அழகு - பகுதி 15
மேகலா : அதுவும் அழகு தானே கிருஷ்ணா….. Single road-ன்னு இன்னைக்கு சொல்றோம். அந்தக் காலத்துல, ஒத்தையடிப் பாதைன்னு சொல்லுவாங்க…. தார் ரோடு இல்லாத , செவக்காடுகளில் மக்கள் நடந்து சென்று, நடந்து சென்று, ஏற்பட்ட பாதையை ‘ஒத்தையடிப் பாதை’ என்று சொல்லுவார்கள். அந்தப் பாதையில், இரண்டு காளைகளை வாண்டியில் பூட்டி, வண்டிமாடு ஓட்டுபவர், மாட்டை விரட்டவே வேண்டாம் கிருஷ்ணா…. பழகின பாதையில் மாடு தன்னாலே ஓடும். கொம்பில் கட்டியிருக்கும் சலங்கை நடனமாட, கழுத்து மணியும் அசைந்து அசைந்து ஒலி எழுப்பும். மாட்டுக்கும், வீடு வந்து விட்டது என்ற குஷி பிறக்கும். அந்த சமயத்தில், வண்டி மாடு ஓடும் ஓட்டம், அதைப் போல ஒரு குஷியான அழகு இருக்க முடியுமா கிருஷ்ணா…. கிராமத்து வாசனை; எளிமையை அழகாக வெளிப்படுத்தும் வாகனம்; என்ன இருந்தாலும் இன்றைய நவீன வாகனங்களுக்கெல்லாம் முன்னோடி; சுத்தமான காற்றை கொஞ்சங்கூட மாசுபடுத்தாத வாகனம்; நம்ம முன்னோர்களை நினைவுபடுத்துவது; காசு பணம் செலவில்லாதது….; என்று இத்தனை பெருமைகளை உள்ளடக்கிய இந்த வாகனத்தை எத்தனை முறை பேசினாலும், ஓட்டினாலும் அலுப்பில்லாதது; அழகானது கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : கிராமம் சம்பந்தப்பட்ட விஷயம்னா போதுமே…., தண்ணி குடிக்காம பேசுவியே. இருந்தாலும், இன்றைய நவீன வாகனத்துக்கு முன்னோடி என்று சொன்னாயே, அது point: சரி…, ஒத்தையடிப் பாதையில் வண்டிமாடு ஓடும் அழகைச் சொல்லி விட்டாய்…. அடுத்து வரப் போகும் அழகான வாகனம் என்னவோ…..
மேகலா : ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’
கிருஷ்ணர் : நீ ரயில் என்று சொன்னவுடனேயே, எனக்குள் ஒரு காட்சி விரிகிறது மேகலா… தூரத்தில் வரும் ரயிலின் அதிர்வுகளை இங்கே railway station-ல் உணரும் போதே, மக்கள் பரபரப்பாவதும், தன்னுடைய luggage-களைக் கையில் பற்றிக் கொண்டு, ரயில் நிற்கக் கூடிய இடத்திற்கு, S3 அல்லது S4 என்று குறிப்பிடப் பட்டிருக்கும் இடத்திற்கு ஓடி வருவதும், சற்று தூரத்தில், ‘தடக் தடக் தடக் தடக்’ என்ற சப்தத்தைக் கேட்க கேட்க, பயணிகள் முகத்தில் ஒரு பரபரப்புடன் கூடிய சந்தோஷம்…., அடேயப்பா… தடக் தடக் என்று ஓடோடி வந்த சிக்கு புக்கு ரயில் ஒரு மலைப்பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டே, ‘உஸ்’ என்ற சப்தத்துடன் வந்து நிற்கும். இங்கு தான் நிற்கும் என்று எதிர்பார்த்த passengers, S2 platform-ல் நிற்பார்கள். பெருமூச்சு விட்டு வந்த மலைப்பாம்பு ரயிலோ, நூறடிக்கு முன்னாலேயே brake போட்டும், S2 தாண்டி, S3, S4 platform-ல் போய் அலுப்பாய் நிற்கும். Luggage-ஐத் தூக்கிக் கொண்டே ஓடி வரும் passengers அடித்துப் பிடித்து, S2 compartment-ல் ஏறி உட்காருவது என்பது, அன்றாடம் நிகழும் சாதாரண நிகழ்ச்சி. ஆனாலும், ரயிலின் ‘தடக் தடக்’ ஓட்டத்தை ரசித்துப் பேசும் போது, இந்த நிகழ்ச்சியே செம interesting ஆக இருக்கு மேகலா….
மேகலா : ரயில் பூச்சி ஊர்ந்து வருவதைத்தானே நீ பார்த்திருக்கிறாய்… அதில் நீ பயணம் செய்தது கிடையாதுல கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : ஏன்….? பயணம் செய்து enjoy பண்ணின நீ தான் சொல்லேன்…, நான் கேட்கிறேன்….
