ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 90

சல்ய பர்வம்

சல்யன் சேனாதிபதியானான்

மேகலா : பதினேழாவது நாள் யுத்தம் நிறுத்தப்பட்ட பிறகு. இரு சைன்யங்களும் ஓய்வெடுத்தன. அப்போது, கிருபர் துரியோதனனை நாடிச் சென்றார். யுத்தத்தில் கொல்லப்பட்ட பீஷ்மர், துரோணர், நண்பர்களான அரசர்கள் ஆகியோரை நினைத்துப் பெரிதும் துக்கித்த கிருபர், துரியோதனனுக்கு ஆலோசனை சொல்ல முற்பட்டார். ‘அரசர்களுக்கெல்லாம் தலைவனே! நான் சொல்லும் வார்த்தைகளைச் சற்று பொறுமையோடு கேள். யுத்த தர்மத்தை விட மேலான தர்மம் க்ஷத்திரியனுக்குக் கிடையாது. பகைவனை எதிர்ப்பது தான் க்ஷத்திரியனுக்கு லட்சணம்!

‘ஆனால், துரியோதனா! நமது நிலையைச் சற்று நினைத்துப் பார். பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன், உன்னுடைய சகோதரர்கள் போன்ற பல வீரர்களை நாம் இழந்து விட்டோம். அவர்களை நம்பித்தான் நாம் ராஜ்ஜியத்தை விரும்பினோம். இன்று அவர்கள் இல்லை. பதினேழு நாட்கள் யுத்தம் நடந்து விட்டது. அர்ஜுனனைக் கண்டும், பீமனைக் கண்டும் நமது படை நடுங்குகிறது. அர்ஜுனனின் போர்த் திறனை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது தானே உண்மை. பீமன் நமது சபையில் செய்த சபதத்தை இந்த யுத்த களத்தில் நிறைவேற்றி விட்டான். பெரும் வீரர்களையெல்லாம் இழந்து விட்ட நிலையில், நாம் இந்த யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டுமா என்பதை சற்று யோசித்துப் பார்’.

இவ்வாறு பேசிய கிருபர், மேலும் சொன்னார், ‘தன்னை விட வல்லவனோடு சமாதானம் செய்து கொள்வதே ராஜநீதி. நாமோ இப்பொழுது பாண்டவர்களை விட மிகவும் தாழ்ந்து விட்டோம். ஆகையால் அவர்களுடன் நாம் சமாதானம் செய்து கொள்வதே புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்.

‘திருதராஷ்டிரன் கூறினால் தருமன் தட்ட மாட்டான். தருமபுத்திரன் சொல்லை அவன் சகோதரர்கள் எதிர்க்க மாட்டார்கள். போரை நிறுத்துவோம்; சமாதானம் செய்து கொள்வோம். துரியோதனா! உனக்கு எது நல்லது என்று ஆலோசித்துத்தான் இந்த யோசனையை நான் உனக்குக் கூறுகிறேன். இப்பொழுது இதை நீ ஏற்காவிட்டால், பின்னால் இது பற்றி யோசிப்பாய்’.

கிருபாச்சாரியார் இவ்வாறு சொன்ன யோசனையைக் கேட்ட துரியோதனன் பெரும் சிந்தனையில் ஆழ்ந்தான். பின்னர், ஒரு முடிவுக்கு வந்தவனாக கிருபருக்குப் பதில் கூறினான். ‘பெரியவரே! எனக்காக உயிரை விடத் துணிந்து போர்க்களத்தில் அசகாய சூரத்தனத்தையெல்லாம் செய்து கொண்டிருப்பவர் நீங்கள். என்னுடைய நலத்தைக் கருதித்தான் நீங்கள் யோசனைகள் சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் உமது யோசனையை என்னால் ஏற்க முடியவில்லை.

‘ராஜ்ஜியத்திலிருந்து துரத்தப்பட்ட தருமபுத்திரன், நம்மிடம் அன்பு காட்டுவான் என்று எவ்வாறு நம்மால் எதிர்பார்க்க முடியும்? நம்முடைய வார்த்தைகளை அவன் எப்படி நம்புவான்? சபை நடுவில் என்னால் அவமதிக்கப்பட்ட கிருஷ்ணர் என்னை நம்புவாரா? அபிமன்யு நம்மால் கொல்லப்பட்டதைக் கிருஷ்ணர் மறந்து விடுவாரா? அபிமன்யுவின் மரணத்தினால் அர்ஜுனன் பெரும் கோபத்துடன் இருக்கிறான். பீமன் பெரும் கோபக்காரன்; யுத்தத்தில் மடிவதை வேண்டுமானால் ஏற்பானே ஒழிய நம்முடன் சமாதானம் செய்து கொள்வதை ஏற்க மாட்டான். நகுல சகாதேவர்கள் கூட நம் மீது பெரும் பகை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

’திரௌபதியைச் சபைக்கு இழுத்து வந்து நாம் செய்த காரியத்தையும், துச்சாசனன் அவளுக்கு விளைவித்த துன்பத்தையும் பாண்டவர்கள் மறக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. திரௌபதியைத் தினந்தோறும் பார்த்து மனம் நொந்து போயிருக்கும் பாண்டவர்கள், சமாதானத்தை இந்த நிலையில் ஏற்கப் போகிறார்கள் என்பது நடக்காத காரியம்.

