ஆளுமை - பாகம் 4
மேகலா : நிறைய சம்பவத்தைச் சொல்லலாம் கிருஷ்ணா…. இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு, இவர் ஒரு goldmine கிருஷ்ணா… ஒரு தயாரிப்பாளர் இவரை ‘தெய்வமே’ என்றுதான் கூப்பிடுவாராம். அது அவரோட நன்றி கலந்த மரியாதை…. M. G. R. அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா…. தனக்கு அவர் சம்பளம் தருவதால், ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடுவாராம். இந்த எளிமையால், முதலாளி மனதில் உயர்ந்து நின்று, வரப் போகும் படங்கள் அனைத்திலும், M. G. R-ஐயே நடிக்க வைத்தார்… இது, அவரோட தொழிலில் அவர் காட்டிய மரியாதை… இன்னொரு side கிருஷ்ணா…. அவங்க team ஊட்டியில் நடித்துக் கொண்டிருந்தார்கள். சக நடிகையின் மகளுக்கு, சென்னையில் பாட்டுக் கச்சேரி அரங்கேற்றம் இருக்கிறது. அதற்கு அந்த நடிகை சென்றே ஆக வேண்டும்…. அந்த நடிகை ஒன்றும் heroine கிடையாது; extra நடிகை தான்… அவருக்கான portion-ஐ முடித்துக் கொடுக்கச் சொல்லி, director இடம் அவசரப்படுத்த முடியாது… அந்த நடிகை, M. G. R – இடம் வந்து, விஷயத்தைச் சொல்லி, பாட்டுக் கச்சேரிக்கு M. G. R-ஐ அழைத்து, வாழ்த்துவதற்கு வர வேண்டும் என்று கூப்பிட, M. G. R., ‘உன் மகள் நன்றாகப் பாடுவாளா’ என்று ஆச்சரியப்பட்டு…, வருவதாக ஒப்புக் கொண்டார்….. ‘ஆமாம், பாட்டுக் கச்சேரி என்னைக்கு’ என்று கேட்க…, அவர் தேதியைச் சொல்ல, ‘நீ இங்க இருக்க…., உன்னுடைய portion முடிந்து விட்டதா…, முடியவில்லை என்றால், சீக்கிரம் முடிக்கச் சொல்லலாம்’ – என்று சொல்லி, director-ஐக் கூப்பிட்டு, அந்த நடிகையின் portion-ஐ சீக்கிரம் முடிக்கச் சொல்லி, சம்பளம் வாங்கிக் கொடுத்தார்… அதன் பிறகு, அந்த நடிகை கிளம்பி, சென்னைக்குச் சென்று விட்டார்…. கச்சேரி நாள் அன்று, மாலை 6 மணிக்கு கச்சேரி…, ஆரம்பமாகி விட்டது…. அந்த அரங்கத்தில் திடீரென்று பரபரப்பு…, M. G. R. வந்திருக்கிறார் என்று…. அந்த நடிகைக்கு, ஆச்சர்யமும், ஆனந்தமும் தாங்க முடியாமல், M. G. R – ன் காலில் விழுந்து வணங்குகிறார்… இவர், ரொம்ப கூலா…, ‘என்ன, என்னை அழைத்தது ஞாபகம் இல்லையா… வந்துட்டேன் பாரு… உன் மகளைக் கூப்பிடு… அவளை, அடுத்த என் படத்தில் பாட வைக்கிறேன்..’ என்று சொல்லி, திக்குமுக்காடச் செய்கிறார்…. சொன்னது போலயே, மகளை வாழ்த்தி, வாய்ப்பும் தருகிறார்…. இது மாதிரியான திக்குமுக்காடல் சந்தர்ப்பத்தை, திரையுலகில் நிறைய இடங்களில் செய்து…, மக்கள் மனதை அபகரித்து, ஆக்ரமிப்பு செய்திருக்கிறார் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அடப்பாவி! M. G. R. பற்றிப் பேசும் போது,…, திருநெல்வேலி அல்வா சாப்பிட்ட மாதிரி பேசுகிறாயே….
மேகலா : கிருஷ்ணா! இதுக்கே நீ இப்படி ஆச்சர்யப்படுகிறாயே… இன்னொரு சம்பவத்தைக் கேட்டால் என்ன செய்வாயோ….
கிருஷ்ணர் : பெருசா பில்டப் பண்ணுகிறாயே… விஷயத்த சொல்லு….
