பால பருவத்திலேயே, தன்னைச் சுற்றியிருந்த பிள்ளைகளுக்கு, ‘காளிங்கன்’ என்னும் பாம்பினால் துன்பம் ஏற்படுவதைத் தடுக்க நினைத்து, அந்தக் காளிங்கனை அடக்கி, யாதவ குலத்து மக்களைக் காப்பாற்றியவர். பெரும் மழை பெய்து, கோகுலமே வெள்ளத்தால் காணாமல் போகுமோ என்றிருந்த நிலையில், ஆடுகளையும், ஆநிரைகளையும், தன்னை அண்டிய ‘யது குலத்தையும்’ காத்தருள்வதற்காக, தன் சுண்டு விரலால், ‘கோவர்த்தன மலையையே’ குடையாகப் பிடித்து, ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு நாட்கள் நின்ற நிலையிலேயே, மலைக்குடை பிடித்த பாலகன் வேறு யாருமல்ல; அது நம் கிருஷ்ணன் தான்! தன்னை அண்டியவரை, எப்பருவத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் காக்கத் தவறியதில்லை. ஆநிரை மட்டுமல்ல துரியோதனா, இத்தருணத்தில், ‘நாம்’ கேட்டாலும், நம்மைக் காக்கவும் மனம் படைத்தவர், ஸ்ரீ கிருஷ்ணர். பாணடவர்கள், அவரை அண்டி நிற்கும் போது, வெற்றி அவர்களுக்குத்தான் என்பதில் சந்தேகம் இல்லை. இதை உணர்ந்து நீ இப்பொழுதும் கூட, அவர்களோடு சமாதானம் செய்து கொள். அப்படி நடந்தால், பூமி காக்கப்படும்’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட, துரியோதனன் சமாதானம் ஆகவில்லை.

ஐந்தாம் நாள் யுத்தத்திலும், பீஷ்மரும், துரோணரும் கடுமையான யுத்தம் புரிந்தார்கள். பாண்டவர் தரப்பில், சாத்யகி என்ற மன்னனின் மகன்கள் பலரை, துரியோதனன் தரப்பில் பூரிசிரவஸ் வீழ்த்திக் கொன்றான். அதனால், பூரிசிரவஸுக்கும், சாத்யகிக்கும் கடுமையான யுத்தம் மூண்டது. பெரும் நாசத்தை விளைவித்த ஐந்தாம் நாள் யுத்தம் முடிந்தது.

ஆறாவது நாள் யுத்தத்தில், துரோணருக்கும், பீமனுக்கும் இடையில் கடுமையான யுத்தம் நிகழ்ந்தது. துரோணரின் தேரோட்டியை பீமன் வீழ்த்தினான். அதனால், துரோணரே தேரைச் செலுத்திக் கொண்டு அவரும் பீஷ்மருமாக பாண்டவர் சேனையில் பெரும் அழிவினை ஏற்படுத்தினார்கள். அர்ஜுனனும், பீமனும் கௌரவர் படையில், பெரும் சேதத்தினை ஏற்படுத்தினார்கள்.

ஏழாவது நாள் யுத்தத்தில், கடுமையாக போர் நடந்து கொண்டிருந்த போது, தருமபுத்திரர், சிகண்டியைப் பார்த்து, ‘பீஷ்மரைக் கொல்வதாக நீ சபதம் செய்திருக்கிறாய். அந்த சபதம் பொய்யாகக் கூடாது. உன் சபதத்தை நிறைவேற்றி, உன் புகழைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்’ என்று தூண்டினார். சிகண்டியும், பீஷ்மரை எதிர்க்கச் சென்றான்.

எட்டாவது நாள் யுத்தத்தில், துரியோதனனின் தம்பிமார்களில் பலரை பீமன் கொன்று விட்டான். அதை எண்ணி எண்ணி துரியோதனன் மனம் நொந்த போது, பீஷ்மர் அவனைத் தேற்றினார். அன்று இரவு, துச்சாசனன், சகுனி, கர்ணன் ஆகியோரோடு துரியோதனன் ஆலோசனை நடத்தினான். கர்ணன், ‘பீஷ்மருக்கு பாண்டவர்கள் மீது அன்பு இருக்கிறது; அதனால்தான் அவரால் பாண்டவர்களை வெல்ல முடியவில்லை’ என்று கூறவும், துரியோதனன், ‘இந்த நேரத்தில் யுத்தத்தை எப்படி நடத்திச் செல்வது/’ என்று கேட்டான்.

கர்ணன், துரியோதனனுக்குத் தைரியம் கூறினான். ‘பீஷ்மரை யுத்த களத்திலிருந்து விலகி இருக்கச் செய்தால், நான் ஒருவனே பாண்டவர்களையும், அவர்கள் படையையும் அழிப்பேன்’ என்று கூறவும், துரியோதனன், பீஷ்மரிடம் வேண்டி, அவரை யுத்தத்திலிருந்து விலகி நிற்கச் செய்து, கர்ணன் ஆயுதம் ஏந்துமாறு கேட்க, பீஷ்மரின் பாசறையை நோக்கிச் சென்றான்.