‘இது மட்டுமல்ல, மரியாதைக்குரியவரே! சில விஷயங்களை நினைத்துப் பாருங்கள். அரசர்களுக்கெல்லாம் அரசனாக சூரியன் போல், அவர்களுக்கு மேல் நான் பிரகாசித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது யுதிஷ்டிரனுக்குப் பின்னால், அவனைப் பணிந்து நான் எப்படிச் செல்வது? அன்பினால் நீங்கள் சொல்வதை ஆண்மை கருதி நான் நிராகரிக்கிறேன். கடும் போர் புரிவதே எனக்குரிய தர்மம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

‘நான் யாகங்கள் செய்தேன்; வேதம் அறிந்த பிராமணர்களுக்குத் தர்மம் செய்தேன். அனைத்து சுகங்களையும் அனுபவித்தேன். வேதங்களைப் படித்தேன். என்னுடைய பணியாட்களை நன்றாகக் கவனித்தேன். ஏழைகளை வாழ வைத்தேன். பகைவர்களுடைய ராஜ்ஜியங்களை வென்றேன். அவர்கள் தலை மேல் என் கால் வைக்கப்பட்டது. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தேன். இனி இந்த உலகத்தில் நான் அனுபவிக்க வேண்டியது எதுவும் மிச்சமில்லை. நான் செய்ய வேண்டிய கடமையும் எதுவும் மீதி இல்லை. க்ஷத்திரியனுக்குப் புகழ் ஒன்றுதான் தேடத் தக்கது. அதைத் தேடுவதற்கு யுத்த களத்தை விட்டால் வேறு இடம் கிடையாது. யுத்த களத்தில் போரிட்டு, வீழ்ந்து மரணமடையும் க்ஷத்திரியன், பெரும் யாகங்களைச் செய்த பலனைப் பெறுகிறான்’.

யுத்தம் செய்வது என்ற தீர்மானத்தை உறுதியாகக் கூறினான். ‘சுத்தமான வீரனுக்கு, சொர்க்கத்தில் இடம் நிச்சயம். பிதாமகர் பீஷ்மர் அங்கே போயிருக்கிறார்; வில்வித்தை பயிற்றுவித்த துரோணாச்சாரியார் அங்கே போயிருக்கிறார்; எனக்காகவே வாழ்ந்து, எனக்காக உயிரை விட்ட கர்ணன் அங்கே போயிருக்கிறான். என்னுடைய நண்பர்களையும், பெரியோர்களையும் யுத்தத்தில் பலி கொடுத்து விட்டு, நான் மட்டும் சமாதானம் செய்து கொண்டு, உயிர் வாழ விரும்பினால், உலகம் என்னைப் பரிகசிக்கும். யுத்தம் ஒன்றே எனக்கு வழி. அங்கு எனக்கு வீர சொர்க்கம் கிட்டட்டும். அதுவே எனக்குப் பெருமை. சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை.’

இவ்வாறு துரியோதனன் உறுதியுடன் பேசியதைக் கேட்டு, அவனைச் சுற்றி இருந்த வீரர்களும், அரசர்களும் அவனைப் பெரிதும் பாராட்டினார்கள். அவர்கள், ’எந்த வீரனால், முறையாகப் போரிட்டுப் பகைவர்களை வெல்வோமோ, அப்படிப்பட்ட ஒரு வீரனை, நாம் சேனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம். தகுதியான சேனாதிபதியை இப்போது நியமிப்பாயாக’ என்று துரியோதனனைக் கேட்டுக் கொண்டனர்.
துரியோதனன், அஸ்வத்தாமாவை அணுகி, ‘ஆச்சாரியரின் மகனே! எங்கள் அனைவருக்கும் உரிய வழியைச் சொல்லக் கூடிய தகுதி படைத்த நீரே, யாரைச் சேனாதிபதியாக்கலாம் என்று கூறுவீராக’ என்று கேட்டுக் கொண்டான்.

துரியோதனன், அஸ்வத்தாமாவிடம் இவ்வாறு ஆலோசனை கேட்க, அஸ்வத்தாமா, ‘குலத்தால் உயர்ந்தவன், உருவத்தால் வலியவன், புகழினால் சிறப்புற்றவன், எல்லா நற்குணங்களும் நிறைந்தவன், ‘சல்யன்’. அவனை நமது சேனாதிபதியாக்கி, நாம் வெற்றியைப் பெறுவோம்’ என்று கூறினான்.

அஸ்வத்தாமா இப்படிக் கூறியவுடன், துரியோதனன் தரையில் இறங்கி நின்று கொண்டு, ரதத்தில் அமர்ந்திருந்த சல்யனைப் பார்த்து, இரு கைகளையும் கூப்பிக் கொண்டு, ‘நண்பர்களிடத்தில் பேரன்பு கொண்ட சல்யனே! பெரும் வீரனாகிய உன்னை சேனாதிபதியாக்க நாங்கள் விரும்புகிறோம். படைத் தலைமையை நீ ஏற்றாய் என்றால், பாண்டவர்கள் அலறி நடுங்குவார்கள். எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக’ என்று கேட்டுக் கொண்டான்.

துரியோதனனின் வேண்டுகோளை ஏற்று, சல்யன், ‘கிருஷ்ணரும், அர்ஜுனனும் போரில் சிறந்தவர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவர்கள் இருவரும் எனக்கு நிகரானவர்கள் அல்ல. பாண்டவர்கள் படை முழுவதையும் இன்றே நான் அழிப்பேன். அல்லது இன்றே இந்த யுத்த களத்தில் உயிர் விடுவேன். உனது படைத் தலைமையை நான் மனம் விரும்பி ஏற்கிறேன்’ என்று சபதம் செய்து, சேனாதிபதியாக இருக்கச் சம்மதித்தான்.

அதன் பின் நடந்த யுத்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1