ஸ்ரீ கிருஷ்ணாரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 56

மேகலா : குருக்ஷேத்திரப் போர் தொடங்க இருக்கிறது. தருமன், பீஷ்மரை வணங்கி விட்டு, துரோணாச்சாரியாரை நோக்கிச் சென்றான். துரோணரை வணங்கிய தருமனை நோக்கி, ‘தர்மபுத்திரா, பெரியவர்களை வணங்கிக் காரியத்தைத் தொடங்க நினைக்கும் உனக்கு, வெற்றி நிச்சயம் கிட்டும். நீ யுத்தத்தைத் தொடங்க நான் அனுமதி அளிக்கிறேன். மனிதன் தெய்வத்திற்கு அடிமைப்பட்டவன். செல்வமோ, யாருக்கும் அடிமைப்படாதது. ஆகையால், கௌரவர்கள் பக்கம் நின்று நான் யுத்தம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறவும், துரோணரை ஜெயிக்கக் கூடிய வழி என்ன என்று தருமன் அவரிடம் கேட்கிறான். அதற்கு, துரோணர், ‘அஸ்திரம் எய்து என்னை வெல்வது என்பது யாராலும் முடியாது. ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் நான் கீழே போட்டால், அப்போது என்னை ஜெயிக்கலாம். அதுவும் என் நம்பிக்கைக்குரிய ஒருவனிடமிருந்து எனக்குத் துன்பத்தைத் தரும் செய்தியை நான் கேட்டால், அப்பொழுது ஆயுதங்களைத் தொடாமல் தேர்த்தட்டில் அமர்ந்து விடுவேன்’ என்று கூறினார். அடுத்ததாகக் கிருபரிடம் சென்று வணங்கி, அவரை வெல்லும் வழியையும் தருமன் கேட்க, கிருபர், ‘என்னை வீழ்த்துவது இயலாத காரியம்’ என்று கூறினார். அடுத்து, சல்லியனிடம் சென்று, ‘கர்ணன் தேரில் அமர்ந்து யுத்தம் செய்யும் நேரம், அவன் தன்னம்பிக்கை குறையுமாறு பேச வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான்.

அப்பொழுது, ஸ்ரீ கிருஷ்ணர், தேர்த்தட்டில் இருந்து இறங்கி, கர்ணனை நோக்கிச் சென்றார். அவனிடம், ‘பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை யுத்தத்தில் கலந்து கொள்வதில்லை என்று சபதம் செய்திருக்கிறாய். நீ ஏன் பீஷ்மரை எதிர்த்து, பாண்டவர்களோடு சேர்ந்து போரிடக் கூடாது’ என்று கேட்க, கர்ணன், ‘கிருஷ்ணா! துரியோதனன் எதை விரும்ப மாட்டானோ அதை நான் செய்வேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்க வேண்டாம். துரியோதனனுக்காக, என் உயிரையும் கொடுக்க முன்வந்துள்ளேன் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். நீங்கள் கூறுவது போல என்னால் செய்ய இயலாது’ என்று கூறவும், கிருஷ்ணர், பாண்டவர்கள் பக்கம் வந்து சேர்ந்தார். தருமனும், தன் அணிப் பக்கமே வந்து சேர்ந்தான்.
தருமன், கௌரவர்கள் அணிப் பக்கம் சென்றது, பெரியோர்களை வணங்குவதற்காக மட்டுமல்ல, அவர்களை வெல்லும் சூட்சுமத்தை அறிந்து கொள்ளும் நோக்கமும் இருந்தது. குறுக்கு வழிகளை யோசிக்க ஆரம்பித்து விட்டனர்; யுத்தம் களை கட்டியது. இனி நடக்கப் போகும் யுத்தத்தில், நேர்மையைக் காட்டிலும், தந்திரம் அதிக அளவில் முன்வைக்கப்படும். அதுவும், பாண்டவர்களே அதிகமாக தந்திரத்தில் ஈடுபட்டு வெற்றியைக் கைப்பற்றுவார்கள் என்பதைத்தான் தருமனின் இச்செயல் நமக்குக் காட்டுகிறது.

