Motivation - பகுதி 6
கிருஷ்ணர் : தவறு செய்யும் போது மட்டும் தான் தட்டிக் கேட்பானா…. செய்ய முடிந்த வேலையை பயத்தினால், செய்வதற்கு பின்வாங்குவான் பாரு…, அவன் மீது பயங்கரமாய் கோபம் வரும்… ஆனால், அந்த நேரத்தில், கோபத்தைக் காட்டிலும், வேலையின் தன்மையை எடுத்துச் சொல்லணும். அதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் மீது அக்கறை மட்டுமல்ல…, அதனால் வரப் போகும் நன்மைகள் முழுவதும் அறிந்த அனுபவசாலிகளாகவும் இருக்க வேண்டும்… அப்பேற்பட்டவர்கள், பயத்தைப் போக்க முற்படும் போது, strong-ஆகப் பேசினால் தான் வேலையைச் செய்ய வைக்கவே முடியும் மேகலா….
மேகலா : கிருஷ்ணா…., நீ சொல்லும் போது தான் தெரியுது…. motivation பண்ணுபவர்கள், சாதாரணமாக, ‘எடுத்தோம், கவுத்தோம்னும்’ பேசக் கூடாது; கோபத்தால் எகிறவும் கூடாது… உக்கார்ந்து class – உம் எடுக்கக் கூடாது… என்ன மாதிரி வார்த்தைகளைப் போட்டால், கேட்பவன் மனம் உடன்படும் நிலைக்கு வரும் என்பதை உணர்ந்து technique-ஆகப் பேச வேண்டும்…. ஸ்ரீகிருஷ்ணர், வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவதில் படு சமர்த்தர் என்பதற்கு, மகாபாரதத்தில் வரும் இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம்…
கிருஷ்ணர் : ’ராஜசூய யாகம்’ செய்வதற்காக தருமரிடம் பேசும் காட்சியா…. எங்கே அதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லு….
மேகலா : கிருஷ்ணா…, பாண்டவர்களுக்கு, இந்திரப்பிரஸ்தத்தைப் பிரித்துக் கொடுத்த பின்பு, நாரதர் அங்கு வருகிறார். அவர், தருமரிடம், ‘நான் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். அங்கு உன் தந்தையைப் பார்த்தேன். அவன், ’பாண்டவர்கள் ‘ராஜசூய யாகம்’ நடத்தினால், அவர்கள் பலம் பெறுவார்கள்…, நாடு செழிப்பாகும்…, அரசும் நல்ல முறையில் நடக்கும்’ என்று கூறியதாகக் கூறினார். உடனே, தருமருக்கு, தன் தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆவல் பிறக்கிறது. அவர்கள், ராஜசூய யாகத்தைப் பற்றி, ஸ்ரீகிருஷ்ணரிடம் விவரம் கேட்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரும், ‘கட்டாயம் செய்யலாம். ‘ராஜசூய யாகம்’ ஒரு மகத்தான வேள்வி. நம் நாட்டைச் சுற்றியுள்ள அண்டை நாட்டு அரசர்களை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும். அதற்கு, ஒவ்வொரு திசைக்கும், உங்கள் சகோதரர்களை அனுப்பி, அந்த நாட்டு மன்னர்களை நண்பர்களாக்கலாம்… நட்பை விரும்பாதவர்களை, வீரத்தால் ஜெயித்து நம் வசப்படுத்தலாம்….. இப்படி, சுற்றியிருப்போரை நம் வசப்படுத்தினால், ‘ராஜசூய யாகம்’ நடத்தலாம்… இதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது…. ‘ஜராசந்தன்’ என்ற மகத தேசத்து மன்னனை வெல்வது சுலபமான காரியம் அல்ல…. ஜராசந்தன் க்ஷத்திரிய அரசர்கள் பலரை வென்று, அவர்களுக்கிடையே பகையை