ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 131

மேகலா : துரியோதனனுக்கு படைபலம் பிடித்திருந்தது. கிருஷ்ணரின் பெருமைகளைத் தெரியவில்லை. அர்ஜுனனோ, ‘நீர் ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை; நீர் ஒருவர் என் பக்கம் இருந்தால் போதும்; தைரியலட்சுமியும், விஜயலட்சுமியும் கூடவே வருவர்’ என்று கூறினானே. அடா…, அடா…, அடா…. இந்த சம்பவத்தை எத்தனை முறை படித்தாலும், பேசினாலும், எழுதினாலும், எனக்கு மெய் சிலிர்த்துப் போகும். கிருஷ்ணரின் பெருமைகளை அர்ஜுனன் அறிவான். அவர் வந்து நின்றாலே போதும்; வெற்றித் திருமகள் கை கட்டி நிற்பாள் என்று நம்பியிருக்கிறான். அந்த நம்பிக்கை கிருஷ்ணரைச் சரணடையச் செய்திருக்கிறது.

‘பணிந்தும், பணிவிடை செய்தும் நீ இதைக் கேட்பாயாக’ என்று கீதையை எடுத்துரைக்கிறார். பணிகிறான்; அவர் சொல்லிய அத்தனை ஆலோசனைகளையும் மறுவார்த்தை கூறாமல் கேட்கிறான். பரமசிவனாரிடமிருந்து பாசுபதா அஸ்திரம் கற்று வருகிறான். பீஷ்மரை எதிர்க்க சிகண்டியை முன்னிறுத்துகிறான். பகதத்தனின் தலைக் கட்டை அஸ்திரத்தால் அறுத்து எறிகிறான். பூரிசிரவஸின் ஓங்கிய கையில், அஸ்திரத்தைப் பாய்ச்சுகிறான். தன் அஸ்திரத்தினால் ஜயத்ரதனின் தலையை அறுக்கிறான். அத்தலையை, அப்படியே வெட்ட வெளியில் நிறுத்துகிறான். பின் அதனை ஜயத்ரதனின் தந்தை மடியில் விழச் செய்கிறான். இத்தனையும், கிருஷ்ணர், ‘அர்ஜுனா, தொடு கணையை’ என்றவுடன், மறுபேச்சுப் பேசாமல் செய்து முடித்து வெற்றிக் கனியைத் தட்டிச் செல்கிறான்.

குருக்ஷேத்திரத்தில் 18 நாள் போரிலும், அர்ஜுனனின் தோள்கள், கிருஷ்ணரின் தோளோடு உரசியது. கால்களைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறான். அபிமன்யு இறந்தவுடன், அவர் தோளில் சாய்ந்து கண்ணீர் விடுகிறான். இத்தனை புண்ணியம் செய்த அர்ஜுனன், கிருஷ்ணருடன் நண்பனாய் அனுபவிப்பதை, மேகலாவாகிய நான், இதோ இப்படி எழுதி பிரமித்துப் போகிறேன். கதைகள் சொல்லி ஆச்சரியப்பட்டுப் போகிறேன். கொஞ்சம் ஏக்கமாய், பொறாமைப் படவும் செய்கிறேன்.

கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு என்ன உறவோ, அதே உறவுதான் துரியோதனனுக்கும். என்றாலும், துரியோதனன், பாண்டவர்கள் மீது கொண்ட பகை உணர்ச்சியினால், கிருஷ்ணர், பாண்டவர்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவே பார்க்கிறான். அதனால் தான் கிருஷ்ணரை, நண்பனாகவோ, உறவினராகவோ பார்க்காமல், எதிரியாகப் பார்க்கிறான். பாண்டவர்களும், கௌரவர்களும், அவரவர்க்கு ஆதரவான அரசர்களை, அணி சேர்க்கும் போது, துரியோதனன், துவாரகைக்குச் சென்று, கிருஷ்ணரின் சகாயத்தைக் கேட்க விரைகிறான். அங்கு அர்ஜுனனும் காத்திருக்கிறான். கிருஷ்ணர், தன்னுடைய யாதவப் படை வேண்டுமா? ஆயுதம் ஏந்தாமல் தான் வேண்டுமா? என்று கேட்க, துரியோதனன், கிருஷ்ணரின் பெருமைகளை அறிந்தானில்லை. சிசுபாலன் வதத்தை நேரில் பார்த்தவன். அஸ்தினாபுரத்து அரண்மனையில் கிருஷ்ணர் தூது வந்த சமயம், அவரின் விஸ்வரூபத்தைப் பார்த்தவன். ஒரு கட்டத்தில், கிருஷ்ணர், துரியோதனனைச் சமாதானப்படுத்தும் முயற்சியின் போது, துரியோதனனின் பெருமைகளை வரிசைப்படுத்துகிறார். சாஸ்திரம் அறிந்தவன், வீரம் மிக்கவன், உயர் குடியில் பிறந்தவன், தர்மம் உணர்ந்தவன் என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறார். அவன் மசியவேயில்லை. அவன் மனதில், கிருஷ்ணர் மீது நல்ல எண்ணம் இருந்திருந்தால், கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தாவிட்டால் கூடப் பரவாயில்லை; அவர் ஒருவர் போதும், இந்த உலகத்தையே ஜெயித்து விடுவேன் என்று சொல்லியிருப்பான் அல்லவா? அதை விடுத்து, மனதில் கணக்குப் போடுகிறான்; கணக்கில்லாத யாதவ சேனை இருந்தால் போதும், நான் ஜெயித்து விடுவேன் என்று நினைக்கிறான். கண்ணெதிரில், கிருஷ்ணர் புன்முறுவலோடு, பரம் பொருளாய் விஸ்வரூபமெடுக்கிறார்; உறவினராய் உலவுகிறார்; நண்பனாய் நக்கலடிக்கிறார். கிருஷ்ணரை அனுபவிக்கத் தெரியாமல், எதிரியாய் மட்டுமே பார்த்து, பலருடைய நிந்தனைக்கும் ஆளாகிறான். துரியோதனன். கிருஷ்ணரின் பெருமை தெரியாமல் பேசும் போதெல்லாம், கடவுளையே பக்கத்தில் வைத்துக் கொண்டு, அவர் அருமை பெருமை தெரியாமல் இருக்கிறானே என்று எனக்கு எரிச்சலாய் வரும்.

