ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 103

 சௌப்திக பர்வம்

கோட்டான் காட்டிய வழி

மேகலா : விழுந்து கிடந்த துரியோதனனை விட்டுச் சென்ற கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகிய மூவரும் பாண்டவர்களை நினைத்து, மிகவும் பயம் கொண்டு, யாராலும் நுழைய முடியாத ஒரு காட்டினுள் நுழைந்தார்கள். துக்கம், பொறாமை, கோபம் ஆகிய உணர்வுகள் மேலிட்டவர்களாகிப் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.

காட்டினுள், ஒரு பெரிய ஆலமரத்தினைக் கண்டு, அந்த மரத்தின் கீழ் இளைப்பாறுவது என்று முடிவெடுத்து, உறக்கத்தின் வசப்பட்டார்கள். ஆனால், கோபத்தாலும், பகை உணர்வாலும் ஆட்கொள்ளப்பட்ட அஸ்வத்தாமா, உறக்கமின்றித் தவித்தான். அந்தக் காட்டின் நாலாபக்கங்களிலும் மாறி மாறித் தன் பார்வையைச் செலுத்திய போது, அந்த ஆலமரத்தில், நூற்றுக்கணக்கான காகங்கள் கூடுகளில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அப்போது, திடீரென்று அங்கு ஒரு பெரிய கோட்டான், வேகமாகப் பறந்து வந்து, அஸ்வத்தாமா பார்த்துக் கொண்டிருந்த போதே, அந்தக் கோட்டான், காக்கைகளின் கூடுகளை எல்லாம் சிதற அடித்து, காக்கைகளைக் கொல்ல ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான காக்கைகள் இறந்தன. சில காக்கைகளின் சிறகுகள் ஒடிக்கப்பட்டன. சிலவற்றுக்கு கால்கள் பிளக்கப்பட்டன. இப்படி ஒரு கோர நர்த்தனம் புரிந்து விட்டுச் சென்ற அந்தக் கோட்டானை அஸ்வத்தாமா பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் மனதில் ஓர் எண்ணம் உதித்தது.

அஸ்வத்தாமா சிந்தனையில் ஆழ்ந்தான். ‘ஒரு யுத்த முறையை இந்தப் பறவை, எனக்கு உபதேசம் செய்திருக்கிறது. பாண்டவர்கள் பலசாலிகளும், சாமர்த்தியசாலிகளும் மட்டுமல்ல. இப்பொழுது வெற்றியினால் பெரிதும் உற்சாகமடைந்து இருப்பவர்கள். இந்த நிலையில், நியாயமான முறையில் பாண்டவர்களை எதிர்த்து யுத்தம் புரிந்தால், எனக்கு அழிவு நிச்சயம். ஆனால், கபடமான முறையை மேற்கொண்டால், இன்னமும் வெற்றி சாத்தியமாகும்’.

இவ்வாறு சிந்தித்த அஸ்வத்தாமா, தூங்கிக் கொண்டிருந்த கிருபரையும், கிருதவர்மாவையும் எழுப்பி, அவர்களிடம் பேசத் தொடங்கினான். ‘யாருக்காக பாண்டவர்களோடு நமக்குத் தீராப்பகை ஏற்பட்டதோ, அந்த துரியோதனன் நிகரற்ற வீரன். மிகவும் கேவலமான முறையில் பீமனால் பலர் முன்னிலையில் கொல்லப்பட்டான். பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், அந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். காற்றின் மூலம் பரவி வந்து என்னைத் தாக்கும் வெற்றிச் சத்தத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நமது தரப்பில் நாம் மூவர் தாம் மிகுந்திருக்கிறோம். இப்பொழுது, நமது கடமை என்ன என்பது பற்றி உங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன்’.

இவ்வாறு அஸ்வத்தாமா கூறியவுடன், கிருபர் பேசலுற்றார். ‘துரியோதனன் தவறான காரணங்களினால் தூண்டப்பட்டவனாக மட்டுமல்லாமல், பெரியோர்களின் வார்த்தையை அலட்சியம் செய்தவனாகவும் திகழ்ந்து, தனது முயற்சியினால் போரில் இறங்கினான். அதனால் அவனுக்கு இந்த கதி நேர்ந்திருக்கிறது. பாவ சிந்தனையை உடைய அவனது பாதையில் நாமும் சென்றதால், அதே கதியை அடைந்திருக்கிறோம். இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய தெளிவு என் மனதில் இல்லை. இந்த நேரத்தில், பண்டிதனான திருதராஷ்டிர மன்னனையும் , அவனுடைய மனைவி காந்தாரியையும், பேரறிவாளரான விதுரரையும் அணுகி ஆலோசனை கேட்போம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதைக் கேட்டு அப்படியே நடப்போம்’.

கிருபரின் வார்த்தையைக் கேட்ட அஸ்வத்தாமாவின் மனதில் குரூரமான எண்ணமே விஞ்சி நின்றது. ‘ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு குறிப்பிட்ட நிலையைப் பற்றிய மதிப்பீடும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. என்னுடைய சோகத்தைப் போக்குவதற்கான ஒரு வழியை நான் ஆலோசித்திருக்கிறேன். அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். கையில் வில் பிடித்த நான், என்னுடைய தந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிக்குப் பழி வாங்காவிட்டால், க்ஷத்திரிய தர்மத்தை மேற்கொண்ட என்னால், பலர் கூடும் சபையில் என்ன பேச முடியும். என்னுடைய தந்தையின் மரணத்திற்கும், என்னுடைய மன்னனின் மரணத்திற்கும் காரணமானவர்களை பழிக்குப் பழி வாங்குவேன்.

