ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 109

மேகலா : அஸ்வத்தாமா ஏவிய அஸ்திரம், உத்தரையின் கர்ப்பத்திலும் விழும் என்று அவன் கூறியவுடன், கிருஷ்ணர், அஸ்வத்தாமாவிடம், ‘உத்தரையின் ஒரு கர்ப்பம் காப்பாற்றப்படட்டும்; மற்ற கர்ப்பங்கள் மீது உன் அஸ்திரம் விழட்டும். பாண்டவர்களின் வம்சத்தின் பிரதிநிதியாக ஒருவன் பிழைத்திருக்கட்டும்’ என்று கூறவும், அஸ்வத்தாமா, கோபம் தணியாதவனாக, கிருஷ்ணரைப் பார்த்து வெறுப்புடன் சொன்னான், ‘கேசவரே! உமக்கிருக்கும் பாரபட்சத்தினால் இப்படிப் பேசுகிறீர். உத்தரையின் கர்ப்பத்தை நீர் காப்பாற்ற விரும்புவது எனக்குப் புரிகிறது. உத்தரையின் கர்ப்பத்தில், இந்த அஸ்திரம் போய் விழட்டும்’.

கிருஷ்ணர், ‘சரி, நீ உன் அஸ்திரத்தை அவ்வாறே செலுத்துவாயாக! உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு மரித்துப் பிறக்கட்டும். அதன் பிறகு நான் அதற்கு உயிர் அளிக்கிறேன். பெரும் கீர்த்தியோடு வாழுமாறு செய்கிறேன். உன் கெட்ட எண்ணத்தை நீ நிறைவேற்றிக் கொள்’ என்று சொன்னார்.

இதைக் கேட்ட அஸ்வத்தாமா, ‘என்னுடைய அஸ்திரத்தினால் பொசுங்கப் போகும் கர்ப்பத்திற்கு நீர் உயிர் அளிப்பதாக இருந்தால், அவ்வாறே செய்து கொள்ளுங்கள்’ என்று கூறி விட்டு, தான் விடுத்த பிரம்மசிரஸ் அஸ்திரத்தை உத்தரையின் கர்ப்பத்தில் போய் விழுமாறு பணித்தான்.

அஸ்வத்தாமாவின் செயலினால் மிகவும் வெறுப்புற்ற கிருஷ்ணர், அஸ்வத்தாமாவைப் பார்த்து, சில வார்த்தைகளைச் சொன்னார். ‘உன்னால் உயிர் இழந்து, பிழைக்கப் போகும் உத்தரையின் மகன் ‘பரீட்சித்’ என்ற பெயருடன் பெரும் புகழடையப் போகிறான். ஆனால், நீயோ உலகத்தாரால் இகழப்படப் போகிறாய். மூவாயிர வருட காலம் நீ இந்த உலகில் வாழ்வாய். ஆனால் ஒரு இடத்திலும் மக்களோடு உனக்குத் தொடர்பு ஏற்படாது. உன் உடல், நோயால் பீடிக்கப்படும். துர்நாற்றம் கொண்டு நீ அலைந்து திரிந்து கொண்டிருப்பாய். பரீட்சித் நீண்ட ஆயுளைப் பெற்று, எல்லா அஸ்திரங்களிலும் நிபுணத்துவம் அடைந்து, க்ஷத்திரிய தர்மத்தில் நிலைத்து நின்று ராஜ்ஜிய பரிபாலனம் செய்து, பெரும் புகழடையப் போகிறான்’.

அஸ்வத்தாமா, தன் தலையிலிருந்த ரத்தினத்தைப் பாண்டவர்களிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து அகன்று, வனத்தை நோக்கிச் சென்றான்.

அந்த ரத்தினத்தை எடுத்துக் கொண்டு, வியாசரை வணங்கி விட்டு, கிருஷ்ணருடன் சேர்ந்து தருமபுத்திரர், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் முதலானோர், திரௌபதி இருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு சென்றதும், பீமன் அந்த ரத்தினத்தை அவளிடம் கொடுத்து, ‘உன்னுடைய மகன்களைக் கொன்ற அஸ்வத்தாமா வெல்லப்பட்டான். நீ விரும்பியபடியே யுத்தம் வந்தது, துரியோதனன் கொல்லப்பட்டான். துச்சாசனனின் ரத்தம் என்னால் குடிக்கப்பட்டது, இப்போது அஸ்வத்தாமாவும் வெல்லப்பட்டான்’ என்று கூறினான்.

திரௌபதி, ‘இந்த ரத்தினத்தை அணியத் தகுந்தவர் யுதிஷ்டிரரே’ என்று கூற, அவர் அதை வாங்கித் தன் தலையில் அணிந்து கொண்டார். ஒளி உள்ளவராக விளங்கிய யுதிஷ்டிரர், கிருஷ்ணரைப் பார்த்து, ‘கோவிந்தரே! துருபதனுடைய மகன்கள், எங்களுடைய மகன்கள், திருஷ்டத்யும்னன் போன்ற பலரைத் தனி ஒருவனாக இருந்து கொண்டே அந்த அஸ்வத்தாமாவினால் எப்படிக் கொல்ல முடிந்தது? அவ்வளவு பயங்கரமான செயலைச் செய்யக் கூடிய சக்தி அவனுக்கு எங்கிருந்து வந்தது?’ என்று கேட்டார்.