கிருஷ்ணர் : என்ன மேகலா! நீயாக உன் யூகத்தைச் சொல்லுகிறாயே..... இருப்பினும், இது ஒரு ராஜ தந்திரமே.... அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு, எல்லோரிடமும் சென்று, அவர்களை ஜெயிக்க அவர்களிடமே சூட்சுமத்தைக் கேட்கிறான், தருமன். இருப்பினும், பீஷ்மர் மனமெல்லாம் பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும் என்றிருக்க; துரியோதனன் பக்கம் அசுரத்தனமாக போர் புரிவார். அதிலும், அர்ஜுனன் தளர்ந்து போகுமளவுக்கு போரில் உக்கிரம் காட்டப் போகிறார். யுத்தம் ஆரம்பிக்கட்டும்.... கதையை மேலே சொல்லு, மேகலா.....

கிருஷ்ணர் பொறுமை இழந்தார்

போர் ஆரம்பித்தது. இரு தரப்பு வீரர்களும் மோதிக் கொண்டதால், யுத்த களத்தில் புழுதி கிளம்பி, சூரியனையே மறைத்தது. யார் யார் எந்தப் பக்கத்து வீரர்கள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு குழப்பம் நிலவியது. பீமனின் வீரத்தால், கௌரவர்கள் படையில் ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அர்ஜுனன், பீஷ்மரை எதிர்த்தான். அர்ஜுனனால், பீஷ்மரை வீழ்த்த முடியவில்லை. பீஷ்மரால், அர்ஜுனனை வீழ்த்த முடியவில்லை. தருமபுத்திரன், சல்லியனை எதிர்த்துப் போர் செய்தான். திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்த்தான். இருவருக்குமிடையே கடுமையான யுத்தம் நடந்தது. சிகண்டி, துரோணரின் மகனாகிய அஸ்வத்தாமாவை எதிர்த்தான். இரு படைகளும் கோரமாக யுத்தம் புரிந்தன. சில விதிமீறல்களும் நடந்தன. கத்திகளால் வெட்டப்பட்டும், யானைகளின் தந்தங்களால் குத்தப்பட்டும் வீரர்கள் வீழ்ந்து கொண்டிருந்தனர். கொடூரமான ஓலங்கள், யுத்த களத்தை பயங்கரமானதாக்கிக் கொண்டிருந்தன.

இந்தக் கோரமான யுத்தத்தின் நடுவே, பீஷ்மர், சந்திரன் போல ஒளி வீசிக் கொண்டிருந்தார். கௌரவர் தரப்பில் போரிட்டுக் கொண்டிருந்த சல்லியன், பாண்டியர் தரப்பில் போரிட்ட விராடனின் மகன் உத்தரனைக் கொன்றான். அதைக் கண்டு கோபமுற்ற விராடனின் மற்றொரு மகன் ஸ்வேதன், மிகவும் பயங்கரமான போரைச் செய்தான். அவனை பீஷ்மர் வீழ்த்திக் கொன்றார்.
மிகப் பெரிய வீரனாகிய ஸ்வேதன் வீழ்ந்ததும், பாண்டவர்கள் தரப்பில் மனமொடிந்து போனார்கள். கௌரவர்கள் மனமகிழ்ச்சி அடைந்தார்கள். பீஷ்மர் மீண்டும் உக்கிரமான யுத்தத்தைத் தொடங்கி, பாஞ்சாலம், கேகய தேசத்து மன்னர்களைத் தன் அம்புகளால் வீழ்த்தினார். பாண்டவர்கள் சேனை சிதறி ஓடியது. பாண்டவர் கை தாழ்ந்தும், கௌரவர் கை ஓங்கியும் இருந்த நேரத்தில், சூரியன் அஸ்தமனமாகி விட்டது. முதல் நாள் யுத்தம் அந்த நிலையில் முடிவடைந்தது.