மூட்டிக் கொண்டிருக்கிறான். யாதவர்களாகிய நாங்கள், அவனால் பெரிதும் பாதிக்கப்பட்டோம். அவனால் 86 அரசர்கள் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் 14 அரசர்களை அவன் வென்று விட்டால், அதன் பிறகு, அவனை வெல்லுவது மிகவும் கடினமாகி விடும். ராஜசூய யாகத்தை நீர் நடத்த விரும்பினால், ஜராசந்தனைக் கொன்று, அந்த 86 அரசர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இந்தக் காரியத்தை யார் செய்கிறார்களோ, அவன் பெரும் சக்ரவர்த்தியாவான்’ – என்று கூறி, தருமரை, என்ன முடிவெடுக்கப் போகிறார் என்னும் விதமாகப் பார்த்தார்….. தர்மபுத்திரன் தயங்கினான்….. ’எமனாலும் வெல்ல முடியாத ஜராசந்தனை எதிர்த்துப் போரிட, பீமனையும், அர்ஜுனனையும் என்னால் அனுப்ப இயலாது. ஜராசந்தனை வெல்லாமல், இந்த ராஜசூய யாகத்தை நடத்த முடியாது எனும் போது, யாகத்தை நடத்தாமல் இருப்பதே மேல்’ என்று சொல்லி, ஸ்ரீகிருஷ்ணரைப் பரிதாபமாகப் பார்த்தான். அப்பொழுது ஸ்ரீகிருஷ்ணர் என்ன செய்தார் தெரியுமா கிருஷ்ணா…. தர்மபுத்திரனின் பயம் கலந்த வாக்குமூலத்தை கிருஷ்ணர் ஏற்கவில்லை. அவர் கூறியது இதுதான் கிருஷ்ணா…. ‘ஒரு செயலைத் தவிர்க்க வேண்டுமானால், அந்த செயலை முடிக்கும் தகுதி நமக்கு இல்லை என்பது நமக்கு நிச்சயமாகத் தெரிய வேண்டும்… ஜராசந்தனை வெல்லும் தகுதி நம்மிடம் இருக்கும் போது, அந்தச் செயலைத் தவிர்ப்பது அரச தர்மம் ஆகாது. வெற்றிக்கு முதல் காரணம், உற்சாகம் தான்… வெற்றியடைய எல்லாச் சூழ்நிலைகள் இருந்தும் கூட, ஊக்கமின்மை காரணமாக…, அந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தாமல் விடுபவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தான் தோல்வி அடைவார்கள். தன்னுடைய பலத்தைத் தானே அறியாமல் இருப்பது, ஊக்கமின்மை இரண்டும் முயற்சியைக் கெடுப்பவை. பலசாலியான பீமனும், அர்ஜுனனும் ஜராசந்தனை அழிக்கும் திறமையுடைவர்கள். ஜராசந்தன் அழிந்தால், சிறைப்பட்டிருக்கும் அரசர்களும் விடுபடுவார்கள்’ என்று கூறி, தர்மபுத்திரனை சம்மதிக்க வைக்கிறார் கிருஷ்ணா…. ஸ்ரீகிருஷ்ணரின் motivational வார்த்தைகள் எப்பேர்ப்பட்டவை தெரியுமா கிருஷ்ணா…. பீமனின் பலமும் தெரியும்…, போரில் அவனுக்கிருக்கும் உற்சாகமும் தெரியும். இந்தச் செயல் நடந்தால், சிறை பிடிக்கப்பட்ட அரசர்களின் விடுதலை என்ற நன்மையும் கிடைக்கும் என்று தர்ம நியாயத்தை உணர்ந்து பேசிய வார்த்தைகள், பீமனை மட்டுமல்ல…, அர்ஜுனனையும் உசுப்பேற்றியது கிருஷ்ணா…. இந்தக் கட்டத்தை வாசிக்கும் நமக்கும் ஒரு உண்மை புலப்படுகிறது….. நியாயமான செயல், நம்மால் செய்ய முடிந்த செயலை, முயற்சி செய்து பார்த்து விடுவதுதான் மனித தர்மம் என்று புரிகிறது….
கிருஷ்ணர் : ஏன் மேகலா…, ஜராசந்தனின் கதையைச் சொல்லேன்…. அவர்களின் முயற்சி பலித்ததா….. பார்க்கலாம்….
(தொடரும்)
Comments
Post a Comment