ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 116

மேகலா : எல்லோரும் கூறிய அறிவுரைகளைக் கேட்டு தருமபுத்திரர் சிந்திக்கத் தொடங்கினார் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இருப்பினும், தருமருக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அதற்கான விளக்கம் அளிக்கவும் வியாசர் தயாரானார். ’பாட்டனாராகிய பீஷ்மர், பிராமணராகிய துரோணர், மூத்த சகோதரனாகிய கர்ணன், மேலும் பல அரசர்கள் – எல்லோரையும் கொன்றதனால் எனக்கு ஏற்பட்டுள்ள பாவத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. ராஜ்ஜிய பாரத்தை ஏற்று நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஒரு புறம் பொறுப்பு, இன்னொரு புறம் பாவச் சுமை. என்னுடைய மனம், இந்த இரண்டுக்குமிடையில் சிக்கித் தவிக்கிறது’ – என்று கூறிய தருமபுத்திரரைப் பார்த்து, வியாசர் விளக்கமளித்தார்.

‘யுதிஷ்டிரா! தர்மத்திற்கு விரோதமாக நடந்து கொண்ட துரியோதனாதிகளைத்தான் கொன்றாய். இதனால் உனக்கு எந்தப் பாவமும் வந்து சேராது. கொடுப்பது மட்டும் அரசனின் கடமை அல்ல; அடிப்பதும் கூட அரசனின் கடமை தான். சமாதானம் செய்து கொள்வது மட்டும் ராஜநீதி அல்ல; எதிரிகளைப் போரில் வீழ்த்திக் கொல்வதும் ராஜநீதி தான்’.

இவ்வாறு கூறி, யுதிஷ்டிரன் பாவம் செய்யவில்லை என்று எடுத்துக் கூறிய வியாசர், மேலும் சொன்னார், ‘யுதிஷ்டிரா, யுத்தத்தில் பல கொலைகள் நடப்பதற்கு நீதான் காரணம் என்று நீயாகவே நினைத்துக் கொள்கிறாய். தெய்வத்தினால் ஏவப்பட்டே ஒரு மனிதன் எந்தக் காரியத்தையும் செய்கிறான் என்பது உண்மையானால், அந்தக் காரியத்தின் பலன் தெய்வத்தைத்தான் சாருமே தவிர, அந்த மனிதனை அது எப்படி சாரும்?

‘நம்மை மீறிய தெய்வம் என்ற சக்தி இல்லை என்று நீ கருதினால், நம்மை மீறிய சக்தியும் இல்லை, மேலுலகமும் இல்லை….. அதைப் போல, நம்முடைய செயல்களினால் நமக்கு என்ன விளைந்து விடும்? எதுவுமே நேரப்போவதில்லை.

‘எது நன்மை, எது தீமை என்று உறுதிபடத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், வேதங்களை ஆதாரமாகக் கொண்ட சாத்திரங்களைத்தான் நீ தீர்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். யுதிஷ்டிரா! நற்செயல்களும், தீச்செயல்களும் ஒரு சக்கரத்தின் சுழற்சி போல மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பாவ காரியத்தைச் செய்யும் மனிதன், அதன் விளைவாக மற்றொரு பாவ காரியத்தையும் செய்ய நேரிடுகிறது. ஆகையால், தீச்செயல்களைத் தவிர்ப்பது அறிவுள்ள மனிதனின் முதல் கடமை. தன்னையும் மீறித் தீச்செயலைச் செய்து விடுகிற மனிதன், அதற்குப் பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டும். யுத்தத்தில் நீ செய்த காரியங்களுக்குப் பரிகாரம் தேடுவதற்காகக் கூட நீ வாழ்ந்துதான் தீர வேண்டும்.

‘தர்மமான செயல்கள் போல் தெரியக் கூடிய சில செயல்கள், அதர்மமான செயல்களாக இருக்கக் கூடும்; அதர்மமான செயல்கள் போல் காட்சி தரக் கூடிய சில செயல்கள், தர்மமான செயல்கலாக இருக்கக் கூடும். புத்தியுள்ளவன், இவற்றை நன்கு ஆராய்ந்து, எது தர்மம், எது அதர்மம் என்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும். கெட்ட காரியத்தைச் செய்து விட்டு, அதைப் பற்றிச் சிறிதும் மன வருத்தம் இல்லாமல் இருப்பவனைத்தான் பாவம் வந்து சேருகிறது.

