ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 98

துரியோதனன், பீமனின் ‘கதை’யால் தொடையில் தாக்கப்பட்டு, பூமியிலிருந்து சிரமப்பட்டு எழுந்து கிருஷ்ணரைப் பார்த்துக் கடுமையாக பேசத் தொடங்கினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.

மேகலா : என்ன பேசப் போகிறானாம் கிருஷ்ணா? இவர்கள் தர்மம் மீறி சண்டை போடும் போது, யாரும் வசனம் பேசவில்லை. இன்று கொல்லப்பட வேண்டிய துரியோதனனைக் கொல்லும் போது மட்டும், பலராமர் சொல்லுவாராம், ‘துரியோதனன் ரொம்ப...... நல்லவனென்று’.

துரியோதனனும், முக்கி..... முணங்கி, எந்திரிச்சி, கிருஷ்ணரைப் பார்த்து, கடுமை.......யான வார்த்தைகளால் பேசப் போகிறானாம். என்ன.... நடக்குது.... கிருஷ்ணா, இங்க. பீமனைக் கொல்லுவதற்கு துரியோதனனுக்கு இப்ப வேணா motive இருக்கலாம். சிறு பிராயத்திலிருந்தே, அவனைக் கொல்வதற்காகவே மாமன் சகுனியைக் கூடவே வைத்து, ப்ளா....ன் பண்ணி, சதி பண்ணினானே.... அவன் தர்மம் தெரிந்தவனா.....? தர்மாத்மா என்று பலராமர் கூறுகிறாரே....., என்னால் சகிக்கவே முடியவில்லை. மேலே எழுந்து, ’கதை’யால் தாக்க வந்தவனிடம் அடி வாங்கி, கீழே விழ வேண்டுமா....? தப்பாக அடித்தாலும் தான் என்ன? துரியோதனனைக் கொல்ல வேண்டும். அதுதான் தர்மம். இந்த தர்மத்தைச் செய்வதற்கு பீமன் தொடையில் தட்டியது தப்பில்லை. பின்னால் இருந்தா தாக்கினான்....?

கிருஷ்ணர் : பேசி விட்டாயா....? அதான்..... எல்லோரும் கேட்டு விட்டார்களே..... பீமன் கவலைப்பட்டானா? தந்திரத்தால், கௌரவர்களை வீழ்த்தும் போதெல்லாம் பீமன் உடனிருந்தவன்; அவனுக்குத் தெரியும்...., எது தர்மம்....? எது தந்திரம்....? யார் தர்மத்தை மீறியவர்? - என்றெல்லாம் அவனுக்குத் தெரியும்.

சிறு குழந்தைகளாக இருந்த போதே, பாண்டு, பாண்டவர்களை விட்டு இறந்து போனான். அன்றிலிருந்து பாண்டவர்களுக்கு உயிர் உத்திரவாதம் கிடையாது. விதுரர் ஒரு சமயம் காப்பாற்றுவார்; பீஷ்மர் ஒரு சமயம் காப்பாற்றுவார்; அடியேன் கிருஷ்ணன் ஒரு சமயம் காப்பாற்றுவான். ஆனால், பாண்டவர்களுக்கு மட்டும் துரியோதனனால் நித்திய கண்டம், பூரண ஆயுசு தான். பலராமருக்கு, அடிப்படையில் துரியோதனனைப் பிடிக்கும். ஒரு வேளை, கிருஷ்ணருடைய சகாயம் பாண்டவர்களுக்கு இருக்கிறது என்பதாலோ என்னவோ, துரியோதனன் மீது அவருக்கு ஒரு வாஞ்சை இருக்கலாம்; பேசிட்டுப் போகட்டும். இன்னும் யார் யாரெல்லாம் பேசப் போகிறார்கள், பார்.....

