ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 71

மேகலா : பதினான்காம் நாள் யுத்தம் தொடர்ந்து இரவிலும் நடந்து கொண்டிருந்தது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். ஒரு பகுதியில், பீமன் கௌரவ சேனைக்குப் பெரும் நாசத்தை விளைவித்துக் கொண்டிருந்தான். சாத்யகியினால் கொல்லப்பட்ட பூரிசிரவஸின் தந்தையாகிய சோமதத்தன், ’சாத்யகியின் தலையை இப்போது நான் அறுக்கப் போகிறேன் என்று கூறி, சாத்யகியுடன் போர் புரிந்தான்.

சாத்யகி, ‘பூரிசிரவஸ் மட்டுமல்ல, அவன் தந்தையாகிய நீயும், கர்ணன், சகுனி போன்ற எல்லோரும் என் கையால் மரணமடையப் போகிறீர்கள்” என்று கூறி, சோமதத்தனை எதிர்ப்பதில் முனைந்தான். சோமதத்தனுக்கு ஆதரவாக துரோணர் சேர்ந்து கொண்டு, சாத்யகியை எதிர்த்தார்.
இதைப் பார்த்த அர்ஜுனனும், பீமனும் துரோணரைத் தாக்க, அவரை நெருங்கினார்கள். அவர்களோடு பல வீரர்களும் சேர்ந்து கொண்டார்கள். மிகக் கோரமான யுத்தம் தொடங்கியது.

இதற்கிடையில், அஸ்வத்தாமா கடோத்கஜனை வீழ்த்தி விடுவது என்ற வைராக்கியத்துடன், அவனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தான். கடோத்கஜன், மாயாஜாலம் நிறைந்த யுத்தத்தை நடத்தினான். அதை எதிர்க்க, கௌரவப் படையில், அஸ்வத்தாமாவைத் தவிர வேறு யாரும் துணியவில்லை. கடோத்கஜனின் அரக்கர் படையே அஸ்வத்தாமாவை எதிர்த்தது. அவர்களையெல்லாம், அஸ்வத்தாமா வென்று வீழ்த்தினான். பிறகு இறுதியில், ஒரு அஸ்திரத்தை ஏவி, கடோத்கஜனின் மார்பைப் பிளந்து அவனைத் தரையில் வீழ்த்தினான். அப்போது கடோத்கஜனுக்கு உதவியாகப் போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டத்யும்னன், உடனே அந்த இடத்திலிருந்து கடோத்கஜனின் உடலைத் தேரில் வைத்து ஓட்டிக் கொண்டு விலகி விட்டான்.

மேகலா : பதினான்காவது நாள் யுத்தம் முடிந்தபாடில்லை. இவனை அவன் எதிர்த்தான்; அவனை இவன் எதிர்த்தான். உக்கிரமான போர்.... போர்.... போர்.... இதைத் தவிர வேறு ஒன்றும் சிறப்பாக இல்லை.

கிருஷ்ணர் : இருப்பினும், ஜயத்ரதன் வீழ்ச்சி, கௌரவர்களுக்குக் கொடுத்த நெருக்கடி தானே...!

மேகலா : ஆமாம் கிருஷ்ணா! தெய்வத்தின் அருளினால் தான், அதாவது கிருஷ்ணரின் உபாயத்தினால் தான் அர்ஜுனனால், ஜயத்ரதனைக் கொல்ல முடிந்தது என்று அர்ஜுனனே ஒத்துக் கொள்கிறான். ஆனாலும், துரியோதனனோ, அர்ஜுனனின் வீரத்தைச் சிலாகிக்கிறான்.

கிருஷ்ணர் : அத்தனை வீரர்களையும் கடந்து வந்தான் என்றால் சும்மாவா... போரிட்டு, அவர்களை வீழ்த்தி, வியூகத்தை உடைத்து, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வருவது, அர்ஜுனனின் போர்த் திறமையால் தானே. உபாயம் என்பது, இதைத் தாண்டி எப்படிக் கொல்வது என்று யோசித்தோம். மற்றப்படி, அர்ஜுனன் வீரர்களை எதிர்த்துத்தான் கடந்து வந்தான். ஆனாலும், துரியோதனனின் புலம்பலும், துரோணர், கர்ணனின் பதிலும் நெத்தியடி!

