கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 14

மேகலா : ……. அந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பங்களும், மனிதனின் கற்பனைத் திறத்தின் உச்சம். சிற்பங்களின் முக பாவனைகளும், ஆடை அணிகலன்களும் நுணுக்கமாக செதுக்கப்பட்டு, அந்தச் சிலைகளுக்கே உயிரூட்டுவதாக இருக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஹாய்சாலா மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், அவர்கள் பெயராலேயே இறையனாரும் ‘ஹாய்சாளேஸ்வரர்’ என்ற திருநாமத்தைத் தாங்கியிருக்கும் அற்புதமான கோயில்… இறைவனின் திருவுருவம் மெய் சிலிர்க்க வைத்தாலும், அதைக் காட்டிலும் சிற்பங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள் சிலிர்க்கச் செய்வதுதான் யதார்த்தமான உண்மை…. தமிழ்நாட்டில், சிற்பங்களின் கலைக்கூடம் என்று எதைச் சொல்லலாம்…

மேகலா : கோயில்கள் நிறைய இருக்கும் ஊர், சிற்பங்களின் கலைக்கூடம் என்று சொல்லலாம் கிருஷ்ணா. அப்படிப் பார்த்தால், பல்லவர்கள், சிற்பக்கலையை தன் உயிர்மூச்சாகக் கருதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சிற்பக்கலையின் கோயிலாகவே இருந்திருக்கிறது கிருஷ்ணா…. ஏன், ராஜசிம்ம பல்லவரே, சிற்பம் வடிப்பதிலே ஆர்வம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். சாதாரண மனிதர்களுக்கே, ஒரு கலையின் மீது ஈடுபாடு இருந்தால்…, அதை தெய்வப் பணி போலவே நினைத்து செய்வார்கள். நாடாளும் மன்னருக்கு இந்தக் கலையின் மீது ஈடுபாடு இருக்கும் போது, தன் நாட்டையே கலைக் கோயிலாக மாற்றி விடுவார் என்பதற்கு கைலாச நாதர் கோயிலே சாட்சி கிருஷ்ணா… ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாச நாதர் கோயிலுக்கு நானும் சென்று பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா… அந்தக் கோயிலே, அரண்மனைவாசிகள் மட்டுமே பிரத்யேகமாக வழிபடும் கோயிலோ என்று எனக்கு சந்தேகம் வரும்படிக்கு, வெளிமுற்றமும், சுற்றுப் பிரகாரமும் அமைத்திருக்கிறார்கள் கிருஷ்ணா…. கோயிலின் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிற்பம், கலை நுணுக்கமாய் அத்தனை அழகுடன் இருந்தது. சிவந்த கற்களால் வடிக்கப்பட்ட சிற்பங்களைப் பார்க்கும் போது, மனிதனின் கைகளிலும், விரல்களிலும் கடவுள் பரிபூரணமாகக் குடியிருக்கிறார் என்று மட்டும் புரிகிறது…. மூலவர் கைலாச நாதர் 16 பட்டைகள் கூடிய லிங்க திருமேனியுடன் விளங்குகிறார் கிருஷ்ணா…. இந்தக் கட்டடக் கலைக்கு வித்தாக ஒரு கதை இருக்கிறது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : என்ன கதை…?

மேகலா : பல்லவ மன்னன் மகேந்திரவர்மனுக்கு, கோயில் சிற்பம் கட்டுவதிலும், சிற்பங்கள் உருவாக்குவதிலும் மிகுந்த ஈடுபாடாம். ஒரு புது மாதிரி ஆசை அவனுக்கு வந்தது. அதாவது, சுண்ணாம்பு, மணல், மரம் இவற்றை விடுத்து வெறும் கற்களாலேயே கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்…. அதை நிறைவேற்றும் பொருட்டு, அவனுடைய மகனாகிய ராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்ம வர்மன், இந்தக் கைலாச நாதர் கோயிலை எழுப்பியதாக வரலாறு கூறுகிறது…. இன்னொரு ஆச்சரியமான செய்தி. இந்தக் கோயில் கட்டும் பணியில், தன் மனைவியையும், மகனையும் ஈடுபடுத்தியதாக ஒரு குறிப்பு கூறுகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! வாவ்…. ராஜசிம்மனுக்கு கைலாச நாதர் மீது கொண்ட பேரன்பு, தன் மனைவியையும், பிள்ளையையும் கோயில் திருப்பணியில் ஈடுபடச் செய்திருக்கிறது போலும்…

