கதை கதையாம், காரணமாம் - பகுதி 8

மேகலா : சென்ற பகுதியில் ‘முயல்-ஆமை’ கதையைப் பார்த்தோம். தனது நண்பனான முயல் போட்டியில் தோற்றது கண்டு, முயலுக்கு ஆறுதல் கூறிய ஆமைக்கு ஒரு யோசனை வந்தது என்று சென்ற பகுதியின் முடிவில் பார்த்தோம்.

‘நண்பா, வருத்தப்படாதே; வேண்டுமானால், நாளையும் இந்தப் போட்டியை நடத்தலாம்’ என்று ஆமை சொன்னது. முயலுக்கு சற்றே தெம்பு வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டது. பரிதாபமாகத் தலையை ஆட்டியது. உடனே, ஆமை, ‘சரி, இன்று ஓடும் இடத்தை நான் தேர்ந்தெடுக்கிறேன். இதோ, இந்தத் தோட்டத்தைச் சுற்றி ஓடி வந்து, அங்கிருக்கும் குளத்தைத் தாண்டி, இங்கே இருக்கும் வேப்ப மரத்தடிக்கு வரணும். சரியா....?’ என்றது.
இந்த முறை முயல் தன்னை மிகக் கவனமாகத் தயார்படுத்திக் கொண்டது.

மறுநாள், இருவரும் போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தனர். போட்டியைப் பார்ப்பதற்கு மற்ற மிருகங்களும் அங்கு வந்து சேர்ந்தன. முயலோ ரொம்ப பரபரப்பாக இருந்தது. ஆமை எப்பவும் போல நிதானமாக இருந்தது. போட்டி ஆரம்பமாகியது. முயல் வென்றே தீருவது என்று வேகமாக ஓடியது. ஆமை நிதானமாக நடந்தது. சுற்றியிருந்தவர்கள், ‘come on hare' என்றும், ‘come on tortoise' என்றும் குரல் கொடுத்து உற்சாகப்படுத்தினர். இந்த முறை, முயல் ஓய்வெடுக்கும் எண்ணத்தையே விட்டு விட்டு, வேகமாக ஓடி...., ஓடி....., ஓடி குளத்தருகே வந்து விட்டது. ‘ஐயய்யோ....’

கிருஷ்ணர் : என்ன, முயலுக்கு நீச்சல் தெரியலையா....?

மேகலா : நீச்சல் தெரியாதே....., என்று பொருமிய முயலுக்கு அப்போதுதான் உறைத்தது..... ’ஆம்; ஆமை நல்லா 'dive' அடித்து நீந்துமே..... அடடா, ஆமை நம்மை ஏமாற்றி விட்டதே’ என்று நினைத்து, குளத்தை எட்டிப் பார்த்து, எட்டிப் பார்த்து புழுங்கியது. அப்போது, ஆமை குளத்தருகில் வந்து சேர்ந்தது... ‘என்ன நண்பா, உனக்கு நீச்சல் தெரியாதா...., ஐயய்யோ..... சரி, பரவாயில்லை; என் முதுகில் உட்கார்ந்து கொள்: நான் உன்னைக் கரை சேர்க்கிறேன்’ என்று சொல்லி, முயலை இழுத்து, தன் முதுகில் அமர்த்திக் கொண்டு, நீந்தத் தொடங்கியது. இருவரும் கரை சேர்ந்தார்கள். அடுத்து வெற்றி மரத்தை நோக்கி ஓட வேண்டும். இப்போ, முயல் ஆமையைப் பிடித்துக் கொண்டு, வேகமாக ஓடியது. இருவரும் வெற்றி மரத்தை அடைந்தார்கள். காட்டு விலங்குகள் கை தட்டி ஆரவாரம் செய்தன. முயல், ஆமையின் புத்திசாலித்தனத்தை வெகுவாகப் பாராட்டியது. அப்போ, ஆமை என்ன சொல்லிச்சு தெரியுமா? ஒரு முறை வெற்றியை அனுபவித்தவர்கள், எப்பொழுதும் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எல்லோரையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல நினைப்பவர்களுக்கு, தடங்கல்களே வராது’ என்று சொல்லி, முயலைக் கட்டிப் பிடித்துக் கொண்டது. அன்று முதல் இருவரும் இணைபிரியாத நண்பர்களானார்கள்.

கிருஷ்ணர் : Super.... super, மேகலா.... எத்தனை நுணுக்கமான விவரங்களைக் கதையில் சொல்லியிருக்கிறாய்....!

மேகலா : இந்தக் கதையில் உனக்கு ஒரு கருத்து இருப்பதாகச் சொன்னாயே, கிருஷ்ணா. அது என்ன, கிருஷ்ணா...?

கிருஷ்ணர் : முதலில் இந்தக் கதை, ஆமை ஜெயிப்பது வரை மட்டும் தானே: அதற்குப் பின் உள்ள கதையை உருவாக்கியது, யார் மேகலா?

