ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 65

மேகலா : பதின்மூன்றாம் நாள் யுத்தம் முடிந்து, அர்ஜுனன் பாசறைக்குத் திரும்பி வந்து, தனது மகன் அபிமன்யு போரில் இறந்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்டான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.
தருமனைப் பார்த்து, ‘நீங்களும், பீமனும், சாத்யகியும் இருக்கும் பொழுது, கௌரவர்கள், அபிமன்யுவை எப்படிக் கொன்றார்கள்? அவர்கள் அபிமன்யுவைக் கொல்லும் பொழுது, நீங்கள் எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்? அவன் இறந்து விட்டான் என்பதை உணர்ந்தும், என் மனம் வெடிக்காமல் இருக்கிறது. என் மனைவி சுபத்திரைக்கு நான் என்ன சமாதானம் சொல்லுவேன்? அபிமன்யுவின் மனைவிக்கு என்ன ஆறுதல் கூறுவேன்?’ என்று அர்ஜுனன் அழுது கொண்டே பேசினான்.

பாண்டவர்கள் யாரும் பதில் சொல்லாத நிலையில், அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணர் சொன்னார், ‘யுத்தத்தில் பின்வாங்காத வீரன் எவனுக்குமே வாழ்வின் முடிவுக்கு இதுதான் வழி. பராக்கிரமசாலிகளுக்கு மரணம் யுத்த களத்தில் தான். வீரர்கள் விரும்பும் மரணம் இது தான். அப்படிப்பட்ட மரணத்தை அபிமன்யு தழுவியிருக்கிறான். இதில் நீ வருந்தக்கூடாது. இப்படியே துன்பத்திலேயே புலம்பிக் கொண்டிருந்தால், உன்னுடைய சகோதரர்கள், உனக்காகப் போர் புரிய வந்திருக்கும் அரசர்கள், நண்பர்கள் எல்லோரும் மனச்சோர்வு அடைவார்கள். அவர்கள் எல்லோருக்கும் இப்பொழுது தைரியம் தரக்கூடியவன் நீ ஒருவன் தான். நீயே விரக்தியுற்றால், நமது படையே ஊக்கத்தை இழந்து விடும். ஆகையால், உன்னுடைய வருத்தத்தை அடக்கிக் கொண்டு, யுத்தத்தில் முனைவாயாக’.

இப்படிக் கிருஷ்ணர் கூறிய பிறகு, அர்ஜுனன் தனது சகோதரர்களையும், மற்ற அரசர்களையும் கடிந்து பேசினான். ‘நீங்கள் அனைவரும் இருக்கும் பொழுது, அபிமன்யு இறந்தது எவ்வாறு? நீங்கள் எல்லோரும் பெரிய வீரர்கள் என்று நம்பித்தானே, உங்கள் பொறுப்பில் அபிமன்யுவை விட்டுச் சென்றேன்’ என்று கடிந்து பேசினான். தருமபுத்திரன் ஆறுதல் சொல்ல அவனை நெருங்கினார்.

கிருஷ்ணர் : என்ன மேகலா! ஒரு இறுக்கமான மனநிலையில் இருப்பது போலத் தெரிகிறதே! ரொம்ப emotional ஆனாயோ....! என்ன..., கண் கலங்குது.... அடடா... என்ன மேகலா இது...... வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்.

மேகலா : இல்லை கிருஷ்ணா.... கர்ணன், துரோணரிடமே வந்து கேட்கிறானா...., ‘அபிமன்யுவை எப்படிக் கொல்வது’ என்று....

கிருஷ்ணர் : அது தருமன் ஆரம்பித்தது தானே....! பீஷ்மரிடமே, ‘உங்களை எப்படி வீழ்த்துவது’ என்றானல்லவா....

மேகலா : அவராவது வயதில் பெரியவர்.... தருமன் செய்தது தவறுதான்.... என்றாலும், அபிமன்யு சிறுவன்; அதிலும் புதிதாகக் கல்யாணம் செய்து கொண்டவன். கர்ணன், பின்புறமிருந்து வில்லை அறுக்க, துரோணர் குதிரைகளைக் கொல்ல, கிருபர் தேரோட்டியைக் கொல்ல, துரோணர், கையிலிருந்த கத்தியைக் கூடத் தட்டிப் பறிக்க, துச்சாசனன் மகன், கதையால் மண்டையைப் பிளந்தானே....! அர்ஜுனன், தருமனைத் திட்டும் போது, எனக்கும் கடும் கோபம் வருகிறது, கிருஷ்ணா...

கிருஷ்ணர் : யுத்தம் என்றால், இதெல்லாம் நடக்கத்தானே செய்யும். ஒருவர் ஜெயிக்க, எத்தனையோ பேர் உயிரிழக்கத்தான் செய்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் உணர்ச்சி வசப்பட்டால், நாம் கதையை எப்படி எழுதுவது....? இனி வரும் அத்தியாயங்களில், technical movement தான் நடக்கும். துரோணர் இதை விடப் பரிதாபமாக உயிரை விடப் போகிறார். அதைப் பார்த்த அஸ்வத்தாமா எமனைப் போலக் கோபம் கொள்ளப் போகிறான். வா...., கண்ணைத் துடைத்துக் கொள். என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள். அடுத்து ஜயத்ரதன் வதத்தைப் பார்ப்போம்.