அன்று இரவு தருமபுத்திரன், தனது தரப்பு தோல்வியை நினைத்து மிகவும் மனம் வருந்தினான். அவன் கிருஷ்ணர் இடத்திற்குச் சென்று, தனது மனக்கவலையை அவரிடம் தெரிவித்தான். ‘நல்ல வெயில் காலத்தில், உலர்ந்த கட்டைகளை எரிப்பது போல, பீஷ்மர் நமது படையை எரித்துக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்த்துப் போரிட, நாங்கள் சக்தியற்றவர்கள். பீஷ்மரை எதிர்க்க சக்தி இல்லாதவர்களாகி விட்டோம். குபேரன், இந்திரனைக் கூட எதிர்த்து விடலாம். பீஷ்மரை எதிர்ப்பது என்பது நடக்காத காரியம். எல்லோரும் எனக்காக பீஷ்மரிடம் பலியாகப் போகிறார்கள்: துன்புறுத்தப்படுகிறார்கள். அவர் முன்பு நம்மால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஆகையால் நான் காட்டிற்குச் சென்று தவம் செய்யப் போகிறேன்’ என்று விரக்தியாகப் பேசுகிறான். அப்படியே மூர்ச்சையாகி விழவும், அவருக்கு மூர்ச்சை தெளிவித்து கிருஷ்ணர் அவரைத் தேற்றத் தொடங்கினார். ‘நீங்கள் விரும்புவதை எல்லாம் சாதித்துத் தரக் கூடிய வீரர்கள், சாத்யகி, திருஷ்டத்யும்னன், அர்ஜுனன், பீமன், சிகண்டி இருக்க, நீர் கவலைப்பட வேண்டாம்’ என்றார்.

கிருஷ்ணர் கூறியதைக் கேட்டுத் தெளிந்த தருமபுத்திரனிடம், திருஷ்டத்யும்னன், ‘தருமபுத்திரரே, துரோணரைக் கொல்வதற்காகவே தான் பிறந்ததாகக்’ கூறித் தருமனுக்கு உற்சாகமூட்டினான். பின்பு, இரண்டாம் நாள் போரில், பாண்டவர் தரப்பில் க்ரௌஞ்ச பறவையின் வடிவில் வியூகம் அமைக்கப்பட்டது. அந்த வியூகத்தை பீஷ்மர் எளிதில் உடைத்தார். பீஷ்மரை அர்ஜுனன் எதிர்த்தான். அன்றைய தினத்தில் பாண்டவர் பக்கம் உற்சாகமும், கௌரவர் பக்கம் சோர்வும் மிகுந்திருந்தன.

மூன்றாவது நாள் யுத்தத்திலும் பாண்டவர்கள் பக்கமே வெற்றிகள் குவிந்தன. பீமனும் அர்ஜுனனும் பயங்கரமான யுத்தத்தைச் செய்தார்கள். அந்த நிலையில், துரியோதனன், பீஷ்மரிடம் தன் கவலையைத் தெரிவித்தான். ‘நீங்களும், துரோணரும், கிருபரும் யுத்த களத்தில் நிற்கும் போது, நமது படை சிதறி ஓடுகிறது என்பது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. உங்களை எதிர்ப்பவர்கள் பாண்டவர்கள் தரப்பில் ஒருவரும் இல்லை என்பதே என் கருத்து. அப்படியிருக்க, அவர்கள் பக்கம் வெற்றி குவிகிறது என்றால், உங்களுக்கு பாண்டவர்கள் மீது கருணை இருக்கிறது என்று நினைக்கிறேன். போருக்கு முன்பே, பாண்டவர்களை எதிர்த்துப் போரிடப் போவதில்லை என்று கூறியிருந்தால், நான் கர்ணனைப் போரிடச் செய்திருப்பேன். உங்களிடம் ஒரு தயக்கம் தெரிகிறது. என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றினால், யுத்தத்தை ஊக்கமாக நடத்துங்கள்” என்று தாறுமாறாகப் பேசவும், பீஷ்மர் மிகவும் கோபமுற்றார்.

அதற்கு, பீஷ்மர் அளித்த பதிலோடு அடுத்த பகுதியில் சந்திப்போம்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2