அழகு - பகுதி 10
மேகலா : ஹரிக்கு கல்யாணம் பேசி, கல்யாணத்துக்கு பத்திரிகை வைப்பதற்காக, பூலாவூரணிக்கு, நானும் ராணிமாவும் scooter-ல் சென்று கொண்டிருந்தோம். அப்போ மழைக்காலம் முடிந்து, வானம் வெறித்திருந்த காலம். சின்னச் சின்ன கால்வாய்கள் கூட, ‘சல சல’வென நீரோடையை நிரப்பி சந்தோஷமாய் ஓடிக் கொண்டிருந்த நவம்பர் மாசம். போகும் வழியில் ஒரு குட்டி பாலம். அதனடியில் கால்வாய் நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பாலத்தையடுத்து ஒரு சிறு குட்டையும் தண்ணீரில் ததும்பிக் கொண்டிருந்தது. அப்போ, செல்லும் வழியில் எதிரே ஒரு யானை, பாகனுடன் வந்தது. நாங்களும், எதிரில் யானை வருகிறது, ‘நல்ல சகுனம்’ என்று நினைத்து, யானைக்கு வழி விட்டு, ஒதுங்கி நின்றோம். வந்த யானை, குட்டையில் நிரம்பிய தண்ணீரைப் பார்த்ததும், படக்கென்று தண்ணீருக்குள் சென்று, ஆழமில்லாத அந்தக் குட்டைக்குள் படுத்துக் கொண்டது. போவோர், வருவோரெல்லாம் யானை குளிப்பதை ஆனந்தமாய் ரசிக்க, நானும், ராணிமாவும், எங்கள் camera கண் கொண்டு, அதன் அழகை முழுவதுமாக எங்கள் கண்களில் படமெடுத்துக் கொண்டோம். பாகனை மீறி யானை குளிக்க வேண்டும் என்று தீர்மானித்தவுடன், பாகனும், அதன் முதுகைத் தடவி ஆனந்தக் குளியலுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தான். யானை, தும்பிக்கையால் தண்ணீரை spray பண்ணி ரகளை பண்ணியதை சலிக்காமல், வந்த வேலையை மறந்து, முழுவதும் பார்த்து ரசித்த பின், யானை அப்பக்கம், நாங்கள் இப்பக்கமாய் நகர்ந்தோம். திடீரென்று, போகும் வழியில் கண்டு மகிழ்ந்த இந்த அழகான நிகழ்வு, என் நினைவுகளில், பொக்கிஷமாய் பதிந்து விட்ட அழகு….
கிருஷ்ணர் : ஏன் இந்தக் காட்சியை படமெடுக்கவில்லையா….?
மேகலா : எங்கிட்ட அப்ப இருந்தது வெறும் phone தான் கிருஷ்ணா; Smart phone கிடையாது. என்னோட phone-ல் அப்போ camera கூட கிடையாது. அப்புறம் எங்க படமெடுக்க…?
கிருஷ்ணர் : Oh! அப்படியா…. Smart phone கையில் இருப்பது ஒரு சௌகர்யம் தான். இப்ப மாதிரினா, போறவங்க, வர்றவங்க எல்லோருமே video எடுக்க ஆரம்பிச்சிருப்பாங்க….
மேகலா : இந்த சம்பவம் மாதிரியே இன்னொரு சம்பவமும் என் கண்ணை விட்டு அகலாமல் இருக்கு கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : உன் கண்ணை விட்டு அகலாத சம்பவம்னா, சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்…, சொல்லு….
