ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 95

மேகலா : துரியோதனன், ‘கதா’ யுத்தத்துக்குத் தான் தயாரென்றும், பாண்டவர்களில் யார் வேண்டுமானாலும் தன்னுடன் போர் புரியலாம் என்றும் வீர முழக்கமிட்டான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இப்படி யுதிஷ்டிரரும், துரியோதனனும் பேசியதைக் கேட்ட கிருஷ்ணர், யுதிஷ்டிரர் மீது பெரும் கோபம் கொண்டார். ‘யுதிஷ்டிரரே! உங்களில் ஒருவனை எதிர்க்கும்படி துரியோதனனுக்கு அனுமதி அளித்து விட்டீர். அவன் பீமனைத் தவிர்த்து விட்டு, உங்கள் நால்வரில் ஒருவரைக் குறிப்பிட்டு விட்டால் என்ன செய்வது? ஒருவனை வென்று ராஜ்ஜியத்தையே பெறலாம் என்றும் இப்போது நீர் சொல்லி விட்டீர்.

இவன் ‘கதை’ யுத்தத்தில் பெற்றிருக்கும் பயிற்சி பற்றி உமக்குத் தெரியுமா? பீமனைக் கொல்ல வேண்டும் என்பதற்காகவே, இரும்பினாலேயே ஒரு மனித உருவத்தைச் செய்து, அதனுடன் பதின்மூன்று வருட காலம் அவன் ‘கதை’ யுத்தப் பயிற்சி செய்திருக்கிறான். யோசிக்காமல் வார்த்தையை விட்டு விட்டீர்! ‘கதை’ யுத்தத்தில்துரியோதனனை எதிர்ப்பதற்கு, பீமனைத் தவிர்த்து வேறு யாரையும் நான் பார்க்கவில்லை. ஆனால், பீமன் கூட துரியோதனன் அளவுக்குப் பயிற்சி இல்லாதவனே. பலவானுக்கும் பயிற்சி உள்ளவனுக்குமிடையே போட்டி நடந்தால், பயிற்சி உள்ளவனே வெற்றி பெறுவான்.

மிகப் பெரிய ஆபத்தில் நம் அனைவரையும் நீர் சிக்க வைத்து விட்டீர். எல்லாப் பகைவர்களையும் வென்று விட்ட நிலையில், ராஜ்ஜியத்தை நழுவ விடுகிற உமது செயல் நிந்திக்கத்தக்கது. ஒரே ஒரு அஸ்திரத்தினால் இந்த துரியோதனனை நீர் கொன்றிருக்க வேண்டாமா? அதை விட்டு அவனோடு ‘கதா’ யுத்தம் நடத்தத் தயாராகி விட்டீரே. பாண்டுவின் குலம் ராஜ்ஜியத்தை அடையப் போவதில்லை. மீண்டும் வனவாசம் செல்வதற்கான வழியை நீர் செய்து விட்டீர். பிச்சை எடுப்பதற்கே பிறந்த குலம் போலும், உமது குலம்....!’

இவ்வாறு கிருஷ்ணர், தருமனைக் கடிந்து கொண்ட போது, அதற்கு தருமன் பதில் ஏதும் கூறாமல் இருந்தார். அப்போது பீமசேனன் குறுக்கிட்டு, ‘கேசவரே! உமக்குக் கவலை வேண்டாம். யுத்தத்தில் நான் துரியோதனனைக் கொன்று காட்டுகிறேன். அதில் எனக்குச் சந்தேகமில்லை. துரியோதனன் ‘கதை’யை விட என் ‘கதை’ ஒன்றரை மடங்கு பெரியது. இந்தக் ‘கதை’யினால் போர் செய்யும் போது, துரியோதனனை விட மேம்பட்டவனாகவே இருப்பேன். மூவுலகிலும், ‘கதை’ யுத்தத்தில் எனக்கு நிகர் யாரும் இல்லை. துரியோதனனை வெல்வது பற்றி உமக்குச் சந்தேகம் தேவையில்லை’ என்று சொன்னான்.

இதைக் கேட்டு மகிழ்வுற்ற கிருஷ்ணர், ‘பீமா! உன் பலம் இருக்கும் வரை பாண்டவர்களுக்கு அச்சமில்லை தான். துரியோதனனோடு நீ போர் புரியும் போது, அவன் மிகவும் சாமர்த்தியமுள்ளவன், பயிற்சியுடையவன், வலிமை மிக்கவன் என்பதையெல்லாம் மறக்காமல், முயற்சியோடு யுத்தம் செய்வாயாக’ என்று கூறினார்.

பீமசேனன் தன்னுடைய வல்லமையை மீண்டும் எடுத்துரைத்து துரியோதனனுடன் யுத்தம் செய்யத் தயாராக நின்றான். துரியோதனனிடம் அப்போது கவலையோ, பரபரப்போ காணப்படவில்லை.
பீமன், துரியோதனனிடம், ‘எந்தத் தவறும் செய்யாத எங்கள் மீது நீ கொண்ட வஞ்சத்தின் காரணமாக, இந்தப் பெரும் யுத்தம் நிகழ்ந்திருக்கிறது. நீ ஒருவனே உன்னுடைய தரப்பில் மிஞ்சியிருக்கிறாய். உன்னையும் இப்பொழுது இந்தக் ‘கதை’யினால் நான் கொல்லப் போகிறேன்’ என்று கூறினான்.

