Passion - பாகம் 7
மேகலா : நிஜம் தான் கிருஷ்ணா…. நீ சொல்லும் போது தான், எனக்கு, கடவுள் அருள் பெற்ற ஜேசுதாசைப் பற்றி ஞாபகம் வருகிறது… தனக்கு music தான் உயிர் மூச்சு என்று தோன்றியதும்…, கேரளாவில் பிறந்த ஜேசுதாஸ் அவர்கள், இசை மேல் கொண்ட அளவுக்கதிகமான ஆர்வத்தினால், தமிழ்நாட்டைச் சேர்ந்த, செம்மங்குடி சீனிவாசக பாகவதர் அவர்களிடம், குருகுலத்தில் சேர்வது போல சேர்ந்து, முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டார்… இது அவரே சொல்லியது கிருஷ்ணா…. இசையை முறைப்படி கற்றுத் தேர்ந்த பின், அதன் மீது ஒரு பக்தி ஏற்பட…, தன்னுடைய தொண்டைக்கு பாதிப்பு வராதபடி, குளிர்பானமோ, மதுவோ, சிகரெட்டோ எடுத்துக் கொள்ளவே மாட்டாராம்… இசையின் மீது, அவருடைய பக்தி அப்படி… இது passion-ஆ…, என்ன கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Passion இல்லாமல் வேறு என்ன…? ஒருவர், தன் திறமையின் மீது நம்பிக்கை மட்டுமல்லாமல், ‘இது கடவுள் நமக்களித்த வரம்’ என்று நினைப்பவர்கள், அந்த அசாத்திய திறமையையே தெய்வமாக பார்க்கத்தான் செய்வார்கள்… இது அவர்களை மேன்மையடையச் செய்யும் பண்பு மேகலா…. ஜேசுதாஸ், தெய்வீக குணங்கள் கொண்டவர். அவருடைய திறமை, எத்தனை பேரை மெய் மறக்கச் செய்கிறது…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா… பாட்டுப் பாடும் திறமையைப் பற்றிப் பேசும் போது, எனக்கு, ‘திருவிளையாடல்’ படத்தில், சிவபெருமானாக நடிக்கும் சிவாஜி கணேசன் பேசும் வசனம் ஞாபகத்திற்கு வருகிறது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சிவபெருமான், தன்னுடைய passion…, music என்று சொல்வாரா….
மேகலா : அது இல்ல கிருஷ்ணா… தலைக்கனத்தோடு மதுரை நகருக்கு வந்திருக்கும் ஹேமநாத பாகவதரை…, ‘அவருடைய திமிரை அடக்க வேண்டும்…, தன்னுடைய பக்தன் பாணபத்திரன் வெற்றி பெற வேண்டும்….’ அதற்காக, விறகு விற்பவராக வீதியில் அலைந்து திரிந்து, அலுத்துக் களைத்துப் போய், ஹேமநாத பாகவதர் தங்குமிடத்திற்கு எம்பெருமான் வருவார்…. பொழுது போக்காக, கொசுக்கடியிலிருந்து தப்பிக்க, ஒரு பாட்டு பாடுவார்… அந்தப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில், உலகத்தின் இயக்கங்கள், ஒரு நிமிடத்திற்கு, அசையாது நின்று…, பின்பு இயங்கும்…. இறையனார், இசையின் அற்புதத்தைக் காட்டுவார்… இந்த அதிசயத்தைக் கண்ட ஹேமநாத பாகவதர்…, வெட்கிப் போய்…, விறகு விற்பவரிடம், ‘இங்கு ஒரு தெய்வீகப் பாடல் கேட்டதே…. அசையும் பொருள் ஒரு நிமிடம் அசையாமல் நின்ற அதிசயம் பார்த்தேன்… நீ கேட்டாயா…, அது யார் பாடியது’ – என்று கேட்பார்… அதற்கு எம்பெருமான் சொல்லுகிறார். ‘யாரும் பாடலியே சாமி…, நாந்தான் தூக்கம் வராமல், கொஞ்ச நேரம் கத்தினேன்’ – என்று நகைச்சுவையாகச் சொல்லுகிறார்…. ‘என்னது…, அசையும் பொருளெல்லாம் ஒரு நிமிடம் அசையாது நின்று, அந்தப் பாடலை ரசித்தது… நீ என்னவோ, கத்தினேன் என்கிறாயே…. இந்தப் பாடலை எங்கு கற்றாய்’ – என்று கேட்க…., ‘எங்க ஊர்ல கோயில்ல பக்திப் பாடல் பாடும் பாணபத்திரர்னு ஒருத்தர்… அவரிடம் பாட்டு கத்துகிடச் சொல்லி, என் அப்பா என்னை சேர்த்து விட்டார்கள்… அவரும், தலையால தண்ணி தெளிச்சி, எனக்கு பாட்டு கத்துக் கொடுத்தார்…. இந்த மண்டைக்கு சங்கீதம் ஏறவில்லை… அவரும், ‘சீ, ஞானசூன்யமே, உன் மண்டைக்கு சங்கீதம் வராது’ என்று என்னை விரட்டி விட்டார்… நானும், பிழைப்புக்காக, விறகு விற்றுப் பிழைப்பு நடத்துகிறேன்… இப்படி தூக்கம் வராத போது, அவர் கற்றுக் கொடுத்த பாட்டை எடுத்து விடுவேன்… அதைத்தான் நீங்கள் கேட்டு, தெய்வீகப் பாடல் என்று சொன்னீர்கள்’ என்று comedy-யாகப் பேசி…, அவரின் திமிரை அடக்குவார்…
கிருஷ்ணர் : ஆமாம்…, நானும் பார்த்திருக்கிறேன்…. இந்த நிகழ்ச்சியில் வசனம், சினிமாவுக்காக காமெடியாக எழுதினாலும், இறையனார்க்கு இசையின் மீது மிகுந்த விருப்பம் உண்டு என்றுதான் புராணம் கூறுகிறது… ஆனானப்பட்ட ராவணன், கயிலை மலையைப் பெயர்க்க வரும் போது, தன் கட்டை விரலால், மலைக்கடியில் அவனை அழுத்தி அலறச் செய்வார்…. ராவணன், இறையனாரை, ‘காம்போதி ராகம்’ பாடித்தான் சாந்தப்படுத்துவான்…. அப்படீன்னா, இறையனாருடைய passion கூட, இசைதானே….
