அழகு - பகுதி 12

மேகலா : யாரையெல்லாம் நாம் நினைக்கும் போதே மனசு சந்தோஷப்படுகிறதோ, அவர்கள் அழகானவர்கள் என்றுதானே பேசிக் கொண்டிருந்தோம். சில இடங்களில் வேலை நடக்கும் போது, அந்த வேலையை ரசிச்சுப் பார்ப்பதே ஒரு ‘தனி சுவை’, ‘தனி அழகு’ கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படியா…. அது, ‘உழைப்பின் மகிமை’ மேகலா…. ஒரு மனிதன், தன் கடமையாக வேலையைச் செய்யும் போது, அவன் நெற்றியிலிருந்து வழியும் வியர்வை கூட, அந்த மனிதனை கூடுதல் அழகாக்கிக் காட்டும்… இருந்தாலும் நீ சொல், எந்த வேலை செய்பவர்களை இப்படி ரசிச்சு சொல்லுகிறாய்…?

மேகலா : கிருஷ்ணா, நீ சொன்னது மாதிரி, உழைக்கும் மக்களின் உழைப்பே அழகுதான். மண்பானை செய்யும் குயவர்கள், தங்கள் பகுதிகளில், மண்பானை செய்வதற்கான மண்ணை பரப்பி, அதில் நீரை ஊற்றி, தங்கள் கால்களால் ‘ரிதமாக’ மிதித்து, கலவையாக, சேறாக பானை செய்யுமளவுக்கு பதப்படுத்தி, வண்டிச் சக்கரத்தின் நடுவில், தேவையான அளவு மண்கலவையை வைக்கிறார்கள். அதன் பின்னே, வண்டிச் சக்கரத்தை உருட்டி விட்டு, தன் கைகளையே உளியாக மாற்றி, ஒரு குழி மாதிரி உருவாக்கி, சக்கரம் சுழலும் லாவகத்தில், அந்தக் குழியை, தன் விரல்களால் தடவித் தடவி, பானையாய் வடிவாக்குகிறார்கள். பின்பு, கழுத்துப் பகுதியை நீவி விட்டு, கனகச்சிதமாக, ஒரு பிசிறு இல்லாமல், அந்தப் பானையை shape-க்குக் கொண்டு வந்து, சக்கரத்தை நிறுத்துகிறார்கள். அப்படியே, தன் கைகளால் ஈர மண்சட்டியை எடுத்து காய வைத்து, பத்துப் பன்னிரெண்டு பானைகள் சேர்ந்ததும், அத்தனை பானைகளையும் சேர்த்து, சூளையில் வேக வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்கள்…..

பானை செய்முறையை ‘பொதிகை’ சேனலில் ஒரு டாக்குமெண்ட்ரியாகக் காண்பித்தார்கள் கிருஷ்ணா. பானை செய்யும் கைவினைஞர்கள், சக்கரத்தை சுழற்றி விட்டு, ஈர மண்ணை பானையாக உருவாக்கும் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது கிருஷ்ணா. ஒரு சின்ன தட்டையான பொருளைக் கொண்டு மண்ணை நீவி விடும் போது, சக்கரம் சுழலும் வேகத்தில், மண்ணும் அழகாக வடிவெடுக்கிறது. ஒரு சிற்பி, சிற்பம் செதுக்குவது போல், அங்கு மண்பானை உருவாகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! குயவன் கையில் சேர்ந்த ஈர மண் கூட, மனிதனுக்குப் பயன்படக் கூடிய பானையாக உருவாகிறது பார்…. எப்பவும், ஆக்கபூர்வமான வேலை நடக்கும் போது, அந்தப் பொருள் உருவாகும் விதமே அழகுதான்.

மேகலா : அதே மாதிரி கட்டிட வேலை நடக்கும் போதும், கொத்தனார் சாந்தைப் பரப்பி, அதன் மீது வரிசையாக செங்கல்களை வைத்துக் கொண்டே வருவார். அப்பொழுது சாந்து பிதுங்கி நிற்கும். ஒரு வரிசை, இரண்டு வரிசை செங்கல்களை அடுக்கிய பின், கரண்டியால் சாந்தை வழித்து எடுத்து கூடையில் போடுவார். Neat-ஆ சுவர் உருவாகியிருக்கும்… இந்த வேலையை நின்று கவனித்துக் கொண்டே இருந்தால், செம interesting ஆக இருக்கும் கிருஷ்ணா…. சித்தாள் தலையில் சுமந்து வரும் செங்கல்லை, ஒரு நிமிந்தாளு தூக்கி, சாரக்கட்டுமானத்தில், குத்துக்காலிட்டு உட்கார்ந்து வேலை செய்யும் கொத்தனாரிடம் தூக்கிப் போடுவார். கொத்தனார் அதை லாவகமாக catch பிடித்து, சுவர் எழுப்புவார். இதைப் பார்த்துக் கோண்டே இருக்கும் நமக்கு, வீட்டுக்கு ஆகும் செலவே ஞாபகம் வராது…, ரொம்ப interesting ஆக இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உழைப்பும், திறமையும் இருக்குமிடமெல்லாம் அழகும் இருக்கும் மேகலா….

(தொடரும்)


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2