வழிப்போக்கர்கள் - பகுதி 1

கிருஷ்ணர் :

”காட்டு வழி தனிலே - அண்ணே!

கள்ளர் பயமிருந்தால் - எங்கள்

வீட்டுக் குலதெய்வம் - தம்பி

வீரம்மை காக்குமடா!

“நிறுத்து வண்டியென்றே - கள்ளர்

நெருங்கிக் கேட்கையிலே” - எங்கள்

கறுத்த மாரியின் பேர் சொன்னால்

காலனும் அஞ்சுமடா!”

மேகலா : என்ன கிருஷ்ணா.... பொடி நடையாய் நடந்து வந்தாயா.... என்ன பாட்டுப் பாடி வந்தாய்?

கிருஷ்ணர் : உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சி; அதான் பொடி நடையாய் கிளம்பி வந்தேன். ‘கதிரவனில்’ சூடாய் ஒரு coffee சாப்பிடலாம் என்றால், ‘நான் மட்டும் தனியா எப்படி’ என்று யோசிச்சி, அப்படியே நடந்து வந்தேன். வழிப்போக்கிலே பாலத்தைக் கடக்கும் போது, வழித்துணைக்கு இருக்கட்டுமே என்று, பாரதியாரின் வண்டிக்காரன் பாட்டைப் பாடி வந்தேன். நீ கேட்டுட்டயா....

மேகலா : வழிப்போக்கர்கள் தான், இரவு நேரத்தில், தனியாகப் பயணம் செய்யும் போது, தன் பயத்தை மறைக்க பாட்டுப் பாடிக் கொண்டே செல்வார்கள். நீ பயப்படுறியா என்ன?

கிருஷ்ணர் : ’பயம்மா’.... நானா.... சேச்சே..... ச்சும்மா, வீரம்மையையும், மாரியம்மனையும் கூப்பிட்டேன்.... சரி..., அது கிடக்கட்டும்..., பாட்டு எப்படி மேகலா....?

மேகலா : பாரதியார் பாட்டு..... அதுவும் யார் பாடுறது..... பாட்டுக்கெல்லாம் தலைவன், எங்கள் ஸ்ரீகிருஷ்ணன் பாடும் போது நல்லாயில்லாமல் இருக்குமா.....

கிருஷ்ணர் : எனக்கு ஐஸ் வச்சது போதும்..... அடுத்து என்ன தலைப்பில் பேசப் போகிறோம்...., அதைச் சொல்லு....

மேகலா : கிருஷ்ணா..., நீ நடந்து வந்ததில் எனக்கு ஒரு clue கிடைச்சிருக்கு கிருஷ்ணா....

கிருஷ்ணர் : என்ன..., ‘வண்டிக்காரன் பாட்டு’ மாதிரி, ‘வழிப்போக்கன் பாட்டு’ - என்ற தலைப்பில் பேசப் போகிறோமா....

மேகலா : வாவ்! You are great கிருஷ்ணா.... ஆனால், ‘வழிப்போக்கன் பாட்டு’ இல்லை... ‘வழிப்போக்கர்கள்’.

கிருஷ்ணர் : Oh! வழிப்போக்கர்களைப் பற்றிப் பேசலாமோ... நல்ல தலைப்பா இருக்கே... வழிப்போக்கர்களின் அனுபவங்கள்; அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள்; பழைய வரலாறுகள்; சுவாரஸ்யங்கள்.... எல்லாமும் பேசலாம்.... சரி...., வழிப்போக்கர்களை நீ ஏன் தேடிப் புடிச்ச....?

