ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 112

 காந்தாரி கொடுத்த சாபம்

மேகலா : யுத்த களத்தில் விளைந்த நாசத்தைப் பார்த்து, பெரும் சோகமுற்ற காந்தாரி, கிருஷ்ணரைப் பார்த்துப் பேசினாள். ‘மாதவா! யுத்தத்தில் கணவன்மார்களை இழந்து, தாங்க முடியாத சோகத்தின் காரணமாகத் தலைவிரி கோலமாகக் கதறும் என் மருமகள்களைப் பார்! ஜனார்த்தனா! இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு, சோகம் என்னும் தீயினால் நான் எரிக்கப்படுகிறேன்.

‘கிருஷ்ணா! யுத்த களத்தைப் பார்த்துப் பழக்கமே இல்லாத பெண்கள் கூட்டம், இங்கே, தலையில்லாத உடல்களையும், வெட்டி எறியப்பட்ட தலைகளையும், துண்டு துண்டாகக் கிடக்கும் அங்கங்களையும் கண்டு மயக்கம் அடைவதைப் பார்! முன் ஜென்மங்களில் என்ன பாவம் செய்து இப்போது இந்தக் காட்சியை நான் காண்கிறேனோ”?

இவ்வாறு புலம்பிய காந்தாரி, துரியோதனன் வெட்டப்பட்டு, வாழை மரம் போல் பூமியில் விழுந்து கிடப்பதைப் பார்த்தாள். ‘மகனே’ என்று கதறினாள். பின்பு மீண்டும் கிருஷ்ணரைப் பார்த்து, ‘கிருஷ்ணா! யுத்தம் செய்பவர்களிடையே உயர்ந்தவனும், எல்லா விதமான அஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவனும், அடங்காத கோபம் கொண்டவனுமான என் மகன், வீரப்படுக்கையில் படுத்திருப்பதைப் பார்! எல்லா மன்னர்களுக்கும் தலைமை தாங்கி முன்னே சென்ற என் மகன், இப்போது புழுதியில் கிடந்து புரண்டிருப்பதைப் பார்! பதினோரு அக்ஷௌஹிணிகளுக்குத் தலைமை தாங்கியவன், அநீதியினால் கொல்லப்பட்டுக் கிடக்கிறான், என் மகன். அவன் நிலையை விட, அவன் மனைவியின் நிலை என்னை அதிகமாக வாட்டுகிறது. அவளைப் பார்! மகனையும் இழந்து, கணவனையும் இழந்து நிற்கும் என் மருமகளின் கதியைப் பார்த்த பிறகும், என் தலை சுக்கு நூறாக வெடிக்காமல் இருக்கிறதே; ஏன்?!

‘மாதவா! ஒரு தரப்பில் தானா, இந்தத் துக்கம்? அதோ மறுபுறத்தில் பார்! அபிமன்யுவின் மனைவி, அவன் உடலைக் கட்டிக் கொண்டு அழும் காட்சியைப் பார். அதோ, கர்ணன் அங்கே படுத்திருக்கிறான். எவனிடத்திலிருந்த பயத்தினால் யுதிஷ்டிரன் பதின்மூன்று வருட காலம் உறக்கத்தை இழந்து தவித்தானோ, அந்தக் கர்ணன், துரியோதனனுடைய ஆருயிர் நண்பன், இப்பொழுது, காற்றினால் முறிக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் மரம் போல் விழுந்து கிடப்பதைப் பார். சல்யன் இறந்து கிடக்கிறான். யுத்த களத்தில் இவருக்கு ஈடு இணை கிடையாது என்று புகழப்பட்ட பீஷ்மர், அதோ, தனது மரணப் படுக்கையில் கிடக்கிறார். பீஷ்மருக்கே இந்தக் கதி நேரிட்டிருப்பதால், யுத்தத்தில் திறமைசாலி என்று எவரையும் உறுதிபடக் கூற முடியாது என்று தான் நான் உணர்கிறேன். திறமை, வீரம், பராக்கிரமம், பலம் – இவற்றிற்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று தான் ஆகிறது.

சுக்ராச்சாரியாருக்கு நிகராக ராஜநீதியை அறிந்த துரோணர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். அவர் அறிந்த அஸ்திரங்கள், அவரைப் பாதுகாக்கவில்லை. அஜாக்கிரதையாக இருந்த பூரிசிரவஸின் கையை அறுக்க அர்ஜுனனுக்கு எப்படி மனம் வந்தது? பலசாலியான சகுனியும் கொல்லப்பட்டான்.’.