பீஷ்மரை வணங்கிய துரியோதனன், ‘நீங்கள் எல்லோரையும் அழிக்கும் வல்லமை பெற்றவர். ஆயுதம் ஏந்திய உங்களை இந்திரனாலும், எமனாலும் வெல்ல முடியாது. பாண்டவர்களை வெல்வது கடினமான காரியம் இல்லை. பாண்டவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் பாசத்தினால், அவர்களைக் காப்பாற்றுகிறீர்கள். அதனால், யுத்தத்தில் இருந்து நீங்கள் விலகி இருந்தால், கர்ணன் தலைமை ஏற்று போர் புரிவான்’ என்று கூறினான்.

பீஷ்மர், ‘துரியோதனா, விராட நகரத்தில் அர்ஜுனனின் போர்த் திறமையையும் பார்த்தாய்; கர்ணன் ஓடி ஒளிந்ததையும் பார்த்தாய். பரமாத்மாவான நாராயணரையே துணையாகக் கொண்ட அர்ஜுனனை எளிதில் வெல்ல முடியுமா? ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் பக்கம் தான் வெற்றி ஏற்படும். இருப்பினும் நாளை என் போர்த் திரமையைப் பார்ப்பாய். நாளையப் போரின் உக்கிரத்தைச் சரித்திரம் பேசும். சிகண்டி பெண் என்பதால், அவனைத் தவிர, மற்றவரைப் போரில் வீழ்த்துவேன்’ என்று உறுதியாகக் கூறினார்.

இப்படி பீஷ்மர் சொன்னதைக் கேட்ட துரியோதனன், துச்சாசனனைக் கூப்பிட்டு, பீஷ்மர் மிகப் பெரிய யுத்தத்தைச் செய்யப் போகிறார். சிகண்டியை எதிர்த்து அவர் யுத்தம் செய்ய மாட்டார். ஆகையால், அவரை சிகண்டி எதிர்க்கும் போது, அவரைக் காப்பாற்றுவது நம்முடைய பொறுப்பாகிறது’ என்று கூறினான்.

ஒன்பதாவது நாள் யுத்தத்தில், அர்ஜுனன், சிகண்டியை, பீஷ்மர் முன் நிறுத்தினான். கௌரவர் தரப்பில், பீஷ்மரைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அர்ஜுனனுக்கும், துரோணருக்கும் கோரமான யுத்தம் நடந்தது. அங்கு, பீஷ்மர், பாண்டவர் சேனைக்கு பெரும் நாசத்தை விளைவித்துக் கொண்டிருந்தார். சிகண்டி, பீஷ்மர் மீது பல அம்புகளைப் பிரயோகித்தான்.

அப்பொழுது, ஸ்ரீ கிருஷ்ணர், ‘அர்ஜுனா, நீ எதிர்நோக்கி இருந்த காலம் இப்போது கை கூடி விட்டது. பீஷ்மரையும், துரோணரையும் வெல்வேன் என்று சபதம் செய்துள்ளாய். உன் மனத்தயக்கத்தை விட்டு விட்டு, யுத்தம் செய்வாயாக’ என்று அவனைத் தூண்டினார். இருப்பினும், அவன் திறமையில் சிறிது தயக்கம் இருப்பதாக உணர்ந்த கிருஷ்ணர், இரண்டாம் முறையாகத் தானே பீஷ்மரை வீழ்த்துவேன் என்று கோபமாகக் கூறிக் கொண்டு, தேரை விட்டுக் கீழே இறங்கி, பீஷ்மரைத் தாக்குவதற்காக, அவருடைய ரதத்தை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்.

பீஷ்மர், ஸ்ரீ கிருஷ்ணரை, ‘பரம்பொருள், நாராயணன்’ என்று அறிந்தவர்; கிருஷ்ணரின் அவதார ரகசியம் தெரிந்தவர். பாகவதம் தெரிந்தவர். வரப் போகும் நாளில், ‘விஷ்ணு சகஸ்ரநாமத்தால்’ கிருஷ்ணரின் பாதத்தை அர்ச்சிக்கப் போகிறவர். அவர், ‘தேவ தேவரே! உம்மை நமஸ்கரிக்கிறேன்; உம்மால் வீழ்த்தப்பட்டால், நான் மேன்மையுறுவேன். மூன்று உலகங்களிலும் கொண்டாடப்படுவேன்’ என்று கூறி, வில்லிலே நாணேற்றி, கிருஷ்ணருக்குக் குறி வைத்தார்.

அப்பொழுதும், அர்ஜுனன் ஓடி வந்து, கிருஷ்ணரின் கால்களைக் கட்டிக் கொண்டு, ‘ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற கிருஷ்ணரின் சபதத்தை அவருக்கு நினைவு படுத்தி, நான் தாங்கியிருக்கும் அஸ்திரங்களின் மீது ஆணையாகப் பீஷ்மரைப் போரில் வீழ்த்துவேன்’ என்று கூறினான். கிருஷ்ணரும், கோபம் தணிந்தவராக, மீண்டும் தேரில் வந்தமர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்தும், பீஷ்மர், பாண்டவர்களின் படையில், பெரும் நாசத்தை விளைவித்துக் கொண்டுதான் இருந்தார். ஒன்பதாவது நாள் யுத்தம் நிறவு பெற்றது.

மேலும் போர் நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1