ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 81

மேகலா : பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், பீமனுக்குக் கர்ணனைக் கொல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது, சல்யன் பீமனிடம், அர்ஜுனன் கர்ணனைக் கொல்வதாகச் சபதம் செய்ததை நினைவு படுத்தியதும், பீமன், கர்ணனைக் கொல்லாமல் விட்டு விட்டான். அதன் பிறகு வீழ்ந்து விட்ட கர்ணனைத் தேரில் சுமந்து கொண்டு சல்யன் அங்கிருந்து நகர்ந்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.

மேகலா : கிருஷ்ணா! கர்ணன் திரும்பத் திரும்ப தன்னையே புகழ்ந்து கொள்வதில் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது, இல்லையா கிருஷ்ணா?

கிருஷ்ணர் : ஆமாம்......ஆமாம்.... அவன் பெற்ற சாபங்கள், அவனுடைய திறமை மீதான நம்பிக்கையைக் குறைக்கத்தான் செய்கிறது. தன்னுடைய நம்பிக்கை, தன்னை விட்டுப் போகாமல் இருக்கும் வரை, தன்னால், தான் அறிந்த அஸ்திரங்களை இயக்க முடியும் என்பது அவனுடைய கணிப்பு.....

மேகலா : சல்யன் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நன்றாகச் செய்கிறான் கிருஷ்ணா......! எனக்கே எரிச்சல் வருகிறது....

கிருஷ்ணர் : சரி....., அடுத்து என்ன, பார்ப்போம்....

பாண்டியனின் பராக்கிரமும் வீழ்ச்சியும்

மேகலா : யுத்த களத்து நிகழ்ச்சிகளை, திருதராஷ்டிரனுக்கு, சஞ்சயன் விவரித்துக் கொண்டிருந்தான். திருதராஷ்டிரன், ‘கர்ணன் ஒரு வேளை பாண்டவர் படையை அழிக்கும் வீரம் படைத்தவன் என்று துரியோதனன் கூறினானே, இப்பொழுது பீமன் கர்ணனை வென்று விட்டான். துரியோதனன் என்ன செய்தான், சஞ்சயா?” என்று கேட்டவுடன், சஞ்சயன் விவரிக்கத் தொடங்கினான்.

பீமனிடம், கர்ணன் புறங்காட்ட நேரிட்டதைக் கண்ட துரியோதனன், தன்னுடைய தம்பிமார்களை அழைத்து, கர்ணனுக்கு உதவியாகச் சென்று, அவனைக் காப்பாற்றுமாறு உத்தரவிட்டான்.
துரியோதனனின் தம்பிமார்களை, பீமன் கொன்று குவிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட கர்ணன், பீமனை எதிர்க்க முனைந்தான். அவர்களுக்கிடையே மற்றொரு பெரும் யுத்தம் தொடங்கியது. இரு தரப்பிலும் யாருமே மிஞ்ச மாட்டார்கள் என்னும் அளவுக்கு கோரமான யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

மற்றொரு புறத்தில் அர்ஜுனன் ஸம்சப்தர்களோடு போர் புரிந்து கொண்டிருந்தான். ஆயிரக்கணக்கில் வீரர்களையும், யானைகளையும் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.

இப்படிப்பட்ட நேரத்தில், அஸ்வத்தாமா, யுதிஷ்டிரனை எதிர்ப்பதில் முனைந்தான். அவனிடம் சிக்கி, யுதிஷ்டிரர் படும் துன்பத்தைக் கண்டு சாத்யகி, மற்றும் திரௌபதியின் மகன்கள், பாஞ்சாலர்கள், அஸ்வத்தாமாவை எதிர்க்க முன்வந்தார்கள். அஸ்வத்தாமாவிடம், பாண்டவ சைன்யம் சிக்கித் தவித்தது. இறுதியில், யுதிஷ்டிரர் தன்னுடைய படையுடன், அந்த இடத்திலிருந்து விலகி விட்டார்.

மற்றொரு புறத்தில் கர்ணனுக்கும் பீமனுக்கும் இடையே யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கர்ணன், பாண்டவப் படையினுள் புகுந்து நாசத்தை விளைவித்துக் கொண்டிருந்தான். பீமன், கர்ணனை விட்டு விட்டு, கௌரவ சேனையில் நாசம் விளைவிக்க, அதனுள் நுழைந்தான். துரியோதனன், நகுலன், சகாதேவன், திருஷ்டத்யும்னனுடன் யுத்தம் செய்தான். இறுதியில், திருஷ்டத்யும்னனால் வெல்லப்பட்ட துரியோதனன், அங்கிருந்து விலகினான். இதைப் பார்த்த கர்ணன், மிகவும் கோபமுற்று, திருஷ்டத்யும்னனை எதிர்க்க முன்வந்தான். அவனோடு சேர்ந்து கர்ணனை எதிர்க்க வந்த பாஞ்சால வீரர்களைக் கர்ணன் கொன்று குவித்தான்.

