கதை கதையாம், காரணமாம் - பகுதி 13 (நிறைவுப் பகுதி)

மேகலா : சென்ற பகுதியின் இறுதியில், நாராயணப் பெருமாள், நாரதரை பூலோகத்துக்குக் கூட்டிச் சென்றார் என்று பார்த்தோம். அங்கு ஒரு விவசாயி குடும்பத்தை மறைந்திருந்து, நாரதரும் பெருமாளும் பார்க்கத் தொடங்கினார்கள். அதிகாலை வேளை, தூங்கிக் கொண்டிருந்த விவசாயி எழுந்தவுடன், கிழக்குத் திசை நோக்கி ஒளியைப் பரப்பும் சூரியனைத் தொழுது, ‘இறைவா, நாராயணா! உலகமெல்லாம் செழிக்கட்டும், மழை பொழியட்டும், பூமி நனையட்டும், ஆடு, மாடு, கன்றுகள், உயிர்கள் யாவும் பசியாறி, பயன் பெறட்டும்’ என்று வணங்கி விட்டு, குளித்து முடித்து, தாயை வணங்கி, மனைவியிடம் இன்முகம் காட்டி, கலப்பையைத் தோளில் சாய்த்துக் கொண்டு, வயலுக்கு வந்து சேர்ந்தான்.

விவசாயி வயலுக்கு வந்தவுடன், மாடுகளெல்லாம், ‘மா....’ என்று குரல் கொடுத்தன. கன்று, கட்டிய கயிறை அறுத்துக் கொண்டு, துள்ளிக் குதித்து ஓடி வந்து, அவன் கால்களை நக்கின. ஆடுகளெல்லாம், தீவனத்துக்காக, ‘மே...’ என்று சப்தம் எழுப்பின. கனிவில் மனம் நெகிழ்ந்த விவசாயி, பரபரப்பானான். மாட்டுத் தொழுவத்தைப் பெருக்கி, சாணத்தை வழித்துக் குப்பையில் போட்டு, மாடுகளைக் குளிப்பாட்டி, தூபம் காட்டி, தீவனம் வைத்தான். கன்றுகளைத் தாயின் அருகில் நிற்க வைத்து, பால் குடிக்க வைத்தான். ஆடுகளைப் பட்டியில் இருந்து அவிழ்த்து விட்டு, மேய விட்டான். அதன் பிறகு, வயல் பரப்புக்கு வந்து, மண்ணைத் தொட்டுக் கும்பிட்டான். ‘பூமித்தாயே, உன்னருளாலே பயிர்கள் செழிக்கட்டும். நாராயணனே! உன்னருளாலே மழை பொழியட்டும்’ என்று வேண்டிக் கொண்டு, கலப்பையை எடுத்து நிலத்தை உழ ஆரம்பித்தான்.

பள்ளம் பார்த்த இடத்தில், மண்வெட்டியால் நிலத்தை சமப்படுத்தினான். களையைப் பறித்தான். நீரைப் பாய்ச்சினான். விளைந்திருந்த காய்கறிகளைப் பறித்து, கூடையில் சேர்த்து வைத்தான். அறுவடைக்குத் தயாரான பயிர்களைப் பார்வையிட்டான். வரப்புகளை மேடுபடுத்தினான். அடுத்தடுத்த வேலைகளைச் சளைக்காமல் செய்தான். அங்கிருந்த வண்டியில் மாடுகளைப் பூட்டினான். விளைந்த காய்கறிகளையும், வாழைத்தார்களையும் வண்டியிலேற்றினான். சந்தைக்குச் சென்று விற்று, காசாக்கினான். மாலை நேரம் வந்தது. பசுமாட்டில் பால் கறந்து விற்பனைக்கு அனுப்பி வைத்து, அங்கிருந்த கிணற்றில் நீரை இறைத்து, அலுப்புத் தீரக் குளித்தான்.

