பாலம் - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா..... உன்னை ஆளையே காணோம்..... ஏதோ.... தொடர்ச்சியாக 2 articles எழுதி விட்டாளே; ஒரு 2 நாள் rest  எடுக்கட்டும்.... Bangalore-ல் வைத்து ஏதாவது ஒரு ‘topic' ஆரம்பிக்கலாம் என்று நெனச்சா.., உன்னை ஆளையே காணோமே.... என்ன சோம்பேறித்தனமா.... இல்ல.... பேசுவதற்குக் கூட ‘tired'-ஆ இருக்கியா....? இல்லையே.... தப்பா இருக்குதே...! நம்ம ஆளு.... ‘mike-ஐ’ முழுங்கியது மாதிரி பேசிக்கிட்டே இருக்குமே..... அப்ப.... இது நிச்சயமா சோம்பேறித்தனம் தான்.....

மேகலா : கிருஷ்ணா! நீ இத்தனை நேரமும் என்னைப் பற்றித்தான் பேசுனயா....? கிருஷ்ணா, இந்த முறை Bangalore-க்குச் செல்வதற்கு முன்னால், தடுப்பூசி போட்டுச் சென்றேனல்லவா.... அதனால், ரொம்ப தைரியமாக இருந்தேன். ஆனால், நடந்தது என்ன தெரியுமா, கிருஷ்ணா...?

கிருஷ்ணர் : என்ன..., காய்ச்சலா....?

மேகலா : காய்ச்சல் மட்டும் தான் வரவில்லை; தும்மல், சளி என்று ரொம்பவே அவஸ்தைப்பட்டேன். 2 நாட்களாக மாத்திரை போட்டுத்தான் தும்மலை அடக்கினேன். அதில் நல்லா தூங்கினேன். அடுத்து வந்த நாட்களிலும், நான் diary-யைத் தூக்காமல் இருந்ததற்கு, சளி பிடித்ததுதான் காரணம்.....

கிருஷ்ணர் : என்ன காரணமோ.....? நீ எங்கு காணாமல் போனாயோ என்று கூட நினைக்க ஆரம்பித்து விட்டேன்!

மேகலா : எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி நான்..... ‘புருஷோத்தமன்’...... புருஷர்களின் மனங்களில் வசிக்கும் உத்தமன்’..... என்னைத் தன் மனதில் குடி வைத்திருக்கிறான் என்று நினைக்கும் போது, என்ன பேசுவது என்று வார்த்தைகள் வராமல் தவிக்கிறேன், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : அப்படியா....வார்த்தை வரவில்லையா..... என்ன comedy-டா இது....! சரி, சொல்லு..... ஊர் நிலவரம் என்ன.....? நவராத்திரி வர இருக்கிறது.... நீ என்ன செய்யப் போகிறாய்....?

மேகலா : நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னையை வழிபடுவது என்று நினைத்திருக்கிறேன், கிருஷ்ணா. நீதான் எனக்கு உடனிருந்து வாழ்த்த வேண்டும், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : நிச்சயமாக..... அன்னையை வழிபடுவதற்கு என்றுமே என் வாழ்த்து உனக்கிருக்கும், மேகலா.... நீ ‘கொலு’ வைக்கப் போகிறாயா, மேகலா....?

மேகலா : என் பூஜையில், அன்னை கோலாகலமாகக் கொலுவிருக்கப் போகிறாள், கிருஷ்ணா... ‘கொலு’ என்று தனியாக வைக்கவில்லை, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : Oh! சரி! ‘topic' சொல்லு, மேகலா....

மேகலா : கிருஷ்ணா! நீ, ‘சிவசங்கரி’ எழுதிய ‘பாலங்கள்’ கதை வாசித்திருக்கிறாயா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : தெரியுமே! முந்தைய தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் இடையில் பாலமாக நிற்கும் இன்றைய தலைமுறையின் செயல்பாடுகள், உறவை இணைக்கும் முறை என்ற முறையில் கதையைக் கொண்டு சென்றிருப்பார். ஆமாம், ‘பாலங்கள்’ கதையை நீ review பண்ணப் போகிறாயா, என்ன.....?

மேகலா : கிருஷ்ணா! ‘பாலங்கள்’ என்ற இந்த தலைப்பைப் பற்றிப் பேசலாமா, கிருஷ்ணா....? ‘பாலங்கள்’ - இதைப் பற்றி என்ன நினைக்கிறாய், கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : ம்....ம்....ம்.... ‘பாலங்கள்’..... அப்படீன்னா....., ஒரு கரையில் இருந்து, மறுகரைக்கு நம்மைக் கடக்க வைப்பது..... ஒரு தத்துவார்த்தமான சொல்லாகப் படுகிறது.... அப்படியா நீ நினைக்கிறாய்....?

மேகலா : இது மட்டுமல்ல, கிருஷ்ணா! ஒரு உறவு வளர்வதற்கு, எதுவாக இருந்தாலும், அதைப் பாலங்களாகப் பார்க்கிறேன், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : அப்படியா...... நாம ரெண்டு பேரும் friends. இந்த உறவு வளர்வதற்கு எது பாலமாக இருக்க முடியும் என்று நீ நினைக்கிறாய்.....?