மேகலா : நீ சொன்ன அதே காரணங்கள் தான் கிருஷ்ணா.... நம்ம நாட்டில், பல கோயில்களில் சாமி மூர்த்தங்கள், வழிப்போக்கர்களால் கண்டறியப்பட்டது என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை கிருஷ்ணா... அப்படியே, வழிப்போக்கர்களைப் பற்றி யோசிச்சிக்கிட்டே இருந்தேன். கோயில், சாமி, சத்திரம், சாவடி, வண்டிக்காரன் பாட்டு, நாட்டுப்புறப் பாட்டு, திரைப்படங்கள், கால்நடைப் பயணம், சைக்கிள், car, technology, travel என்று வரிசையாய் ஞாபகத்திற்கு வந்தது.... சொல்லி வச்ச மாதிரி, நீயும் பாட்டுப் பாடிக் கொண்டே உள்ளே வந்தாயா...., வழிப்போக்கர்களை நீயும் bless பண்ணி விட்டாய் என்று புரிஞ்சி போச்சு கிருஷ்ணா....

கிருஷ்ணர் : ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் வழிப்போக்கர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்....

மேகலா : கிருஷ்ணா..., அந்தக் காலங்களில் வழிப்போக்கர்கள் தான் பெரும்பாலும் வியாபாரிகளாகவோ, அரசாங்க அதிகாரிகளாகவோ இருப்பார்கள். மாட்டு வண்டியில், அல்லது குதிரையில் செல்லும் இவர்கள், இலக்கை அடைவதற்கே இரண்டு நாள் கூட ஆகலாம். இப்ப மாதிரி சாலைகள் விரிவாகவும், பக்காவாகவும் இல்லாட்டா கூட, ஒற்றையடிப் பாதையும்..., சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களும், தங்கிச் செல்வதற்கும், இளைப்பாறுவதற்கும், சத்திரங்கள், மடங்கள் இருந்ததாக, கதைகளும், புராணங்களும் சொல்லுது கிருஷ்ணா....

கிருஷ்ணர் : நடந்து செல்பவர்கள், வண்டியில் செல்பவர்கள், car, சைக்கிள் என்று எதில் சென்றாலும், வழிப்போக்கர்களின் சௌகர்யம் ரொம்ப முக்கியம் அல்லவா.... சீரான பாதை, பயணத்தை விரைவுபடுத்தும். ஆமாம், ஏதோ வழிப்போக்கர்களால் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றாயே...., அது என்ன....?

மேகலா : என்ன கிருஷ்ணா....., ஏதும் அறியாத பச்சப்புள்ள மாதிரி பேசுற..... நம்முடைய ‘வடபத்ர சயனப் பெருமாளை’ இந்தப் பகுதி அரசரா கண்டெடுத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற இந்த ஊர் உருவாவதற்கு முன்பு, இந்தப் பகுதி அடர்ந்த காடாக இருந்தது. இங்கு வேட்டையாட வந்தவர்கள் தான், ‘வில்லி’, ‘கண்டன்’ என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் புலியைத் துரத்திச் சென்ற போது, புலி, கண்டனைக் கொன்று விட்டது. இதை அறியாத வில்லி, தன் தம்பியைத் தேடிச் செல்லும் போது, களைப்படைந்து, மரத்தடியில் தூங்கி விடுகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி, கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். இங்கு, ஆலமரத்தடியில் உள்ள புதருக்குள் ‘வடபத்ரசாயி’ என்கிற திருநாமத்துடன் தான் இருப்பதாகக் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி, தமக்கு கோயில் எழுப்பும்படி கூறி மறைகிறார். வில்லியும், அந்தக் காட்டை அழித்து நாடாக்கினான். அதனால் தான் நம்ம ஊருக்கு, ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்ற பெயர் வந்தது. இது, வில்லி, கண்டன் என்ற வழிப்போக்கர்களின் கைங்கர்யம் தானே...

கிருஷ்ணர் : Oh! உனக்குத் தெரியுமா....? நீ, நம்ம ஊரை விட்டு, வேற ஊர்க் கோயில்களைப் பற்றித்தான் முதலில் சொல்லப் போகிறாய்...., அப்போ, உன்னை நல்லா கலாய்க்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன்...., தப்பிச்சுட்டயே.... ஆனாலும், இப்படி வழிப்போக்கர்களால் கண்டறியப்பட்ட கோயில்களின் வரலாறு சுவாரஸ்யமாகத்தான் இருக்கு.....

