ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 68

சாத்யகியின் இழிசெயல்

மேகலா : அர்ஜுனனுக்குத் துணையாக நிற்பதற்காக பீமனும், சாத்யகியும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். பீமனைக் கர்ணன் எதிர்த்தான். இருவருக்கும் இடையே பயங்கரமான யுத்தம் ஏற்பட்டது. பீமன், துரியோதனனின் சகோதரன் துச்சலனைக் கொன்றான்.

துரியோதனன், துரோணரிடம் நெருங்கித் தன் கவலையைத் தெரிவித்தான். ‘உம்மைக் கடந்து பீமனும், சாத்யகியும் எப்படி அர்ஜுனனை நெருங்கினார்கள்’ என்றவுடன், துரோணர், ’இப்பொழுது இதைப் பேசிப் பயனில்லை. ஜயத்ரதனைக் காப்பாற்றுவதுதான் நம் கடமை. அன்று சூதாட்டத்தில் சகுனி உருட்டிய காய்கள் இப்பொழுது அம்புகளாக மாறி நம்மை எதிர்க்கின்றன. இன்று பந்தயப் பொருளாக ஜயத்ரதன் வைக்கப்பட்டிருக்கிறான். அவனை நாம் காப்பாற்றி விட்டால், அர்ஜுனன் தீயில் விழுவான். நாம் எல்லோரும் ஜயத்ரதனைக் காப்போம்’ என்று சொன்னார்.

மீண்டும் பீமனைத் தடுப்பதில் கர்ணன் முனைந்தான். பீமன் அர்ஜுனனை நோக்கிச் செல்லவே விரும்பியதால், கர்ணன் பீமனைப் பரிகசித்தான். தன்னைப் பழித்துப் பேசிய கர்ணனை, பீமன் நெருங்கி வந்து எதிர்த்தான். கர்ணனுக்கு உதவியாக வந்த துரியோதனன் சகோதரர்கள் மேலும் 30 பேர் பீமனால் கொல்லப்பட்டனர். அப்பொழுது பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையே உக்கிரமான போர் நடந்தது.

இந்தப் போரில் ஒரு சமயம் கர்ணனைக் கொல்ல பீமனுக்கு வாய்ப்புக் கிட்டியது. கர்ணனைக் கொல்வதாக அர்ஜுனன் சபதம் செய்திருப்பதால், பீமன் கர்ணனைக் கொல்லவில்லை. மற்றொரு சமயம் பீமனின் கை தாழ்ந்த போது, கர்ணனுக்கு பீமனைக் கொல்ல வாய்ப்புக் கிடைத்த போது, குந்தியிடம் ‘அர்ஜுனனைத் தவிர மற்ற பாண்டவ சகோதரர்களைக் கொல்வதில்லை’ என்று வாக்குக் கொடுத்ததால், பீமனைக் கொல்லாமல் கை விட்டான்.

இப்படி அதிசயமான போர் நடந்து கொண்டிருந்த பொழுது, சாத்யகியை, பூரிசிரவஸ் எதிர்த்தான். ஆனால், சாத்யகி, பூரிசிரவஸை விட்டு விலகி அர்ஜுனனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது பூரிசிரவஸ், ‘முன்னொரு காலத்தில் ராமனின் சகோதரன் லட்சுமணன், ராவணனின் மகன் இந்திரஜித்தைக் கொன்றது போல, இப்பொழுது நான் உன்னைக் கொன்று விடப்போகிறேன். அதனால் ஊக்கமிழந்து கிருஷ்ணர், அர்ஜுனன், தருமன் ஆகியோர் யுத்தத்தை விட்டு விலகப் போகிறார்கள்’ என்ற பூரிசிரவஸின் பேச்சைக் கேட்டு, சாத்யகி அஞ்சவில்லை. ‘தேவையில்லாத கர்ஜனையைச் செய்யாதே. உன்னை நான் கொல்லாமல் விடப்போவதில்லை’ என்றான் சாத்யகி.

இருவரும், ஒருவர் மீது ஒருவர் அம்புமழையைப் பொழிந்தனர். பூரிசிரவஸின் கை ஓங்கிக் கொண்டே இருந்தது. இதைக் கவனித்த கிருஷ்ணர், அர்ஜுனனிடம், சாத்யகிக்கு உதவியாகச் சென்று அவனைக் காப்பாற்றுமாறு அர்ஜுனனைத் தூண்டினார்.

அர்ஜுனன், ’பூரிசிரவஸைக் கொன்று, சாத்யகியைக் காப்பாற்றுவது எளிதே. ஆனால், பூரிசிரவஸ் என்னை எதிர்க்காமல் இருக்கும் பொழுது, அவனை நான் எப்படிக் கொல்வது? இது க்ஷத்திரிய தர்மம் ஆகுமா? நீர் சரி என்று சொன்னால், அதன்படி செய்கிறேன்’ என்று கூறிக் கொண்டே, சாத்யகிக்கும், பூரிசிரவஸுக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தைக் கவனிக்கத் தொடங்கினான்.

அர்ஜுனன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, பூரிசிரவஸ் உறையிலிருந்து வாளை உருவினான். மற்றொரு கையினால் சாத்யகியின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கினான். வாளை ஏந்திய கையினால் சாத்யகியை வெட்டுவதற்காக, அந்தக் கையை உயரே தூக்கினான். சாத்யகி ஒழிந்தான் என்று நினைத்து எல்லோரும் அந்தக் காட்சியைப் பார்த்து மலைத்து நின்றார்கள்.