மேகலா : என்ன கிருஷ்ணா, இப்படிச் சொல்லிட்ட....! ‘மகாபாரதம்’ என்ற பாலம் strong ஆக இருக்கிறது, கிருஷ்ணா.... இதில் நடந்து வந்துதான், ‘கிருஷ்ணன்’ என்ற ராஜதந்திரம் நிறைந்தவனை; மஹா தைரியசாலியை; எந்த நேரத்திலும் நிதானம் தவறாதவனை; எந்த சூழ்நிலையையும் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ளும் யதார்த்தவாதியை; அதர்மத்தை அழிக்கும் தந்திரவாதியை; மந்திரம் போட்ட மாதிரி, பார்ப்போரைத் தன் வசம் இழுக்கக்கூடிய மந்திரவாதியை, நண்பனாக அடைந்திருக்கிறேன் கிருஷ்ணா.....!

கிருஷ்ணர் : அப்பா.....யப்பா.... புல்லரிச்சுப் போச்சு போ... சரி..., இப்படித்தான் பேசலாம் என்று முடிவெடுத்திருக்கிறாயா...? சரி, பேசலாம்.... நானும் யோசிக்கிறேன். Anyhow, interesting ஆகப் பேசலாம். சரி! பாலத்தைப் பற்றி நீ சொல்லு....

மேகலா : நீ சொன்ன மாதிரி, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்தால், ஆற்றைக் கடக்க உதவும். பரபரப்பான சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்து நெருக்கடி கூடக் குறையலாம். கிருஷ்ணா, பாலம் என்பது, வெறும் சாலையாக மட்டும் இருக்காது. சாலையின் இருமருங்கிலும், மதில் சுவர் கட்டப்பட்டிருக்கும். அந்த மதில் சுவர், உட்காருவதற்கு வசதியாக இருக்கும். அதில் உட்கார்ந்து கொண்டு மாலை நேரத்தில், பாலத்தின் கீழ் ஓடும் நதியின் சலசலப்பை ரசித்துக் கொண்டு, மஞ்சள் வெய்யிலின் இதமாக ஒளிரும் வெளிச்சத்தில், பறவைகள் சப்தத்தின் background-ல் ரெண்டு நண்பர்கள் அல்லது நண்பர்கள் கூட்டம், மனசுக்குப் பிடித்த விஷயங்களை, சுவாரஸ்யமாக, நேரம் போவது தெரியாமல் பேசுவதற்கு உதவும். கிருஷ்ணா, நான் கேரளாவில் ஒரு ஊரில், மரத்தாலான பாலத்தைப் பார்த்திருக்கிறேன்; அதில் ஏறி நடந்திருக்கிறேன். நாம் நடக்க, நடக்க பாலமே ஊஞ்சல் போல ஆடும். ஆனாலும், strong ஆகத்தான் இருக்கும். சினிமால எல்லாம் மரப்பாலங்களைக் காட்டுவார்கள்.

கிருஷ்ணர் : Oh! ஆமாமாம். Villain முதலில் பாலத்தில் சென்று விடுவான். Hero-வோ, இல்லை அவனோட அம்மாவோ, கையில் குழந்தையோடு வருவார்கள். மறுகரை சென்ற villain, பாலத்தைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்து எறிய முயற்சி செய்வான்.... இல்லையா....! இந்த சினிமாக்காரங்களுக்கு, மரப்பாலத்தைப் பார்த்ததும் விபரீதமான குஷியாகி விடுவார்கள். உடனே, ஒரு சண்டைக் காட்சி அல்லது உணர்ச்சிகரமான காட்சி என்று வைத்து, மக்களை thrilling-ல் சிலிர்க்க வைத்து விடுவார்கள்.

மேகலா : இது மட்டுமல்ல, கிருஷ்ணா.... சிறிய கால்வாயோ, நதி ஓடும் ஓடையோ.... முக்கியமாக காவிரி பாய்கின்ற ஊர்களில், வாய்க்கால் வரப்புகளில், செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள் சில சமயங்களில், வாய்க்காலின் குறுக்கே விழுந்து, அந்த ஓடையைக் கடக்கும் பாலமாக மாறுவதுண்டு. ஊர்ச்சிறுவர்கள் அதைப் பற்றிக் கொண்டு, ஊஞ்சலாக ஆடி, அதன் மீது ஏறி, தண்ணீருக்குள் dive அடித்து மகிழும் காட்சியைக் காரில் சென்றவாறு பார்த்துப் பொறாமைப் பட்டிருக்கிறேன், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : ஆமாம்; நீ இப்ப அடிக்கடி திருச்சிப் பக்கம் வருவதால், இந்த அழகிய காட்சியைப் பார்த்திருக்கிறாய் போலும்! திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் side...., இப்படிப்பட்ட மரப்பாலங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். வாவ்.....! என்ன அழகான காட்சிகள்....

மேகலா : இந்தப் பாலங்களின் செயலைப் பார்த்தாயா, கிருஷ்ணா.... ஒரு கரையிலிருந்து நம்மைக் கடக்கச் செய்து, புதிய உலகத்தைக் காட்டுகிறது. நெருக்கடியான சாலைகளின் நெருக்கடியிலிருந்து நம்மை மீட்டெடுக்கிறது. உறவுகளுக்குள்ளும் பாலங்களின் செயல்பாடுகள், விநோதமானது; ஆச்சர்யமானது. ஆனாலும், ரொம்ப ரம்யமானது; குறிப்பாக, உலகின் யதார்த்தமானது என்றும் சொல்லலாம்.

உறவுப்பாலங்களைப் பற்றி மேலும் விளக்கமாக அடுத்த பகுதியில் பார்ப்போமா..., கிருஷ்ணா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1