இரவில் யுத்தம்

மேகலா : கடோத்கஜன் கொல்லப்பட்டான் என்று கருதி, அவன் உடலைத் தூக்கிக் கொண்டு திருஷ்டத்யும்னன், அந்த இடத்தை விட்டு விலகினான். அப்போது அவன் உயிர் பிரியவில்லை என்பதை உணர்ந்தான்.
அஸ்வத்தாமா, கடோத்கஜனை வீழ்த்திய பிறகு, அவன் படையினரைக் கொன்று தீர்த்தான். அதைப் பார்த்த தர்மனும், பீமனும் மீண்டும் யுத்தத்தில் முனைந்தார்கள். துரோணர், தர்மரை எதிர்த்தார். அர்ஜுனனும், பீமனும் துரோணர் மீது அம்புமாரி பொழிந்தார்கள். பீமன், துரியோதனின் சகோதரர்கள் 13 பேரைக் கொன்றான். அச்சமயம், துரியோதனன், கர்ணனை நெருங்கி, தன் படைவீரர்களைக் கர்ணன் தான் காப்பாற்ற வேண்டும் என்று உற்சாகப்படுத்தினான். கர்ணன், ‘என்னிடம் இருக்கும் சக்தி ஆயுதத்தினால், அர்ஜுனனை நான் வீழ்த்துவேன்’ என்று உற்சாகத்தோடு கூறினான்.

அதைக் கேட்ட கிருபர், ‘அப்படி நடந்தால் போற்றத் தக்கதே. இருப்பினும் நீ அர்ஜுனனை பலமுறை எதிர்த்துத் தோல்வியுற்றவன். கிருஷ்ணரின் உதவி பெற்ற பாண்டவர்களை, உன்னால் கொல்ல முடியாது. தற்புகழ்ச்சி செய்வதை விடுத்து, உன் வீரத்தைச் செயலில் காட்டுவாயாக’ என்று ஏளனமாகப் பேசினார்.

கிருபர் பேசியதைக் கேட்ட கர்ணனுக்குக் கோபம் வந்தது. ‘மனதில் உள்ள எண்ணத்தினால் மட்டுமே நான் வீரன் என்று கூறினீர்கள். மனதில் உண்மையான முயற்சி செய்பவனுக்குத் தெய்வமே உதவுகிறது. நீர் யுத்தம் செய்வதற்குத் திறனற்ற பிராமணர். அதிலும், பாண்டவர்களிடத்தில் அன்பு வைத்தவர். அதனால் தான் என்னை அவமதித்துப் பேசுகிறீர். நம் தரப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்களை இழந்தோம் என்று கூறுகிறீர். ஆனால், பாண்டவர் தரப்பிலும் பெரும் இழப்பு நேரிட்டிருக்கிறது. என்னிடம் வல்லமை இருக்கும் வரை இந்தப் பாண்டவர்களை யுத்தத்தில் நான் எதிர்ப்பேன். மீண்டும் ஒரு முறை என் வீரத்தை இகழ்ந்து நீர் பேசினால், நான் உமது நாக்கை அறுப்பேன்’.

கர்ணன் இப்படிப் பேசியதைக் கேட்ட அஸ்வத்தாமா, தன்னுடைய தாயாரின் சகோதரராகிய கிருபாச்சாரியாரைக் கர்ணன் அவமதித்ததாகக் கருதி, கோபம் கொண்டான். கர்ணனைக் கொன்று விடவே முனைந்து விட்ட அஸ்வத்தாமாவை, கிருபரும், துரியோதனனும் தடுத்தார்கள். அதற்குக் கர்ணன், அஸ்வத்தாமாவைத் தானே கொன்று விடுவதாகவும் கூறினான். இப்படி, கௌரவர் தரப்பில் பெரும் குழப்பம் நேரிட்டது.

