எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 12
மேகலா : ஏன் கிருஷ்ணா…. அப்படிச் சொல்லிட்ட….. இயற்கையோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை வாழும் கிராமத்தானுக்கு இயற்கை சம்பந்தப்பட்ட அறிவும், இயற்கையை அனுசரிச்சுப் போகும் திறனும், இயற்கையாக இருப்பது இயல்புதானே கிருஷ்ணா…
கிருஷ்ணர் : இயற்கை சம்பந்தப்பட்ட அறிவா…? எப்படிச் சொல்ற…?
மேகலா : கிருஷ்ணா, ஒரு விவசாயி, பள்ளிக்கூடம் சென்று பாடம் படிக்காமலேயே, கரிசல் மண்ணில் இது விளையும், செவக்காட்டு மண்ணில் இது நல்லா விளையும் என்று மண்ணைக் கையில் அள்ளிப் பார்த்தே, அதன் ஈரத்தன்மையை வைத்தே கண்டு பிடித்து விடுவான். மண்ணை ‘லேப்’ பரிசோதனை செய்துதான், இத்தனை சதவீதம் மக்னீஷியம், இவ்வளவு பொட்டாசியம் என்று சொல்லணும்னு அவசியமில்லை… மண்ணைக் கையில் எடுத்து, அதன் பிசுபிசுப்புத் தன்மை, வாசனையை வைத்தே, இதில் என்னென்ன மணிச்சத்துக்கள் இருக்குன்னு கண்டுபிடிச்சிடுவாங்க. நிலத்தடியில் நீரோட்டம், எவ்வளவு ஆழத்தில், எவ்வளவு density-யில் இருக்கு என்பதை, நிலத்தில் எழும் அதிர்வைக் கேட்டே கண்டுபிடித்து விடுவார்கள் கிருஷ்ணா… அதிசயமில்லையா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இதிலென்ன அதிசயம் மேகலா…. மனுஷன் பிறக்கும் போதே, ஒவ்வொரு அதிசயத்தையும் கண்டுபிடிக்கும் அசாத்தியமான அறிவையும் பெற்றுத்தான் வந்திருக்கிறான். சரி…., இந்த ‘நீரோட்டம்’ பார்க்கும் திறமையுள்ளவர்கள், இன்னும் இருக்கிறார்களா மேகலா…?
மேகலா : இருக்கிறாங்க கிருஷ்ணா. வாட்டம் பார்ப்பது என்று சொல்லுவாங்க. ‘கவட்டை’ மாதிரி ஒரு குச்சி இருக்கும் கிருஷ்ணா… அதன் இரண்டு முனைகளையும் உள்ளங்கைகளில் பிடித்துக் கொண்டு, வாட்டம் பார்க்கும் பூமியின் மீது, வாட்டம் பார்ப்பவர் நடந்து வருவார். நீரோட்டத்தின் அதிர்வு கேட்கும் பொழுது, கவட்டை மாதிரியான குச்சி, உள்ளங்கைகளில் சுழலும்….. அப்படீன்னா.., அந்த பூமிக்கடியில் நிலத்தடி நீர் இருப்பதாக முடிவு செய்வார்கள் கிருஷ்ணா…. சிலருக்கு அந்த பூமி மீது நடக்கும் போதே நிலத்தடி நீரின் சலசலப்பு, அதிர்வை ஏற்படுத்தும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ சொல்லு….. நான் கேட்கிறேன்….
மேகலா : ஐயோ…. மடுவுக்குள் இறங்கிய காளிங்கனையே, அவன் அசைவதைக் கேட்டே புரிந்து கொண்டவன் நீ…. உன்னிடம் போய் நீரோட்டம் பார்ப்பதைக் கதை விடுகிறேன்…. ஹி….ஹி….
கிருஷ்ணர் : எவ்வளவு தூரம் கதையளக்கிறாய் என்று பார்த்தேன்….
மேகலா : கதையா….
கிருஷ்ணர் : நீ சொல்லியது, கதையல்ல…, தகவல்கள்தான்… இருந்தாலும், கதையைக் கொஞ்சம், ஆள் பார்த்துச் சொல்லியிருக்கலாம்….
மேகலா : ஹி…ஹி….