‘உன்னைப் பொருத்த வரையில், வேண்டுமென்றே உனக்குத் தீங்குகளை இழைத்துக் கொண்டிருந்தமையால், துரியோதனனை நீ போரில் எதிர்க்க வேண்டியதாயிற்று. நீ விரும்பாமலே தான் யுத்தம் புரிந்தாய். அதை நினைத்து மனம் வருந்துகிறாய். முறையான பரிகாரத்தைச் செய்தால், நீ அடைந்திருக்கக் கூடிய பாவத்திலிருந்து விடுபட்டு விடலாம். ‘அஸ்வமேத யாகம்’ என்ற யாகத்தைச் செய்தாயானால், நீ பரிசுத்தம் அடைவாய். ஆகையால், ஆட்சி பாரத்தை ஏற்று, அஸ்வமேத யாகத்தைச் செய்து, க்ஷத்திரிய தர்மத்திற்குரிய முறையில், வீரத்தினால் பெறப்பட்ட இந்தப் பூமியை ஆள்வாயாக! போரில் கொல்லப்பட்ட அரசர்களுடைய நகரங்களுக்குச் சென்று, அவர்களுடைய மகனுக்கோ, சகோதரர்களுக்கோ, பேரனுக்கோ, அந்த ராஜ்ஜியத்திற்கு அரசனாகப் பட்டாபிஷேகம் செய்விப்பாயாக! இப்படி யாரும் இல்லையென்றால், அவர்களுடைய பெண் வாரிசுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கலாம். அவர்களுடைய ராஜ்யங்களுக்கு வாரிசுகளை நியமித்து, உன்னுடைய ராஜ்ய பாரத்தை மேற்கொண்டு, உன்னுடைய கடமையைச் செய்வாயாக! நான் சொன்ன மாதிரி நீ அஸ்வமேத யாகத்தைச் செய்தாயானால், போரில் விளைந்த பாவங்களுக்கு அதுவே தகுந்த பரிகாரமாகும்’.

இவ்வாறெல்லாம் வியாசர் நீதிகளையும், நெறிகளையும் எடுத்துக் கூறிய பிறகு, தருமபுத்திரர், ‘நீங்கள் உபதேசித்த பிராயச்சித்த முறைகள் என் மனதிற்கு நிம்மதியைத் தருகின்றன. ராஜ்ய பாரமும், தர்மத்தின் பாதையும் ஒன்றையொன்று விட்டு விலகியவையோ என்ற பிரமை என் மனதில் இருக்கிறது. ஆகையால், தர்மத்தை விட்டு விலகாமல், ராஜ்ய பாரத்தை நிர்வகிக்க வேண்டிய முறையையும் நீங்கள் எனக்கு எடுத்துக் கூற வேண்டும். யுத்த நீதியையும், மற்றுமுள்ள நெறிமுறைகளையும் முழுமையாக அறிய விரும்புகிறேன்’ என்று கேட்டுக் கொண்டார்.

மேகலா : அப்பா……. என்ன கிருஷ்ணா! இந்த யுதிஷ்டிரர்….. இந்த இழு இழுக்கிறாரே…..! நேரே சித்ரகுப்தனிடம் போய், ‘நான் தான் கொலைகாரன்; நான் தான் எல்லோருடைய சாவுக்கும் காரணம்’ என்று எடுத்துக் கொடுப்பார் போலயே…..

கிருஷ்ணர் : இதுதான் இவரிடம் உள்ள தேவையில்லாத பழக்கம்; மனசாட்சியை ‘ஓவராக’ப் பேச விடுவார். குழம்பிக் குழம்பி எல்லோரையும் குழப்புவார். மற்ற எல்லோருக்கும் புத்தி ஒரு மாதிரி யோசித்தால், இவருக்கு வேற மாதிரி யோசிக்கும். கடவுளே கிடையாதோ…. என்று கேட்பவர்கள் பயப்படுமளவுக்கு, பயத்தை புதுசு புதுசாக உருவாக்குவார். திரௌபதி தான் சரியான சாட்டையடி கொடுத்தாள். ‘பைத்தியமா நீ’ என்ற கேள்வி, ‘சரியான நெத்தியடி’. ஒரு மாதிரியாக வியாசர் பைத்தியத்தை இறக்கி விட்டார். அடுத்தது பட்டாபிஷேகம் தான். மேலே சொல்லு மேகலா….

(யுதிஷ்டிரரின் பட்டாபிஷேக நிகழ்வோடு அடுத்த பகுதி தொடங்கும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1