இவனாவது, பாண்டவர்களுடைய முழு எதிரி. இந்த சிசுபாலனுக்கு என்ன வந்தது? பாண்டவர்கள் நடத்தும் ராஜ சூய யாகத்தில், பாண்டவர்கள் யாரை விரும்புகிறார்களோ, அவருக்குத் தானே முதல் மரியாதை கொடுக்க முடியும். கிருஷ்ணரின் பராக்கிரமமும், கோகுலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்களும், என்னைப் போலவே பாண்டவர்களுக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியதால், கிருஷ்ணரே முதல் மரியாதை ஏற்றுக் கொள்ளத் தகுதியானவர் என்று நினைக்கின்றனர். ஆனால், இதைக் காணச் சகிக்காத சிசுபாலன், சபையின் நடுவில், அரசர்கள் மத்தியில், கிருஷ்ணரை நிந்தித்து, பலவாறாகப் பேசுகிறான்.

‘பூதகி என்ற பெண்ணைக் கொன்ற இவனுக்கா முதல் மரியாதை; வயதில் முதிர்ந்த பீஷ்மர் இருக்க, இவனுக்கா முதல் மரியாதை; ஆச்சாரியர்களுள் சிறந்தவரான துரோணர் இருக்க, இவனுக்கா முதல் மரியாதை; வேதம் இயற்றுவதிலும், யாகம் செய்வதிலும் வல்லவரான வியாசர் இருக்க, இவனுக்கா முதல் மரியாதை’ என்று தரக்குறைவாகப் பேசிய அவனை பீஷ்மர் நிந்தித்து, கிருஷ்ணரின் பெருமைகளை வாயார, மனதாரப் போற்றுகிறார். ‘அத்தகைய கிருஷ்ணரை எதிர்ப்பவரை, இதோ என் கால் அவர்கள் தலையில் வைப்பதாக’ என்று கூறி போருக்கு அழைக்கிறார்.

அச்சமயத்தில், கிருஷ்ணராகிய நாராயணர் எழுந்து, ‘போன ஜென்மங்களில், இரண்ய கசிபுவாகவும், இராவணனாகவும் பிறந்தவன் தான் இந்த சிசுபாலன். அப்பொழுது, இவன் என்னால் வதம் செய்யப்பட்டவன்; இப்பொழுதும் நானே அவனை வதம் செய்வதுதான் முறை’ என்று கூறி, நரசிம்ஹரும் அவரே, இராமரும் அவரே என்று காட்டிய அந்தப் பரம் பொருள், தன் கையிலிருந்த சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையைக் கொய்தார். அப்பொழுது அவன் உடலிலிருந்த ஜோதி, கிருஷ்ணரை வலம் வந்து அவருள் பிரவேசித்தது.

நாரதர், கிருஷ்ணரைப் பார்த்து, க்ஷத்திரியர்களை அழிப்பதற்காகவே பிறப்பெடுத்த ஸ்ரீமன் நாராயணன், ஏதும் அறியாத பாவனையில் அமர்ந்திருக்கிறாரே என்று அவரை யோசனையோடு பார்த்த பார்வையின் அர்த்தம், சிசுபாலனின் வதத்தால் புரிந்து போனது.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2