கிருஷ்ணர் : ரொம்ப சிரிக்காத…. பல்லு சுளுக்கிக்கப் போகுது…. சரி…, கிராமத்தானின் புவியியல் அறிவைப் பற்றி வேற ஏதாவது தெரியுமா உனக்கு….?
மேகலா : கிருஷ்ணா… அந்தக் காலங்களில், கடிகாரமெல்லாம் கிடையாதுன்னாலும், சூரியன் இருக்கும் திசை, கதிர்களின் கோணம் இவற்றை வைத்து, துல்லியமாய் நேரத்தை தெரிந்து கொள்வதில் இவர்கள் கில்லாடிகள் கிருஷ்ணா… அதிலும், மேகம் நகரும் வேகத்தை வைத்து, காற்று வீசும் தன்மையை வைத்தும், மழை வரும், வராது என்றும் தெரிந்து வைத்திருந்தார்கள் கிருஷ்ணா.. எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருது கிருஷ்ணா… கிராமத்து மக்கள் பழமொழி சொல்வதில் கூட தங்கள் இயற்கை ஞானத்தை வெளிப்படுத்துவதாக இருந்திருக்கிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஆமாம் மேகலா…. இயற்கையை ஒட்டியே, அவர்கள் வாழ்க்கை முறையும் இருந்ததினாலேயே, அவர்கள் பேச்சும், பழக்க வழக்கங்களும் இயற்கை ஞானத்தை வெளிப்படுத்தத்தானே செய்யும்…
மேகலா : எங்க ‘ஐயாப்பா’ ஒரு முறை, ‘சரியான மாங்கொட்டை கல்லு’ – என்று ஒருவரைப் பற்றி கிண்டல் செய்தார்… எனக்கு அதன் அர்த்தம் புரியாமல், எங்க அப்பாவிடம் கேட்டேன். எங்க அப்பா…, பயங்கரமாகச் சிரித்து விட்டு, ‘சரியான உதாரணம் சொன்னார்’ என்று சொல்லி, அனுபவிச்சி சிரித்தார். எனக்கு ஒன்றுமே புரியாமல், ‘அப்பா, எதுக்குச் சிரிக்கிறீங்க’ – என்று கேட்டேன். அதற்கு அவர், சொன்ன பதில் இதுதான். ‘விவசாய நிலத்தில் நீரோட்டம் பார்த்து கிணறு தோண்டுவார்கள். கிணறு தோண்டும் போது, கடப்பாறையில் மணல் தட்டுப் படும் போது, சரசரவென்று கிணறைத் தோண்டிக் கொண்டே போவார்கள். அப்படித் தோண்டும் போது பாறை தென்படுமாம். அந்தப் பாறையை உடைத்து மேலும் தோண்டுவார்களாம். சில பாறைகள், கடப்பாறையைப் போட்டவுடன், கடப்பாறை எகிறிக் குதித்து, எறிந்தவர் மூஞ்சிலேயே அடிக்குமாம்….. அப்படிப்பட்ட கல்லை, ‘மாங்கொட்டக்கல்லு’ என்று சொல்வார்களாம். அந்த மாதிரியான ’கல்’ தட்டுப்பட்டால், மேற்கொண்டு கிணறு தோண்ட மாட்டார்களாம். அதாவது, இது கதைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வருவார்களாம். கண்டிப்பாக இருப்பவர்களையே திருப்புவாங்கல்ல… அப்படிப்பட்டவங்கள, ’மாங்கொட்டக்கல்லு’ண்ணு சொல்லுவாங்க என்று விளக்கம் கொடுத்து…., ‘ஐயாப்பா’ குறிப்பிட்ட ஆளை, ‘மாங்கொட்டக்கல்லு’ என்று சரியாத்தான் சொல்லியிருக்காரு என்று சிரித்தார்.
கிருஷ்ணர் : ஓஹ்ஹோ…. பாத்தியா…. வெள்ளந்தியான கிராமத்தானுக்குள் எத்தனை ஞானம் பார்… மனிதர்களின் குணத்தை விளக்குவதற்குக் கூட, தன்னோடு பழகிய இயற்கையை எத்தனை அழகாகக் கையாள்கிறார்கள்…..
(தொடரும்)
Comments
Post a Comment