நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 2

மேகலா : கிருஷ்ணா…… பொண்ணோட பெயர் ‘ஜனனி’. அவளோட மாமா மகள் தான் யோசிக்க வைக்கும் வசனம் பேசினாள். அவளுக்கு ஆரம்பம் முதலே, ஜனனி, அப்பா சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவது பிடிக்காது. ஆனால், கல்யாணம் வரைக்கும், அவளோட அப்பாவே முடிவெடுத்து விடுகிறார். அதனால், at least தனிப்பட்ட முறையில் மாப்பிள்ளையைப் பார்த்து, அவன் ஜனனிக்குப் பொருத்தமாய் இருப்பானா என்று முடிவு செய்யலாம் என்று வற்புறுத்தி, ஜனனியையும் கூட்டிக் கொண்டு, friends-உடன் மதுரை வந்து விடுகிறார்கள். வந்த இடத்தில், மாப்பிள்ளை ரொம்ப plain-ஆக, தான் +2 தான் படித்திருப்பதாகவும், தன் படிப்புக்கு ஏற்றவாறு, ‘குவாரி’ வேலையைக் கவனித்துக் கொள்வதாகவும் சொல்கிறான். ’எந்த வேலையாய் இருந்தால் என்ன, இதுவும் நம்ம வேலைதானே’ என்கிறான். அவன் அப்படி வெளிப்படையாகப் பேசியது, அவர்களுக்குப் பிடித்துப் போய் விட, கல்யாணத்திற்கு முழு சம்மதமும் தெரிவிக்கிறார்கள்.

அதன் பிறகுதான், கல்யாண ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது. கல்யாண வீட்டில் வைத்துத்தான், மாப்பிள்ளை வீட்டாரின் அலப்பறையில், ஜனனியின் மாமா பொண்ணு கேட்கிறாள், ‘என்ன ஜனனி இதெல்லாம்…., நீ இதுக்கா படிச்ச…. இப்படி எதுவுமே உன்னைக் கேட்காமல் முடிவெடுப்பதற்கா கல்யாணம் பண்ணிக்கிற….., இதுவா உன் கனவு….’ என்று ரொம்ப ஆதங்கப்படுகிறாள். அப்புறம் ரொம்ப பொறுமை இழந்து, ‘நீ இப்ப சொல்லு…., எல்லாத்தையும் விட்டுட்டு, இப்பவே சென்னைக்குப் போயிரலாம்’ என்கிறாள். விடிஞ்சால் கல்யாணம்…. இவர்கள் இரண்டு பேரும் இப்படி கல்யாணத்தையே முறித்துக் கொண்டு போயிரலாம் என்று நினைக்கிறார்கள். அப்போதான் ஜனனி கேட்கிறாள், ‘நீ என்ன சொல்ல வருகிறாய்? இந்த மாதிரி சந்தர்ப்பத்தில், நீயானால் என்ன செய்வாய்’ என்று கேட்கிறாள். அதற்கு, அந்தப் பொண்ணு, ‘நான், நானாக இருப்பேன். அதனால் தான் கல்யாணம், குடும்பம் இதையெல்லாம் என்னால் யோசிக்கவே முடியவில்லை’ என்கிறாள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : சரியாகத்தானே சொல்லியிருக்கிறாள். இதில் என்ன குற்றம் கண்டுபிடித்தாய்….?

மேகலா : நான் குற்றம் கண்டுபிடிக்கவில்லை கிருஷ்ணா. நான் situation முழுவதையும் சொல்லி, இந்த டயலாக்கை சொன்னதால், நீயும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள் என்று கேட்கிறாய் கிருஷ்ணா…. பொதுவாக, சின்னப் பிள்ளைகள், ‘நான் நானாகத்தான் இருப்பேன்’ என்று சொல்லுவதுதான் எனக்கு பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி, உன் கேள்வியையும், உன் சந்தேகத்தையும் கேளு…. பதில் தெரியுதா பார்ப்போம்….

மேகலா : ‘பதில் தெரியுதா பார்ப்போம்’ என்று சொல்லுவது யாரு… உலகத்திற்கே, கீதையை வேதமாக எடுத்துரைத்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா…. என்னை இப்படி, கேள்வி கேட்க வைக்கும் பரம்பொருளே…. உன்னிடம் இப்படி கேள்வி கேட்பதால் மட்டுமே உன்னை நெருங்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். உன்னை அறியும் வகை கொஞ்சமாவது தெரிந்து கொண்டேன். சாதாரணமாக கேள்வி கேட்கும் போதே எனக்கு, உலகின் இயக்கத்தைப் புரிய வைக்கும் நீ…. இப்படி அப்பாவியாக, ’பதில் தெரியுதா பார்ப்போம்’ என்று சொல்லி, கடவுளின் பக்குவமான எளிமையைக் காட்டி விட்டாய் கிருஷ்ணா. அனைத்தும் அறிந்தவர்கள் பக்குவமாகத்தான் பேசுவார்கள், எளிமையாகத்தான் புரிய வைப்பார்கள். ஒவ்வொரு கேள்வியின் பதிலிலும், கிருஷ்ணா நீ, ஓங்கி வளர்ந்து உலகளந்த திருவிக்கிரமனாய் காட்சியளிக்கிறாய்…..

கிருஷ்ணர் : Stop….stop…. என்ன, இப்படியே பேசிக் கொண்டிருக்கப் போகிறாயா….?

மேகலா : பேசினால் என்ன கிருஷ்ணா…. சாதாரண மனுஷன் மாதிரி, ‘பதில் தெரியுதா பார்ப்போம்’ என்று casual ஆக சொல்லும் போதே அனைத்தும் அறிந்தவன், அகிலம் அளந்தவன், கேள்விக்குள்ளும் பதிலாய் இருப்பவன் என்று தெரிகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி….. அப்ப, நான் போயிட்டு வரவா….

மேகலா : ஏன் கிருஷ்ணா….. நான் அறிந்த கிருஷ்ணரைப் பற்றிப் பேசக் கூடாதா….

கிருஷ்ணர் : வந்த வேலையைப் பார்ப்போம்….. சொல்லு…., உன் கேள்விதான் என்ன…..?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1