கதை கதையாம் காரணமாம் - பாகம் 8

மேகலா : கிருஷ்ணா…, மனிதன் பிறந்த நாளிலிருந்து, above the power ஆகத்தான் கடவுளைப் பார்ப்பதாக நான் நினைக்கிறேன். இந்தக் கதையில், பஸ்மாசுரன், ‘கடவுள்’ என்பதை ஒரு பதவியாகப் பார்க்கிறான்… எப்படி அவனால் இப்படி பார்க்க முடிகிறது…

கிருஷ்ணர் : நீ வேற…, இப்போ…, இங்க உங்களில் நிறையப் பேர்…, ஏன் 95% மக்கள், கடவுளை வியாபாரியாகப் பார்க்கவில்லையா… அவர்கள் தெரிந்தா பேசுகிறார்கள்… முழுக்க முழுக்க கடவுளிடம், ‘நாம் கேட்டால் கொடுப்பார்…, பதிலுக்கு நாம கடவுளுக்கு ஏதாவது கொடுத்திரலாம்’ என்றுதானே நினைக்கிறார்கள்… அந்த ரகம் தான் பஸ்மாசுரனும்… இங்கு இருப்பவர்கள் நினைக்கவில்லையா… கொஞ்சம் அசந்தால், கடவுளையே உண்டு இல்லை என்று பார்ப்பதில்லையா… கடவுளிடம் challenge விடுவதென்றால், மனுஷர்களுக்கு ரொம்ப பிடிக்கும். எப்போ கடவுள் ’அசருவார்’ என்று காத்திருப்பார்கள்…. கடவுளின் பதவியை காலி பண்ண நினைத்த பஸ்மாசுரனின் ‘mind voice’, அவனுக்கே கேட்குமோ என்னவோ தெரியாது… கடவுளுக்கு துல்லியமாகக் கேட்டு விடும்… அவன் பாட்டுக்கு அடுத்தடுத்த வேலைகளில் இறங்க வேண்டியதுதான். ஆனால் கடவுளோ, ஆரம்பம் முதலே வலையை விரிக்கத் தயாராகி விடுவார். அதான் பார்த்தோமே….

மேகலா : கிருஷ்ணா…, எனக்கு ஒரு சந்தேகம்… ‘தவம்’ செய்வது அவ்வலவு சுலபமா… பஸ்மாசுரன் மாதிரியான அசுரர்களால் தவம் செய்ய முடியுமா….?

கிருஷ்ணர் : ஏன் முடியாது…? முதலில், ‘தவம்’ என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா… செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன், கண்ணும் கருத்துமாக, தன் வேலையிலேயே முழு கவனம் செலுத்தி, வேற எந்த சிந்தனையும் இல்லாமல், முழு மனத்திருப்தியுடன், அந்த செருப்பைத் தைத்து முடித்தால், அந்த செயல், உயர்ந்த தவத்திற்கு ஈடாகும்… நம்முடைய மெய், மனம், வாக்கு அனைத்தும் ஒரே நேர்கோட்டில் லயித்து, நாம் எதை அடைய வேண்டுமோ, அதை நோக்கி முயற்சி செய்வதுதான், ‘தவம்’… பெரும்பாலும், தவமுனிவர்கள், ‘பகவத்’ நாமத்தை உச்சரித்து, பகவானை அடைய வேண்டும் என்று முயற்சி செய்வதாக நாம் புராணங்கலில் படித்திருக்கிறோம்… இறைவனும், அந்த பக்தியை ஏற்றுக் கொண்டு, தவத்தின் பலனாக, முனிவர்கள் வேண்டியபடி காட்சி தந்து வரம் தருகிறார்…. சாதாரண மக்களில் கூட, தன் புலன்களை அடக்கி, கர்மசிரத்தையாக, ஏதாவது வேலையில் ஈடுபடுகிறார்களே…, அதுவும் தவமே… ஆகையால், தவம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு, ‘கர்ம சிரத்தை’ ரொம்ப அவசியம்…

மேகலா : ஓ…, சரி…, கடவுள்தான், பஸ்மாசுரனின் ‘mind voice’-ஐ கேட்டார் என்று சொன்னயே, அப்புறம் ஏன் பஸ்மாசுரனின் தவத்தினை மெச்சி, அவனை பாராட்ட வர வேண்டும்…