மேகலா : கிருஷ்ணா! Diplomatic என்ற ஒரு வார்த்தை, சமீப காலங்களில், administrative உலகங்களில் மிகச் சாதாரணமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. Companies-ல் அடிக்கடி seminar, meeting நடத்துகிறார்கள். அங்கு வேலை பார்ப்போர், தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். முதலிடம் பிடிக்கத் துடிப்பவர்கள் சொல்லும் வித்தியாசமான கருத்துக்கள், தங்கள் நிர்வாகத்திற்கு முன்னேற்றம் தருமானால், தயங்காமல் ஏற்றுக் கொள்ளும் தொழில் அதிபர்கள் தான் சாதனை படைக்கிறார்கள். நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால், காரணத்தை யோசிப்பது; வெளியிலிருந்து கருத்து சொன்னால், தயங்காமல் ஏற்றுக் கொள்வது என்று, தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, diplomatic ஆகச் செயல்படுவது; இது இன்றைய official தந்திரம். அதற்கு உதாரணமாக உருவாக்கிய கதை. நிஜத்தில் இரண்டாம் முறை முயல் ஜெயித்து விடும். மூன்றாம் முறை ஆமை, தன்னுடைய சிறப்புத் தகுதியை யோசித்து செயல்படும். மறுபடியும் ஜெயிக்கும். இறுதியில் இருவரும் இணைவார்கள் என்று கதை போகும். நான் ஆமையை புத்திசாலியாக்கி விட்டேன். பரபரப்பாகச் செயல்படும் முயல், ஆமையின் புத்திசாலித்தனத்தை அறிய முற்படும் முன்னேயே அவசரப்பட்டு விடுகிறது என்று ‘கதை விட்டிருக்கிறேன்’, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நல்லா யோசிச்சுத்தான் சொல்லியிருக்கிறாய். Simply administrative story! எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இதே மாதிரியே சொல்லேன்....

மேகலா : இப்படிக் கதைகளைப் பேசும் போது தான், எனக்கு ஒண்ணு புரிகிறது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நீ புரிந்து கொள்வதையெல்லாம் முடிவுரையில் பேசிக் கொள்ளலாம். இப்பொழுது நான் ஒரு தலைப்பு சொல்கிறேன். நீ அதற்கு ஒரு கதை சொல்லு.

மேகலா : தலைப்பு என்னவோ...?

கிருஷ்ணர் : தயாராயிரு; ‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் ஒரு கதையைச் சொல்லு பார்ப்போம்....

மேகலா : ஒரு ஊரில், அந்த வருடம் மழை பொய்த்துப் போய், ஏரி, குளமெல்லாம் வற்றிப் போய் விட்டது. தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்து ஆடியது. மக்கள் படாத பாடு பட்டார்கள். அந்த ஊர் மக்களெல்லாம் ஒன்று கூடி, என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது, அந்தக் கூட்டத்தில் ஒருவர், ‘மழை வேண்டி பிரார்த்தனை செய்து பார்த்து விட்டோம்; மழை வந்தபாடில்லை. யாகம் நடத்தினால், வருண பகவான் மகிழ்ந்து போய், மழையைத் தருவார் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். நாம் யாகம் செய்தால் என்ன?” என்று கேட்டார். அங்கிருந்தவர்களுக்கு யாகம் என்றால் என்னவென்று கூடத் தெரியவில்லை. அங்கிருந்த கோயிலுக்குச் சென்று, பூசாரியிடம் கேட்க, அவரும், ‘ஆமாம், மழைக்காக யாகம் செய்தால், மழை பெய்யக் கூடும்’ என்று சொன்னார். ஊர் மக்கள், ‘அந்த யாகத்தையும் நீங்களே செய்யுங்களேன்’ என்று சொன்னார்கள். அவரும், ‘பக்கத்து ஊரில் எனக்குத் தெரிந்த வேத விற்பன்னர் ஒருவர் இருக்கிறார். அவர் சிறந்த பக்திமான். இந்த மாதிரி யாகங்களை சிறப்பாக நடத்தக் கூடியவர். அவரை நம் ஊருக்கு அழைத்து வந்து, யாகத்தை நடத்தித் தரச் சொல்லலாம்’ என்றவுடன், ஊர் மக்கள் மிகவும் மகிழ்ந்து போய், ‘இத்தனை நாள் நாம் சும்மா இருந்து விட்டோமே; இப்பவே அவரை அழைத்து வரலாம்’ என்று கூறி, பூசாரியைக் கூட்டிக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றார்கள்.

வேத விற்பன்னரும், யாகம் நடத்தித் தரச் சம்மதித்து, அவ்வூருக்கு வந்தார். ஊரே திரண்டு இருந்தது. வேத விற்பன்னரோ, ‘நாளை காலை பத்து மணிக்கு நான் யாகத்தைத் தொடங்கப் போகிறேன். அந்த யாகத்திற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருள் எடுத்து வர வேண்டும்’ என்று கூறினார்.

மறுநாள் கோயிலின் முன்னே மக்கள் திருவிழாக் கூட்டமாய்த் திரண்டிருந்தார்கள். பண்டிதரும், யாகசாலை அமைத்து, யாகத்தைத் துவங்கத் தயாராக இருந்தார். ’ஒவ்வொருவரும், அவரவர் கொண்டு வந்திருந்த பொருட்களைக் காட்டுங்கள்’ என்றதும், ஒருவர் யாகம் வளர்க்க நெய், இன்னொருவர் யாகக் குண்டத்தில் போட மரத்துண்டுகள், பூக்கள், யாகக் கரண்டி, கோமியம் என்று அவரவர் கொண்டு வந்திருந்ததைக் கொடுத்தார்கள். அவர் அதையெல்லாம் பார்த்து திருப்தியடையவில்லை. அப்பொழுது ஒரு சிறுவன், தான் கொண்டு வந்திருந்த பொருளை, அவரிடம் காட்டினான். அதைப் பார்த்த பண்டிதர் முகத்தில் குபீரென மகிழ்ச்சி ரேகை ஓடி, திருப்தியுடன் சிரித்தார், கிருஷ்ணா! அது என்ன பொருள் என்று சொல், கிருஷ்ணா.....

சரி, நீ யோசித்துச் சொல்; நான் அடுத்த episode வரை காத்திருக்கிறேன்......

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2