எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 5
மேகலா : கிருஷ்ணா, எங்க பூலாவூரணியில, எங்க அப்பாவோட அக்கா, சிறு பெட்டிக்கடைதான் வைத்திருந்தார்களாம். அங்கு சீனி மிட்டாய், கருப்பட்டி என்று வைத்திருப்பார்களாம். இப்போ கிடைக்கும் தேன்மிட்டாய் கூட இருக்குமா என்று தெரியவில்லை. எல்லோருக்கும் தெரிந்த பொரிகடலையும் இருக்கும் போல…. எங்க அப்பாவுக்கு ஏதாவது சாப்பிடணும்னு தோணுச்சின்னா, வீட்டில் இருக்கும் பருத்தி, வத்தல் என்று ஏதாவது பொருளை எடுத்து வந்து, கடையில் கொடுத்து, தனக்கு வேண்டிய தின்பண்டத்தை வாங்கி சாப்பிடுவாராம்.
கிருஷ்ணர் : ஏன் மேகலா, காசு கொடுக்க மாட்டாராமா….
மேகலா : கிருஷ்ணா…. ’தின்பண்டம் வாங்கப் போகிறேன், காசு கொடுங்கள்’ என்றால் எங்க ஐயாமா காசு கொடுப்பாங்களா கிருஷ்ணா…. மேலும், பணப்புழக்கம் அவ்வளவாக கிடையாதுல கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பண்டங்கள் இருந்தளவுக்கு பணப்புழக்கம் கம்மிதான். அதான் பண்டமாற்று முறை. மக்கள் யாரும் பசித்திருக்கவும் இல்லை, சோம்பலாகவும் இல்லை…. ‘எளிய கிராம வாழ்க்கை’…
மேகலா : வியாபாரிகளுக்கும், பொருள் இல்லையே என்ற குறைபாடும் வருவதில்லை. வாங்குபவர்களுக்கும், பொருளுக்குப் பொருள் என்ற ரீதியில், வாங்குவதில் தட்டுப்பாடும் வருவதில்லை. சொர்க்கம் கிருஷ்ணா…! இது கிராம ராஜ்ஜியம் இல்லை…. ‘ராம ராஜ்ஜியம்’!
இன்னும் ஒரு விஷயம் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில் நல்ல நாளிலெல்லாம் தான் இட்லிக்கு மாவாட்டி, தோசை சுடுவது என்றிருக்குமாம். இந்த தோசையைக் கூட, ஒரு காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி வைத்துச் சாப்பிடுவார்கள் என்பதெல்லாம் கிடையாது கிருஷ்ணா…. நல்ல நாளில்லையா…, அதனால, தோசை மாவுல சுக்கு தட்டிப் போட்டு, ஒரு மூடி தேங்காயைத் துருவிப் போட்டு, கருப்பட்டியைக் கரைச்சு விட்டு, மிதமான சூட்டுல, மினுமினுணு நல்லெண்ணெய் விட்டு, மெத்து மெத்துணு தோசையை ஊத்தி, ஒரு தட்டுப்பெட்டி நிறைய அடுக்கி வச்சிருவாங்க கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எதுக்கு தட்டுப்பெட்டி நிறைய….?
மேகலா : வேற பலகாரம்ணு செய்ய மாட்டாங்கள்ள கிருஷ்ணா…. இது ஒரு வாரம் வரைக்கும் கெட்டுப் போகாதுல்ல… கிருஷ்ணா… வீட்டுல, கருப்பட்டியும் நிறைய இருக்கும்ல. அதிலும் சிலர் என்ன பண்ணுவாங்க தெரியுமா கிருஷ்ணா? கருப்பட்டிய ஒரு பானை நிறைய, பாகு காய்ச்சி எப்பவும் வீட்டில் வைத்திருப்பார்கள். Plain தோசையை ஊத்தித் தரச் சொல்லி, இந்த கருப்பட்டிப் பாகைத் தொட்டு சாப்பிடுவாங்க….
