ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 132
மேகலா : இந்தக் காட்சியை முழுவதுமாக, பாண்டவர்களும் பார்த்தார்கள்; கௌரவர்களும் பார்த்தார்கள். கௌரவர்களைப் பெற்ற காந்தாரிக்கும் இது தெரியும். இவள், கிருஷ்ணருக்கு எதிரியும் கிடையாது; பெரிய நட்பும் கிடையாது. ஆனாலும், கிருஷ்ணரின் மகிமை தெரியும். அவர், பாண்டவர்களுக்கு சகாயம் செய்பவர் என்று தெரியும். கிருஷ்ணர் இருக்கும் பக்கமே, உண்மை இருக்கிறது, வெற்றியும் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும்.
துரியோதனனைக் கட்டுப்படுத்த அவளால் முடியவில்லை. துரியோதனன் தர்மம் தவறுகிறான் என்று தெரியும். திரௌபதியை அவமானப்படுத்தியது தெரியும். பாண்டவர்களை அவமானப்படுத்திக் காட்டுக்கு அனுப்பியதும் தெரியும்.
யுத்த பூமியில், துரியோதனன் வீழ்ந்து விட்டான். கௌரவர்கள் தோற்றுப் போனார்கள் என்று தெரிந்த பின், யுத்த பூமிக்கு வருகிறாள். அங்கு, கௌரவர்களின் மனைவிமார்கள், தங்கள் கணவன்மார்களை இழந்து அழுவதைப் பார்க்கிறாள். தன் மகன் இறந்து விட்டான் என்ற நிலையில், அவள் அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வரும் துக்கத்தை அடக்க முடியாமல், ஆத்திரத்துடன், கிருஷ்ணரிடம் பேசுகிறாள். ‘கிருஷ்ணா! உனக்கே இது நியாயமா? கௌரவர்கள் ஒருவர் கூட மிஞ்சாமல், அவர்களுடைய தர்மபத்தினிகள், தங்கள் கனவர்களை இழந்து கதறி அழுவது, உன்னால்தானே; நீதான் இத்தனை இழப்புக்கும் காரணமானாய். நீ நினைத்திருந்தால், இந்தப் போரைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இறுதிக் காலத்தில், எனக்கும் என் கணவருக்கும் துணையாக ஒரு மகன் கூட மிஞ்சாமல் போனது, உன் வஞ்சனையால் தானே’ என்று அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி, ‘என் வம்சம் இப்படி நிர்மூலம் ஆனது போல், உன் வம்சமும் அழிந்து போக வேண்டும்’ என்று சாபம் கொடுக்கிறாள். தானும் சராசரி பெண்தான், தனக்கும் தர்மத்திற்கும் சம்பந்தமே இல்லை; தான் ஒரு வக்ரம் பிடித்த பேராசைக்காரனைப் பெறுவதற்குத் தகுதியானவள் தான் என்று நிரூபிக்கிறாள். கிருஷ்ணரின் பெருமைகளை நேரில் பார்த்தவர்களில் சிலர், அவரை எதிரியாகப் பார்த்தது கூட பரவாயில்லை. ஆனால், காந்தாரியோ, உச்சக்கட்டமாக கிருஷ்ணருக்கே சாபம் கொடுக்கிறாள். பார்க்கப் போனால், துரியோதனன் என்ற மகனைப் பெற்றதனால், க்ஷத்திரியர்களின் அழிவுக்கு காந்தாரியும் ஒரு முக்கியக் காரணமாகிறாள்.
- பீமனுக்கு விஷம் வைத்து கொல்லப் பார்க்கிறான்
- பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு அனுப்பி கூண்டோடு கொல்லப் பார்க்கிறான்.
- தருமனை சூதாட அழைத்து, பந்தயம் வைத்து, நாட்டை அபகரிக்கிறான்.
- திரௌபதியை, கூந்தலைப் பற்றி இழுத்து வந்து, சபை நடுவில் அவமானப் படுத்துகிறான்.
- பாண்டவர்களை வனவாசம் அனுப்புகிறான்.
- திரும்ப வந்து, இழந்த நாட்டைக் கேட்கும் போது தர மறுக்கிறான்.
அப்பொழுதெல்லாம் தர்மம் பேசி, கிருஷ்ணரிடம் உரிமை பாராட்டாத காந்தாரி, துரியோதனன், பாண்டவர்களால் வெல்லப்பட்டுக் கொல்லப்பட்டான் என்றதும், தர்மம் பேசத் தோன்றுகிறது; நியாயம் பேசத் தோன்றுகிறது. எதிரில் நிற்கும் கிருஷ்ணனே இந்த சீரழிவுக்குக் காரணம் என்று எத்தனை தைரியமாக ’பிளேட்டை’த் திருப்பிப் போடுகிறாள்.
இதையெல்லாம் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணரும், ‘தன் கணவருக்குக் கண் தெரியாத காரணத்தால், தானும் தன் கண்களைக் கட்டிக் கொண்டு, இந்த உலகத்தைக் காண விரும்பாத காந்தாரி, தவத்தில் உறுதி மிக்கவள். தன் பத்தினித்தனத்தில் குறைவில்லாதவள் என்று கூறி, ’உன்னுடைய சாபம் பலிக்கட்டும். என்னுடைய முடிவுக்குப் பிறகு, இந்த யாதவக் குலத்தோர், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்து போவர். ஆனால், இந்தக் குலம் அழிவதற்கு யார் காரணம் என்று கொஞ்சம் நினைத்துப் பார். பாண்டு புத்திரர்களை, நிம்மதியாக வாழ விடாத துரியோதனன் தான், இந்த அழிவிற்குக் காரணம். ராஜசூய யாகத்தில், பாண்டவர்கள் பெற்ற செல்வத்தின் மீது பொறாமைப்பட்ட துரியோதனனே இந்த அழிவிற்குக் காரணம். பாண்டவர்களை சூதாட அழைத்து, ஏமாற்றி, நாட்டை அபகரித்த துரியோதனனே இந்த அழிவிற்குக் காரணம். வனவாசம் முடித்து வந்த பாண்டவர்களிடம் அவர்கள் நாட்டைத் திருப்பிக் கொடுத்திருந்தால், இந்த யுத்தமே நடந்திருக்காது.
எல்லாத் தவறுகளும் உன் மகன் செய்து விட்டான். இன்று, அவன் செய்த பாவத்தின் பலன்களை இந்த அஸ்தினாபுரம் அனுபவிக்கிறது என்று ஒவ்வொன்றாகச் சொல்லும் போது, காந்தாரிக்கு, நாம் சாபம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பரம் பொருளாகிய ஸ்ரீ கிருஷ்ணர்; என் மனதிற்கினிய ஸ்ரீ கிருஷ்ணர்; அவருடைய பெருமைகளை எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும், கேட்பவருக்கும், வாசிப்பவருக்கும், எழுதுபவருக்கும் புண்ணியத்தைத் தரும் ஸ்ரீ கிருஷ்ணரை, நம்முடைய கோபத்திற்கெல்லாம் சாபத்தைக் கொடுப்பது தான் மனிதர்களுக்கு பழக்கமாகப் போயிற்று. அதைத்தான் காந்தாரியும் செய்கிறாள்.
(தொடரும்)
Comments
Post a Comment