அதற்கு துரியோதனன், ‘பீமா! உன்னுடைய தற்புகழ்ச்சியினால் ஒரு பயனும் இல்லை. யுத்த நெறி தவறாமல் உனக்கும் எனக்கும் இடையில் ‘கதை’ யுத்தம் நடந்தால், வெற்றி எனக்கே!’ என்று கூறி பீமனை எதிர்ப்பதற்குத் தயாராக நின்றான். பாண்டவர் தரப்பு வீரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். யானைகள் கர்ஜித்தன; குதிரைகள் கனைத்தன. அப்போது பரசுராமர் அங்கே வந்தார்.

மேகலா : கிருஷ்ணா....! ஏன் பீமன், துரியோதனனை விட வலிமையில் குறைந்தவன் என்று சொல்லுகிறாய்....? பீமனுடைய வலிமை எல்லோரும் அறிந்ததுதானே. துரியோதனனும், பீமனும், பலராமர் சிஷ்யர்களே. இருப்பினும், துரியோதனனை விட பீமனை குறைத்து மதிப்பிடுவது சரிதானா.., கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : மேகலா...., தற்போதுள்ள பாண்டவர்கள் மனநிலையையும், துரியோதனனின் மனநிலையையும் ஒப்பிட்டுப் பார். யுத்த களம் வெறிச்சோடிப் போயிற்று. போரிடுவதற்குக் கூட கௌரவர் தரப்பில் வீரர்கள் யாரும் இல்லை. துரியோதனனைக் காணோம்; வெற்றி என்பது நம் கையில் கொடுக்கப்பட்டு விட்டது என்ற சந்தோஷக் களிப்பில் பாண்டவர்கள் இருக்கிறார்கள். துரியோதனனோ, பெரும் காயமுற்று, களைப்போடு இருந்தாலும், பட்ட அவமானத்தை நினைத்து ஆத்திரத்தில் இருக்கிறான். தன் சகோதரர்கள் இறப்பு, நண்பர்கள் இழப்பு, அவனை விரக்தியில் புலம்ப வைத்திருக்கிறது.

இதில் யுதிஷ்டிரரோ, பழசை ஞாபகப்படுத்தி, அவனைக் குத்திக் காட்டுகிறார். சண்டை போடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாலும், அந்த நேரத்தில் அவனுக்குப் பிறந்தது உற்சாகம் இல்லை என்றாலும், தருமனை ஜெயிக்க வேண்டும் என்ற கோபமும், வேகமும் அவனை சீற வைக்கிறது. பீமனுக்கோ, ஜெயித்த பின் வரும் சந்தோஷத்தில் இருக்கிறான். சந்தோஷ உற்சாகம் என்பது நம்மை, நம் திறமையைக் கொஞ்சம் வலுவிழக்க வைத்து விடும், என்பதுதான் என்னுடைய பயம். அதனால் தான், பீமனை, அவன் கோபத்தை நான் தூண்டி விட்டேன். நாம் சொன்னது போல, திறமை வேறு, திறமையுடன் கூடிய பயிற்சி வேறு; பலம் வேறு; சாமர்த்தியம் வேறு. ‘கதை’ பயிற்சியில், பீமன் பலசாலி தான். துரியோதனனோ, சாமர்த்தியசாலி. அவனுக்கு பீமனை வெல்ல வேண்டியது கட்டாயமாகிப் போயிற்று.

மேகலா : தருமன், துரியோதனனைக் கேள்வியால் துளைக்கும் போது, நமக்கு ‘ஐயோ பாவம்’ என்றெல்லாம் வரவில்லை, கிருஷ்ணா! ‘நல்லா கேட்கட்டும்’ என்றுதான் தோன்றுகிறது. கிருஷ்ணர் சொல்லியபடி, ‘அஸ்திரத்தை எடுத்தோமா, துரியோதனனைக் கொன்றோமா’ என்றில்லாமல், ’இப்படி வார்த்தையை விட்டு விட்டீரே’ என்று கேட்கும் போது, எனக்கும், ‘அதானே! ச்...ச்... சும்மா.... ‘வள வள’ன்னு பேசிக்கிட்டு, இவனையும் பேச விட்டு, இவனை ஏன் நல்லவனாக்கணும்’ என்று தோன்றியது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நீயா நினைத்தாய்.....? அடா.... அடா..... எனக்குத் தெரியாதா..... கிருஷ்ணன் என்ன சொன்னாலும், அதுதான் சரி என்பாய்.....

மேகலா : என் கிருஷ்ணன் எப்பவும் சரியாத்தான் சொல்லுவார்....

கிருஷ்ணர் : சரி...., கதையை மேலே சொல்லு....

(அடுத்த பகுதி, துரியோதனனின் வீழ்ச்சியுடன் துவங்கும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1