மேகலா : நம்ம மீனாட்சியம்மன் கோவிலில் கொலு வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளும், ஒரு வழிப்போக்கரால் கண்டறியப்பட்டவர் தான் கிருஷ்ணா....

கிருஷ்ணர் : அந்த வரலாறையும் நீயே சொல்லு மேகலா...

மேகலா : கிருஷ்ணா...., பாண்டிய நாட்டின் தலைநகரமாக மதுரை விளங்குவதற்கு முன்பாக, ‘மணவூர்’ என்ற நகரம் தான் தலைநகரமாக இருந்தது. இந்த நகரம், கடம்பவனம் என்ற வனத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. ‘குலசேகரன்’ என்ற பாண்டிய மன்னன் காலத்தில், தனஞ்செயன் என்ற வியாபாரி, மணவூரிலிருந்து வியாபாரம் காரணமாக வெளியூர் சென்றிருந்தான். வேலை முடிந்து ஊருக்குத் திரும்பும் வழியில், தெய்வீகத் தன்மை கொண்ட கடம்பவனத்தை நெருங்கும் போது, இரவு நேரம் நெருங்கி விட்டது. இந்த இரவு வேளையில், கடம்பவனத்தில் சற்று இளைப்பாறி விட்டு, பொழுது புலரும் நேரத்தில் ஊருக்குத் திரும்பலாம் என்று முடிவு செய்து, தங்குவதற்குரிய இடத்தைத் தேடினான். அப்போது, அவ்விடத்தில் ஒளி பொருந்திய ஒரு விமானம் இருப்பதைக் கண்டான். அந்த விமானத்தை எட்டு யானைகள் தாங்கிக் கொண்டு இருப்பதையும் பார்த்து...., ஆச்சர்யப்பட்டுப் போனான். அந்த விமானத்தின் நடுவில் சொக்கலிங்கமூர்த்தி எழுந்தருளியிருப்பதைக் கண்டான். அந்த திவ்யலிங்கமூர்த்தியை வணங்கி, அன்றிரவு அங்கேயே கழிக்க முடிவெடுத்தான். அப்போது ஓர் பேரதிசயம் நிகழ்ந்தது. அன்று திங்கட்கிழமை..., தேவர்களுக்கு உகந்த சோமவார இரவு. தேவர்கள், விண்ணிலிருந்து இறங்கி கடம்பவனத்திற்கு வந்தார்கள். நான்கு ஜாமங்களிலும், சொக்கலிங்கப் பெருமானுக்கு விசேஷ பூஜை செய்தனர். இறைவன் திருவருளால், தேவர்கள் பூஜை செய்யும் தேவ காட்சியைக் காணும் பேற்றினை, தனஞ்செயன் பெற்றான். தான் கண்ட இந்த அற்புதமான காட்சியை மன்னனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து, அரண்மனைக்குச் சென்றான். தான் கண்ட காட்சியை மெய்சிலிர்ப்புடன் கூறவும், மன்னன் உடனே, படை பரிவாரத்துடன், கடம்பவனம் சென்று, சோமசுந்தரக் கடவுளைக் கண்டு, மெய்யுருகிப் போனான். பின்பு, அந்த கடம்பவனத்தில், சோமசுந்தரருக்கு கோயில் அமைத்து, பொற்றாமரைக் குளத்தை நிறுவி, இறையனார் கட்டளைப்படி, அதைச் சுற்றி, மதுரை மாநகரத்தையே உருவாக்கி, மதுரையையே தலைநகரமாகவும் ஆக்கினான். சொல்லப் போனால், மதுரை மாநகரமும், சோமசுந்தரர், மீனாட்சியம்மை கொலுவிருக்கும் கோயிலும், ஒரு வழிப்போக்கனால் கண்டறியப்பட்டது தானே....

கிருஷ்ணர் : உண்மை...., உண்மை..... நம்ம சமயபுரம் மாரியம்மன் வரலாறும் இப்படித்தானே மேகலா....

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2