இவ்வாறு புலம்பி அழுத காந்தாரி, அதன் பிறகு, ‘அறிவில் சிறந்த விதுரரும், பீஷ்மரும், துரியோதனனிடம் பாசம் காட்ட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துரைத்தார்கள். அவன் மீது வைக்கும் பாசம் நாசத்தையே கொடுக்கும் என்று அவர்கள் கூறியது பலித்து விட்டது’ என்று கூறி, தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில், காந்தாரியின் சோகம், கோபமாக உருவெடுத்தது. அவள் கிருஷ்ணரைப் பார்த்துச் சொன்னாள், ‘கிருஷ்ணா! நீ பெரும் வல்லமை படைத்தவன்; பெரும் சேனை கொண்டவன்; எல்லா விதமான சாமர்த்தியமும் அடையப் பெற்றவன்; மிகுந்த செல்வாக்குள்ளவன். அப்படிப்பட்ட நீ, நாசத்தை விரும்பியிருக்கிறாய். கௌரவர்களின் அழிவைத் திட்டமிட்டிருக்கிறாய். அதற்குரிய பலனை நீ அடைந்து தான் தீர வேண்டும். கேசவா! என் கணவருக்கு நான் மனதாரப் பணிவிடை செய்து வந்தது உண்மையானால், பிறரால் அடைய முடியாத தவப் பயனை என்னுடைய பதிபக்தியின் மூலமாக நான் அடைந்திருப்பது உண்மையானால், சக்கரத்தையும், கதையையும் ஆயுதமாகத் தாங்கியிருக்கும் உனக்கு நான் விடுக்கப் போகும் சாபம் பலிக்கட்டும்! கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமிடையே போர் மூள்வதை நீ விரும்பியதாலும், பெரும் நாசம் விளைவதை நீ திட்டமிட்டதாலும், உன்னுடைய குலத்தையும் நீயே அழிக்கக் கடவாய்! இன்று தொடங்கி 36 வருடம் ஆனவுடனே, நீயும், உனது குலத்தவரும் கொல்லப்படட்டும். சுற்றத்தார் யாருமில்லாமல் அநாதையாகவும், நிந்திக்கப்பட்டவனாகவும் நீயும் நாசத்தை அடைவாய்! இங்கே யுத்த களத்தில் கதறும் கௌரவப் பெண்கள் போல, உன் குலப் பெண்களும் அப்பொழுது கதறுவார்கள்! மாறாத என் பதிபக்தியின் மீது ஆணையிட்டு, உன்னை நான் சபிக்கிறேன்’.

(மேகலா : கிருஷ்ணா! மேகலாவாகிய நான், கதையில் இங்கே சற்று நிறுத்தி, காந்தாரியிடம் கொஞ்சம் பேசுகிறேன். ’காந்தாரி, பதிவிரதைத்தனத்தை மட்டுமே உன் இல்லற வாழ்க்கையில் கொண்டிருந்தாயா? உனக்கு வேறு தர்ம நியாயமே கிடையாதா….? உன் மகன் துரியோதனன், பிறந்ததிலிருந்து, குருக்ஷேத்திரம் வரையில், உன் சொல்லை மதித்ததுண்டா? பிறர் சொல்லைக் காது கொடுத்துக் கேட்டதுண்டா? பாண்டவர்களைக் கொல்லத் துடித்தவன்; திரௌபதியை கூந்தலைப் பற்றி இழுக்க ஆணையிட்டவன்; அவளைத் தொடையைக் காட்டி அமரச் சொன்னவன்; இதற்கெல்லாம் தண்டனை கிடையாதா? பிறந்தது முதல், பிறரைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்த கிருஷ்ணனைச் சபிக்கிறாய், ‘நீ நாசமடையப் போகிறாய்’ என்று. இந்த வார்த்தையைப் படித்ததும், நான் காற்றில் கரையாமல் இருக்கிறேனே! ஒன்று தெரியுமா! நீ சரணடைந்தாலும், உன்னையும் காத்தருளப் போகிறவன் கிருஷ்ணன் ஒருவனே! ‘நாசமடைவாய்’ என்ற உச்சக்கட்ட வார்த்தையைப் பிரயோகிக்கும் உன் நாவிற்கு மென்மையே தெரியாதா? நியாயமே அறியாதா? உன் பதிவிரதாத்தனம், யாதவ குலத்தை அழிக்கப் போகிறதா? இதோ! என்னைப் போன்றோரின் பக்தி…. கிருஷ்ணரை, இந்தப் பூமி இருக்கும் வரையிலும், பூமிக்கு ஆதாரமாய் விளங்கச் செய்யும். பீஷ்மரின், ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’, மக்களின் நாவில் உச்சரிக்கப்பட்டு, ‘நாராயண மந்திரமாக’, ‘பாகவதமாக’ ஒளி விட்டுப் பிரகாசிக்கப் போகிறது. இதோ…. நான் கொண்ட நட்பு…., என் நம்பிக்கையாக ஒளிரப் போகிறது…. என் கிருஷ்ணரோட அன்புக்கு, புதுசாக ஒரு வடிவம் கிடைக்கட்டும்…)

கிருஷ்ணர் : சரி…. சரி…. மேகலா…. கதை track மாறுது…. கதைக்கு வா…)

மேலும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்…

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2