மேகலா : பாண்டவர்களைப் பேசினால் கூடப் பரவாயில்லை கிருஷ்ணா! என் தலைவன் கிருஷ்ணனைப் பேசினால், எனக்குக் கோபம் வராதா...? தலைவா.... நீ சொல்லு..... ‘உயிர் உனக்கு, உடல் மண்ணுக்கு’.....

கிருஷ்ணர் : ஐயோ...., கலிகாலம்டா சாமி......, மேகலா......, மேல கதையைச் சொல்லு....

கிருஷ்ணரும், பாண்டவர்களும் வெட்கித் தலை குனிந்தார்கள்

மேகலா : கிருஷ்ணரைப் பார்த்து கடும் சொற்களை வீசத் தொடங்கிய துரியோதனன், தனது உடலின் பின் பாதியை பூமியின் மேல் தாங்கியும், முன் பாதியை உயரே தூக்கியும், கிருஷ்ணரைக் கோபத்தோடு ஏறிட்டுப் பார்த்த போது, ஒரு கொடிய நாகம் போல, அவன் தோற்றமளித்தான். தன் காயங்களினால் உண்டான வலியைப் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினான்.

‘கம்ஸ மன்னனுக்கு சேவகம் புரிந்து வாழ்ந்த வசுதேவன் மகனே கிருஷ்ணா! உனக்கு வெட்கம் என்பதே துளியும் கிடையாதா? ‘கதை’ யுத்தத்தின் விதிமுறைகளையெல்லாம் மீறி, தொடையில் அடிக்கப்பட்டு நான் வீழ்த்தப்பட்டது உன்னால்தானே! பீமனுக்கு அர்ஜுனன் சமிக்ஞை செய்தது, உன்னுடைய தூண்டுதலினால்தான் என்பதை நான் அறியவில்லை என்று நினைத்தாயா?

‘எங்கள் தரப்பில் நின்று தர்மயுத்தம் நடத்திய மாவீரர்களையும், மன்னர்களையும் உன்னுடைய சூதினாலும், வஞ்சனையாலும் நீ கொன்றாயே; கிருஷ்ணா! அது குறித்து உனக்கு சற்றும் அவமானமே இல்லையா? நேர்மையான யுத்தம் புரிந்து, ஆயிரக்கணக்கான வீரர்களை வீழ்த்திக் கொண்டிருந்த பீஷ்மரைக் கொல்ல, சிகண்டியை முன் நிறுத்தினாய்! அஸ்வத்தாமா என்ற யானையைக் கொன்று விட்டு, துரோணரின் மகன் அஸ்வத்தாமா தான் கொல்லப்பட்டான் என்ற பொய்ச் செய்தியைக் கூறி, அவரை ஆயுதத்தைத் தரையில் வீசி எறியுமாறு நடத்தப்பட்ட சூதிற்கு யார் காரணம்? அவர் ஆயுதங்களைத் துறந்ததால் மட்டுமே, திருஷ்டத்யும்னனால் துரோணரைக் கொல்ல முடிந்தது. கர்ணன், அர்ஜுனன் மீது ஏவுவதற்காக வைத்திருந்த சக்தி ஆயுதத்தை, கடோத்கஜன் மீது ஏவச் செய்து வீணடித்தாய்; தியானத்தில் இருந்த பூரிசிரவஸை, உன்னால் தூண்டப்பட்ட சாத்யகி, பேடி போல் கொன்றான். அர்ஜுனனின் தேரை அழுத்தி, கர்ணனின் நாகாஸ்திரத்தைப் பாழ் செய்தாய். எவராலும் வெல்லப்பட முடியாத கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியில் அழுந்தி விட, அந்த நிலையில் ஆயுதம் ஏந்தாத அவனை மிகவும் கேடு கெட்ட முறையில், அப்போதே கொன்று விடுமாறு அர்ஜுனனைப் பணித்தாய்.

