கதை கதையாம், காரணமாம் - பகுதி 6

மேகலா : சென்ற வாரப் பகுதியில், சில சினிமாக்களில் வரும் வார்த்தை twist-களைப் பற்றிப் பேசினோம் அல்லவா....? அதில் பல வசனங்கள் ரொம்ப famous ஆகி விடும். இதே மதிரிதான், ‘வயல்ல ஆட்ரா’ என்று நாகேஷ், கையில் அரிவாளோடு கத்துவார். ஆட்டைக் கையில் பிடித்து வரும் சுருளிராஜன், ‘என்ன, நம்மள dance ஆடச் சொல்றாரோ’ என்று ஒரு மாதிரியாக முழித்துக் கொண்டு, ‘ஆடலைன்னா நம்மளை வெட்டிருவாரோ’ என்று வயலில் இறங்கி, ஆடுவார். திரும்பத் திரும்ப, நாகேஷ், ‘வயல்ல ஆட்ரா’ என்று கத்துவார். அதற்குள் ஒரு மாதிரி, ஆடு பயிரை எல்லாம் மேய்ந்து விடும். திரையில் பார்க்கும் போது, நமது மனசு, வேற கவனம் எங்குமில்லாமல் சிரித்து, அலப்பறையைக் கூட்டும்.
இப்படித்தான் கிருஷ்ணா....., யாராவது வந்து, ‘ஏங்க, இப்படியே போனா, Mount Road வந்துருமா’ என்று கேட்டால், 'Mount Road இங்க வராது; நாமதான் அங்க போகணும்’ என்பார்கள்!

கிருஷ்ணர் : மேகலா, நான் ஒன்று சொல்கிறேன் பார். ‘ஏங்க இப்படியே Mount Road போகலாமா?’ ‘இப்படியும் போகலாம்; காரிலும் போகலாம்’.... எப்படி, ஐயாவோட joke?

மேகலா : நீ தேறிட்ட கிருஷ்ணா....! இன்னொரு கேள்வி இருக்கு, கிருஷ்ணா.... ‘மதுரையில, ரமேஷ் தெரியுமா?” என்று கேட்டால், ‘மதுரைக்குப் போய்ப் பார்த்தா, தெரியும். இங்கிருந்து பார்த்தாத் தெரியாது’ என்று நக்கலாய்ச் சொல்வார்கள். தமிழ் சினிமாவில், தங்கவேலு என்ற comedy நடிகர் ஒருவர் இருந்தார், தெரியுமா கிருஷ்ணா?

கிருஷ்ணர் : ‘அறிவாளி’ பட comedian தானே...? அதான் எனக்குத் தெரியுமே....?!

மேகலா : ஓ! உனக்குத் தெரியுமா....? அவர் ‘தெய்வப்பிறவி’ என்ற படத்தில், தன் மனைவியை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா....? ‘அடியே... அருந்ததி, அம்மா, ஆறாந்தேதி’ என்று ஆரம்பிப்பார். அப்படியே என்ன ஆரம்பிக்கப் போகிறார்...., என்ன mood என்பது வெட்ட வெளிச்சமாகி விடும். அதிலும், ஒரு படத்தில், காதல் mood-ல், தன் காதலியின் பெயரைச் சொல்லுவார்..... ‘சர்.....ரோஜா.... சாதாரண ரோஜாயில்லை, சர்ர்ர்.....ரோஜா....என்று குழைவார்.... தமிழ், நாம் உச்சரிக்கும் விதத்திலெல்லாம் இனிமை கொடுக்கும் கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நீ, தமிழ் உச்சரிக்கும் போதே இனிமை என்கிறாய். சிலர், ‘தமில் வால்க’ என்கிறார்களே.... நாராசமாய் இருக்கிறது. சரி, கதை எங்கெங்கோ போய் விட்டது. ‘முயல் ஆமை’ கதை சொல்லேன், கேட்கிறேன்.
மேகலா : கிருஷ்ணா...., உலகமெல்லாம் ‘அத்திவரதர்’ புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. நீ என்னவோ முயல் ஆமை கதை கேட்கிறாய்...!

கிருஷ்ணர் : அத்திவரதரைப் பற்றி நீயும் தெரிந்து கொண்டாயா.....? என்ன தெரிந்து கொண்டாய்?

மேகலா : அத்திவரதர், அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள்; அத்தியூரைச் சேர்ந்தவர்; காலப்போக்கில், பெருமாளைச் செய்த மரம், பின்னப்பட்டதாலோ, அல்லது, விக்கிரகத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவோ, கோயில் திருக்குளத்தில் ஒளித்து வைக்கப்பட்டார். இதற்கான பிரமாணம் எதுவும் இல்லாத காரணத்தால், எல்லாம் ஒரு அனுமானமே. நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்படுவார் என்பது கூட எழுதி வைக்கப்படவில்லை. மறைத்து வைக்கப்பட்ட பெருமாள், வெளிப்பட்டது கூட, குளம் வற்றிய போது மக்களால் கண்டறியப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இன்னதுதான் செய்ய வேண்டும் என்று யாரும் சாசனம் எழுதி வைக்கவில்லை. 1937-ம் ஆண்டு பெருமாள் மக்களின் வழிபாட்டிற்காக, குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டார். அடுத்து 1979-ம் ஆண்டு; அடுத்தது 2019-ம் ஆண்டான இப்போது, வரதர், மக்களின் மனம் மகிழும்படி எழுந்தருளியிருக்கிறார் என்று பேராசிரியர் வேங்கட கிருஷ்ணன் அவர்கள், ரங்கராஜ் பாண்டேவிற்கு அளித்த பேட்டியில், விளக்கமாகக் கூறியிருக்கிறார், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : Oh! இன்னும் வேற என்னென்ன சொன்னார்....?

