ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 77

முக்கண்ணனின் மகிமை

மேகலா : அஸ்வத்தாமா, நாராயணாஸ்திரத்தை ஏவியவுடன், பாண்டவர் தரப்பு வீரர்களைப் பார்த்து ஆயுதங்களைக் கீழே போடுமாறு கூறிய கிருஷ்ணர், மேலும் தொடர்ந்தார். ‘கையில் ஆயுதம் தாங்கிக் கொண்டு வருபவர்களை இந்த நாராயணாஸ்திரம் நிச்சயமாக வீழ்த்தி விடும். இதை அடக்குவதற்கு உண்டான ஒரே வழி, இதனிடம் சரணடைந்து விடுவதே! நாம் அமர்ந்துள்ள வாகனங்களையும், ரதத்தையும் விட்டுக் கீழே இறங்கி விட வேண்டும். இந்த அஸ்திரம் நாராயணனைப் போன்றது. எந்த மனிதர்கள் இதை எதிர்க்க நினைக்கிறார்களோ, அவர்கள் அழிவார்கள். அனைவரும் நாராயணாஸ்திரத்தை நோக்கி கை கூப்பி நில்லுங்கள்’.

இப்படிக் கிருஷ்ணர் கூறியவுடன், அனைவரும் அஸ்திரங்களைக் கீழே போட்டார்கள். ஆனால், பீமன் மட்டும் கிருஷ்ணருடைய வார்த்தைகளுக்கு இணங்கவில்லை. பீமன், ‘யாரும் அஸ்திரங்களைக் கீழே எறியாதீர்கள். இந்த அஸ்திரத்தை நான் தடுத்து விடுகிறேன். என் கையில் இருக்கும் ‘கதை’யைக் கொண்டு நாராயணாஸ்திரத்தை நான் நாசம் செய்கிறேன்’ என்று அஸ்வத்தாமாவை எதிர்த்துப் போர் செய்வதைத் தொடர்ந்தான். மற்ற எல்லா வீரர்களும், தங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி, ஆயுதங்களைக் கீழே எறிந்தார்கள். நாராயணாஸ்திரம் பீமனைப் பொசுக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அர்ஜுனன், வர்ணாஸ்திரத்தை ஏவி, அதன் சூட்டைத் தணிக்க முயன்றான். கிருஷ்ணரும், அர்ஜுனனும் பீமனைத் தேரில் இருந்து இறக்கி, ஆயுதத்தைக் கீழே போடுமாறு செய்தார்கள். உடனே நாராயணாஸ்திரம் தணிந்து விட்டது. இதைக் கண்ட பாண்டவ சேனை, உற்சாகம் அடைந்தது. முன் போலவே முனைப்புடன் போரில் இறங்கியது.

இதைக் கண்ட துரியோதனன், அஸ்வத்தாமாவை அணுகி, மறுமுறை நாராயணாஸ்திரத்தை ஏவும்படி வற்புறுத்தினான். அதற்கு அஸ்வத்தாமா, ’நாராயணாஸ்திரம் மறுமுறை பிரயோகிக்கத்தக்கது அல்ல’ என்று கூறினான்.

துரியோதனன், ‘நமது குருவினைக் கொன்றவர்களைக் கொல்ல வேண்டாமா? வேறு ஏதாவது அஸ்திரத்தை ஏவி, அவர்களை வீழ்த்திக் கொல்லுங்கள். பரமசிவனுக்கு நிகராக உம்மிடத்தில் அஸ்திரங்கள் வாசம் செய்கின்றன. அவர்களை வீழ்த்துவதில் முனையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டான்.

அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அஸ்வத்தாமா, திருஷ்டத்யும்னனை எதிர்த்து, அவனைக் கலக்கமுறச் செய்தான். அவனைக் காக்க வந்த சாத்யகியையும், தாக்கத் தொடங்கினான். சாத்யகியின் உடம்பில் அம்பு பட்டு, ரதத்தில் சாய்ந்த நிலையில் அவனுடைய தேரோட்டி அங்கிருந்து தேரை ஓட்டிச் சென்றான்.

இந்நிலையில் பீமன், அஸ்வத்தாமாவைக் கடுமையாக எதிர்த்தான். அஸ்வத்தாமா மிகவும் களைப்புற்றான். இருப்பினும், பீமனின் தேரோட்டி மூர்ச்சையுற்றதால், குதிரைகள் நிலை குலைந்தன. அஸ்வத்தாமாவின் வீரம், அர்ஜுனனைக் கோபமுறச் செய்தது. அஸ்வத்தாமாவை எதிர்க்க, அர்ஜுனன் கடுமையாகப் போர் செய்யத் தொடங்கினான்.

