ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 63

மேகலா : யுத்த களத்தில், துரோணர், பாண்டவ சேனையைப் பொசுக்கித் தள்ளியதைப் பார்த்து, துரியோதனன் வெற்றிக் களிப்பில் மூழ்கினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.

பின்னர், துரியோதனனுக்கும், பீமனுக்குமிடையே பெரும் யுத்தம் நடந்தது. துரியோதனன் படை ஒரு நிலையில் சிதறவே, துரியோதனனுக்கு உதவியாக, பகதத்தனும் வந்து சேர்ந்தான்; அவன் பெரும் போர் செய்தான். பகதத்தனின் யானை மிகவும் விசேஷமானது. இந்திரனுடைய ஐராவதத்திற்கு நிகரான அந்த யானையை போர்க்களத்தில் பகதத்தன் அற்புதமாகச் செலுத்தத் தெரிந்தவன். அவன் பாண்டவ சேனையை மீண்டும் மீண்டும் விரட்டிக் கொண்டிருந்தான்.

அர்ஜுனன், ஸம்சப்தர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்த வேளையில், பகதத்தனின் யானை பிளிறும் சப்தத்தை அர்ஜுனன் கேட்டான். பயங்கரமான அந்த ஒலியைக் கேட்ட அர்ஜுனன், கிருஷ்ணரிடம், ‘கிருஷ்ணா, இந்த ஒலி பகதத்தனின் யானை எழுப்பும் ஒலிதான். அவனுடைய யானைக்குச் சமமான யானையை நான் எந்த யுத்தத்திலும் பார்த்தது கிடையாது. அந்த யானை, ஆயுதங்களின் கூர்மையையும், நெருப்பின் உஷ்ணத்தையும், சர்வ சாதாரணமாகத் தாங்கிக் கொண்டு, சண்டையிடக் கூடியது'. இவர்களால் பாண்டவ சேனையே அழிந்து விடுமோ என்று தன் அச்சத்தைக் கூறி, தன் தேரைத் திருப்பினான். ஸம்சப்தர்கள், அர்ஜுனனைக் கூவி போருக்கு அழைத்தார்கள்.

‘போரிடும் ஸம்சப்தர்களை வென்று விட்டு, பகதத்தனை எதிர்க்கலாம்’ என்று கிருஷ்ணர் சொல்லவும், ஸம்சப்தர்களை எதிர்த்துத் தொடர்ந்து போர் செய்வதுதான் தன் கடமை என்பதை அறிந்து, முன்னிலும் உக்கிரமாக ஸம்சப்தர்களுடன் போர் புரிந்து, அவர்களில் பலரையும் கொன்று வீழ்த்தினான். அதன் பிறகு, அர்ஜுனன் கேட்டுக் கொண்டபடி, கிருஷ்ணார், அவனுடைய தேரைப் பகதத்தன் இருந்த இடத்தை நோக்கிச் செலுத்தினார்.
முதுமையை அடைந்து விட்ட பகதத்தன், இளமை சற்றும் குன்றாதவனாகப் போரிட்டுக் கொண்டிருந்தான். அர்ஜுனன் எதிர்த்து வந்த போதும், பகதத்தனின் யுத்த வேகம் தணியவில்லை. கண்டோர் வியக்கும்படியான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அர்ஜுனனை வீழ்த்தி, யுத்தத்தையே முடித்து விட விரும்பிய பகதத்தன், ‘வைஷ்ணவாஸ்திரம்’ என்ற அஸ்திரத்தை அர்ஜுனன் மீது பிரயோகித்தான். பாய்ந்து வந்த மிகவும் பயங்கரமான அந்த அஸ்திரம், அர்ஜுனனைத் தாக்குவதற்கு முன்பாக, கிருஷ்ணர் அதன் பாதையில் நின்று, தன்னுடைய மார்பில் அதைத் தாங்கினார். அப்பொழுது அது, ‘வைஜெயந்தி’ என்ற மாலையாக மாறி, அவருடைய கழுத்தில் விழுந்து, மார்பை அலங்கரித்தது.

அதைக் கண்ட அர்ஜுனன், தான் அவமதிக்கப்பட்டதாக நினைத்தான். ‘என்னால் எதிர்க்க முடியாத அஸ்திரமே கிடையாது என்பது உனக்குத் தெரியும். இந்த அஸ்திரத்தை ஏன் நீ தடுத்தாய்?’ என்று கேட்டான். ‘இந்த அஸ்திரத்தை நீ தாங்கியது என்னுடைய வீரத்தை அவமதிப்பது போல அல்லவா இருக்கிறது?’ என்று கூறி அர்ஜுனன் வருத்தப்பட்டான்.
‘அர்ஜுனா! பகதத்தன் ஏவியது ‘வைஷ்ணவாஸ்திரம்’ என்ற மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம். இதைத் தடுக்கும் திறன், என்னைத் தவிர உலகில் யாருக்கும் கிடையாது. பூமாதேவி கேட்டுக் கொண்டதின் பேரில், நரகன் என்ற மகனையும், அவனுக்கு வைஷ்ணவாஸ்திரத்தையும் கொடுத்தேன். அந்த அஸ்திரம் அவன் வழித்தோன்றலாகிய பகதத்தனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதை எதிர்க்கும் சக்தி உனக்கோ, வேறு யாருக்குமோ கிடையாது. இது என்னால் அளிக்கப்பட்ட அஸ்திரம். என் ஒருவனால் மட்டும் தான் அதைத் தாங்க முடியும் என்பதால், என் மார்பில் ஏந்தினேன். இது உன்னுடைய வீரத்திற்கு இழுக்கு ஆகாது’.