மேகலா : புல்லாங்குழல் வாசித்து, ஆடு மாடுகளையெல்லாம் மெய் மறக்கச் செய்யும் நீ சொன்னால்…, சரியாகத்தான் இருக்கும் கிருஷ்ணா…. இசை மெய் மறக்கச் செய்யும்… இசையை, உயிராக நினைப்பவர்களை, மேன்மையடையச் செய்யும்… இந்த இசை, நோயைத் தீர்த்து, உயிர் பிழைக்கச் செய்யும்…, என்று சரித்திரம் சொல்லுகிறது கிருஷ்ணா… ஒரு உயிரைப் பிழைக்கச் செய்யும் அளவுக்கு, அந்த இசையை தன் உயிராக மதித்த பாடகரை உனக்குத் தெரியுமா கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : ஏன் தெரியாமல்…. ‘தான்சேன்’… ராவணன் பாடிய காம்போதி ராகம் முதல், தான்சேன் பாடிய ‘கஜல்’ பாடலிலிருந்து…, இன்றைய ‘தேவா’ பாடிய ‘கானாப் பாட்டு’, S. P. B. பாடிய திரைப்படப் பாட்டு வரை…, எல்லாப் பாடல்களையும், பாடகர்களையும் கேட்டும் இருக்கிறேன்…, கண்டும் இருக்கிறேன்…. எல்லாப் பாடகர்களும், இசையைத் தன் உயிராக மதித்தவர்களே… ஒருவர், பரமசிவனையே பரவசப்படுத்தினார்… இன்றையப் பாடகர்கள், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும், தலையாட்ட வைத்தனர்… இதில், ‘தான்சேன்’ இன்னும் special…. நோய்வாய்ப்பட்ட அந்த நாட்டு இளவரசியின் நோயின் வீரியத்தைக் குறைத்து…, இன்னும் சொல்லப் போனால், எழுந்து நடமாடவே செய்தார் என்பது அதிசயமான உண்மை…. ஆனால், உனக்கு ஒண்ணு தெரியுமா… இசைக்கு, ஒரு power உண்டு… வேலைப் பளுவினால் stress ஆனவர்களை, சீக்கிரம் relax பண்ண வைக்கும்…. இளம் காற்றில், அமைதியாய் தலையசைக்கும் நெல் நாற்றுகள், இனிமையான இசையைக் கேட்டுத் தலையசைத்தால், செழிப்பாக வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்… ‘அமிர்தவர்ஷினி’ ராகத்தில், பாட்டு ஒன்றை மனம் மகிழ்ந்து இனிமையாகப் பாடினால், இயற்கையும், மெய் மறந்து, மழையைப் பொழியும் என்று, இசையை, ’passion’ என்று ரசிப்பவர்கள் சொல்கிறார்கள்…. எனக்குத் தெரிந்து, புல்லாங்குழல் இசைக்கும் போது, ஆடு, மாடு மட்டும் இல்லை…, காட்டு விலங்குகள் அனைத்தும், என்னைச் சுற்றி, சிங்கம், மான், புலி, மாடு, முயல் என்று, தன் பகை மறந்து, அமர்ந்து கேட்கும்….
மேகலா : வாசிப்பது யாரு…? இசையின் ஸ்வரங்களையே, தன் கைகளுக்குள் அடக்கியிருக்கும் எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் அல்லவா…..
கிருஷ்ணர் : புல்லாங்குழல் வழியாக வெளி வரும் காற்றின் இனிமை, பகை மறக்கச் செய்யும்….
(தொடரும்)
Comments
Post a Comment