கிருஷ்ணர் : சட்னி…., மிளகாய்ப்பொடி மாதிரியா…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. இன்னொரு பலகாரம் என்ன தெரியுமா கிருஷ்ணா…. கிடா வெட்டுத் திருவிழா நடக்கும் போது, ஒவ்வொரு வீட்டுலயும் கிடா வெட்டுவாங்கல்ல…, நல்ல வளர்ப்புக் கிடாவா இருக்கும் கிருஷ்ணா… அதனால கொழுப்பும் நிறைய இருக்கும்; கொழுப்பையெல்லாம் பிரித்து, தனியாக உருக்கி வச்சிருப்பாங்க.
கிருஷ்ணர் : நெய் மாதிரியா…
மேகலா : ஆமா… கிருஷ்ணா… இந்த உருக்கிய கொழுப்பில, காரப் பணியாரம் சுடுவாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : மேகலா… நான் இந்த மாதிரி பணியாரம் சுடுவதைக் கேள்விப் பட்டதேயில்லையே.. ரொம்ப taste-ஆ இருக்குமோ….
மேகலா : செமயா இருக்குமாம்… நான் சாப்பிட்டதேயில்லை கிருஷ்ணா…. எங்க அத்தைமார் சொல்லுவாங்க. ஆனால், அந்தக் கொழுப்பை, சாப்பாட்டுக்கு நெய் மாதிரி விட்டு சாப்பிட்டிருக்கிறேன் கிருஷ்ணா….. சுக்கா சாப்பிடுவது மாதிரியே இருக்கும் கிருஷ்ணா… கருப்பட்டி தோசை…. கருப்பட்டி காப்பி…. கருப்பட்டி பணியாரம்…. என்று கிராமத்து மக்களுக்கு, சாப்பாட்டில் இனிப்பு கூட கடையில் வாங்குவது கிடையாது. எல்லாரோட நிலத்துலயும் அஞ்சாறு பனைமரம் கட்டாயம் இருக்கும். பனைநுங்கு, பனம்பழம், நுங்குத்தவுணு, பனங்கிழங்கு, பனங்கருப்பட்டி என்று ஏகப்பட்ட தின்பண்டங்களை, தாய்க்குத் தாயாக இருந்து பனைமரம் கொடுத்து விடுகிறதுல்ல கிருஷ்ணா….
கிருஷ்ணர் : வீட்டின் கூரையில் வேயும் ஓலை கூட பனைமரம் கொடுக்குதுல்ல….
மேகலா : அந்த ஓலையில், விசிறியும் செய்வாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : பார்த்தியா, மனிதன் தனக்குத் தேவையான அனைத்தையும், தன்னைச் சுற்றியே பெற்றுக் கொள்கிறான் பார். ஏன் மேகலா…. காலை வெய்யிலுக்கு இதமாய் நீ என்ன குடிப்பாய்…?
மேகலா : ஏன்…, Juice குடிப்பேன்….
கிருஷ்ணர் : இது மாதிரி, கிராம மக்கள் வெய்யிலுக்கு இதமாகத் தாகம் தணிக்க என்ன குடிப்பாங்க….?
மேகலா : கேழ்வரகுக்கூழ் தான் குடிப்பாங்கண்ணு சொன்னேன்ல கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நான் கேட்பது…., soft drinks மாதிரி…
மேகலா : ‘பதநி’ குடிப்பாங்கல்ல கிருஷ்ணா… ‘நீச்சத்தண்ணி’ இருக்கும். அது தாகம் தணிப்பது மட்டுமல்ல கிருஷ்ணா…. களைச்சு வர்றவங்களுக்கு சக்தியையும் கொடுக்க வல்லது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஆமாம்ல… அவங்களுக்கு fresh juice தெரியுமா, milk shake தெரியுமா…., ‘கஸாட்டா இஸ்க்ரீம்’ தான் தெரியுமா…?
(தொடரும்)
Comments
Post a Comment