ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 96

துரியோதனன் வீழ்ந்தான்

மேகலா : பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே, ‘கதை’ யுத்தம் நடக்க இருக்கிறது என்று அறிந்து, அங்கு வந்த பலராமரைப் பாண்டவர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். ‘பலராமரே, உங்களுடைய இரு சிறப்பான சிஷ்யர்களின் போர்த்திறமையை இப்போது பாருங்கள்’ என்று கூறினார்கள்.

பலராமர், கிருஷ்ணரைப் பார்த்து, ‘மாதவா! என் சிஷ்யர்களுக்கிடையே நடக்க இருக்கும் இந்த ‘கதை’ யுத்தத்தைப் பார்க்க, நானும் மிக ஆவலாகத்தான் இருக்கிறேன்’ என்று சொன்னார்.

அதன் பின்னர், பாண்டவர் தரப்பிலிருந்த பல மன்னர்களும் வீரர்களும் பலராமருக்கு வணக்கம் செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து துரியோதனனும் ஆசி பெற்றான். ‘கதை’ யுத்தத்தைப் பார்ப்பதற்காக, பலராமர் அங்கே அம்ர்ந்திருந்த மன்னர்களிடையில் தானும் அமர்ந்து கொண்டார்.

‘கதை’ யுத்தம் தொடங்கியது. பீமனும், துரியோதனனும் மிகவும் கோபம் கொண்ட இரண்டு மத யானைகள் போல் யுத்தத்தைத் தொடங்கத் தயாரானார்கள். இருவருமே மிகவும் பயங்கரமான திறமை கொண்டவர்கள். இருவருமே பலராமரின் சிஷ்யர்கள். இருவரையுமே எமனுக்குக் கூட உதாரணமாகக் கூறி விடலாம் என்கிற அளவுக்கு யுத்தத்தில் முனைப்பு உடையவர்கள்.

துரியோதனன், ‘யுத்தத்தைத் தொடங்குவோம்’ என்று பீமனைப் பார்த்து, அறைகூவல் விடுத்தான். அப்பொழுது, பெரும் காற்று வீசி, வானத்தில் பயங்கரமான இடி இடித்தது.

இந்த துர்நிமித்தங்களைக் கண்ட பீமன், யுதிஷ்டிரரைப் பார்த்து, ‘இந்த துரியோதனன், தன்னுடைய தாயையோ, தந்தையையோ இனி பார்ப்பது என்பது கிடையாது. தன்னுடைய ராஜ்ஜியம், தன்னுடைய உயிர் எல்லாவற்றையும் இழக்கும் நேரம் வந்து விட்டது’ என்று கூறினான்.
யுதிஷ்டிரரிடம் இவ்வாறு கூறிய பீமன், துரியோதனனைப் பார்த்துச் சொன்னான், ‘உன்னுடைய தீச்செயல்களையெல்லாம் நினைவு படுத்திக் கொள். அரக்கு மாளிகையைக் கொளுத்தியதை நினைத்துக் கொள். தருமரை சூதாட்டத்தில் ஏமாற்றி ஜெயித்ததை நினைத்துக் கொள். திரௌபதியை சபையில் வைத்து, கூந்தலைப் பற்றி இழுத்து, அவமானப்படுத்தியதை நினைத்துக் கொள்.

கெட்ட மதியுடைய துரியோதனா! என்னுடைய அதிர்ஷ்டத்தினால் உன்னைக் கொல்லும் வாய்ப்பை இப்போது நான் பெற்றிருக்கிறேன். பீஷ்மர், துரோணர், சல்யன், கர்ணன் எல்லோரும் மாண்டது உனக்காகத்தான். அவர்கள் சென்ற வழியில் உன்னை இப்போது அனுப்பி வைக்கிறேன். இந்த ‘கதை’யினால் உன்னை அடித்துக் கொல்வேன்’ என்று கூறவும்,

துரியோதனன், மிகவும் அலட்சியமாக, 'வெறும் தற்புகழ்ச்சியினால் ஒரு பயனும் கிடையாது. யுத்தத்தைத் தொடங்குவோம். வாய்ச் சொல்லினால் வெற்றி கொள்ள நினைக்காமல், உன்னுடைய திறனைச் செய்கையில் காட்டுவாயாக! தாமதம் வேண்டாம்’ என்று கூறினான்.

கோபத்தினால் தூண்டப்பட்ட பீமன், துரியோதனன் மீது பாய்ந்தான். பார்ப்போருக்கெல்லாம் மயிர்க் கூச்சலை உண்டாக்கக் கூடிய அந்த யுத்தம் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது.

துரியோதனன் தனது ‘கதை’யைச் சுழற்றிய லாவகத்தைக் கண்டும், வேகத்தைக் கண்டும் எல்லோருக்கும் அச்சம் உண்டாகி விட்டது. குறுக்கும் - நெடுக்குமாகவும், நேராகவும், பின்புறமாகவும், சுற்றிச் சுற்றியும், பாய்ந்து சென்று யுத்தம் புரிந்த துரியோதனனின் ‘கதை’ யுத்தத் திறன், வியக்கத்தக்கதாக இருந்தது. துரியோதனனின் லாவகத்தைக் கண்டு பீமன் சிறிதும் பயமில்லாமல், அவனை எதிர்த்து சண்டையிட்டான். இரண்டு ‘கதை’களும் மோதுவது, இரண்டு ‘வஜ்ராயுதங்கள்’ மோதிக் கொள்வது போல பேரோசை உண்டாயிற்று.

