அழகு - பகுதி 20

கிருஷ்ணர் : இயற்கை சூழலை அழகாய் கொடுத்தது இருக்கட்டும்…. இப்போ, ஏதாவது simple….., ஆனா cute-ஆன அழகினைச் சொல்லேன் கேட்கிறேன்.

மேகலா :

‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு…

அங்கு துள்ளிக் குதிக்குது கன்னுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப் பசு

பாலை நன்றாய் குடிக்குது கன்னுக்குட்டி’

-இந்தப் பாட்டில் உனக்கு என்ன தெரியுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன அருமையான பாட்டு மேகலா… முதல் வரியில், மேய்ச்சலில் பசு மேய்வதைப் பார்க்கிறேன்…. அதைத் தொடர்ந்து, துள்ளி வரும் கன்னுக்குட்டியைப் பார்க்கிறேன். வந்த கன்னுக்குட்டியை, நாவால் நக்கி, பசு தாய்மையில் கனிவதைப் பார்க்கிறேன். பசு அருகில் வந்ததும், கன்னுக்குட்டி, மடியை முட்டி முட்டி பால் குடிப்பதைப் பார்க்கிறேன். எளிமையான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, அழகான காட்சியை மாலையாகக் கோர்த்திருக்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை….

மேகலா : இந்தப் பாட்டை வாசிக்கும் போதே, கண்ணெதிரே காட்சி அழகாய் விரிகிறதல்லவா… இப்படி சின்னச் சின்ன சந்தங்கள், அழகான காட்சியை camera மாதிரி படம் பிடித்துக் காட்டுவதைப் பார்க்கலாமா….?

கிருஷ்ணர் : பார்க்கலாமே….. அடுத்த பாட்டு என்ன…., சொல்லு….

மேகலா : நான் சில வரிகள் சொல்லுவேன்…., அந்தப் பாடல் எதைப் பற்றியது என்று நீ சொல்லணும்…..

‘திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்

தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட

பக்க மலைகள் உடைந்து – வெள்ளம்

பாயுது பாயுது பாயுது – தாம் தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்

சாயுது சாயுது சாயுது – பேய் கொண்டு

தக்கை யடிக்குது காற்று – தக்கத்

தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட

வெட்டியடிக்குது மின்னல் – கடல்

வீரத் திரை கொண்டு விண்ணை யடிக்குது;

கொட்டி யிடிக்குது மேகம் – கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று;

சட்டச்சட சட்டச்சட டட்டா – என்று

தாளங் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத் திசையும் இடியுடன் மழை

எங்ஙனம் வந்ததடா தம்பி! வீரா!

அண்டங் குலுங்குது, தம்பி! – தலை

ஆயிரந் தூக்கியே சேடனும் பேய் போல்

மிண்டிக் குதித்திடுகின்றான்…

– ————-

தெய்வீகக் காட்சியைக் கண் முன் கண்டோம்

கண்டோம் கண்டோம் கண்டோம் – இந்தக்

காலத்தின் கூத்தினைக் கண் முன்பு கண்டோம்’

இந்த வரிகளைக் கேட்டாயா கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : ஆஹா….. பாரதியார் காணி நிலத்தில், தென்னந்தோப்புக்கு நடுவில், மாலை நேரத்தில் வருகின்ற மழையை ரசிச்சு அனுபவித்துக் கொண்டே, தன் முகத்தில் தெறிக்கும் சாரலை, கடவுளின் தீண்டலாகப் பார்க்கிறார். யப்பா…. என்ன அருமையான உணர்வு….. காற்றுடன் கூடிய மழையை கண் முன்னே தெறிக்க விடுகிறார் பார். அழகான மழைக் காட்சி…. வாழ்க பாரதியார். தமிழின் வார்த்தைகளின் அழகைப் பார்த்தாயா… சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் போடும் போது, சம்பவத்தின் அழகே பொலிவுறுகிறது. இந்தப் பாடலை வாசிக்கும் போது, நாமும் சுழன்று சுழன்று ஆட வேண்டும் போல் இருக்கிறதே….

மேகலா : இப்படித்தான் கிருஷ்ணா….., சில பாடல்கள், சம்பவத்தை நம் கண் முன்னே விரித்து காட்டி விடும். அதே மாதிரி…., சில photos பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா…. பால் பொங்குவதை photo எடுத்திருப்பார்கள்…, நுரையுடன் பொங்கி வரும் பால், வழிந்தும் வழியாததுமாக, ததும்பி நிற்பது போல எடுத்திருப்பார்கள். இதோ…., இப்போ…., வழிந்து விடுமோ என்றிருக்கும்… அந்த photo-வில் உயிரோட்டம் இருக்கும் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1