மேகலா : கிருஷ்ணா…, ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி…, பெரிய M. G. R. ரசிகர். நேரில் M. G. R – ஐப் பார்த்தது இல்லை. தன்னுடைய மகள் கல்யாணத்திற்கு M. G. R-க்கு கல்யாணப் பத்திரிகை அனுப்ப ஆசைப்பட்டு…, அனுப்பியும் விட்டார்…, from address இல்லாமல்…. M. G. R-க்கு ஒரு பழக்கம்… தன் ரசிகர்களிடமிருந்து, கல்யாணப் பத்திரிகை வந்தால், நேரில் சென்று வாழ்த்தணும்னு நினைப்பார். பெரும்பாலும், சம்பந்தப்பட்டவர்கள், நேரில் சென்று, ‘தலைவா, நீங்கள் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால் தான் கல்யாணம் பண்ணிப்பேன்’ – என்று அடம் பிடிப்பவர்கள் தான் இருப்பார்கள்…. இது, வித்தியாசமாக, from address இல்லாமல் இருந்ததைப் பார்த்து (சென்னையிலிருந்துதான் வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்), தன் உதவியாளரை அழைத்து, ‘இவர் யார் என்று தெரிந்து வரச் சொல்லி’ அனுப்பினார். அவரும் சென்று பார்த்து, தெருவோரம், ஒரு செருப்பு தைப்பவர் கடையில், M. G. R. படத்தை மாட்டியிருப்பதைப் பார்த்து, குத்துமதிப்பாக, அவரிடம், ‘உங்கள் மகளுக்குக் கல்யாணமா’ – என்று கேட்க, அவரும், ‘ஆமாம், நேத்து என் குலசாமிக்கு பத்திரிகை அனுப்பியிருக்கிறேன்…, இனி கல்யாண வேலையைப் பார்க்க வேண்டும்’ என்று சொல்ல, ‘உங்க குலசாமி M. G. R-ஆ என்று கேட்க, ‘ஆமாம்’ என்று சொல்லி, கருமமே கண்ணாகிப் போனார். உதவியாளரும், M. G. R – இடம் சென்று, பத்திரிகை அனுப்பியவர், செருப்புத் தைக்கும் தொழிலாளி என்று சொல்லவும், M. G. R. கல்யாணத்திற்குச் செல்லத் தயாராகி விட்டார்… உதவியாளர்கள், ‘நாங்கள் சென்று, பரிசுத் தொகையைத் தந்து வருகிறோம்’ என்று சொல்லியும் கேளாமல், கல்யாணத்திற்குச் சென்று, பரிசுத் தொகையும் வழங்கி, மணமக்களை வாழ்த்தி, அந்தத் தொழிலாளியை, ஆச்சர்யத்தில் வாயடைக்கச் செய்தார்…. இந்த நிகழ்ச்சி நடந்த காலம், M. G. R. புகழின் உச்சியில் இருந்த காலம் கிருஷ்ணா…. இப்படித்தான் ஒவ்வொரு சம்பவத்திலும், சுற்றியிருப்போர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, எல்லோர் மனதிலும் அழிக்க முடியாத இடத்தைப் பெற்று விடுவார் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நீ சொல்லச் சொல்ல, நானும் M. G. R. ரசிகன் ஆயிருவேன் போலயே…. புகழின் உச்சியில் இருந்தார் என்று சொன்னாயே… எப்பத்தான் அவருக்கு புகழ் குறைவாக இருந்திருக்கிறது… இப்போ பாரு, எனக்குக் கூட பிடிச்சுப் போச்சு….
மேகலா : நான் ஏன் இத்தனை நாளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் M. G. R. கதையைச் சொல்லுகிறேன் என்று இப்பப் புரியுதா கிருஷ்ணா… M. G. R. ‘மாஸ்’ கிருஷ்ணா… தன்னுடன் வேலை பார்க்கும் லைட் பாயிலிருந்து, சக நடிகர்கள், குணசித்திர நடிகர்கள், கூட்டத்தில் ஒருவராய் வருபவர், இசையமைப்பாளர், director என்று எல்லோருக்கும் மதிய உணவு, அவர் வீட்டிலிருந்து கொண்டு வந்து உபசரிப்பாராம். அத்தனை பேருக்கும், பேசிய சம்பளத்துக்கும் மேலே வாங்கிக் கொடுப்பாராம்… M. G. R., commit ஆன படத்தில் நடிக்கவோ, தொழில்நுட்ப வேலை செய்பவரோ, மகிழ்ச்சியுடன் வேலை பார்ப்பார்களாம். ஆனால், தன்னுடைய ஆளுமையை, script-ல், வசனத்தில், பாடல் வரிகளில், இசையில், costume-ல் கூட, எல்லாவற்றிலும், அவருக்குப் பிடித்த மாதிரிதான் இருக்கணும் என்று காட்டுவாராம். தயாரிப்பாளரும், படம் release ஆகி, வெற்றியடையப் போகும் நாளுக்காக, இவருடைய ஆளுமையை ரசிக்கத்தான் செய்வார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : உலகம் அப்படித்தான் மேகலா….
(தொடரும்)
Comments
Post a Comment