மேகலா : கிருஷ்ணா…., இந்தச் சிற்பக் கலை, சமையல் கலை போல, தையற்கலை போல, பெரும்பாலானோர்களால் follow பண்ண முடியாவிட்டாலும், இந்தக் கலை மீது ஆர்வம் கொண்டவர்கள் இன்னும் மகாபலிபுரத்திற்கருகே சிற்பக் கூடங்கள் அமைத்து, சிற்பங்களை வடிக்கிறார்கள் கிருஷ்ணா… அந்தக் காலத்து மன்னர்கள் கோயில் கட்டியது போல, இன்று விஸ்தீரணமான கோயில்கள் கட்டப்படுவதில்லை என்றாலும், சின்னச் சின்ன கோயில்களிலும் நுணுக்கமான கலை அம்சத்துடன் கூடிய சிற்பங்களும், அழகான மூலவரும் என்று அங்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா. குறிப்பாக இன்று அயல்நாடுகளில் கூட, இங்கிருந்து கடவுள் சிலைகள் வடிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன கிருஷ்ணா… இன்றைய காலத்தில் அயோத்தியில் இருக்கும் ராமர் கோயிலுக்குச் சென்றால், அங்கு நடக்கும் திருப்பணியில் நாமும் செங்கல்லை எடுத்துக் கொடுத்து பங்கு பெறலாம் கிருஷ்ணா…. ராஜசிம்மனின் மனைவி மாதிரி…, கூட்டிச் செல்லத்தான் ஆளில்லை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏன் மேகலா வருத்தப்படுகிறாய்… உன் ஏக்கம் ராமருக்குக் கேட்கும். அயோத்திக்குச் செல்லும் நாளை ராமர் உனக்கு அறிவிப்பார்….

மேகலா : இல்ல கிருஷ்ணா…. கோயில் கட்டுமானம்…., சிற்பங்கள்…, சிற்பிகளின் உளியோசை…, என்று இதையெல்லாம் அனுபவிக்கணும்னு ஆசையாயிருக்கிறது கிருஷ்ணா…

கிருஷ்ணர் : போலாம்…, போலாம்…. அயோத்தி என்ன…, விருதுநகர் பக்கத்துலயா இருக்கு…. U. P – ல இருக்கு… கோயில் திறந்த பின்பு, தூசியெல்லாம் நீங்கிய கோயில்…, கும்பாபிஷேகம் முடிந்து, பக்தர்களை அருள்பாலிக்கும் கம்பீரமான சக்கரவர்த்தித் திருமகனை தரிசிக்கலாம்… பொறுமையாக இரு….

மேகலா : கிருஷ்ணா…, இன்று மக்களிடையே இன்னும் ஒரு கலை, தங்கள் கைகளாலேயே செய்து மகிழ்ந்து வழிபடுகிறார்கள் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : பிள்ளையார் சதுர்த்தியன்று பிள்ளையார் செய்வதா… ஆமாம்…, ஆமாம்…, மக்கள் தங்கள் கைகளால் மஞ்சளாலும், களிமண்ணாலும், Plaster of Paris-னாலும் செய்து, பிள்ளையாரை வழிபட்டு…, தங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே கரைத்து மகிழ்கிறார்கள்…. அதுதானே…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. சிலர் நன்கு தேர்ந்தெடுத்து பதப்படுத்திய களிமண்ணைக் குழைத்து, சிறிய கத்தி, ஒரு குச்சி இதை மட்டும் tools ஆக வைத்து கைகளாலேயே பிள்ளையாரை வடிக்கிறார்கள். முதலில், மூன்று உருண்டை பிடிக்கிறார்கள். முதல் உருண்டை மேடை செய்ய, இரண்டாவது உருண்டையால் தொந்திப் பகுதி, மூன்றாம் உருண்டையில் தலைப்பகுதியை அமைத்து கைகளால் பிடித்து விட, தும்பிக்கை நீள்கிறது கிருஷ்ணா. பின்பு சின்னக் கத்தியால் தடவித் தடவி, கழுத்துப் பகுதியில் இடைவெளி ஏற்படுத்துகிறார்கள்… களிமண்ணை நூலாகத் திரட்டி, கழுத்தில் சுற்றி, குச்சியால் செதுக்கி நகையை உருவாக்குகிறார்கள்… இரண்டு pinch மண்ணை எடுத்து விரல்களால் நசுக்க காதுகள் உருவாகின்றன. காலுக்கும், கைகளுக்கும் மண்ணைத் திரட்டி திருமேனியில் ஒட்ட வைத்து, கை கால்களை கச்சிதமாக நீவிக் கொடுக்கிறார்கள் கிருஷ்ணா…. ஒரு 1/2 மணியில் கோயில் சிற்பம் போல, களிமண் பிள்ளையார் உருவாகி விடுகிறார் கிருஷ்ணா… நம் கையாலேயே பிள்ளையார் பிடிப்பது எவ்வளவு சந்தோஷம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பிள்ளையார் சதுர்த்தியோடு YouTube-ல் நீ ரசித்துப் பார்ப்பதை நானும் பார்த்தேன்… நீ கூட மஞ்சளில் பிள்ளையார் செய்வதைப் பார்த்திருக்கிறேனே….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…, முன்னயெல்லாம் மஞ்சளில் ‘குத்துப் பிள்ளையார்’ பிடித்து வைப்பேன். இப்போ, மைதா மாவும் மஞ்சளும் சேர்த்து, களிமண் பிள்ளையார் போல, மூன்று பகுதியாகப் பிரித்து செய்வேன் கிருஷ்ணா. கண்ணுக்கு மிளகு வைப்பேன்… தந்தத்திற்கு தீக்குச்சி வைப்பேன்…. ஆனால், எனக்கு பிள்ளையார் perfect ஆக செய்ய வராது… இருந்தாலும், பிள்ளையார் அழகாக நின்று எனக்கு வரம் தருவார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பிள்ளையார், பிள்ளை மனம் கொண்டவர் மேகலா…. திறமையான கைகளில் அழகாக மிளிர்வார்… செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் கைகளுக்கும் நன்றாக வளைந்து கொடுப்பார்…