இதைக் கண்ட அஸ்வத்தாமா பகைவர் கூட்டத்தை அழிப்பது என்று தீர்மானித்து, ‘ஆக்னேய’ அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தான். தீப்பந்தங்கள் வானிலிருந்து கீழே விழுந்தன. இப்படிப் பெரும் நாசத்தை விளைவிக்கத் தொடங்கிய ஆக்னேய அஸ்திரத்தை அடக்குவதற்காக, அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். சற்று நேரத்தில், ஆக்னேய அஸ்திரத்தினால் உண்டாக்கப்பட்ட இருள் விலகியது. குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பாண்டவர் சேனை நிம்மதியடைந்தது.
தான் எய்த ஆக்னேய அஸ்திரம் வீணாகிப் போனதைக் கண்ட அஸ்வத்தாமா, பெரிதும் விரக்தியுற்றான். இப்படி அஸ்வத்தாமா விரக்தியுற்று நின்ற சமயத்தில், அங்கு வியாசர் வந்தார். வேதங்களுக்கெல்லாம் உறைவிடமான வியாசரை வணங்கி நமஸ்கரித்து, தன்னுடைய மனக்கவலையைத் தெரிவித்தான்.

‘என்னுடைய இந்த அஸ்திரத்தை கிருஷ்ணரும், அர்ஜுனனும் வென்றது எப்படி? மகிமை வாய்ந்த இந்த அஸ்திரம், அவர்கள் முன்னால் செயலற்றுப் போனதற்கு என்ன காரணம்? தயவுசெய்து எனக்கு விளக்குங்கள்’ என்று வியாசரிடம் கேட்டுக் கொண்டான்.
வியாசரும், ‘ஸ்ரீமன் நாராயணன் மூத்தோருக்கெல்லாம் மூத்தவர்; உத்தமருக்கெல்லாம் உத்தமர். அவர், தருமனுக்கு மகனாகப் பிறந்து, அவர் செய்த தவத்தின் பலனாக, ருத்ரனைத் தரிசிக்கும் பாக்யத்தைப் பெற்றவர்.
‘தண்ணீராகவும், ஆகாயமாகவும், பூமியாகவும், நெருப்பாகவும், சூரியனாகவும், சந்திரனாகவும், காற்றாகவும் திகழ்கின்ற அந்த ருத்ரன், கெட்ட நடத்தையுள்ளவர்களால் ஒரு போதும் அணுக முடியாதவர். நல்ல நடத்தையுள்ளவர்களால் எப்போதும் அணுகக் கூடியவர். பெரிய மனதுடையவர். கருணை உடையவர்; இப்படிப்பட்ட ருத்ரன், கிருஷ்ணராகிய நாராயணனுக்குக் காட்சி அளித்தார்.

ருத்ரனை வணங்கிய நாராயணன், ‘போற்றுதலுக்குரியவரே! எல்லாத் தெய்வங்களுக்கும் தெய்வமானவரே! நான் உம்முடைய பக்தன். எனக்கு அருள் புரியுங்கள்!” என்று ருத்ரனை வெகுவாகப் போற்றித் துதி செய்தார்.
நாராயணன் காட்டிய பக்தியை மெச்சிய ருத்ரன், பெரும் மகிழ்ச்சியுற்றார். ‘மனிதர்கள், கந்தர்வர்கள், தெய்வங்கள் எல்லோரிடையிலும் பெரும் மகிமை பெற்று நீ விளங்குவாயாக! யாருடைய சக்தியைக் காட்டிலும் உன்னுடைய சக்தி மீறியதாக இருக்கும். எந்த ஆயுதமும், வஜ்ராயுதமே ஆனாலும், உன்னைத் தாழ்த்தும் சக்தி படைத்ததாக இருக்காது. என்னையே நீ எதிர்க்க நேர்ந்தாலும், என்னை விட வலிமை மிஞ்சியவனாகத் திகழ்வாய்’ என்று நாராயணனுக்கு வரமருளினார், ருத்ரன்.

இதன் பிறகு, நாராயணரின் தவத்தின் காரணமாக, ‘நரன்’ என்ற ரிஷியும் உதித்தான். அவன் தான் அர்ஜுனன். நாராயணனும், நரனும், தக்க சமயங்களில் உலக நன்மைக்காகப் பிறப்பெய்துகிறார்கள் என்ற விளக்கத்தைக் கூறிய வியாசர், அஸ்வத்தாமாவிடம், ‘அஸ்வத்தாமா! நீயும் ருத்ரனின் அம்சங்களைப் பெற்றவன் தான். நீயும் ருத்ரனை லிங்க வடிவத்தில் உளமாறப் பூஜித்து வந்திருக்கிறாய். அதனால், அவர் அம்சத்தோடு பிறந்திருக்கிறாய். லிங்க வடிவில் ருத்ரனைப் பூஜித்ததால் தான், நாராயணன் உலகிலேயே மிகவும் சிறப்புற்று விளங்குகிறார். கேசவர் தான் எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தவர். ஆகையால், கேசவரை வணங்குவது எல்லா மனிதர்களுக்கும் உயர்வைத் தரும். இது உனக்கும் பொருந்தும்.