மேகலா : அப்போ, ஷீத்தல் அப்பா, மால்தீவ்ஸ்ல தான இருந்தாரு… அவர் இந்தியா வரும் சமயம், திருவனந்தபுரத்தில் தான் land ஆவார். நான் போய் அழைத்து வருவேன். அப்படி ஒரு சமயம் pick-up பண்ணப் போகும் போது, சங்கரன்கோவில் தாண்டி, தேசிய நெடுஞ்சாலை எட்டிப் பார்க்காத, டவுண் சாலை…. நகர்புறமாகவும் இல்லாமல், கிராமப்புறமாகவும் இல்லாத, நகரத்தைத் தாண்டிய சாலை, நெடிது நீண்டு கொண்டே போகிறது. வானமும், வெய்யிலை அள்ளி வழங்காமல், இதமான காலை வெப்பம் சிலுசிலுப்பாய் இருந்தது. அந்த நேரத்தில், நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சாலையின் குறுக்காக, வலமிருந்து இடமாக, ஒரு பத்து பதினைந்து மயில்கள் கூட்டமாக பறந்து செல்கிறது. நான் உடனே காரை நிறுத்தச் சொன்னேன். தோகை நீண்ட மயில்களும், தோகை சிறுத்த பெண் மயில்களுமாய் பறந்து போன காட்சி…., ஆஹா…., எத்தனை அழகானது கிருஷ்ணா…. ஒவ்வொரு மயிலின் மீதும் முருகன் அமர்ந்திருப்பதாய் கற்பனை பண்ணிப் பார்த்தேன் கிருஷ்ணா…. வேலும் மயிலும் பளிச் பளிச்சென்று மின்னலாய் மின்னுவது போலத் தோணுச்சி கிருஷ்ணா…. என் உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்து, உடம்பில் ஊடுருவிய சிலிர்ப்பை அனுபவித்து சிலிர்த்தேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : வாவ்! ஒற்றை மயில் பறந்தாலே அழகாய் இருக்கும். மயில்கள் கூட்டமாய் பறந்தால், எப்படி இருக்கும். அதுவும், முருகன் மயில் மீது அமர்ந்திருந்த தோற்றத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்ததாய் சொல்கிறாய். அப்படீன்னா, அந்தக் காட்சி உன்னை எப்படி ரசிக்க வைத்திருக்கிறது என்று புரிகிறது…. சூப்பர் மேகலா…
மேகலா : கிருஷ்ணா…., ஒற்றை மயில் கம்பீரமாய் நடந்து, சாலையின் மறுபக்கம் கடந்து போன அழகையும் பார்த்து அனுபவித்த அனுபவமும் உண்டு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : உனக்கு பறவைகள் என்றாலே ரொம்பப் பிடிக்குமோ….
மேகலா : யாருக்குத்தான் பிடிக்காது கிருஷ்ணா…. மயில் தோகை விரித்து ஆடும் போது, சற்று நின்று, ரசித்து, அதற்கப்புறம் கடந்து போனால் தான், அவன் மனிதன்…. இல்லையென்றால், அவன் வெறும் இயந்திரம்….
கிருஷ்ணர் : சரி… நீ மயில் குறுக்கே சென்ற கதையைச் சொல்லு….
மேகலா : இதுவும் ஹரி கல்யாணத்தின் போது பார்த்த சம்பவம் தான் கிருஷ்ணா…. கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்யக் கொடுக்க வேண்டும். அதற்கு முன், குலதெய்வம் கோயிலுக்குச் சென்று, பூஜை பண்ணி, பத்திரிகை வைத்து விட்டு, நகைக் கடைக்குச் செல்ல வேண்டும். மாருதி 800 காரில், நானும் ஹரியும் சிவகாசி சென்றிருந்தோம். ANJA College தாண்டி, எங்க தோட்டம் cross பண்ணிக் கொண்டிருந்தோம் கிருஷ்ணா. அப்போ, வலமிருந்து இடமாக, நீண்ட தோகை தரையில் பட, கிரீடம் வைத்த மாதிரியான தலைக் கொண்டை நிமிர்ந்து நின்று ஆடிக் கொண்டிருக்க, கழுத்து நிமிர்ந்த தலையை கர்வம் கொப்பளிக்க, இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டே, தன் சிறிய கண்களை சிமிட்டிச் சிமிட்டி, தன் நீண்ட கால்களால், செருக்குடன், கம்பீரமாக நடந்து சென்ற அழகை, நிதானமாக பார்த்து சிலிர்த்துப் போனேன் கிருஷ்ணா… அந்த முருகனே ஹரி கல்யாணத்தை வாழ்த்தியதாக எனக்குப் பட்டது. இது ஒருபுறம் இருக்கட்டும். நான்கடி நீளமாக ஒரு மயில், தோகை தரையில் படும்படிக்கு, உலகத்தின் இயக்கத்தைப் பற்றிக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், இந்த உலகமே தன் அழகுக்கு கால்தூசு தான் என்னும்படியாக நடந்து போவதைப் பார்த்தால், யார்தான் அந்த அழகில் மயங்க மாட்டார்கள்….
கிருஷ்ணர் : அதிலே நீ இன்னும் கொஞ்சம் ஓவராய் ரசிச்சு, முருகன் அருள் புரிவதாக நினைத்து சிலுத்துப் போகிறாய்….
(தொடரும்)
Comments
Post a Comment