'வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 5
மேகலா : கிருஷ்ணா…. இன்னும் ஒரு வலிமை இருக்கிறது… மீசையை முறுக்கிக் காட்டினால் தோளைத் தட்டிக் காட்டும் வலிமை…. ஒரு கன்னத்தில் அறைந்தால், அறைந்த கையை முறுக்கி மடக்கி, அறைந்தவனையே திமிரை அடக்கச் செய்யும் வலிமை…. தீவிரவாதத்தை ஏவி விட்டு வெறியாட்டம் போட்டால்…., தீவிரவாதக் கூடாரத்தையே காலி செய்யும் ‘ஏவுகணை வலிமை’…. அஹிம்சை வலிமையை விட, இது ’பவர்ஃபுல்’ வலிமை கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ சொல்லுவது நிஜம் தான் மேகலா… இதுதான் இன்றைக்குத் தேவையும் கூட…
மேகலா : இருந்தாலும், அந்நியர்களின் பிடியில் இருந்து, இந்தியாவை மீட்டெடுத்த வலிமையான ஆயுதத்தை, தன்னுடைய புன்னகையில் தாங்கி நின்றாரே…. அந்த வலிமையை நினைவு கொள்வோம் கிருஷ்ணா….. காந்திஜியின் எளிமையைப் பார்த்து, ‘பரதேசி’ என்றவர்கள் உண்டு. அவருடைய costume-ஐப் பார்த்து, இந்தியாவே ஆண்டி மடம் தானே என்று ஏளனம் செய்தவர்களும் உண்டு… முப்பது கோடி மக்களையும் தன் பின்னால் ஒருங்கிணைத்த மந்திரம்…. வல்லரசு நாடுகளை ஆளும் வலிமையானவர்களையும் தலை வணங்கச் செய்த மந்திரம்…. நீதிமன்றத் தீர்ப்பினால் தர்மத்தையே துலாக்கோலாகக் கையில் பிடித்திருக்கும் நீதிபதிகளைக் கூட எழுந்து வணங்கச் செய்த மந்திரம்…. ‘அஹிம்சை’ என்ற தாரக மந்திரம். உலகமே போர்ச்சூழலில், ‘ஹிட்லர்’, ‘முசோலினி’ என்ற கொடூர சர்வாதிகாரிகளை எதிர்த்து நின்ற வேளையில், பீரங்கிகளும், துப்பாக்கிகளும், அணுகுண்டும் முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தான், ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’, அஹிம்சை என்ற பூவை, வலிமையான ஆயுதமாகப் பிரயோகித்து, அதன் அர்த்தமாகவே வாழ்ந்து காட்டினார். பீரங்கிகளுக்கெல்லாம் சளைக்காத பிரிட்டிஷ் அரசாங்கம், இந்த அஹிம்சை ஆயுதத்தை எதிர்க்க முடியாமல் திணறியது. வன்முறையை ஏவி விட்டால், பதிலுக்கு இரத்தம் சிந்தத் தயாராகிய வலிமை அவர்களுக்குப் புதுசு…. எதிர்த்துத் தாக்கினால் கூட, கைது பண்ணி, சிறையில் போட்டு, சட்டத்தை மீறிய குற்றத்திற்கான தண்டனை கிடைத்திருக்கும். அரசாங்கத்தின் வன்முறைக்கு, மொத்த இந்தியாவும், காந்திஜியின் கரம் பற்றி இரத்தம் சிந்தியது. இந்த வலிமையான தாக்குதலை எதிர் கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசாங்கம், கடைசியில் துண்டக் காணோம், துணியக் காணோம் என்று நள்ளிரவில், ‘சுதந்திரம் தந்தோம்’ என்று அலறிக் கொண்டு ஓடியது உலகறிந்த விஷயம். ‘அஹிம்சை’, இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், மிகப் பெரிய ஆயுதமாகப் பார்க்கப்பட்டது. நம்முடைய புராணங்களில், தெய்வங்களெல்லாம் ஆயுதங்களைக் கையில் ஏந்தியிருக்கிறார்கள். பரமசிவனார், திரிசூலம் ஏந்தியிருக்கிறார்; இராமருக்கு வில்; நாராயணனோ, சக்ராயுதம்….; இந்திரன் வஜ்ராயுதம்; அன்னை பராசக்தி திரிசூலம்; முருகன் வேலை ஏந்தியிருக்கிறார். இவர்கள் உணர்த்துவது என்ன…. பகைவர்கள் நம்மை அச்சுறுத்தும் போது, அதர்மம் தர்மத்தை வீழ்த்தும் போது, அதர்மத்தை வீழ்த்த, தெய்வம் கூட ஆயுதத்தைப் பிரயோகிக்கத் தவறுவதில்லை. இந்த சாஸ்திரம், இந்த உண்மை, யுத்தநெறியாகப் பார்க்கப்படும் பாரத தேசத்தில், ஒற்றை மனிதனாக நின்று, அஹிம்சையைக் கையில் எடுத்த துணிச்சல், ஜீவாத்மாவான காந்தியை, மகாத்மாவாக்கியது கிருஷ்ணா… ரொம்ப நாள் கழிச்சு அஹிம்சையின் value-வை, அதன் வலிமையை மறுபடியும் நினைச்சுப் பார்க்க இது ஒரு சந்தர்ப்பம்….
கிருஷ்ணர் : ரொம்ப உணர்வுப் பூர்வமாக பேசி விட்டாய் மேகலா…
(தொடரும்)
(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)
Comments
Post a Comment