Motivation - பகுதி 7

மேகலா : கிருஷ்ணா…, நீயே ஜராசந்தனின் கதையைச் சொல்லச் சொல்லி விட்டாய்… எனக்கு ‘நுங்கு பதநீர்’ குடிச்ச மாதிரி சில்லுனு ஆயிருச்சி கிருஷ்ணா…. ஜராசந்தனுடைய பெற்றோருக்கு, ஆரம்பத்தில் குழந்தைப்பேறு இல்லாமல், பிள்ளை வரம் வேண்டி, ஒரு மாமுனிவரிடம் வரம் கேட்டனர். அவரும், மன்னனை ஆசிர்வதித்து, ஒரு கனியைக் கொடுத்து, அவனுடைய மனைவிக்கு கொடுக்கச் சொன்னார். மன்னனுக்கு இரண்டு மனைவிகள். அதனால், அந்தக் கனியை இரண்டாக அறுத்து, இருவருக்கும் சமமாகக் கொடுத்தான். அவர்கள் கர்ப்பமுற்றார்கள். குழந்தை பிறக்கும் காலம் வந்தது. இருவருக்கும் ஒரே நாளில் குழந்தை பிறந்தது. என்ன ஆச்சர்யம்…., ஒரே குழந்தை இருவருக்கும், இரு கூறாகப் பிறந்தது…. உயிரற்ற பிண்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, அந்தப் பிண்டங்களை குப்பைத் தொட்டியில் வீசினர். அப்பொழுது அங்கு சுற்றித் திரிந்த ‘ஜரை’ என்னும் அரக்கி, அந்த இரு பிண்டங்களையும் கையிலெடுத்து ஒட்ட வைக்க முயற்சிக்க…, என்ன அதிசயம்…, அந்தப் பிண்டங்கள் ஒன்று சேர்ந்து குழந்தையாக உயிர் கொண்டது. அதிசயத்துடனும், ஆச்சர்யத்துடனும், ஜரை, அந்தக் குழந்தையை மன்னனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அரண்மனையே குதூகலமாகியது. குழந்தைக்கு உயிர் கொடுத்த ‘ஜரை’யின் ஞாபகமாக, ‘ஜராசந்தன்’ என்று பெயர் வைத்தார்கள்.

ஜராசந்தனுக்கு விசேஷமான சக்தி ஒன்று உண்டு. ‘மல்யுத்தம்’ செய்வதில் வல்லவனான ஜராசந்தன், போரில் எதிராளியின் கையால் கிழிக்கப்பட்டால், அவன் உடல் ஒட்டிக் கொள்ளும். முன்னிலும் அதிகமான வலிமையுடன் போர் செய்வான். அதனால், அவன் யாராலும் வெல்ல முடியாதவனாக திகழ்ந்தான்.