அர்ஜுனன் சபதம்

மேகலா : அபிமன்யுவைக் காப்பாற்றாமல் விட்டதற்காகத் தனது சகோதரர்களையும், மற்ற அரசர்களையும் பார்த்துக் கோபமாகப் பேசிய அர்ஜுனனிடம், என்ன நடந்தது என்று தருமபுத்திரன் விளக்கினார். ‘சம்சப்தர்களைத் தொடர்ந்து நீ சென்ற பிறகு, துரோணர் வகுத்த வியூகத்தைப் பிளக்குமாறு நான் தான் அபிமன்யுவைக் கேட்டுக் கொண்டேன். அபிமன்யுவும் வியூகத்தைப் பிளந்து உள்ளே சென்றவுடன், அவன் ஏற்படுத்திய வழியில் நாங்களும் அவனைப் பின் தொடர முடிவு செய்தோம். ஆனால், ஜயத்ரதன் எங்கள் அனைவரையும் அந்த வியூகத்தினுள் நுழைய முடியாதபடி தடுத்து விட்டான்.

வியூகத்தினுள் சிக்கிக் கொண்ட அபிமன்யுவை, கௌரவர் தரப்பில் பலரும் சேர்ந்து தாக்கினார்கள், அபிமன்யுவோ, மிகவும் வீரத்துடன் போரிட்டு அவர்கள் அனைவரையும், தான் ஒருவனாகவே எதிர்த்தான். இறுதியில் துச்சாசனனின் மகன் அபிமன்யுவுடன் கதை யுத்தம் நடத்தி, அவனைக் கதையினால் அடித்துக் கொன்று விட்டான்’.

அபிமன்யுவின் வதத்தைக் கேட்ட அர்ஜுனனுக்கு, மேலும் துக்கம் அதிகமாயிற்று. அவன் மயக்கமடைந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த போது, அர்ஜுனன், அனைவர் முன்னிலையிலும் ஒரு சபதம் செய்தான். ‘நாளைய தினம் போரில் நான் சூரிய அஸ்தமனத்திற்குள் ஜயத்ரதனைக் கொல்லப் போகிறேன். இது நிச்சயம். நான் இப்பொழுது செய்த சபதத்தைக் கேட்டு ஜயத்ரதன் போரிலிருந்து விலகட்டும்; அல்லது நம்மிடம் சரணடையட்டும். நான் ஜயத்ரதனை நாளைய சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்லாமல் விட்டால், தர்மத்தின் பாதையை விட்டு விலகியவர்கள், பாவிகள் என்னென்ன உலகங்களை அடைவார்களோ, அந்த உலகங்களை நான் அடைவேன் என்பது நிச்சயம்.

மேலும் ஒன்று சொல்கிறேன். நாளை மாலைக்குள் என்னால் ஜயத்ரதனைக் கொல்ல முடியாமல் போனால், அப்பொழுது நான் இந்தப் போர்க்களத்திலேயே தீ மூட்டி அதில் நுழைவேன்’.
இப்படி அர்ஜுனன் சபதம் செய்தவுடன், கிருஷ்ணர், தன் ‘பாஞ்சஜன்யம்’ என்ற சங்கை ஒலித்தார். அர்ஜுனன், ‘தேவதத்தம்’ என்ற தன்னுடைய சங்கை ஒலித்தான். இந்தப் பேரொலி பீமனை மகிழ்வித்தது. ‘நீயும், கிருஷ்ணரும் சங்கை ஒலித்த போதே, துரியோதனனும் அவன் கூட்டமும் நாசமடைந்தது என்றே முடிவு செய்தேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினான், பீமன்.

அர்ஜுனனின் சபதம் போர்க்களமெங்கும் பரவியது. சபதத்தை அறிந்த ஜயத்ரதன் கவலை கொண்டான். அவன் துரியோதனனிடம், ‘என்னைக் கொன்று விடுவது என்று அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். அவனை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீ எனக்கு அனுமதி கொடுத்தால், நான் யுத்த களத்தை விட்டு விலகுகிறேன்’.

பெரும் அச்சத்துடன் இவ்வாறு பேசிய ஜயத்ரதனுக்குத் துரியோதனன் தைரியம் சொன்னான். ‘ஜயத்ரதா, நீ பயப்படத் தேவையில்லை. துரோணர், அஸ்வத்தாமா, கர்ணன், சல்யன், துச்சாசனன், விகர்ணன் என்று இத்தனை வீரர்கள் உன்னைச் சுற்றி இருக்கும் பொழுது, உனக்கு அச்சம் ஏன்? இயல்பாகவே நீ மிகப் பெரிய வீரன். நீ ஏன் பாண்டவர்களைக் கண்டு நடுங்க வேண்டும்? உன்னைக் காப்பற்றுவதில், என் சேனை முழுவதையும் ஈடுபடுத்துகிறேன்; பயப்படாதே’.

இவ்வாறு துரியோதனனால் தேற்றப்பட்ட ஜயத்ரதன், துரோணரை அணுகி, தனக்கும், அர்ஜுனனுக்கும் இடையே போர்த் திறமையில் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் கேட்டான். துரோணர், ‘ஜயத்ரதா, நீயும், அர்ஜுனனும் என்னிடம் ஒரே நேரத்தில் வில்வித்தை பயிற்சி பெற்றவர்களே. இருந்தாலும் உன்னை விட அர்ஜுனன் சிறப்பாகப் பயிற்சி பெற்றவன். போர்த்திறனில் உன்னை விட அர்ஜுனனே மேன்மையானவன். ஆனாலும், அர்ஜுனனிடமிருந்து உன்னை நான் காப்பாற்றுகிறேன். அர்ஜுனனால் தாண்ட முடியாத வியூகத்தை வகுத்து, உன்னை நான் காப்பாற்றுகிறேன்’ என்று துரோணர் கூறியதைக் கேட்ட பிறகு, ஜயத்ரதனின் அச்சம் நீங்கியது.

அடுத்து போர்க்களத்தில் என்ன நடந்தது (அர்ஜுனன் சபதத்தை நிறைவேற்றினானா, இல்லையா....?) என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்...

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1