’அர்ஜுனா! பகதத்தன் முகத்தில், வயோதிகத்தினால் சதைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதை இழுத்துக் கட்டி, தலைப்பாகையை இறுகக் கட்டியிருக்கிறான். அந்தத் தலைப்பாகை அகன்று விட்டால், அந்த சதைகள் கீழே விழுந்து, அவன் கண்ணை மறைத்து விடும். அப்பொழுது, அவனால் யுத்தம் செய்ய முடியாது. அந்த நேரத்தில், நீ அவனை வீழ்த்துவது எளிதாக இருக்கும். ஆகையால், அவனது கண்ணை மூடாத வகையில் சதைகளை மேலே இறுக்கிப் பிடித்திருக்கும் தலைப்பாகையை முதலில் அறுத்து வீழ்த்து’ என்று கிருஷ்ணர் கூறினார்.

அர்ஜுனனும், ஒரு அம்பை எய்து அவ்வாறே செய்தான். பகதத்தனின் தலைப்பாகை அறுந்தது. அந்தத் தலைப்பாகையினால் அது வரை மேலே இழுத்துப் பிடிக்கப்பட்டிருந்த சதைகள் கீழே தொங்கின. அவனுடைய கண் முழுமையாக மூடி மறைக்கப்பட்டது. பகதத்தன் எங்கும் இருள் சூழ்ந்தது போல உணர்ந்தான். அந்தச் சமயத்தில், அர்ஜுனன் பல பாணங்களை எய்து, பகதத்தனை வீழ்த்தினான். பகதத்தன் இறந்து போனான்.
பகதத்தன் மடிந்த பிறகு, அர்ஜுனன் மற்றவர்கள் மீது தொடுத்த போரின் காரணமாக, தர்மனைப் பிடிப்பது என்பது இயலாத காரியமாகியது. துரியோதனனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற துரோணரால் முடியவில்லை. பன்னிரெண்டாவது நாள் யுத்தம் முடிவடைந்தது.

மேகலா : கிருஷ்ணா! துரோணர், தர்மனை உயிருடன் பிடிக்க அர்ஜுனனை திசை திருப்புகிறார். இது ஒரு தந்திரம். பகதத்தன் எய்த அஸ்திரத்தை கிருஷ்ணர் தாங்குகிறார். தலைப்பாகையை அறுக்கச் சொல்லி உபாயம் செய்கிறார். Technical movement ஆரம்பமாகி விட்டது, கிருஷ்ணா! தந்திரங்கள் தர்மங்களாகப் பார்க்கப்படுகின்றன. திறமையாளர்களுக்குக் கூட உபாயமும், தந்திரமும் தேவைப்படுகிறது. தொடைநடுங்கிகள் கூட பாதுகாக்கப்படுகிறார்கள்.

கிருஷ்ணர் : சில சமயங்களில், தெய்வ அனுக்ரஹம் என்பது இப்படித்தான் கிடைக்கக் கூடும் மேகலா! Game, tough ஆகும் போது. கொஞ்சம் சாமர்த்தியம் தேவைதான். சரி..., இந்தப்பக்கம், ஒரு பெரிய இழப்பு வர இருக்கிறது. பார்க்கலாம்..., வா.

அபிமன்யு மாண்டான்

பன்னிரெண்டாம் நாள் யுத்தம் முடிந்த பிறகு, துரியோதனன் துரோணரை அணுகி, ‘மரியாதைக்குரியவரே, யுத்தத்தில் உம்மை எதிர்த்து நிற்கும் சக்தி எவனுக்கும் கிடையாது. தருமபுத்திரனைப் பிடிக்க வேண்டும் என்று நீர் முனைந்து விட்டால், அதன் பிறகு பாண்டவர் தரப்பில் தேவர்களே வந்து நின்றாலும், தருமபுத்திரனால் தப்ப முடியாது. ஆனால் நீரோ, தருமபுத்திரனைப் பிடித்துத் தருவதாக என்னிடம் கூறி விட்டு, அதற்கு மாறாக நடந்து கொண்டு விட்டீர்கள். உங்களுக்கு அவனைப் பிடித்துக் கொடுப்பதில் விருப்பமில்லை என்று நான் நினைக்கிறேன்’ என்று கூறினான்.

துரோணர், ‘துரியோதனா! நான் உனக்கு நன்மை செய்வதிலேயே கருத்து உடையவனாக இருக்கிறேன். ஆனால் நீயோ, என்னைத் தவறாக நினைக்கிறாய். ஸ்ரீ கிருஷ்ணரைச் சாரதியாகக் கொண்ட அர்ஜுனன், தர்மனுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பொழுது, தர்மனைப் பிடிப்பது என்பது நடக்காத காரியம். இன்னும் அர்ஜுனனைப் போக்குக் காட்டி, வேறு புறம் அழைத்துச் சென்றால், பாண்டவர் தரப்பில் ஒரு மிகப் பெரிய மஹாரதனை இன்றைய யுத்தத்தில் உனக்காக வீழ்த்துகிறேன். யாராலும் பிளக்க முடியாத பத்மவியூகத்தை அமைத்து பாண்டவர் தரப்பு அதிரதன் ஒருவனை அதில் சிக்க வைத்து வீழ்த்துகிறேன். ஆனால், நான் ஏற்கனவே உனக்குச் சொன்ன மாதிரி அர்ஜுனன் அந்த இடத்தில் நம்மை எதிர்க்கக் கூடாது’ என்று கூறினார்.

பதின்மூன்றாம் நாள் யுத்தம் தொடங்கியது. அந்த நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் காண்போமா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1