மேகலா : கிருஷ்ணா! இறைவனுடைய உருவத்தை, சிலை.... (அதாவது கல்), சுதை..... (சுண்ணாம்பு, களிமண் சேர்த்துச் செய்வது), தாரு.... (அதாவது மரம்) இந்த மூன்றினால் மட்டுமே செய்ய வேண்டும். அதிலும், மரத்தினால் செய்வதென்றால், அத்தி மரத்தால் மட்டுமே செய்ய வேண்டுமாம். ஏனென்றால், மரம் என்பது, காலத்தை வென்று நிலைத்து நிற்கக் கூடியது கிடையாது. எளிதில் பின்னப்பட்டு விடலாம். அப்படிப் பின்னப்பட்ட (சேதமடைந்த) உருவம் பூஜைக்கு உதவாது என்பதால், மரத்தினால் கடவுள் உருவத்தைப் படைக்க மாட்டார்களாம். ஆனால், அத்தி மரம், காலத்தை வென்று நிலைத்து நிற்கக் கூடிய மருத்துவ குணம் படைத்ததாக இருக்கலாம். அதில் செய்யப்பட்ட உருவம், காற்று, நீர் இவற்றால் பாதிக்கப்படாது என்ற காரணத்தால், அத்தி மரத்தால் கடவுள் உருவம் செதுக்கலாம் என்று முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள் போல என்று சொன்னார். கிருஷ்ணா, நம் பாரத தேசத்தில், மரத்தால் செய்த கடவுள் சிலையே, குறிப்பிட்டுச் சொல்லும் அளவுதான் இருக்கிறது என்றார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் இவை அத்தி மரத்தால் செய்யப்பட்டதாம்.....

கிருஷ்ணர் : Oh! நல்லா கவனிச்சிருக்க போலயே....

மேகலா : ஆமாம் கிருஷ்ணா! பேட்டி எடுத்தவரும் எனக்குப் பிடித்தவர். உண்மையை வெளியில் கொண்டு வருவதில் நேர்மையான முறையைக் கையாளுபவர். பேட்டி கொடுத்தவரோ, நல்ல ஞானி என்று நினைக்கிறேன். எந்த சான்றுகளும் ஆவணங்களும் இல்லாத நிலையில், இது miracle என்று ‘சால்ஜாப்பு’ சொல்லாமல், கடவுளின் மேன்மையை, முறையான வழியில் எடுத்துக் கூறி, அத்திவரதரின் சிறப்பை என் மனதுக்குள் ஆணி அடித்து, poster-ஐ மாட்டி விட்டார், கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : ம்...... தெரிகிறது........ தெரிகிறது......... பெருமாள் இத்தனை வருடங்கள் நீருக்கடியில் இருந்திருக்கிறாரே...., பாசி படராமல் இருக்கிறதா, மேகலா?

மேகலா : கிருஷ்ணா! இதே கேள்வியை ரங்கராஜ் பாண்டே கேட்கும் பொழுது, பேராசிரியர் வேங்கட கிருஷ்ணன்...., ‘அதுதான் அதிசயம், miracle என்றெல்லாம் சொல்லவில்லை, கிருஷ்ணா. அத்திமரத்தின் விஞ்ஞானத் தன்மையாக இருக்கலாம். ஆனாலும், திருமேனியில் பாசி படர்ந்துதான் இருக்கும். மக்கள் பார்வைக்கு பெருமாளை வைக்கும் முன் சுத்தப்படுத்தப்பட்டுத்தான் வைக்கப்படுகிறார். பெருமாளை, பேழையில் வைக்க மாட்டார்கள். மிதந்து வராமல் இருப்பதற்காக, கற்களைத் திருமேனியில் வைப்பார்கள். ஆனால், தண்ணீர் பட்டு சேதமாகாமல் இருப்பது, மரத்தின் தன்மையாக இருக்கலாம் என்கிறார். அவர் பதிலில் இருந்த நேர்மை.... ’இந்து மதத்தின் நேர்மை’ என்று நான் உணர்ந்தேன், கிருஷ்ணா......

கிருஷ்ணர் : ‘இந்து மதம்’ என்று பிரித்துப் பேச வேண்டாம், மேகலா.... உண்மையான மனிதனின் நேர்மை என்று வைத்துக் கொள்வோம். சரி...., உனக்கு, ‘வரதரை’.....

மேகலா : ம்.... ‘அத்திவரதரை’.....

கிருஷ்ணர் : அதான்...., ‘அத்திவரதரை’ப் பார்க்கத் தோணலையா, மேகலா..?

மேகலா : தோணுது, கிருஷ்ணா! நீதான் மனசு வைக்கணும்....

கிருஷ்ணர் : அப்ப...., நீ நம்ம ‘வடபத்ரசயனரையே பார்த்துக்கோம்மா....

மேகலா : ஏன் கிருஷ்ணா? இப்படிப் பொசுக்குனு சொல்லிட்ட.... ஏதாவது சரி என்று சொல்லி ஏற்பாடு பண்ணுவாய் என்று நினைத்தேன்..... எனக்குக் குடுப்பினையே இல்லையா.....?

(என் கேள்விக்கான, ஸ்ரீ கிருஷ்ணரின் பதிலுடன் அடுத்த பகுதி ஆரம்பமாகும்)


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1