‘யாருக்காகவும் நான் செய்யாத காரியத்தை என் சிஷ்யன் சாத்யகிக்காகச் செய்கிறேன்’ என்று கூறிக் கொண்டே, அர்ஜுனன் வாள் ஏந்திய பூரிசிரவஸின் கையைப் பார்த்து ஒரு அம்பைச் செலுத்தினான். பூரிசிரவஸின் வாள் ஏந்திய வலக்கரம் துண்டிக்கப்பட்டுக் கீழே விழுந்தது.
இந்த நிகழ்ச்சி நடந்த போது, பூரிசிரவஸ், சாத்யகியை எதிர்த்து யுத்தம் செய்தான்.

தன் கண்பார்வையில் படாமல் இருந்த அர்ஜுனன் அம்பு எய்து தனது கையை வெட்டி வீழ்த்தியதைப் பார்த்து, ‘அர்ஜுனா! நான் வேறு ஒருவருடன் யுத்தம் செய்து கொண்டிருந்த போது, இத்தகைய கீழ்த்தரமான செயலைச் செய்திருக்கிறாயே.... இத்தகைய போரை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? இந்த வெட்கம் கெட்ட செயலை மற்றவர்களுக்கு எப்படி எடுத்துரைக்கப் போகிறாய்? யுத்தத்தில் இப்படி நடந்து கொள்ள, உனக்குக் கற்றுக் கொடுத்தது யார்? உன் ஆச்சாரியர் துரோணரா? உன் தவத்தை மெச்சி வரமளித்த பரமசிவனா? இத்தகைய அற்பச் செயலை கிருஷ்ணனைத் தவிர வேறு யாரும் உனக்குக் கற்றுக் கொடுக்க முடியாது’ என்று கூறிவிட்டு, தேர்த்தட்டில் தியானத்தில் அமர்ந்தான்.
கிருஷ்ணர், பூரிசிரவஸிடம், ‘கருடன் மீதேறி மேலுலகத்துக்குச் செல்வாய்’ என்று ஆசிர்வதித்தார்.

அச்சமயம், யாரும் எதிர்பாராத செயல் ஒன்று நடந்தது. சாத்யகி, தியானத்தில் ரிஷி போல அமர்ந்திருந்த பூரிசிரவஸின் தலைமுடியைப் பற்றித் தூக்கி, அவன் கழுத்தை அறுத்துத் தள்ளினான்.
சாத்யகியின் இந்த இழிசெயலைக் கண்டு, பலரும் அவனை நிந்தித்துப் பேசினார்கள். சாத்யகி இகழப்பட்டான். பூரிசிரவஸ் நல்ல உலகம் எய்தினான்.

மேகலா : ஏன் கிருஷ்ணா! இந்த சாத்யகி யார்? அர்ஜுனனின் சிஷ்யனா?!

கிருஷ்ணர் : ஆம்! அர்ஜுனன், தான் அறிந்த அஸ்திர வித்தைகளை சாத்யகிக்குக் கற்றுத் தந்திருக்கிறான். இருவரும் நல்ல நண்பர்கள்!

மேகலா : சரி! போரில் ஒருவரோடு ஒருவர் போர் புரியும் போது இன்னொருவர் குறுக்கே வரக் கூடாதா? ஏன் பூரிசிரவஸ் அர்ஜுனனைத் திட்டுகிறான்?

கிருஷ்ணர் : யுத்த நெறிகள் என்று ஒரு ‘கட்டுப்பாடு’, ‘விதி’ யுத்தம் ஆரம்பிக்கும் முன்னேயே வகுக்கப்பட்டிருக்கிறது. ’ஆயுதம் ஏந்தாதவருடன் போரிடக் கூடாது’, ‘போரிலிருந்து விலகுபவரைத் தாக்கக் கூடாது’, ஆகியவை விதிகளுள் முக்கியமானவை. வேறு ஒருவருடன் போர் செய்பவரை, எக்காரணம் கொண்டும் தாக்கக் கூடாது. பாரதப் போரில் ஆங்காங்கே விதிகள் மீறத்தான் செய்கிறது.

மேகலா : ஓஹோ! எனக்கென்னமோ இது தப்பாகத் தெரியவில்லை. பூரிசிரவஸ் லக்‌ஷ்மணனோடு தன்னையும், இந்திரஜித்தோடு சாத்யகியையும் ஒப்பிடுகிறானே....; this is too much....

கிருஷ்ணர் : உன்னிடம் கலிகாலத்தின் தாக்கம் நிறைய இருக்கிறது! பூரிசிரவஸ், லக்‌ஷ்மணனும் கிடையாது; சாத்யகி, இந்திரஜித்தும் கிடையாது. பூரிசிரவஸ், பொறாமையும், மூர்க்கத்தனமும் நிறைந்த துரியோதனனின் ஆள்.

மேகலா : அது மட்டுமல்ல, கிருஷ்ணா! என்ன செய்தாவது துரியோதனன் தரப்பு தோற்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

கிருஷ்ணர் : இனி அப்படித்தான் வரும். அடுத்து பார்ப்போம்.

(ஜயத்ரதன் வதத்தோடு அடுத்த பகுதி ஆரம்பமாகும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2