கிருஷ்ணா! நீயே நின்று நேர்மையான யுத்தம் செய்தாலும், பீஷ்மரையோ, துரோணரையோ, கர்ணனையோ, என்னையோ கூட நீ வீழ்த்தியிருக்க முடியாது. கிருஷ்ணா! உன்னுடைய மாயாஜால வித்தையினால், சூரியனை மறைக்கும் தந்திரத்தைச் செய்துதானே ஜயத்ரதனைக் கொல்வித்தாய். வெட்கம் கெட்டவனே, நீங்கள் வென்ற விதம் இகழத்தக்கது.’

இவ்வாறு துரியோதனன் கொடூரமான சொற்களை வீசிய பிறகு கிருஷ்ணர், அவனுக்கு பதில் கூறத் தொடங்கினார். ‘காந்தாரி பெற்ற மகனே! துரியோதனா! பாவத்தின் பாதையில் பயணம் செய்யத் தொடங்கி விட்டவன் நீ. உன்னுடைய பாவத்தின் காரணமாகத்தான் பீஷ்மரும், துரோணரும் கூட இந்த யுத்தத்தில் வீழ்த்தப்பட்டார்கள். உன் மனதிற்கு இன்பம் தருவதற்காகவே நடந்து கொண்ட கர்ணனும் மாண்டான். நானே நேரில் வந்து, எவ்வளவோ வேண்டிக் கேட்டும் கூட, ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்குரிய பங்கைக் கொடுக்க மறுத்தாய். தீய எண்ணம் கொண்டவனே! நீ செய்த கொடுமைகள் ஒன்றா, இரண்டா...? பீமனுக்கு விஷம் வைத்தாய். பாண்டவர்கள் அனைவரையும், அரக்கு மாளிகையில் எரித்து விட முயற்சித்தாய். கேடு கெட்ட சூதாட்டத்திற்கு தருமனை அழைத்து, சூதாட வைத்து, செல்வத்தை இழக்குமாறு செய்தாய். வீட்டிற்கு விலக்காக இருந்த திரௌபதியைச் சபைக்கு வரவழைத்து, அங்கே அவளை அவமானப்படுத்தினாய். உன் சபையில் அந்த இழிசெயல் நடந்த போதே, நீ எவ்வகையினாலும் கொல்லப்படத்தக்கவனாகி விட்டாய் என்பதை மறந்து விடாதே.

’சிகண்டி முன் நின்று, பீஷ்மரை, தன் நண்பனுக்காகக் கொன்றான். தன்னுடைய தர்மத்துக்கு மீறி துரோணர் நடந்து கொண்டதால், திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார். நீங்கள் அனைவரும், விராட தேசத்தில் வைத்தே அர்ஜுனனால் கொல்லப்பட்டிருக்க வேண்டியவர்கள். அர்ஜுனனுடைய தயையினால் தான் அன்று நீங்கள் தப்பித்தீர்கள். அர்ஜுனன் நினைத்திருந்தால், அன்றே கர்ணனைக் கொன்றிருக்க முடியும். அப்படிச் செய்யாமல், இந்த மகாயுத்தத்தில் கர்ணனைக் கொன்று, பெரும் புகழை அடைந்திருக்கிறான்.

உன்னுடைய பாவச் செயல்களின் காரணமாக இங்கே நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம், நாங்கள் செய்த அநீதிகள் என்று நீ வர்ணிப்பது வியப்புதான். நீ முதியோர்களின் பேச்சையெல்லாம் அவமதித்தாய். நலம் கூறி இடித்துரைத்தவர்களின் ஆலோசனைகளையெல்லாம் நிராகரித்தாய். தீமையை மனதில் நினைத்தாய்; கொடுமையைச் செய்தாய். அதன் பலனாக இன்று இந்த முடிவை அடைந்திருக்கிறாய். இந்த முடிவு உன் பாவங்களினால் ஏற்பட்டது. அதற்கு வேறு யார் மீதும் பழி போடுவது நியாயமல்ல’.

கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் என்ன கூறினான் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2