அஸ்வத்தாமா, தெய்வத்தின் சக்தியை உணர்ந்தவனாக, கௌரவர் படையை ஓய்வெடுக்குமாறு சொல்ல, அன்றைய யுத்தம் அதோடு நின்றது.
அஸ்வத்தாமா நிலை இவ்வாறிருக்க, அர்ஜுனன், துரோணர் வீழ்த்தப்பட்ட பிறகு, ஒரு அரிய காட்சியைக் கண்டான். அதன் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. அங்கு வந்த வியாசரிடம், அவரை அணுகி, அர்ஜுனன் கேட்டான், ‘எதிரிகளை என் அம்புகளால் நான் வீழ்த்திக் கொண்டிருக்கும் போது, என் முன்னே நெருப்புக்கு ஒப்பான ஒளியுடன் ஒருவர், கையில் சூலம் ஏந்தி சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். எனக்கு முன் சென்று கொண்டிருந்த அவர் எனது எதிரிகளையெல்லாம் வீழ்த்திக் கொண்டிருந்தார். பார்ப்போர் கண்களுக்கு, நானே எல்லா எதிரிகளையும் வீழ்த்திக் கொன்று விட்ட மாதிரி தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர் எதிரிகளை வீழ்த்திக் கொண்டிருந்தார். அவருடைய கையிலிருந்த ஆயுதங்கள் புறப்பட்டுச் சென்று எதிரிகளை வீழ்த்திக் கொண்டிருந்தன. அவர் கையை விட்டு ஆயுதம் விலகவேயில்லை. இது என்ன மாயை! இது என்ன வினோதம்! எனக்கு விளக்குங்கள்’ இவ்வாறு அர்ஜுனன் வியாசரிடம் கேட்டான்.

அதற்கு வியாசர் சொன்னார், ‘மேலுலகம், ஆகாயம், பூமி ஆகிய மூன்றுக்கும் காரணமாக விளங்குகின்ற சங்கரனைத்தான் நீ போர்க்களத்தில் கண்டாய். சங்கரன் தான் இந்தப் போர்க்களத்தில் உனக்கு முன்னால் சென்று, உன் எதிரிகளை அழித்துக் கொண்டிருக்கிறார். உன் மேல் ஏற்பட்ட அன்பின் காரணமாக, உன் எதிரிகளாகிய கௌரவர் படைகளை அழிக்கும் வல்லமையை வெளிப்படுத்துகிறார். நீல நிறக் கழுத்துடைய அந்த நீலகண்டனை, அந்த ருத்ரனை வணங்குவாயாக! வரமளிக்கும் ருத்ரனை, ஒளி தரும் அந்த வேந்தனை, மலைகளில் வசிக்கும் அந்த மஹாபுருஷனை வணங்குவாயாக! திரிபுர சம்ஹாரம் செய்தவர். தக்ஷனின் யாகத்தை அழித்து, அவனுக்குப் பாடம் புகட்டியவர். எல்லா வரங்களையும் அளிப்பவர். அவருடைய மகிமையையெல்லாம் கூறுவதற்கு எனக்குத் தகுதியும் கிடையாது; சக்தியும் கிடையாது. அப்படிப்பட்ட மகாதேவரைத்தான் உனக்கு முன்னே செல்லும் புருஷனாக நீ கண்டிருக்கிறாய். அவரை லிங்க வடிவமாக வழிபடும் மனிதர்கள் வேண்டிய வரங்களைப் பெறுகிறார்கள். ருத்ரனின் பாதுகாப்பைப் பெற்ற நீ, ஒரு குறையும் இல்லாதவனாகி விட்டாய். அதுவுமின்றி கிருஷ்ணரைப் பக்கத்திலேயே தோழனாகப் பெற்று யுத்தம் செய்கிற உன்னை, யாராலும் வெல்ல முடியாது. மனக்குழப்பமற்று, கவலை நீங்கி யுத்தம் செய்வாயாக’.
இவ்வாறு வியாசர், அர்ஜுனனுக்கு ஊக்கமளித்து, விளக்கம் கூறினார். இந்த விளக்கத்தை சஞ்சயன், திருதராஷ்டிரனுக்குத் தெரிவித்தான். பதினைந்தாம் நாள் போர் முடிந்தது.

மேகலா : கிருஷ்ணா! எனக்கு உடனே மடவார்வளாகம் கோயிலுக்குப் போகணும், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : போகலாம். இந்த வாரம் போகும் போது, நானும் வருகிறேன்.

மேகலா : என் மனம் முழுக்க பரமசிவனாரின் மகிமையே நிறைந்திருக்கிறது, கிருஷ்ணா......

கிருஷ்ணர் : அப்படியா......, சரி, இத்துடன், துரோண பர்வமும் நிறைவுறுகிறது. மேலே பார்க்கலாம்.....

(அடுத்த பகுதி, ‘கர்ண பர்வத்துடன்’ ஆரம்பமாகும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2