கிருஷ்ணர் சொன்னார், ‘அந்த அஸ்வத்தாமா, தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய ஈஸ்வரனை, அந்த மஹாதேவனை சரணடைந்தான். அதனால் தான் அவனால், தனி ஒருவனாக நின்று எல்லோரையும் கொல்ல முடிந்தது. மஹாதேவர் மனம் வைத்தால், ஒரு மனிதனுக்கு மரணமில்லாத தன்மையைக் கூடத் தருவார். அதே சமயத்தில், இந்திரனையே நாசம் செய்யக் கூடிய வல்லமையையும் கூட ஒருவனுக்குத் தருவார். நான் அவரை முழுமையாக அறிந்தவன். அவருடைய செய்கைகளைப் புரிந்து கொண்டவன். எல்லா சிருஷ்டிகளுக்கும் ஆரம்பமும், இடையும், முடிவும் அவரே! இவ்வுலகம் அவரால் தான் இயங்குகிறது. அவருடைய அருள் அஸ்வத்தாமாவுக்குக் கிட்டியது. பாசறையில் செய்யப்பட்ட நாசம் அஸ்வத்தாமாவினால் ஏற்பட்டது அல்ல. அது மஹாதேவரின் செயல். முடிவு பெற வேண்டிய தருணத்தை அடைந்து விட்டவர்களை மஹாதேவன் முடித்து வைத்தார் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நடந்தது தெய்வச் செயல் என்பதை அறிந்து மனக் கவலையை விடுத்து, மேலே நடக்க வேண்டியதைக் கவனிப்பீராக’ என்ற கிருஷ்ணர் கூறிய விளக்கத்துடன், சௌப்திக பர்வம் முற்றுப் பெறுவதோடு, பாரத யுத்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

மேகலா : ஏன் கிருஷ்ணா…? தன்னால் ஏவப்பட்ட ‘பிரம்மசிரஸை’ திரும்பப் பெறும் சக்தி இல்லாதவனுக்கு துரோணர் ஏன் கற்றுக் கொடுத்தார்?

கிருஷ்ணர் : அவர் கற்றுக் கொடுக்க மறுக்கத்தானே செய்கிறார். அதனால் தானே அவனுக்குக் கோபம் வருகிறது. பொறாமையில் கற்றுக் கொண்டானா….., அல்லது அப்பா மறுக்கிறார் என்று பிடிவாதம் பிடித்து கற்றுக் கொண்டானா என்பது அவனுக்குத்தான் வெளிச்சம். அந்த ‘பிரம்மசிரஸ்’ என்ற அஸ்திரமும் அரைகுறையாகத்தான் அவன் மண்டையில் ஏறியிருக்கிறது. கல்வி கற்பதற்குக் கூட உண்மையான ஈடுபாடும், எந்தவிதமான குணக் குறைகளும் இல்லாத தெளிவான மனதோடும் கற்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

மேகலா : நேரே ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சக்ராயுதத்தை எப்படி துணிச்சலாய் கேட்கிறான் பார் கிருஷ்ணா….! இன்னும், கிருஷ்ணர் என்ன சொன்னாலும் கேட்கக் கூடாது என்ற பிடிவாதம் வேறு. நான் நினைக்கிறேன், யுத்த களத்தில் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தாமல் அர்ஜுனனோடு சேர்ந்து, யாரும் எதிர்பாராத வண்ணம், ‘பகதத்தனை’ வென்றது, ‘பூரிசிரவஸை’ வீழ்த்தியது, ‘ஜயத்ரதனை’க் கொன்றது, என்ற கிருஷ்ணரின் ஆளுமையைக் கண்டு பொறாமையாய் இருக்குமோ கிருஷ்ணா….? எங்கு சென்றாலும், கிருஷ்ணரின் மேன்மையும், பராக்கிரமும் எல்லோரும் பிரமிக்கும் வண்ணம் இருக்கிறதே…. தூது வந்தாலும், பேச்சு வார்த்தை நடத்தினாலும், ராஜசூய யாகத்திற்கு சும்மா வந்தால் கூட, கிருஷ்ணருக்கே மரியாதை கிடைக்கிறதே என்ற பொறாமை கிருஷ்ணா…. சக்ராயுதத்தை, ‘பண்டமாற்றாக’ ஏமாற்றி வாங்கி விட்டால், நாம் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவோம்; அப்புறம் வச்சிக்கிடுவோம் இந்த கிருஷ்ணனை…. என்று நினைத்தானோ….?

கிருஷ்ணர் : அர்ஜுனன் மீது பொறாமை கொண்டவன் இவன். இவன் குணமே பொறாமைப்படுவதும், வன்மத்தை வளர்ப்பதும் தான் போலயே…. கிருஷ்ணன் மீதும் பொறாமைப்பட்டிருக்கலாம்…

மேகலா : கிருஷ்ணர் மீது பொறாமையா… கிருஷ்ணரை ரசித்தாலே போதுமே…. இறந்த பிள்ளையைக் கூட உயிர்ப்பித்துக் கொடுப்பாரே. அவனைப் பிடித்த ‘காலக்கிரமம்’…. வஞ்சனை செய்து, சாபமும் வாங்கிக் கட்டிக் கொண்டான்….

கிருஷ்ணர் : சரி! நீ மேலே நடக்கப் போவதைச் சொல்லு மேகலா….

(அடுத்து ‘பீமன் தப்பித்தான்’ என்ற தலைப்போடு அடுத்த பகுதி தொடங்கும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2