எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 4

மேகலா : கிருஷ்ணா! உனக்கு இந்தப் பாட்டு ஞாபகம் இருக்கா…

‘காடு விளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே;

காலமிருக்குது பின்னே

கிருஷ்ணர் :

‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்;

கையுங்காலுந்தானே மிச்சம்’ – இந்தப் பாட்டா…?

மேகலா : ஆமா கிருஷ்ணா…

‘ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது’ –

இந்தப் பாடல் சொல்லிருச்சே – காணி நிலமானாலும், நடவு வேலை, களை பறிப்பது, காய்கறி பறிப்பது, தண்ணீர் இறைப்பது, உரமிடுவது என்று எல்லா வேலைகளையும், குடும்ப உறுப்பினர்களே செய்வார்கள் கிருஷ்ணா… மாட்டைக் குளிப்பாட்டி, தீனி போட்டு, பால் கறந்து, காய்ச்சி, உறை குத்தி தயிராக்கி, கடைந்து, மோராக்கி, வெண்ணெய் எடுத்து…. இந்த வேலைகள் எல்லாம் regular வேலை. ஆடு, மாட்டை மேய்ச்சலுக்கு விடணும், அதன் இருப்பிடத்தை சுத்தப்படுத்தணும்; கோழியெல்லாம் கூட்டுக்குள் வந்ததா, முட்டையிட்டதா, முட்டையை அடைகாக்க வைத்தமா என்றும் சரி பார்க்கணும். நாளும் பொழுதும் ஓடி விடும்… இதில், சமையலுக்கு என்று எங்கு நேரம் ஒதுக்க…?

கிருஷ்ணர் : தன் வீட்டு வேலைகளைத் தானே செய்தல், ஆடு, மாடுகளை பராமரித்தல், காணி நிலமென்றாலும், அங்கேயும் தானே வேலை பார்ப்பதால், வீட்டிற்கு வேண்டிய உணவுப் பொருளையும் சம்பாதித்து, மிகுதி இருப்பதைக் காசாக்கி, ஆரோக்கியமான உணவு, தானே வேலை செய்வதால், ஆரோக்கியமான உடற்பயிற்சி; இவை எல்லாவற்றையும் விஞ்ஞான வளர்ச்சிதான் தடுத்து விட்டதோ…

மேகலா : விஞ்ஞானம் மட்டுமில்லை கிருஷ்ணா…. மனுஷங்களுக்கு, தன் வேலையில் முழுத்திருப்தி வரணும். அதை மீறி ஆசை வரும் போது, மனசு ஆரோக்கியம் கெட்டுப் போகிறது. மனசு ஆரோக்கியம் கெட்டுப் போனால், தன்னாலே உடலும் கெட்டுப் போகிறது. ஆசை பெருகப் பெருக, மனிதன் கிராமவாசியிலிருந்து, நகரவாசியாக ஆரம்பித்து விட்டான்.

கிருஷ்ணர் : கிராமத்து உணவாக எதை நீ நினைக்கிறாய் மேகலா?

மேகலா : கிருஷ்ணா… KFC, McDonalds, Pizza Hut…., fast food, junk food என்று வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் மாதிரியான food தான் நாகரீக உணவு. மற்றப்படி, நம்ம விளைநிலங்களில், நம்ம ஊரு உரங்களை மட்டுமே போட்டு விளைய வைத்த தானியம், காய்கறிகளைக் கொண்டு, வைக்கும் குழம்பு, ரசம் எதுவாக இருந்தாலும் கிராமத்து உணவுதானே கிருஷ்ணா…. விவசாயம் எல்லாமே கிராமங்களில் தானே நடக்கிறது… இப்படிச் சொல்லலாம்… செந்நெல்லரிசி இறையனார்க்கு, கார் நெல்லரிசி தனக்கு என்று கொடுத்த தாயனார் என்னும் அரிவட்டாய நாயனார் மாதிரி…, விளைந்த சம்பா நெல் விற்பனைக்கு, ராகியரிசி தனக்கு என்று விவசாயி நினைக்கலாம். ராகியில் களி கிண்டி, கூழ் காய்ச்சி சாப்பிட்டு, ஆரோக்கியமாய் வேலை செய்யலாம் கிருஷ்ணா… இருந்தாலும், கிராமத்து உணவு என்றதும், ராகியில் செய்த களி, கம்மஞ்சோறு, சோளச்சோறு, குருதவாலி அரிசிச்சோறு, வரகரிசிச்சோறு என்று மதிய உணவுச்சோறு வகைகள் தான் எல்லோருக்கும் தெரியும். கம்மஞ்சோறு, ராகிக்களியை நல்லா உருண்டையாகத் திரட்டி, பெரிய பானையில் தண்ணீரில் போட்டு வைத்திருப்பார்கள். அதைக் கரைத்து கூழாக்கினால், காலை breakfast ready. இந்த உணவோடு, கொஞ்சம் கருவாடைச் சுட்டு சாப்பிட்டால், இரவு நேரத்து உணவாகும். இருந்தாலும், பசித்தால் சாப்பிடுவது என்பதுதான் மக்களுடைய பழக்கமாக இருந்திருக்கிறது. காலையில் breakfast, மதியம் lunch, இரவு dinner என்ற முறையெல்லாம் கிடையாது. உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா… காலையில் எழுந்ததும், முதலில் நீராகாரம் என்னும் நீச்சத் தண்ணி குடிப்பார்கள். சிலர், மல்லி, சுக்குவை இடித்துப் போட்டு, ‘கடுங்காப்பி’ குடிப்பார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : கடுங்காப்பியா…. அப்படீன்னா….

மேகலா : பாலில்லாத காப்பி கிருஷ்ணா…

கிருஷ்ணர் : காபி பௌடர் போடாமல் காப்பியா… நீ சொல்வது ‘மல்லி கஷாயம்’ தானே….

மேகலா : இந்த சுக்குத் தூளோடு 1/2 spoon coffee powder போட்டுக் கொள்ளலாம் கிருஷ்ணா… இந்த காப்பியோட, கொஞ்சம் நொறுக்கின சேவு, அல்லது மிக்சர் போட்டுச் சாப்பிட்டால், மழைக்காலத்து சுக்காப்பி மணமணக்கும்….

கிருஷ்ணர் : என்ன மேகலா…., புதுசு புதுசா ஏதேதோ சொல்றியா… ஒரு plate-ல் கொஞ்சம் சேவு எடுத்து வைத்து, ஒரு கை சேவு, ஒரு sip காப்பி என்றுதானே குடிக்கணும்….

மேகலா : அதெல்லாம் இப்ப style கிருஷ்ணா…. கிராமத்து style, காப்பிக்குள்ள சேவு போடணும்…

கிருஷ்ணர் : Oh! Interesting-ஆ இருக்கு மேகலா…. சரி, கிராமத்துக் கடைகளில் விற்கும் தின்பண்டம் பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா மேகலா…?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2