ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 99

மேகலா : கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் சொன்னான் : ‘கிருஷ்ணா! நீ என்னைப் பாவி என்று சொல்லுகிறாய். நானோ, வேதங்களை முறையாகப் பயின்றவன். தானங்களைப் புரிந்தவன். பரந்த இந்தப் பூமியை ஆண்டேன். என் பகைவர்களையெல்லாம் எனக்குக் கீழ்ப்படுத்தினேன். நான் செய்த பாவங்களின் முடிவை நான் அடைந்திருப்பதாக நீ கூறுகிறாய். ஆனால், எனக்குக் கிடைத்திருப்பது, க்ஷத்திரியர்களின் பெரும் பேறான முடிவு எது என்று கருதப்படுகிறதோ, அந்த விதமான வீர மரணத்தை அடைய இருக்கிறேன். இப்போது நான் இறக்கும் போது, என்னை விட பாக்கியசாலி எவனும் இல்லை. ஆனால் நீங்களோ, யாருக்காக இந்த ராஜ்ஜியத்தை விரும்பினீர்களோ, அவர்களையெல்லாம் இழந்த பிறகு, இந்த ராஜ்ஜியத்தைப் பெற்று, பெரும் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு வாழப் போகிறீர்கள். உங்கள் வாழ்வை விட, நான் அடையப் போகும் சாவு உயர்வானது.
‘கிருஷ்ணா! இன்னொன்றும் சொல்கிறேன், கேட்டுக் கொள். இங்கே பீமனுடைய கால் என் தலை மீது வைக்கப்பட்டதை நினைத்து நான் வருந்தவில்லை. ஏனென்றால், இன்னும் சிறிது நேரத்தில் கழுகுகளும், காக்கைகளும் கூட தங்களுடைய கால்களை என் தலை மீது வைக்கப் போகின்றன. அதையே தான் பீமனும் செய்தான்; அவ்வளவே’.
அறிவுக் கூர்மை மிக்க துரியோதனன் இவ்வாறு பேசி முடித்தவுடன், வானத்திலிருந்து மிக்க நறுமணம் பொருந்திய, புண்ணியத்தைத் தரக்கூடிய மலர்கள், ஒரு மழை என அவன் மீது பொழிந்தன.
கந்தர்வர்கள், துரியோதனனைப் பாராட்டி, நான்கு விதமான தெய்வீக வாத்தியங்களை ஒலித்தனர்.
துரியோதன மன்னனின் புகழ் பெருமைக்குரியது என்று சித்தர்கள் வாழ்த்தினர்.
தேவர்களால் துரியோதனன் பூஜிக்கப்பட்டதைக் கண்டு பாண்டவர்களும், கிருஷ்ணரும் வெட்கித் தலை குனிந்து நின்றனர்.
பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற பலரும் தங்களால் நெறியற்ற முறையினாலேயே கொல்லப்பட்டார்கள் என்ற உண்மை, பாண்டவர்களைச் சுட்டது. தேவர்கள், துரியோதனனுக்குச் செய்த கௌரவம் அவர்களைக் குத்தியது. அவர்களுக்கு கிருஷ்ணர் சமாதானம் கூற முற்பட்டார்.
‘மிகப் பெரிய வீரர்களாகிய பீஷ்மர், துரோணர் முதலானோருடன் முறைப்படி போர் செய்தால், அவர்கள் வெல்லக்கூடியவர்கள் அல்ல. துரியோதனனும் கூட, ‘கதை’ யுத்தத்தில், அவனை பீமன் வெல்வது என்பது அத்தனை சுலபம் கிடையாது. நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால், வெறும் போர்த்திறமை பத்தாது. உபாயாங்களும், தந்திரங்களும் செய்துதான் உங்களை ஜெயிக்க வைக்க முடியும். தேவர்கள், அசுரர்களுக்கிடையே நடந்த போரில் கூட, தேவர்கள் தந்திரங்களையும், உபாயங்களையும் கையாண்டார்கள். இந்த உபாயங்கள் ஏற்கனவே பெரியோர்களால் கையாளப்பட்டதே. நாம் செய்தது புதியது ஒன்றும் அல்ல. மேலும், விதியை மீறுவது என்பது எவருக்குமே இயலாத காரியம். பிரம்மா விதித்த விதியை, இவர்கள் அனைவரும் அனுபவித்திருக்கிறார்கள்.
இன்னும் ஒன்று நீங்கள் கவனிக்க வேண்டும். நம்மை விட எண்ணிக்கையில் மீறிய பகைவர்களை, உபாயங்களினாலும், தந்திரங்களினாலும் முறியடிப்பது என்பது, யுத்த தர்மத்திற்கு விரோதமான செய்கை அல்ல. இதற்காக நீங்கள் வருத்தப்படத் தேவையில்லை! நாம் ஓய்வெடுக்கும் நேரம் வந்திருக்கிறது. களைப்பு தீர ஓய்வெடுக்கலாம்’.
– என்று கிருஷ்ணர் சமாதானப்படுத்தியவுடன், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், வெற்றிக் களிப்பில் மூழ்கிக் கோஷங்களை எழுப்பினார்கள். கிருஷ்ணர், தனது சங்காகிய ‘பாஞ்சசன்யத்தை’ ஒலித்தார். அர்ஜுனன், ‘தேவதத்தம்’ என்ற சங்கையும், யுதிஷ்டிரன், ‘அனந்த விஜயம்’ என்ற சங்கையும், பீமன், ‘பௌண்ட்ரம்’ என்ற தனது சங்கையும், நகுல-சகாதேவன், ‘சுகோஷம்’, ‘மணிபுஷ்பகம்’ என்ற தங்கள் சங்குகளையும் ஒலித்தார்கள். இந்தப் பேரோசை, நான்கு திசைகளையும் நிரப்பியது.
அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் அனைவரும், துரியோதனன் பாசறையை நெருங்கினார்கள். அப்போது, கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, ‘உன்னுடைய வில்லாகிய காண்டீபத்தை எடுத்துக் கொண்டு, ரதத்தை விட்டுக் கீழே இறங்கு. உனக்கு நன்மையைச் சொல்கிறேன். தேரை விட்டு இறங்குவாயாக!’ என்று கூறினார்.
அர்ஜுனன், கிருஷ்ணர் கூறியவாறே செய்ய, அவர் குதிரைகளின் கடிவாளத்தைத் தன்னுடைய கையிலிருந்து கீழே போட்டு விட்டு, அர்ஜுனன் தேரை விட்டு இறங்கி விட்டானா என்பதை நிச்சயித்துக் கொண்டு, தானும் தேரை விட்டுக் கீழே இறங்கினார். அவர் அப்படி தேரை விட்டுக் கீழே இறங்கியவுடன், அந்தத் தேரின் மீது அமர்ந்து கொண்டிருந்த வானரம், வானத்தை நோக்கிப் பறந்தது.
அப்போது, அந்தத் தேர், திடீரேனத் தீப்பற்றி எரிந்தது. குதிரைகளுடனும், அம்புறாத் தூணிகளுடனும் அந்தத் தேர் பொசுங்கி சாம்பலாகியது. அந்த அற்புதத்தைக் கண்டு பாண்டவர்கள் பெரும் வியப்பை எய்தி திகைத்துப் போய் நின்றார்கள்.
அர்ஜுனன், தனது இரு கைகளையும் கூப்பிக் கொண்டு, கிருஷ்ணரை நமஸ்கரித்து, ‘ஜனார்த்தனரே! ஏன் இந்த ரதம் இப்படித் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது?’ என்று கேட்டான்.
கிருஷ்ணர் சொன்னார், ‘அர்ஜுனா! துரோணர், கர்ணன் ஆகிய இருவரும் எய்த அஸ்திரங்களினால் ஏற்கனவே இந்தத் தேரில் தீ புகுந்து விட்டது. நான் அதில் அமர்ந்திருந்ததால், இது வரை அது எரிந்து சாம்பலாகவில்லை. யுத்தம் முடிந்தது என்று நான் தேரிலிருந்து இறங்கியவுடன், ஏற்கனவே தீயிடப்பட்டு இருந்த இந்தத் தேர், இப்போது எரிந்து சாம்பலாகி விட்டது’.
அர்ஜுனன் காப்பாற்றப்பட்டதைக் கிருஷ்ணர் கூறியவுடன், யுதிஷ்டிரர் அவரைப் போற்றித் துதித்தார். கிருஷ்ணர் செய்த உதவிகளுக்கெல்லாம் யுதிஷ்டிரர் நன்றி தெரிவித்தவுடன், அவர்கள் துரியோதனனுடைய பாசறையில் புகுந்தனர். அங்கிருந்த செல்வங்களை அடைந்த பாண்டவர்கள் உற்சாகத்தினால் மகிழ்ச்சி ஆரவாரங்களை எழுப்பினார்காள்.
பாண்டவர்கள், தங்கள் பாசறைகளுக்குத் திரும்ப நினைத்த போது, கிருஷ்ணர், ‘யுத்தம் முடிந்த பிறகு, அதில் முக்கியமானவர்கள், தங்கள் பாசறைகளில் தங்காமல் வெளியே தங்குவதுதான் மங்களகரமானது’ என்று கூற, பாண்டவர்களும், சாத்யகியும், கிருஷ்ணரோடு ‘ஓகவதி’ என்ற நதிக் கரையை அடைந்து, அன்றிரவை அங்கே கழிக்க முடிவு செய்தார்கள்.
அப்போது யுதிஷ்டிரர் தன் மனதில் தோன்றிய கவலையை கிருஷ்ணரிடம் தெரிவித்தார். யுத்த நெறிகளையெல்லாம் மீறிப் பீமனால் துரியோதனன் கொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டு, காந்தாரி கோபம் மேலிட்டவளாகித் தங்களையெல்லாம் சாபத்தினாலேயே எரித்து விடுவாளோ என்று அவர் அஞ்சத் தொடங்கினார். காந்தாரியின் கோபம் தணிக்கப்பட்டால் தான், தாங்கள் எல்லாம் பொசுங்காமல் தப்பிக்க முடியும் என்று அவர் நினைத்தார். துரியோதனன் கொல்லப்பட்ட முறையை அறியும் பொழுது, காந்தாரிக்கு ஏற்படக்கூடிய குரோத உணர்வு எவராலும் சகிக்க முடியாததாக இருக்கும். ஆகையால், முதலில் காந்தாரியை சமாதானம் செய்யும் முறையை மேற்கொள்ள வேண்டும்’ என்று கிருஷ்ணரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
மேலும் யுதிஷ்டிரர், கிருஷ்ணரிடம் காந்தாரியை சமாதானம் செய்ய வேண்டிய அவசியத்தைக் கிருஷ்ணரிடம் கூறுகிறார். அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1