வீடு வந்து சேர்ந்ததும், காய்கறி விற்ற பணத்தை, தன் மனைவியிடம் கொடுத்து, அவள் பரிமாறிய பால்சோற்றை, மனநிறைவாய் உண்டான். நிலா வெளிச்சத்தில், இதமான காற்று வரும் முற்றத்தில், தன் படுக்கையை விரித்து, அமர்ந்து கொண்டு, ‘இறைவா, நாராயணனே! எம்பெருமானே! இன்றையப் பொழுது நல்லபடியாகக் கழிந்தது. மாடு, கன்றுகள் தூங்கட்டும். பறவைகளெல்லாம் அமைதியாக உறங்கட்டும். மக்களெல்லாம் கண் துயிலட்டும். நாளையப் பொழுதும் உழைக்க எனக்கு பலமும், உன் அருளும் நிறைவாகத் தர வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டு, கண்ணயர்ந்தான்.

இந்தக் காட்சியை நாரதருக்குக் காட்டிய பெருமாள், ‘என்ன நாரதரே! அந்த விவசாயியைப் பார்த்தீரா? எத்தனை பக்தி! அவன் நாராயண மந்திரத்தை உச்சரிக்கும் போது, எனக்கு மனசெல்லாம் சிலிர்த்துப் போச்சி! பக்தி என்றால், இதுதான் பக்தி!' என்றாரோ, இல்லையோ, நாரதர், உடனே ‘தையா தக்கா’ என்று  குதிக்க ஆரம்பித்து விட்டார். ’எத்தனை முறை அவன் நாராயணனைக் கூப்பிடுகிறான்? மூன்றே மூன்று முறை! அதிலும் மந்திரமாகச் சொல்லாமல், ‘நாராயணா’ என்று கூப்பாடு போடுகிறான். இது எப்படி பக்தியாகும்? நாள் முழுக்க தோட்ட வேலை பார்க்கிறான்; ஆடு மாடு மேய்க்கிறான். விளைச்சல் பொருளை விற்பனை செய்கிறான். இந்த வேலைகளுக்கிடையில், அப்பப்ப..., ’போனாப் போகுது’ என்று கடவுளை நினைத்துக் கூப்பிடுகிறான். எனக்கு, இதை எல்லாவற்றையும் விட, அவன் நாராயணா என்று கூப்பிடும் போது, ‘என் மனசெல்லாம் சிலிர்த்துப் போச்சி’ என்று சொன்னீர்களே! நெசம்மா, என்னால் நம்ப முடியவில்லை’ என்று கொந்தளித்துப் பேசினார்.

பெருமாளும் சிரித்துக் கொண்டே, ’அப்படியா!” என்று கேட்டு விட்டு, ‘நேற்று உம்மிடம் எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, சிந்தாமல் கொண்டு வர வேண்டும் என்ற ஒற்றை வேலையைத்தான் கொடுத்தேன். அந்த விவசாயியைப் பார்த்தீரா! தோட்டம், வயல்வரப்பு வேலை, ஆடு மாடுகளைக் கவனித்தல் என்று அத்தனை வேலைகளைச் செய்தாலும், இவையெல்லாம் கடவுளின் அருளாலே கிடைத்தது; இன்னும் கடவுள் அருள் தனக்கு மட்டும் இல்லாமல், இந்த உலகின் உயிர்கள் அனைத்துக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். இவன் பக்தியில் நான் பரிபூரணத்தைப் பார்க்கிறேன். இவன் இறைவனைக் கூப்பாடு போட்டுக் கூப்பிட்டாலும், அந்த அழைப்பில் நான் சிலிர்த்துத்தான் போனேன். வேலை கிடைத்தவுடன் கடவுளை மறந்து விடுவது தான் உம்முடைய பக்தி. தன் உழைப்பில் கவனமும், ஆடுமாடுகளிடம் பிரியமும், அந்த வேலைக்கிடையில் இறைவனை நினைக்கும் பக்தியும், ஆறுகாலப் பூஜையாகப் பார்க்கிறேன்’ என்றவுடன், நாரதரின் கர்வமெல்லாம் தொலைந்து போனது. ‘இறைவா, என்னை மன்னியுங்கள். மக்களின் உழைப்பும், உழைப்புக்கிடையில் இறைபக்தியும் தான் நீர் விரும்புவது என்று தெரிந்திருந்தும், என் அகம்பாவம், என் கண்ணை மறைத்து விட்டது’ என்று மன்னிப்புக் கேட்டார். பெருமாளும் சிரித்துக் கொண்டே, ‘பரவாயில்லை நாரதரே! எல்லாம் அறிந்தவர்கள் கூட, சில சமயங்களில் தடுமாறுவது உண்டு. சென்று வாரும்’ என்றார். எப்படி கிருஷ்ணா; என்னுடைய கதை....?

