தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 3

மேகலா : கிருஷ்ணா…. சென்னப்பட்டணத்தில் நான் தவழும் கண்ணன் பார்த்து மெய் சிலிர்த்திருக்கிறேன்….ஓவியங்களில், வெண்ணெய் உண்ணும் கண்ணனைப் பார்த்து குழைந்து போயிருக்கிறேன். ‘மாடு மேய்க்கும் கண்ணே’ என்ற பாடலைக் கேட்டு, யசோதையாய் மாறி, குறும்புக் கண்ணனை பாசத்தோடு அனுபவித்திருக்கிறேன். கண்ணன் மீது ராதை கொண்ட காதலைக் கேட்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். பலகணி வழியாக, கையில் மத்துடன் நிற்கும் கண்ணனை உடுப்பியில் பார்த்து, கண்களில் நீர் மல்கப் பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருக்கிறேன். இவ்வளவு ஏன்…, மகாபாரதம் வாசிக்கும் போது, கண்ணனுக்கும் அர்ஜுனனுக்குமிடையே உண்டான நட்பை அறிந்து பொறாமை கூடப் பட்டிருக்கிறேன். நீ நம்பினாலும் நம்பு, நம்பலேனாலும் பரவாயில்லை. இங்கு புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணனின் அழகைக் கண்டு வாய் பிளந்து பார்த்துக் கொண்டேயிருந்தது தவிர, வேறொன்றும் தோன்றவில்லை கிருஷ்ணா….! கண்ணழகைக் காண்பேனா…., தன் காதல் மனைவியுடன் சேர்ந்து நிற்கும் பூரிப்பை ரசிப்பேனா…., அழகாய் செதுக்கி கீழ் நோக்கி நிற்கும் நாசியை ரசிப்பேனா…, அந்த விரல்கள் புல்லாங்குழலின் துவாரத்தில் அழுத்தி நிற்கும் அழகைக் காண்பேனா…..! அந்த சன்னதியை விட்டு வர மனமில்லாமல், தளும்பி நிற்கும் மனசோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி, எப்பத்தான் இந்த உலகத்திற்கு வந்தாய்…?

மேகலா : நான் சுயநினைவிற்கு வருவதற்குக் காரணமே அங்கிருந்த பூசாரிதான் கிருஷ்ணா!

கிருஷ்ணர் : வாவ்….! என்ன…., அவரும் கதை சொன்னாரா…?

மேகலா : கிருஷ்ணா! அவரோட சிரிச்ச முகம் என்ன சொல்லுச்சு தெரியுமா…? ‘இவர்’, எங்களோட சாமி; தாடிக்கொம்பு எங்க ஊரு’…. என்பது மாதிரி இருந்தது கிருஷ்ணா…. அவருடைய மலர்ந்த முகத்தைப் பார்த்து, கொஞ்சம் அவருடன் பேச்சுக் கொடுத்தோம். ‘யப்பா, சாமி எவ்வளவு அழகு’ என்று வியந்து சொன்னவள், ‘நானும், கிருஷ்ணரும் ஒரே color dress என்று சொன்னேனா…., பூசாரி, முகம் மலர சிரித்து விட்டார் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அடிப்பாவி! உன்னோட அலப்பறையை அங்கேயும் காட்டினயா…?

மேகலா : அப்போதான், ‘நான் ஸ்ரீவில்லிபுத்தூர், சாமி’ என்று பூசாரியிடம் சொன்னேன் கிருஷ்ணா.

கிருஷ்ணர் : உடனே அவரும், ‘எங்க மாப்பிள்ளை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறார்’ என்றாரா….?

மேகலா : ஐயோ…, கிட்டயிருந்து பார்த்தது மாதிரி சொல்றயே கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அட மக்கு…! அங்கே புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்ததே நான் தானே….

மேகலா : ஐயோ…. ஆமாம்ல…. சாரி….. சாரி, கிருஷ்ணா. நான் இப்படித்தான்…, சில சமயம் ஆர்வக் கோளாறுல, நீ என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய் என்பதையே மறந்து போய் உளறுகிறேன். நானாவது பரவாயில்லை கிருஷ்ணா….. ராணிமா யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து, சத்யபாமா, ருக்மணி சமேத வேணுகோபாலனை photo எடுத்துவிட்டாள். அதன் ஒரு copy-ஐ எனக்கும் அனுப்பி வைத்திருக்கிறாள். அதைப் பார்த்துத்தான் நானும் ஆச்சர்யப்பட்டுப் போனேன்….., ‘இதை எப்ப எடுத்தாள்’ என்று…. அந்த சன்னிதானத்தில் நின்று கொண்டிருக்கும் போது, ஆண்டாள் சன்னிதானத்தைத் திறக்கவும், ஓடிச் சென்று ஆண்டாள் நாச்சியாரை தரிசித்து வந்தோம் கிருஷ்ணா. மொத்தம் 10 அல்லது 15 பேர் தான், அந்தக் கோயிலில், அங்குமிங்குமாகச் சென்று சாமி கும்பிடுபவர்களாக இருந்தோம். ஒவ்வொரு சன்னிதானத்துக்கும், தனித் தனிப் பூசாரியாக நின்று, ஒவ்வொரு குழுவிடமும், தனித் தனியாகக் கதைகள் பேசி நிதானமாக தீபாராதனை காட்டி, கோயிலை திருப்தியால் நிறைத்து விட்டார்கள் கிருஷ்ணா! இதோ, இந்தக் கட்டுரையை எழுதும் வரைக்கும் அந்தக் கோயிலின் வாசனை என் நெஞ்சை விட்டு அகலவேயில்லை கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : நீ இவ்வளவு ரசிச்சு சொல்லும் போது, உன் உணர்வு எனக்கும் புரிகிறது மேகலா…. அடுத்து….?

