Passion - பாகம் 8
மேகலா : ‘இசையே ஒரு வரம்’ கிருஷ்ணா…. எனக்கெல்லாம் தேச பக்தி வரக் காரணமே, பாரதியார் பாடல்களும், M. G. R. படப்பாடல்களும் தான்…. அது மட்டுமல்ல கிருஷ்ணா…. கடவுளை மெய் மறந்து, மெய்யுருகி பக்தி செலுத்துவதற்குக் கூட, பக்திப் பாடல்கள் தான் எனக்கு வழிகாட்டியாகிறது… இவ்வளவு ஏன்…, என் பிள்ளைகளை, தாலாட்டி, என் வசப்படுத்துவதற்கும் கூட, K. V. மகாதேவனுடைய, ‘வெள்ளி நிலா முற்றத்திலே’…, இளையராஜாவுடைய, ‘கண்ணே கலைமானே’ பாடல் தான் எனக்குக் கை கொடுத்தது. இந்தப் பாடல்களை இசையமைத்தவரும், பாடியவரும், இசையை எவ்வளவு ரசித்திருந்தால், இந்த சாகாவரம் பெற்ற பாடல்களை படைத்திருப்பார்கள்… நம்மையும் பாடச் செய்திருப்பார்கள்….
கிருஷ்ணர் : உண்மைதான்… என்ன மேகலா…, M. S. அம்மாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்….
மேகலா : என்ன கிருஷ்ணா…, என்னைக் கேட்கிறாய்… அந்த அம்மா, இறைவனால், special-ஆக…, மனம் மகிழ்ந்து படைக்கப்பட்டவர் என்று நான் நம்புகிறேன் கிருஷ்ணா… இன்று உள்ளவர்கள் மாதிரி, இசை என் passion என்று சொல்லாமல், மனம் மகிழ்ந்து, பக்தி சிரத்தையோடு கற்றுக் கொண்டிருப்பார்கள் போல கிருஷ்ணா… இன்று, இவருடைய குரல் கேட்ட பின் தான், உலக நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்பது இறைவனோட விருப்பம் போல கிருஷ்ணா… எனக்கென்னவோ, பெருமாளே தினமும் இந்த அம்மாவின் குரல் கேட்டுத்தான் எழுந்திருக்கிறாரோ… சாகாவரம் பெற்ற பெரும் பாக்கியசாலி…. திருப்பதி சென்றால், கோயிலில் மட்டுமில்லை கிருஷ்ணா…, டீக்கடை, டிபன் கடை, வளையல் கடை, பொம்மைக்கடை என்று எங்கு திரும்பினாலும்…, இவர் குரல் தான் கேட்கிறது…. சுப்ரபாதம் மட்டுமில்ல…, இவர் குரலில், ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ கேட்டு, கூடயே பாடுபவர்கள் கோடானு கோடிப் பேர்… நானெல்லாம், சமஸ்கிருத சுப்ரபாதத்தை, M. S. அம்மா பாடிப் பின் தொடர்ந்துதான், மனப்பாடம் செய்து கொண்டேன்… எனக்கு என்னவோ, நீயும், அம்மாவின் குரலில், பல வீடுகளிலும் புகுந்து சுப்ரபாதத்தையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தையும் கேட்டுத்தான் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறாய்… அப்படித்தானே கிருஷ்ணா…. அவர் பாடிய, ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…, குறையொன்றும் இல்லை கோவிந்தா’ என்ற பாடலை அவர் குரலில் கேட்கும் போது, எனக்கு அப்படியே மோட்சத்திற்கே கூட்டிச் செல்வது போல இருக்கும் கிருஷ்ணா… இசையை அவர் கற்றுக் கொண்டாரா…, இல்லை, இசை இவரைப் பிடித்துக் கொண்டதா என்று தெரியாத அளவுக்கு, இசை அவரோடு ஒன்றிப் போனது கிருஷ்ணா…. எனக்கெல்லாம் கர்நாடக சங்கீதம் புரியாது கிருஷ்ணா… ஆனால், ‘காற்றினிலே வரும் கீதம்’ – என்ற