மேகலா : கிருஷ்ணா…. நாம கைத்தொழிலைப் பற்றிப் பேசப் போய்…., கதை சிற்பக் கலைக்கு வந்து விட்டது. இருந்தாலும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மாதிரி பொம்மைகள் செய்வது எல்லாம் கைத்தொழில் மாதிரி தான் என்று நினைக்கிறேன் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : கையால் செய்வது, கைவேலைதானே… டெரகோட்டா பொம்மை போலத்தானே….

மேகலா : உண்மைதான்…. இருந்தாலும், எல்லோரும்…, பொம்மை செய்யத் தெரியாதவர்கள் கூட செய்யும்படியாக, பொம்மைக்கு வர்ணம் கொடுப்பதை, ஒரு திரைப்படத்தில் கைத்தொழிலாக செய்வார்கள் கிருஷ்ணா…..

‘எங்களுக்கும் காலம் வரும் – காலம்

வந்தால் வாழ்வு வரும் – வாழ்வு

வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே’ —

என்ற பாசமலர் படப் பாடலில், கதாநாயகி பொம்மைகளுக்கு வர்ணம் பூசி, சிறுசேமிப்பு சேமித்து, அண்ணனுக்கு பணம் கொடுப்பதாகக் கதை வரும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் :

‘உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்

உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்

பணம் படைத்த மனிதரைப் போல்

பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்

மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

நெஞ்சில் ஒரு களங்கமில்லை, சொல்லில் ஒரு பொய்யுமில்லை

வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை’ —

இந்தப் பாட்டு, அண்ணனும் தங்கையும் பாடும் பாட்டுதானே…. நாம் அறிந்த கைத்தொழிலை மனப்பூர்வமாகச் செய்தால், அது நம்மை பஞ்சு மெத்தையில் படுக்க வைக்கும்…. வீடு மனை வாங்க வைக்கும்… வஞ்சமில்லாத வாழ்க்கையில் தோல்வியே வராதே…. ஆஹா…, என்ன அருமையான பாட்டு மேகலா…. கைத்தொழில் கற்றுக் கொண்டால் மட்டும் போதாது…. அதனை செயல்படுத்தி, ‘ராஜம் மாமி’, ‘சௌந்தரா ஆச்சி’, ‘ஜப்பார் பாய்’, ‘உன் மாமியார்’, ‘’fashion designers’, ‘tailors’ எல்லோரும் இந்தப் பாடலை நெஞ்சை நிமிர்த்திப் பாடலாம்…

மேகலா : கிருஷ்ணா… இன்னொரு பாட்டும் இருக்கு கிருஷ்ணா….

(தொடரும்)

(அடுத்த பதிவுடன் நிறைவு பெறும்)


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2