கிருஷ்ணர் : ஏன் வரக் கூடாது…. வந்தாதான…, அவர் விரிச்ச வலையில அசுரனைச் சிக்க வைக்க முடியும்… ஒரு வீட்டில், சேட்டை செய்யாத சமத்துப் பிள்ளையும் இருக்கும்…; சேட்டை செய்து உயிரை வாங்கும் குரங்குக் குட்டியும் பிறக்கும்… அம்மா எல்லோருக்கும் சேர்த்துத்தானே சமைப்பாள்… ‘அம்மா’ என்று யார் கூப்பிட்டாலும், அவர்களுக்கான வேலையை செய்வதும், கேட்டதைக் கொடுப்பதும் தான் அம்மாவின் கடமை… தாயினும் சாலப் பரிந்தூட்டும் பரம்பொருளும் அதே மாதிரிதான்… யார் சிரத்தையுடன் கூப்பிட்டாலும் வருவதுதான் கடவுளின் கடமை…. ஒருவேளை, பகவான் நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க, பஸ்மாசுரன் புனிதமாகியிருந்தால்….? அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா….

மேகலா : ஓ…., நீ இப்படிச் சொல்றயா கிருஷ்ணா… சரி…, ’யார் தலையில் கை வைக்கிறேனோ…, அவர் தலை வெடித்து சுக்கு நூறாக வேண்டும்’…, என்று கேட்கும் போதே…, கடவுள் அவன் தலையை வெடிக்கச் செய்திருக்கலாமே…

கிருஷ்ணர் : அதெப்படி… அவன் தானே கேட்கிறான்… அவன் கையைக் கொண்டே, அவன் கண்களைக் குத்தினால்தானே சரியாக இருக்கும்… நீ ஒன்றை நன்றாக நினைவில் கொள்… கடவுள் பாரபட்சமற்றவர். அசுரனின் தவத்தை மெச்சி, அவன் கண் முன்னே தோன்றினார். அசுரன் கேட்டதையெல்லாம் கொடுப்பதற்கு கடவுள் கேனையனா…. கடவுள், உலக நீதிமன்றத்தின் நீதிமான்… அதை அறிந்து விளையாட வேண்டும்….

மேகலா : ஸ்.., ஸ்…, அப்பா…, மெய் சிலுக்குது கிருஷ்ணா…. சரி… ஏன் கிருஷ்ணா…., ஒளிந்து மறைந்து…, பின் மோகினியாக வர வேண்டுமா…. கடவுளாக நின்று அடிக்கலாமே….

கிருஷ்ணர் : யாருக்கு எதில் பலவீனமோ…, அதில் அடித்தால் தானே, ‘நச்’சுனு அடி விழும்… பஸ்மாசுரன் அழகிய பெண்ணைக் கண்டால், பலவீனமாகி விடுவான்… பல்லை இளிக்க வைத்து, பல்லை உடைப்பதுதான், பரம்பொருளின் சாகசம்… இளித்தான்…, மோகினி ஒண்ணுஞ்செய்யல… ச்சும்மா, தன் தலையில் கை வைத்தாள்… பாழாய்ப் போன அசுரனும் தன் தலையில் கை வைத்தான்… அவ்வளவுதான்…, முடிந்தது கதை… சும்மா…, ’நமக்குத்தான் எல்லாம் தெரியும்’, ‘நாம்தான் பலசாலி’…, ‘கடவுளையே காலி பண்ண நம்மால் முடியும்’…, என்று யார் நினைத்தாலும், அவர்களுக்கு வழியை விட்டு…, வழியை அடைப்பதுதான் கடவுளின் நீதி… ‘பாமா விஜயம்’ படத்தில் ஒரு வசனம் வருமே… ‘பாடம் சொல்லிக் கொடுத்து பரீட்சை வைப்பது, உலக தர்மம்… பரீட்சை வைத்து, பாடம் சொல்லிக் கொடுப்பது, கடவுளின் தர்மம்’…. பஸ்மாசுரன் வாழ்க்கையில் பாடம் கற்கவில்லை. அதனால், அவனை வைத்தே, உலகத்தாருக்கு பாடம் கற்றுக் கொடுத்து விட்டார் இறைவன்… நல்லா யோசிச்சிப் பாரு… கணக்கு சரியா இருக்கும்….

மேகலா : வாவ்! Super கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…., அடுத்த கதை….?

(தொடரும்)

Comments