கிருஷ்ணர் : ஆனாலும் நீ நாரதரை ரொம்பத்தான் கலாய்ச்சுட்ட, மேகலா....

மேகலா : கிருஷ்ணா! அத்திவரதரைத் திரும்பவும் குளத்தில் எழுந்தருளச் செய்து விட்டார்கள், கிருஷ்ணா...

கிருஷ்ணர் : அப்படியா! நீ என்னவோ, வரதரைக் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்யலாமே; பாதுகாப்பு கருதித்தானே வரதரை குளத்தில் ஒளித்து வைத்தனர்; இனி அந்தப் பயம் கிடையாதல்லவா என்று ஜீயர்கள் எல்லோரும் சேர்ந்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப் போகிறார்கள் என்று சொன்னாயே! எதுவும் நடக்கவில்லையா....?

மேகலா : கிருஷ்ணா! ’அத்திவரதர் குளத்தில் வைக்கப்பட்டதற்கு, பிரமாணம் எதுவும் இல்லாத பட்சத்தில்,........’ என்று பெரிய பெரிய வேத விற்பன்னர்கள் எல்லாம் தங்கள் கருத்துக்களைச் சொல்கிறார்கள். ஆனால், அரைகுறை மேதாவிகள், ‘வேதம் இதைச் சொல்லுது, சாஸ்திரம் அதைச் சொல்லுது’ என்று புதுசு புதுசாக எதையாவது கற்பனை பண்ணி, தினந்தோறும், miracle மாதிரி எதையாவது கதை சொல்லுகிறார்கள். நான் நினைக்கிறேன், ‘அரசாங்கமும், நமக்கு எதற்கு வம்பு’ என்று நினைத்து விட்டதோ என்று.... ஜீயர் குரல் கூட அடிபட்டுப் போச்சு, கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : இன்னும் 40 ஆண்டுகள் கழித்து வரதர் தரிசனம் தருவார். அப்ப இருக்கப் போகும் அரசாங்கம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்று பார்க்கலாம். சரி, அடுத்த தலைப்பு கொடுக்கலாம். தலைப்பு கொடுக்கலாமா...., கதையை முடிக்கலாமா....?

மேகலா : கிருஷ்ணா! நீ பக்கத்தில் இருந்துக்கிட்டு, என்னோட சரிக்குச் சரி வம்பளந்து கதை கேட்கிறாய். இந்தப் பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேன்! ’மகா புருஷோத்தமன்’ ஸ்ரீ கிருஷ்ணனின் நட்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. நீ ‘உம்’ கொட்டிக் கதை கேட்பது என்றால், எத்தனை நாள் வேண்டுமானாலும் அலுக்காது கதை சொல்வேன், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : அது சரிம்மா....! கேட்பதற்கு ஒரு ஆள் கிடைத்தாலும் போதும், நீ தண்ணி கூடக் குடிக்காமல் கதை சொல்லுவாய் என்பது தெரிந்த கதைதானே...! சரி, இப்ப இந்தக் கதையின் மூலம் கதை சொல்லுபவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று நீ நினைக்கிறாய்?

மேகலா : கிருஷ்ணா! இன்றையத் தேதியில் மக்களுக்கு யாராவது advice பண்ணினால், பிடிக்கவே பிடிக்காது.