மேகலா : அடுத்து, சௌந்திரராஜப் பெருமான் சன்னதிக்குள் சென்றோம் கிருஷ்ணா. ‘படகோட்டி’ படம் பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா….?

கிருஷ்ணர் : ஏதோ…., நீ பார்க்கும் போது பார்த்திருப்பேன்….

மேகலா : அதில், M. G. R., சரோஜாதேவியைப் பார்த்து ஒரு வசனம் பேசுவார் கிருஷ்ணா…. ‘பிறந்ததும், ஆளப் பார்த்து வச்ச பேரா?’…. என்று, அந்த அம்மாவின் அழகைப் பார்த்து வியந்து போய் கேட்பார். இங்கு, எம்பெருமான் சௌந்திரராஜப் பெருமான் அழகைப் பார்க்கும் போது, எனக்கும் அப்படித்தான் தோன்றியது கிருஷ்ணா! எம்பெருமானின் உருவச் சிலையைச் செதுக்கிய ‘ஸ்தபதி’, அவர் அழகில் மெய் மறந்து, ‘சௌந்திரமே, எம்பெருமான்’ என்று கூறியிருப்பார் போல, அந்தப் பெயரே எம்பெருமானுக்கு நிலைத்து விட்டதோண்ணு தோணுது கிருஷ்ணா…. சர்வ அலங்கார தேவனாய்… நிமிர்ந்து நிற்கும் கம்பீரமாய்; தீப ஒளியில் மின்னும் வைரமாய்; எம்பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும் கிருஷ்ணா…. தனித்த பெருமாள், திருப்பதி ஏழுமலையானை நினைவுபடுத்தும் சர்வ அலங்கார பூஷிதனாய்; தன் உருவம் முழுவதும், உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையிலும் நின்று நிதானமாகப் பார்த்து மகிழ வசதியாய் உற்சவ மூர்த்தியைக் கூட ஒதுங்கி நிற்கச் செய்த காருண்யனாய் நான் பார்த்து மகிழ்ந்த போது, பூசாரி ஒரு வார்த்தை சொன்னார் தெரியுமா….?

கிருஷ்ணர் : என்ன சொன்னார்….?

மேகலா : ’கண் மூடிக் கொண்டு சாமி கும்பிடாதீங்க; கண்ணைத் திறந்து இறைவன் அழகைப் பாருங்க; கொஞ்ச நேரம் கூட கண்ணை மூடி, அந்த அழகை miss பண்ணாதீங்க’ என்று சொன்னது, எவ்வளவு உண்மை கிருஷ்ணா…!

கிருஷ்ணர் : அதான்…., சாமியைப் பார்க்கவென்று கோயிலுக்கு வந்து, கண்ணை மூடிக் கொள்ளலாமா…?

மேகலா : அது மட்டுமில்ல கிருஷ்ணா… ‘இப்படி நான் சொல்வதால், என்னடா இப்படி சொல்கிறானே என்று நினைக்காதீங்க; வீட்டுல பெரியவங்க சொன்னா யார் கேக்குறா? ‘ம்’ என்று எங்களைப் பார்த்து ஆமாஞ் சொல்லுங்கோ’ என்று சொல்லிக் கொண்டே, பெரியவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று சொன்னாரா…., பழக்க தோஷத்தில் நானும், ‘நான் ஸ்ரீவில்லிபுத்தூர் சாமி’ என்றேன். அதிலும், ராணிமாவைக் காட்டி, ‘இவங்கல்லாம் சிவகாசி’ என்றேனா, அவர் உடனே, ‘ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ர சயனப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார். ஆண்டாள் அங்கு பிறந்தாள். அவள் வடபத்ர சயனரை வழிபட்டாலும், கல்யாணம் செய்தது என்னவோ ரங்கநாதரைத் தானே’ என்றார். ‘திருத்தங்கல்லில் பெருமான் நின்று கொண்டு தானே இருக்கிறார்’ என்று சிவகாசிக்காரங்களுக்கு support பண்ற மாதிரி பேசி கலாய்த்தாரா…., நானும் சந்தோஷமாய் அனுபவித்தேன் கிருஷ்ணா…. பெருமான் தரிசனம் திவ்யமாய் இருந்தது. ரொம்ப நாள் கழிச்சி கோயிலுக்கு வந்தது; அதிலும், காலையில் எனக்குப் பிடித்த பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் தரிசனம்…., அதே நாள் சாயந்திரம், சௌந்திரராஜப் பெருமானின் தரிசனம், என்னைத் திக்குமுக்காடச் செய்தது கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2