மேகலா : என்ன கிருஷ்ணா…., உனக்கும் train-ல் போகணும்னு ஆசையாக இருக்கிறதா…? Train travel ரொம்ப interesting ஆன விஷயம் கிருஷ்ணா…. ரயில் வருவதை நீ சொல்லச் சொல்ல, ரயிலின் ஓட்டத்தில், seat-ல் உட்கார்ந்த நிலையில், நாமும் அசைந்து கொண்டே அனுபவிப்பது இன்னுமொரு சுவாரஸ்யமான அழகு…..
கிருஷ்ணர் : Oh! Interesting….
மேகலா : ஆம் கிருஷ்ணா…. traffic jam கிடையாது….. speed brake கிடையாது….. இன்னொரு train-ஐ முந்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தண்டவாளத்தில், இத்தனை கி. மீ. speed என்றால், அதில் கூடுதலும் இல்லாமல் குறைதலும் இல்லாத வேகத்தில் ஓடும். இந்த ரயில், பயணிகளைத் தாலாட்டும்…, தூங்க வைக்கும்…, கவலை மறந்து நிதானமாய் பயணிக்க வைக்கும்…. சிலர், குடும்பமாய் சென்று குதூகலிப்பர்…, சிலர், தனியாய் சென்று, நாளைய வேலைக்கு நிதானமாய் திட்டமிடுவார். சாப்பிட்டுக் கொண்டே செல்வார்கள். இங்குமங்கும் நடந்து கொண்டே செல்வார்கள். அவசரத்திற்கும் ஒதுங்க இடம் இருக்கிறது. முகம் கழுவுவதற்கும் wash basin இருக்கிறது. இவ்வளவு ஏன்…., சிலர் குளிக்கக் கூட செய்வார்கள். உள்ளே பயணிக்கும் பயணிகளைச் சுமந்து செல்லும் ரயில், இதைப் பற்றியெல்லாம் கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளாமல், தனக்கென உருவாக்கப்பட்ட தண்டவாளத்தில் ஊர்ந்து செல்லும்; பாதைகளுக்குத் தகுந்த மாதிரி வளைந்து செல்லும்; வயல் வெளிகளைக் கடந்து செல்லும்; மலைகளைச் சுற்றி மகிழ்ந்து செல்லும்; குகைகள் எதிர்ப்பட்டால் குடைந்து செல்லும்…. பாலத்தின் மீது படர்ந்து செல்லும்…. நீண்ட பயணத்தின் போது, களைப்பு தெரியாமல், tension-free-யாக நம்மை அழைத்துச் செல்லும். Traffic அதிகமான இடங்களில் வாகனங்கள் தானே நிறுத்தி நிதானமாய் போக வேண்டும். ஆனால், ரயில் cross பண்ணும் இடங்களில், மக்கள் செல்லும் வழியை அடைத்து, train தான் வேகமாகப் போகும். மக்கள் தான் காத்திருக்க வேண்டும். அத்தனை special…..
அடுத்த ஊர் வரும் வேளையில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ரயில் நிற்கும் போது, ரயில் வரும் நேரத்தைக் கணக்குப் பண்ணி, பொருட்களை விற்கும் சிறு சிறு வியாபாரிகளின் குரல், ‘முறுக்கேய், மணப்பாற முறுக்கேய், வாழைப்பழம், வாழைப்பழம்’ என்று கேட்டவுடன், குழந்தைகள் மட்டுமல்ல கிருஷ்ணா…, பெரியவர்கள் கூட, முறுக்கு, பிஸ்கட், வாழைப்பழம், இட்லி, தோசை என்று வாங்குவதற்கு பரபரப்பாகி விடுவார்கள். இந்த வியாபாரக் குரலுக்கே தனி ராகம் இருக்கும் போல. வாரப்பத்திரிகை, தினப்பத்திரிகை வியாபாரமும் கனஜோராய் நடக்கும். ஒன்றுமே வாங்கா விட்டாலும், platform-ல் இறங்கி, சும்மானாலும் நிற்பதற்காக இறங்குவார்கள் நிறையப் பேர். ‘பா…’ என்று குரல் கொடுத்துக் கொண்டே ரயில் கிளம்பும் சமயம்…., வியாபாரம் செய்தவர்களும், தண்ணீர் பிடிக்க இறங்கியவர்களும், காலாற நடப்பவர்களும் இயல்பாக ஏறி வந்து, அவரவர் seat-ல் அமருவார்கள். நீண்ட தூரப் பயணத்திற்கு ரயில் மாதிரி ஒரு சௌகர்யமான வாகனம் வேறு கிடையாது. இதன் ‘அழகு’ என்பது ஓடும் ஓட்டத்திலும், தாலாட்டும் தன்மையிலும், சௌகர்யமான பயணத்திலும் தான் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : தூங்கிக் கொண்டே போகலாம் என்று சொன்னாயே…. Please கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு மேகலா….
(தொடரும்)
Comments
Post a Comment