கிருஷ்ணர் : இன்று மட்டுமல்ல மேகலா! ஆதி காலத்தில் இருந்தே மனிதர்கள், அறிவுரையாகவோ, ஆலோசனையாகவோ சொன்னால் கேட்டுக் கொள்வது என்பது சந்தேகம் தான் என்று யோசித்ததால் தான், ‘ஒரு ஊரிலே ஒரு ராசா இருந்தார்....’ என்று கதையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். கதை கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டு மெள்ள மெள்ள, தான் சொல்ல வந்த message (or advice) - ஐச் சொல்வார்கள். கதை கேட்பவர்களை உருக வைத்து, அழ வைத்து, தான் சொல்ல நினைத்ததைச் சொல்லி விடுவார்கள். கதையைக் கேட்பவர்களெல்லாம் திருந்தி விடுவார்களா என்றால், ‘ஆயிரத்தில் ஒருவன்’ பின் தொடர்ந்தால் கூட, கதை சொல்பவருக்கு வெற்றிதானே.

இன்னும் சிலர், விலங்குகள் பேசுவதாகக் கதை சொல்லி, குணங்களினால் விளையும் கேடுகளையோ, அதைத் தீர்க்கும் உபாயத்தையோ சொல்லி விடுவார்கள். முதலைக்கும், குரங்குக்கும் இடையிலான நட்பையும், அதனால் விளைந்த கேட்டையும், அதிலிருந்து குரங்கு எப்படித் தப்பித்தது என்பதையும் நீயே எத்தனை முறை கார்த்திக்குச் சொல்லியிருக்கிறாய்... இந்த மாதிரி, குட்டிக் குட்டிக் கதைகள் இன்று cartoon படமாகவும் எடுக்கப்படுகிறது அல்லவா.... ஒரு வகையில் இந்தக் கதைகள், குழந்தைகள் மனதை சீராக்குகிறது என்பது உண்மைதானே....

மேகலா : கிருஷ்ணா! இதற்கு ஒரு பெயர் இருக்கிறது - ‘value education'

கிருஷ்ணர் : வாவ்! எவ்வளவு அருமையான பெயர், ஆம்! வேதம் கற்றுத் தருவதை இந்தக் கதைகள், குழந்தைகளுக்கும் கூட எளிமையாகக் கற்றுத் தருகிறது என்பது உண்மைதானே.....

மேகலா : இன்று பாகவதம், மகாபாரதம், ராமாயணம் கூட cartoon network-ல் காட்டப்படுகிறது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : எல்லாம் விஞ்ஞான மயமாகிப் போனால் கூட, நம் நாட்டுக்கதைகள் இந்த விஞ்ஞானத்தால் புதிய பொலிவு பெற்றிருக்கிறது. புதிய உலகத்தில், நம் பழைய கலாச்சாரமும் பெருமை பெற்று நிமிர்ந்து நிற்கிறது என்றே சொல்லலாம். எக்காலத்திலும், நீதிக்கான கதைகளும், நம் கலாச்சாரம் சொல்லும் கதைகளும், நேர்மைக்கான கதைகளும், நம் பண்பினை வெளிப்படுத்தும் கதைகளும், மக்களால் வரவேற்பைப் பெற்றுத்தான் வருகிறது.

ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளுக்கு, நீதியையும், வீரத்தையும், தைரியத்தையும், ஒழுக்கத்தையும் எடுத்துச் சொல்லும் கதைகளையே சொல்லித்தர விரும்புகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்த மாதிரி கதைகள் எத்தனை பேசினாலும், சலிப்பே வருவதில்லை. இருந்தாலும் வேற தலைப்பில் பேசலாம். இன்று, இந்தக் கதையை இங்கு முடித்துக் கொள்வோம்... சரியா....!

மேகலா : அவ்வளவுதானா.....!

கிருஷ்ணர் : நாளை பார்க்கலாம்......! சென்று வா....!

மேகலா : போகவே மனசில்லை கிருஷ்ணா....

கிருஷ்ணர் : இன்று போய், நாளை வா.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1