‘பாஞ்சாலர்கள், கவசத்தைக் கழற்றி எறிந்து விட்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அவர்களுடைய பாசறைக்குள் நுழைந்து, யாரும் கண்டிராத ஒரு தாக்குதலை நான் செய்யப் போகிறேன். திருஷ்டத்யும்னனை முதன்மையாகக் கொண்ட பாஞ்சாலர் கூட்டத்தை, அசுரர்களை இந்திரன் கொன்றது போல, அவர்களையெல்லாம் நான் கொல்லப் போகிறேன். ஆட்டினுடைய தலையைச் சீவுவது போல, அந்த திருஷ்டத்யும்னனின் தலையைச் சீவுகிறேன். பாஞ்சாலர்களையெல்லாம் பொசுக்கிய பிறகு, அந்தப் பாண்டவர்களை யுத்தத்தில் சந்திக்கிறேன். இதைச் செய்தால் தான், கடமையைச் செய்து முடித்த திருப்தி எனக்கு ஏற்படும்’.

அஸ்வத்தாமாவின் ஆவேச மொழிகளைக் கேட்ட கிருபர் சொன்னார், ‘பகைவர்களைப் பழிக்குப் பழி வாங்கியே தீருவது என்ற உன் முடிவில் நீ உறுதியாக இருந்தாயானால், நாளைய தினம் பொழுது விடியட்டும். நாங்களும் உன்னோடு சேர்ந்து வருகிறோம். நாம் மூவருமாகப் போரிட்டு பாஞ்சாலர் கூட்டத்தை அழிப்போம். அதன் பிறகு பாண்டவர்களை எதிர்த்து வெல்வோம். வெற்றியை சந்திப்போம்; அல்லது வீர சொர்க்கம் எய்துவோம். இப்பொழுது இளைப்பாறுவாயாக. உறங்கி எழுந்து, சோகத்தை மறந்து, மனக்குழப்பத்தை விடுத்து, நாளை காலையில் மூவரும் சென்று போர் செய்வோம்’.

இப்படிக் கிருபர் கூறிய வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமா மீண்டும் பேசத் தொடங்கினான்….

மேகலா : இவனோட விசுவாசத்திற்கு அளவே கிடையாதா கிருஷ்ணா….. ?

கிருஷ்ணர் : இது ‘ராஜ’ விசுவாசம்…. இது இப்படித்தான் ஆடும். இதன் பல்லைப் பிடுங்கினாத்தான் விஷம் கீழே இறங்கும். அதற்குள் எத்தனை பேரை கொத்துகிறது பார்ப்போம். நீ மேலே கதையைச் சொல்லு…..

சிவபெருமான் காட்சியளி்த்தார்

மேகலா : கிருபர் கூறிய வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமா, குரோதத்தால் பீடிக்கப்பட்டு, உறக்கம் என்பதே இல்லாமல், தொடர்ந்தான். ‘என் தந்தை கொல்லப்பட்ட விதத்தை நினைத்து என் ரத்தம் கொதிக்கிறது. கவசத்தைக் கழற்றி வைத்த நிலையில் இருந்த என் தந்தையைக் கொன்ற திருஷ்டத்யும்னன், அதே நிலையில் இருக்கும் போது, என்னால் கொல்லப்படத்தக்கவனே. துரியோதனன், தொடையில் அடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட நிகழ்ச்சி, என் உடலை ஒவ்வொரு அங்கமாகச் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் எனக்கு உறக்கம் என்பது ஏது?

‘கிருஷ்ணனாலும், அர்ஜுனனாலும் காப்பாற்றப்படும் பாஞ்சாலர்களை, நம்மால் யுத்தத்தில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் என் கோபம் குறையப் போவதில்லை. பாஞ்சாலர்கள் உறங்கும் போது, இன்று அவர்களை நான் கொல்வேன். அதன் பிறகுதான் இளைப்பாறுதல்; அதன் பிறகுதான் உறக்கம்; அதன் பிறகுதான் மன நிம்மதி’.

அதற்கு கிருபர் சொன்னார், ‘உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாத மனிதனுக்கும், பெரியோர்களின் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைப் புரிந்து கொண்டு பயன் பெறும் பக்குவம் இருப்பதில்லை. அஸ்வத்தாமா! நான் சொல்வதைக் கேள்! மனதைக் கட்டுப்படுத்திக் கொள்! கோபத்தைத் தணித்துக் கொள்! உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களைத் தாக்குவது என்பது எந்த தர்மத்திலும் அடங்காது. இப்படிப்பட்ட இழிசெயலைச் செய்பவன், நிச்சயமாக நரகத்தில் மூழ்குவான். இந்த நிகழ்ச்சி, களங்கமில்லாத உன் சரித்திரத்தைக் களங்கப்படுத்தி விடும். உன் எண்ணத்தை மாற்று’.

– இவ்வாறு கூறிய கிருபரின் வார்த்தைகளை அஸ்வத்தாமா ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1