கிருஷ்ணர், பீமனை நினைத்துப் பேசிய உற்சாக வார்த்தைகள், பீமனையும், அர்ஜுனனையும், ஜராசந்தனை சந்திக்கும் ஆவலைத் தூண்டியது. அதனால், பீமன், அர்ஜுனன் இருவரும் ஸ்ரீகிருஷ்ணரின் துணையோடு மகத தேசத்துக்குச் சென்றனர். அங்கு, ஜராசந்தனை, ஸ்ரீகிருஷ்ணர் போருக்கு அழைக்க, ஜராசந்தன், தனக்கு நிகரான பலசாலி பீமனோடு போர் புரிவதையே தான் விரும்புவதாகக் கூறினான். இருவருக்கும் கடுமையான மல்யுத்தப் போர் நடந்தது. ஒரு கட்டத்தில், பீமன், ஜராசந்தனை இரு கூறாகக் கிழித்துத் தூக்கி எறிந்தான். என்ன ஆச்சர்யம்…., கிழித்து வீசப்பட்ட ஜராசந்தனின் உடல் ஒட்டிக் கொண்டு, மீண்டும் போர் புரியும் வலிமையுடன் கர்ஜிக்கிறான். போர் வலுக்கிறது. பீமனுக்கு, மறுபடியும் ஜராசந்தனைக் கிழிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தச் சமயத்தில், போரைக் கவனித்துக் கொண்டிருக்கும் அர்ஜுனன், ‘என்ன கிருஷ்ணா, ஜராசந்தனை போரில் வெல்ல முடியாதபடி, அதிசயமான திறமை இருக்கிறதே; பீமனால் என்ன செய்ய முடியும்’ என்று கேட்க, இப்படிப்பட்ட தருணத்தை எதிர்பார்த்திருந்த ஸ்ரீகிருஷ்ணர், பீமன், தன்னைப் பார்க்கும்படிக்கு நின்று கொண்டு, கைகளைக் கட்டி, இரு விரல்களால் ‘X’ என்று சமிக்கை செய்து, கிழிக்கும் உடல்களை மாற்றிப் போடும்படிக் காட்டுகிறார். இதைக் கவனித்த பீமன், கிருஷ்ணரின் குறிப்புகளைப் புரிந்து கொண்டு, கிழித்த உடல்களை மாற்றிப் போட்டு விடுகிறான். உடல்கூறுகளும் ஒட்ட முடியாமல் போகிறது. ஜராசந்தன் அழிந்தான். 86 அரசர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள், பாண்டவர்கள் கூட்டணியில் சேர்கிறார்கள். கிருஷ்ணரின் வார்த்தைகள் பீமனுக்கு உற்சாகமூட்டியது. கிருஷ்ணரின் உதவியால் ஜராசந்தன் அழிக்கப்பட்டான். ‘ராஜசூய யோகம்’ நடைபெற்றது.

இந்தக் கதையால், ஒன்று புரிகிறது கிருஷ்ணா…. வரம் கொடுக்கும் சாமியே, வரத்தை நடத்தியும் கொடுப்பார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை கிருஷ்ணா….. அதனால், motivation பண்ணி ஒருவரை மேலே தூக்கி விட நினைப்பவர்கள்…, சம்பந்தப்பட்டவரை 100% வெற்றியாளர்களாக மாற்றும் திறமைசாலிகளாகவும், அனுபவசாலிகளாகவும் இருப்பது, ரொம்ப ரொம்ப முக்கியம் என்பது புரிகிறது….

கிருஷ்ணர் : இருக்கலாம்… நீ சொல்வது உண்மைதான். அதற்காக, உற்சாகப்படுத்துபவர்கள், திறமைசாலிகளாகத்தான் இருக்கணும் என்பதில்லை. தட்டிக் கொடுத்து, அரவணைத்து, அக்கறை காட்டினாலே போதும்…. ஊக்கமும், உற்சாகமும் பிறக்கலாமில்லையா….

மேகலா : உற்சாகம் பிறக்கத்தான் செய்யும் கிருஷ்ணா…. இருந்தாலும், அனுபவசாலிகளின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் தான், நிலையான வெற்றியைக் கொடுக்கும்…

கிருஷ்ணர் : உனக்கு, மராட்டிய மன்னர் ‘சத்ரபதி சிவாஜி’யைத் தெரியுமா…. மொகலாய மன்னர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில், ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் ‘கொரில்லா’ உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், மராட்டிய பகுதிகளையும் கைப்பற்றி, மராட்டிய பேரரசு விரிவடைவதற்கு காரணமானார். இந்திய வரலாற்றில், சிவாஜியுடைய நிர்வாகத் திறமையால், அவருடைய காலம், ‘பொற்காலம்’ என்று போற்றப்படுகிறது. மொகலாயர்கள் காலத்தில், ‘சத்ரபதி சிவாஜி’ வீரதீரச் செயல்கள் புரிவதற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா…?

மேகலா : அவருடைய ஆசிரியரா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : மக்கு….. குறுக்க பேசாத….

மேகலா : ஹி…. ஹி….. உன் முன்னாடி நான் மக்குதான கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி, உன் புராணம் போதும்… சிவாஜி, அவருடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2