‘கதை’யை வட்டமாகச் சுழற்றி பீமனின் தலையின் இடப்பக்கத்தை, ‘கதை’யினால், துரியோதனன் தாக்கினான். துரியோதனனின் தாக்குதலைக் கண்ட பாண்டவர்கள், பீமன் வீழ்ந்தான் என்றே நினைத்தார்கள். ஆனால், பீமன் சற்றும் அசையவில்லை. இதையடுத்துப் பீமன் துரியோதனனைத் தாக்க, துரியோதனனும் அசையாமல் நின்றான். ஆச்சர்யமான இந்தத் தாக்குதலின் போது, பீமன் அடித்த அடியில், துரியோதனன் பெரும் கோபம் கொண்டு, மிகவும் லாவகமாக ‘கதை’யைச் சுழற்றி, பீமனை மார்பில் அடித்தான். பீமனுக்கு மயக்கம் ஏற்பட்டது. கொஞ்சம் தடுமாறினான். உடனே தனது தடுமாற்றத்திலிருந்து விடுபட்டு, துரியோதனனை நோக்கிப் பாய்ந்தான். துரியோதனன் கீழே விழுந்து, முழங்கால்களால் தன்னைத் தாங்கிக் கொண்டு, மீண்டும் எழுந்து நின்று யுத்தம் புரிந்தான்.
இப்படி இருவருமே, ஒவ்வொரு சமயத்தில் தடுமாறுவதும், மீண்டும் போர் புரிவதுமாக இருந்தார்கள். ஒரு நிலையில், பீமனின் கவசம், துரியோதனனின் ‘கதை’யால் பிளக்கப்பட்டது. கவசத்தை இழந்த பிறகும், பீமன் உக்கிரமாகவே போர் புரிந்தான். ஆனால், துரியோதனனின் திறனுக்கு, பீமனின் திறமை சற்றுத் தாழ்ந்ததாகவே இருந்தது.
இவர்களில் யார் சிறந்தவன் என்பதை அளவிட முடியாத படி இருவரும் போர் புரிந்தார்கள்.

கிருஷ்ணர் சொன்னார், ‘அர்ஜுனா! ‘கதை’ யுத்தத்திலும் இருவருக்கும் சமமான போதனைதான் தரப்பட்டிருக்கிறது. இவர்களில் பீமன் பலத்தில் உயர்ந்தவன். துரியோதனன் சாமர்த்தியத்தில் பீமனை விட உயர்ந்தவன். துரியோதனனுக்கு இருக்கும் முனைப்பு, பீமனுக்குக் கிடையாது. நேர்மையான யுத்தத்தைப் புரிகிற வரையில், பீமனால் துரியோதனனை வெல்ல முடியாது. கபடத்தைக் கையாண்டால் தான் பீமனால் துரியோதனனை வீழ்த்த முடியும். துரியோதனன், தன்னால் அடையத் தக்கது எதுவும் இல்லை என்று உணர்ந்து, உயிரில் ஆசையை விட்டவனாக, பெரும் மனோ திடத்துடன் போர் புரிகிறான். பதின்மூன்று வருட காலம் ‘கதை’ யுத்தத்தின் நுட்பங்களை விசேஷமாகப் பயின்றவன். இந்தப் பயிற்சியை, பீமனை, ‘கதை’ யுத்தத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காகவே எடுத்திருக்கிறான். ‘கதை’ யுத்தம் புரியும் லாவகத்தை துரியோதனன் மாதிரி பயின்றவர் யாரும் இல்லை.

‘இந்த இக்கட்டான நிலையில், பீமன் அநியாயமான வழியைக் கடைப்பிடித்துத்தான், துரியோதனனை வெல்ல முடியும். அப்படி அவன் செய்யாமல் போனால், துரியோதனன் தான் உங்களையெல்லாம் அரசாள்வான். மாயாவியான இந்த துரியோதனனை, பீமன், மாயையான யுத்தம் புரிந்தே கொல்லட்டும். துரியோதனனின் தொடைகளைப் பிளந்து, யுத்த களத்தில் வீழ்த்துவதாக பீமன் சபதம் செய்திருக்கிறான். அந்த சபதத்தை பீமன் இப்போது நிறைவேற்றட்டும்’ என்று கூறினார்.

இப்படி, கிருஷ்ணர் கூறியவுடன், அர்ஜுனன், பீமன் தன்னை நன்றாகப் பார்க்கும் வகையில் நின்று கொண்டு, தனது இடது தொடையைத் தட்டிக் காட்டினான். கிருஷ்ணர், அர்ஜுனனிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த பீமன், அதைத் தொடர்ந்து, அர்ஜுனன் செய்த சமிக்ஞையைப் புரிந்து கொண்டான்.

தொடர்ந்து கோரமான ‘கதை’ யுத்தம் நடந்தது. அப்போது, துரியோதனனின் தாக்குதலால் பீமன் பெரிதும் துன்புறுத்தப்பட்டான். துரியோதனன், பீமனைத் தாக்குவதற்காக மேலே எழும்பினான். அப்போது, பீமனுக்கு வசதியான வாய்ப்பு கிட்டியது. அவன் துரியோதனனின் தொடையைக் குறி வைத்து ‘கதை’யை வீசினான்.

துரியோதனனின் இரு தொடைகளும் முறிந்தன. பூமியே அதிர்ச்சியுற, துரியோதனன் கீழே விழுந்தான். மலைகளும், மரங்களும் ஆட்டம் கண்டன. பூமியே அசைந்தது. வானத்திலிருந்து பெரும் கொள்ளிக் கட்டை ஒன்று விழுந்தது. சுற்றி நின்ற வீரர்கள் எல்லாம் கலக்கமுற்றனர்.

மேலும் நிகழ்ந்த யுத்த நிகழ்ச்சிகளோடு அடுத்த பகுதியில் சந்திப்போம்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1