நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 4

கிருஷ்ணர் : என்ன திடீரென்று உரிமையைப் பற்றிப் பேசுகிறாய்? நீ அம்மா; உன் பிள்ளையை வளர்க்கும் கடமை உன்னைச் சார்ந்தது என்ற பொறுப்பு உன் நினைவில் இருந்தால், உரிமையைப் பற்றி ஏன் யோசிக்கணும்….. ஆடுற மாட்டை, ஆடிக் கறக்கணும் என்ற பழமொழியை யோசித்தாயா…. மாட்டின் மடியில் பால் கறக்க நினைப்பவன், மாட்டுக்குச் சொந்தமான கன்றினை தன் நாவால் நக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். கன்னுக்குட்டி பால் குடிக்க அனுமதிக்கணும். மாட்டினை தொழுவத்தில் கட்டி வைத்த கயிற்றை தன் கையில் வைத்துக் கொண்டு, பசு மாட்டின் தாடையைத் தடவிக் கொடுத்து, தாஜா பண்ணி, பால் கறப்பதில்லையா…. பசு மாடு, தனதென்று உரிமை பாராட்டி கன்றுக்குட்டியை அவிழ்த்து விடாமல், பால் குடிக்க விடாமல் செய்தால், பசு மாட்டிடம் பால் கறக்க முடியுமா….? மேகலா…., நம்முடைய உரிமையை நாம் செயல்படுத்துவதற்குக் கூட, பக்குவம் தேவைப்படுகிறது; பொறுமை தேவைப்படுகிறது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்…., கயிறு உன் கையில் இருக்கிறது. பால் கறப்பதும், கறக்க முடியாமல் போவதும், உன் சாமர்த்தியம். உரிமை, சுதந்திரம் என்று சொல்லி, பிள்ளைகளின் மனதில் வேறுபாட்டை விதைத்து விடாதே….

மேகலா : அப்போ, இதற்குத் தீர்வுதான் என்ன கிருஷ்ணா…. எனக்கென்னவோ…, சுதந்திரமாய் செயல்படுவேன் என்று சொல்லிக் கொண்டு, பிள்ளைகள் கட்டுப்பாட்டைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : தீர்வு என்ன என்று கேட்டு, கட்டுப்பாட்டைப் பற்றிக் கேட்கிறாய்….. பிள்ளை வளர்ப்பது என்பது, ஜாலியாகவும்…, அதே சமயத்தில் நீ மனதில் என்ன நினைக்கிறாயோ…, அதை அப்படியே செயல்படுத்தும் பிள்ளைதான் சரியாக வளர்க்கப்படுகிறான் என்று நினைக்கிறாயா…..? இதில் உன் பங்கு என்ன இருக்கிறது? வெறுமனே, சோறு ஆக்கிப் போட்டு, T. V. பார்த்துக் கொண்டிருப்பதுதானா….? முதலில் ஒன்றைப் புரிந்து கொள். பிள்ளைகள் வளரும் சமயத்தில், உன் மனதைப் புரிந்து கொண்டு, அதற்குத் தகுந்த மாதிரி, தன் நடவடிக்கைகளை மாற்றி யோசிக்கிறது என்றால், அந்தக் குழந்தையிடம் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்…. ஏன்னா…. அது அடிப்படையிலேயே புத்திசாலிக் குழந்தை…. அது மனதுக்குள் ரகசியமாக ஒரு சிந்தனையும்…., வெளிப்படையில், உன்னிடமிருந்து தப்பிக்கும் மனோபாவமும் கொண்டிருக்கும்….. அதே குழந்தை இயல்பாக இருக்கும் பொழுது, ‘நேர்மையை’, ‘பொய் சொல்லக் கூடாது’ என்பதை தந்திரமாக, ஆழமாக விதைத்தால், அது நன்றாக குழந்தையின் மனதில் ஊன்றி விட வேண்டும். அடிப்படையிலேயே, குழந்தை, ‘நேர்மை’, ‘ஒழுக்கம்’ என்பதை உணர வைக்க வேண்டியது உன் பொறுப்பு…. இந்தக் குழந்தைக்கு நீ கட்டுப்பாட்டை சுலபமாகக் கற்றுக் கொடுத்து விடலாம்.

மேகலா : எப்படி கிருஷ்ணா…

கிருஷ்ணர் : மேகலா….. எல்லா நேரமும் அம்மா போலீஸ் மாதிரி இருக்கவும் போவதில்லை…., எல்லா நேரமும், பிள்ளைகள் தப்பிக்கும் நோக்கத்திலேயும் இருக்கப் போவதில்லை அல்லவா…. அப்போ…., அம்மாவும் பிள்ளையும் ஒண்ணா சேர்ந்து படுத்துக் கொண்டு கதையடிக்கும் நேரமும் வருமல்லவா…. அப்பத்தான் பெற்றோர்கள் தங்கள் ’பிரம்மாஸ்திரத்தை’ உபயோகிக்க வேண்டும்…

மேகலா : பிரம்மாஸ்திரமா….?

கிருஷ்ணர் : ஆம்மாம்…. கதையடிப்பதைத்தான் நாம் பிரம்மாஸ்திரமாக ஏவ வேண்டும். Electronic பொருட்களை, அக்கு வேறு ஆணி வேறாக கழட்டிப் போடும் பிள்ளையிடம், தாமஸ் ஆல்வா எடிசன் கதையைச் சொல்லலாம்…. ’அவர் சின்ன வயசிலேயே, உன்ன மாதிரிதான் எதையாவது புதுசா கண்டுபிடிக்கணும்னு ஆசைப்பட்டுத்தான், வீட்டிலிருக்கும் வயர், செம்புக்கம்பி என்று நோண்டி ‘பல்பு’ கண்டுபிடித்தார்’ – என்று சொல்லிப் பாரு…… அப்போ, ’நாம என்ன செஞ்சாலும் அம்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க. இன்று நம்மை தாமஸ் ஆல்வா எடிசனோட compare பண்றாங்களே…., அப்போ நாமும் ஏதாவது ‘புதுசா’ கண்டுபிடிக்க ப் போறோமா…’ என்று தனக்குத்தானே positive ஆக யோசிக்க ஆரம்பிப்பான். அந்த positive ரேகை மட்டும் தான் அவனுக்குள் விதைக்கப்படும் விதை….. இதை நீ முளைக்க வச்சுட்டேன்னா…., நீ அம்மாவாக முழுமை அடைஞ்சிடுவாய் மேகலா….

மேகலா : Oh! மறுபடியும் சேட்டையே பண்ணவே மாட்டானோ….

கிருஷ்ணர் : என்ன இவ்வளவு silly-யா யோசிக்கிற மேகலா…. ஒரு நாள் கதையிலேயே, பிள்ளைகள் வளர்ந்து மகாத்மாவாகி விடுவார்களா… அடுத்த நாள் நீயும் போலீஸ்காரியாவாய்…. மறுபடியும், திருடன் போலீஸ் விளையாட்டுத்தான் நடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றித்தான் விதையை முளைக்க வைக்க வேண்டும். இது வாழ்க்கை மேகலா…, முழுசாக வாழணும்…. மூன்று மணி நேரம் பார்க்கும் சினிமா கிடையாது…., ஒரே கதையில் எல்லாமே மாறிப் போவதற்கு…..

மேகலா : அப்போ….. பெத்தவங்க பிள்ளைகள் கிட்ட கண்டிப்பாவே இருக்கக் கூடாதா….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1