கர்ணனும், அஸ்வத்தாமாவும் மீண்டும் யுத்தத்தில் முனைந்தார்கள். கர்ணன் அப்போது செய்த யுத்தம் புகழத் தக்கதாக இருந்தது. அவனை எதிர்த்த பாண்டவர் படையினர், கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டு கீழே விழுந்தனர். அர்ஜுனனிடமிருந்து, கர்ணனைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் அஸ்வத்தாமா, அர்ஜுனனை எதிர்த்துச் சென்றான். அவனுடன், கிருபர், சல்லியன் போன்றவர்களும் அர்ஜுனனை எதிர்த்தனர்.

அர்ஜுனன், கர்ணனை அம்புகளால் துன்புறுத்தினான். கர்ணனோ, அர்ஜுனனுக்கு நிகராகப் போர் புரிந்து, அவனை எதிர்கொண்டான். மதம் பிடித்த இரண்டு யானைகள் ஒன்றையொன்று எதிர்த்துச் சண்டையிடுவது போல இருந்தது. இதைப் பார்த்த துரியோதனன், கர்ணனைப் பாதுகாக்க, அர்ஜுனனை நோக்கித் தன் தேரைச் செலுத்தினான்.

அஸ்வத்தாமா, துரியோதனனிடம் சென்று, 'நான் இருக்கும் பொழுது, அர்ஜுனனை நீர் எதிர்க்கத் தேவையில்லை. நானே அவனைத் தடுத்து நிறுத்துகிறேன்’ என்று கூறினான்.

துரியோதனன் நம்பிக்கையின்றிப் பேசினான். ‘உம்முடைய தகப்பனாராகிய துரோணர், பாண்டவர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவராக இருக்கிறார். நீரும் உமது தந்தை போல் தான் நடந்து கொள்கிறீர். தருமனுக்கு விருப்பமான காரியத்தைச் செய்ய விரும்புகிறீர். யுத்த சாத்திரத்தில் பரமசிவனுக்கு நிகரானவர் நீர் என்று உம்மைப் பலர் வர்ணிக்கிறார்கள். இத்தனை பராக்கிரமசாலியான நீர் பாண்டவர் படையை இன்னும் அழிக்காமல் இருப்பது ஏன்?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகப் பேசினான்.
அஸ்வத்தாமா, மிகவும் வருத்தமுற்று, ‘பாண்டவர் பால் எங்களுக்கு அன்பு இருக்கிறது உண்மைதான். ஏனென்றால், அவர்களுக்கு எங்கள் மீது மதிப்பும் அன்பும் இருக்கிறது. ஆனால், இந்தக் காரணத்தினால், போர்க்களத்தில் உன்னை நாங்கள் யாரும் விட்டுக் கொடுக்கவில்லை. உயிரை இழக்கத் துணிந்து தான் உனக்காக யுத்தம் செய்கிறோம். இப்போதும் சொல்கிறேன்; நான் மேலும் உக்கிரமான போர் புரியப் போகிறேன். அதைக் கண்டு தருமபுத்திரன், இந்த உலகமே லட்சக்கணக்கான அஸ்வத்தாமாக்களினால் நிரப்பப்பட்டு விட்டதோ என்று திகைக்கப் போகிறான்.

இப்படிக் கூறி விட்டு, பாண்டவர் படையை நாசம் செய்யத் தொடங்கிய அஸ்வத்தாமாவை, திருஷ்டத்யும்னன் எதிர்த்தான். திருஷ்டத்யும்னனின் தேரோட்டிகள், குதிரைகள் எல்லோரையும் அஸ்வத்தாமா வீழ்த்தினான். இதன் பிறகு, தர்மனும், பீமனும் அஸ்வத்தாமாவைச் சூழ்ந்து கொண்டார்கள்.

மேலும் நடந்த போர் நிகழ்வுகளை அடுத்த பகுதியில் காணலாம்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1