கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 6

மேகலா : கிருஷ்ணா…., முதலில் எங்க பக்கத்துல நடக்கக்கூடிய சின்னச் சின்ன, பரம்பரையாய் வரும் ஒரு சில சடங்குகளைச் சொல்லட்டுமா…. பொண்ணை, முதன் முதலில் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரும் போது…., ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள். அதிலும், அந்த வீட்டில் பிறந்த அத்தையோட மகள்தான் ஆரத்தி எடுப்பாள்….

கிருஷ்ணர் : அப்போ ஏதாவது demand பண்ணுவார்களா…..

மேகலா : பண்ணாமலா கிருஷ்ணா….. அதிலும், மணமகன், ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு முறைப்பையன் என்பதால், கேலியும் கலாட்டாவும் தாராளமாகவே இருக்கும் கிருஷ்ணா….. ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில் கூட, இது மாதிரி ஒரு காட்சி வரும் கிருஷ்ணா. அதில், ஒரு பாட்டி, பாட்டுப் பாடி ஆரத்தி எடுத்து, சிவாஜி கணேசனிடம் கணுசமாய் கறந்து விடும்…. ஆனால், எங்க பக்கத்துலயெல்லாம், ‘fixed gift’ அல்லது எல்லோருக்கும் சமமாக பணம் என்ற அளவில் இருக்கும். அடுத்து, பொண்ணு வீட்டுக்குள் நுழைந்ததும், மாமியார், மருமகளை அழைத்துக் கொண்டு, அடுப்பங்கரையில் store cabinet-ஐத் திறந்து, உப்பு ஜாடியில் கை விடச் சொல்லுவார்கள்…. அடுத்து, மிளகாய் ஜாடியையும் தொடச் சொல்லுவார்கள்…..

கிருஷ்ணர் : இது என்ன நம்பிக்கை…..

மேகலா : பொண் பிள்ளைகளுக்கு, அடுப்பறையில், உப்பு, புளி, மிளகாயைப் பழக்கப்படுத்தி விட்டால், தடுமாறாமல் சமையல் செய்வாள் என்று நினைத்தார்களோ…, இல்லை, ’என் duty முடிஞ்சி போச்சி…. இனி, இது உன்னோட area’ என்று சொல்லாமல் சொல்கிறார்களோ, தெரியவில்லை….. கிருஷ்ணா…., இதையடுத்து, பூஜை ரூமுக்கு அழைத்துச் சென்று, விளக்கேற்றச் சொல்லுவார்கள். இவையெல்லாம்…, எங்க பக்கத்துச் சின்னச் சின்ன சம்பிரதாயங்கள். இன்னும் ஒரு சடங்கு இருக்கு கிருஷ்ணா. அது எங்க பக்கத்துல கிடையாது…. சமீபத்துல ஒரு ‘ad’ company-யின் கவனத்தைக் கவர்ந்ததனால, இந்தச் சடங்கு, star value பெற்றிருக்கிறது கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : அது என்ன சடங்கு…., நான் பார்க்காமல்….

மேகலா : பொண்ணு, புகுந்த வீட்டிற்குள் நுழையும் போது, வாசல்படியில், படி நிறைய நெல்லை நிறைத்து வைத்திருக்கிறார்கள். வலது காலை எடுத்து வைக்கும் மணப்பெண், தன் வலது காலால் நெல்படியைத் தட்டி விட வேண்டும்…. ‘நெல்’ வீடு முழுக்க சிதறும்…. இதைத்தான் ‘Chakra Gold Tea’ விளம்பரத்தில் காட்டியிருப்பார்கள், எதையும் முறைப்படி செய்யணும் என்பதற்காக…. எனக்கு இந்தச் சடங்கு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்று தெரியவில்லை. வடமாநிலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். தானியங்கள், நெல், அரிசி என்பதெல்லாம் லட்சுமிகரமானது. வீட்டிற்கு வரும் மருமகளும் மகாலட்சுமியாகப் பார்க்கப்படுகிறாள். அவள் காலால் தட்டி விடும் நெல், எப்படி சிதறி வீடு முழுக்க நிறைகிறதோ, அப்படி ‘லட்சுமி கடாட்சம்’ வீடு முழுக்க நிறைய வேண்டும் என்பது மக்களின் நம்பிக்கை…… ஆனால், இந்த சடங்கை ஒரு சினிமாவில் காட்டுவார்கள். மணப்பெண் படி நெல்லை வேகமாகத் தட்டி விடுவாள். மாமியார் ‘ஒரு மாதிரி’ பார்ப்பாள். அப்போ, ‘என்ன பயமா இருக்கா…. போகப் போகப் பாருங்க….. இன்னும் பயங்கரமா இருக்கும்….’ என்று சொல்லி…., இந்த சடங்கையே கலாட்டாவாக்கிட்டாங்க கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அடப் பாவிங்களா…. சரியான கலாட்டாப் பேர்வழிகள்….

மேகலா : இன்னும் ஒரு வழிமுறையையும் சினிமாவில் தங்கள் இஷ்டத்திற்கு கலாட்டாவாக்கி ரணகளப்படுத்தி விடுவார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இது எந்த வழிமுறை….?

மேகலா : வட இந்தியாவில் ஒரு இனத்தினர் மணமக்களின் முகத்தில் பூவினால் ஆன திரை மாதிரி போட்டிருப்பார்கள் இல்லையா…. இன்னும் சிலர், மணமகளுக்கு, முகத்தை மூடியபடி முந்தானையால் முக்காடு போட்டிருப்பார்கள். அந்த costume-ஐ உபயோகித்து, மணமகளை மாற்றி, அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் கல்யாணம் நடப்பதாகக் காட்டுவார்கள். அதிலும், இரண்டு ஜோடிகளுக்கு இதே get-up-ல் கல்யாணம் நடப்பதாகக் காட்டி, இவரை அங்கே மாற்றி, அவரை இங்கே மாற்றி என்று ஏக கலாட்டா பண்ணுவார்கள். ஒரு கல்யாணத்தில், இப்படி மாற்றி, மாற்றி கோளாறு பண்ண முடியுமா என்று நமக்கே எரிச்சல் வரும் வரைக்கும் கலாட்டாவை continue பண்ணுவார்கள் கிருஷ்ணா. தமிழ்நாட்டில், முக்காடு போட்டு மணமகள் வருவதே கிடையாது. தலயலங்காரமும், ஜடையழகும் அத்தனை பேரும் ரசிக்கும்படிதான் மணப்பெண் வருவாள். ஆனால், சினிமா கலாச்சாரத்தில், அவங்களுக்கு சௌகரியமாக எந்த மாநிலத்து costume-ஐயும் போட்டுக் கொள்வார்கள். முந்தானையால் முகத்தை மூடி, மணப்பெண்ணை மாற்றுவார்கள். இந்தத் திருமணச் சடங்கை வைத்து சினிமாக்காரங்க பண்ணுகிற கலாட்டாக்கள் too much’ கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி, அது போகட்டும் விடு….. உங்க வீட்டுக் கல்யாணங்களில், ‘அம்மி மிதிப்பது’…, ‘அருந்ததி பார்ப்பது’…., ‘கால் விரலில் மெட்டி மாட்டுவது’…, இதெல்லாம் கிடையாதா மேகலா…..

மேகலா : உண்டு கிருஷ்ணா…… உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா…. எங்க பக்கத்துல, சுயமரியாதைக் கல்யாணம்…., ஐயர் கல்யாணம் என்ற இரண்டு உண்டு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன…., சுயமரியாதைக் கல்யாணமா…. அதென்ன சுயமரியாதை….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1