பாடலைப் பாடும் போது, அதில் இழையோடும் மென்மை நம்மை வருடிச் செல்லும்…. நமக்கு, சினிமாப் பாடல்கள்தான், எளிமையாக, நம் மனதை வசப்படுத்தும் என்பதால், இவர்களுடைய இசையில் இருக்கும் நுணுக்கங்கள் புரியாது…. ஆனால், வெங்கடேச சுப்ரபாதமும், விஷ்ணு சகஸ்ரநாமமும்…, இந்து மதத்தின் கீதை, பெரிய புராணம் மாதிரி என்பது என் கருத்து கிருஷ்ணா…. திருப்பதியில், அவருக்கு ’சிலை’ வைத்திருக்கிறார்கள்… ஒரு பாடகிக்கு சிலை வைத்திருக்கிறார்கள் என்றால், அது இறைவனுடைய அருள் தானே… அந்த அம்மா அதற்குத் தகுதியானவர்… அரசாங்கம் அவரை பெருமைப்படுத்தியிருக்கிறது…. ‘Passion’ என்பதை மீறி, இசைக்கும் M. S. அம்மாவுக்கும் இடையில் ஒரு தெய்வீக உறவு உண்டு என்றுதான் சொல்லுவேன்…
கிருஷ்ணர் : ஓ! சூப்பர்…, சூப்பர்…. Music-ஐ passion ஆக நினைப்பவர்கள், அந்தக் காலத்திலிருந்து இன்று வரை ஏராளம் பேர் இருக்கிறார்கள்…. நம்ம இந்து மதக் கடவுள்களில், வீணையைத் தாங்கிய சரஸ்வதிதேவி, புல்லாங்குழலை வாசிக்கும் நான் உட்பட உணர்த்துவது, நம்ம பாரத தேசத்தின் அடிநாதமே இசைதான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இசை, இந்த மண்ணோடு ஒன்றிப் போன விஷயமாக நான் பார்க்கிறேன்….
மேகலா : என்ன கிருஷ்ணா…. Passion என்பது, ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட விஷயம் அல்லவா… நீ என்னவோ, இசை நம்ம பாரத நாட்டின் அடிநாதம் என்ற வகையில் பேசுற…. எனக்குப் புரியல….
கிருஷ்ணர் : மேகலா…, ‘நாட்டுப்புறப் பாடல்கள்’ என்று இசையில் ஒரு வகை இருக்கு தெரியுமா…. இந்த நாட்டுப்புறப் பாடல்களை பாடுபவர்கள், குருகுலத்துக்குச் சென்று பாடிப் பயிற்சி எடுத்தவர்கள் கிடையாது…
‘ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது’
என்ற திரப்படப் பாடலைக் கேட்டிருக்கிறாயா…. வேலை செய்யும் போது, அலுப்பு தெரியாமல், பாடிக் கொண்டே வேலை செய்கிறார்கள்…, இல்லையா…. அவர்கள், இசை எனக்கு passion என்றா பாடுகிறார்கள்… அப்படி, அப்படியே, வார்த்தைகளைப் போட்டு…, பாட்டு கட்டிப் பாடுகிறார்கள்… பாரதியாரின் ‘வண்டிக்காரன் பாட்டு’ என்ன சொல்லுது. காட்டு வழியே, தனியே செல்லும் வண்டிக்காரன்,
‘காட்டு வழி தனிலே – அண்ணே
கள்ளர் பயமிருந்தால்? – எங்கள்
வீட்டுக் குலதெய்வம் – தம்பி
வீரம்மை காக்குமடா!’
‘நிறுத்து வண்டியென்றே – கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே – எங்கள்
கருத்த மாரியின் பேர் சொன்னால்
காலனும் அஞ்சுமடா!’
என்ற இந்தப் பாட்டைப் படித்துப் பார்… தன்னுடைய பயம் தெரியாமல் இருக்க, வீரம்மையையும், மாரியம்மையையும் துணைக்குக் கூபிடுகிறார். இதில் ஏதாவது ஒரு ராகத்தைப் போட்டுப் பாட வேண்டியதுதான்… பாட்டு ரெடி… இது மாதிரி….,
(தொடரும்)
(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)
Comments
Post a Comment