இப்படிப் பயங்கரமான போர் புரிந்து கொண்டிருந்த கர்ணன், யுதிஷ்டிரனை எதிர்க்கச் சென்றான். இதைக் கண்ட பாண்டவ தரப்பு வீரர்கள், யுதிஷ்டிரனைப் பாதுகாப்பதற்காக, அவனைச் சூழ்ந்து கொண்டனர். இந்த நிலையைக் கண்ட பீமனும், கர்ணனை எதிர்ப்பதில் முனைந்தான். மீண்டும் பயங்கரனானதொரு யுத்தம் உண்டாயிற்று. அதில், துரியோதனன் சேனை, பீமனால் முழுவதுமாகக் கலக்கப்பட்டது.

அப்போது, அர்ஜுனனுக்கு, கர்ணனின் யுத்தம் அவனுடைய கவனைத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தது. அவன் கிருஷ்ணரைப் பார்த்து, ‘வாசுதேவரே, கர்ணன் பகைவர்களையெல்லாம் பொசுக்கி விடக் கூடியவன். ஆகையால் இப்போது அவனை எதிர்ப்பது தான் நாம் செய்ய வேண்டிய காரியம் என்று நான் கருதுகிறேன்’ என்று கூறவும், கிருஷ்ணர், புன்சிரிப்புடன், ‘அர்ஜுனா! உன் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக’ என்று கூறித் தேரைக் கர்ணன் இருக்கும் திசையை நோக்கித் திருப்பினார்.
அப்பொழுது, கர்ணன், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவரும் செய்த யுத்தத்தின் காரணமாக, பெரும் அழிவு ஏற்பட்டது. அர்ஜுனன், ஸம்சப்தர்களைக் கொன்றான்; பீமன் கௌரவர்களைக் கொன்றான்; கர்ணன், பாஞ்சாலர்களைக் கொன்று குவித்தான்.

அர்ஜுனனுடைய போர்த் திறமையைப் பார்த்த அஸ்வத்தாமா, அர்ஜுனனைப் பார்த்து, ‘வீரனே, உன்னுடைய யுத்தம் என்பது தான் நீ எனக்கு அளிக்க வேண்டிய விருந்து’ என்று அறைகூவல் விடுத்தான்.
இதைத் தொடர்ந்த யுத்தத்தில், அஸ்வத்தாமாவினுடைய வில்லின் நாண் கயிறானது, மின்னல் போல ‘பளீர் பளீர்’ என மின்னியது. வியக்கத்தக்க முறையில் யுத்தம் புரிந்து கொண்டிருந்த அஸ்வத்தாமாவைக் கண்டு, அர்ஜுனன் கூட ஸ்தம்பித்து நின்றான். அர்ஜுனனின் கை தாழ்ந்தது; அஸ்வத்தாமாவின் கை ஓங்கியது.

யுத்தத்தின் போக்கைக் கண்டு கிருஷ்ணர், கோபம் கொண்டார். உன்னுடைய ஆச்சார்யராகிய துரோணரின் மகன் அஸ்வத்தாமா என்பதால், அவனிடம் நீ கருணை காட்டுகிறாயோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. கருணை காட்டக் கூடிய இடம் யுத்த களம் அல்ல. உன் திறமையைக் காட்டி அஸ்வத்தாமாவை வீழ்த்துவாயாக’ என்று கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்துக் கூறினார்.

‘நான் இந்த அஸ்வத்தாமாவைக் கொல்லாமல் விடப் போவதில்லை’ என்று கூறி, அர்ஜுனனும் யுத்தத்தில் தீவிரமாக முனைந்தான். அப்போது அவ்விருவருக்குமிடையே நடந்த யுத்தத்தை மற்ற வீரர்களும் மெய் மறந்து பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

இறுதியில், அர்ஜுனனுடைய போர்த் திறனை சகிக்க முடியாமல், அஸ்வத்தாமா தன்னுடைய தேரை அந்த இடத்திலிருந்து விலக்கிக் கொண்டான்.

அந்த நிலையில், கௌரவர் சேனையில் பெரும் அழிவை விளைவித்துக் கொண்டிருந்த மற்றொரு அரசன் - பாண்டிய மன்னனாவான். பாண்டியன் அந்த யுத்தத்தில் பெரும் சாகசங்களைப் புரிந்தான். ஆயுள் முடியும் நேரம் நெருங்கி விட்டவர்களை, யமன் ஒரே கணத்தில் கொல்வது போல, பாண்டியன் கௌரவ சேனையில் பல வீரர்களைக் கொன்று குவித்தான்.
அவனுடைய செயல் திறனைக் கண்ட அஸ்வத்தாமா, அவனுடன் போர் செய்ய விரும்பி, ‘முக்கண்ணனை ஒரு காலத்தில் அந்தகன் என்ற அசுரன் தனி ஒருவனாக எதிர்த்தான். அது போல இப்போது நீ என்னை எதிர்த்து வருவாயாக’ என்று கேட்டுக் கொண்டான். இதைக் கேட்ட பாண்டியன், ‘அவ்விதமே ஆகட்டும்’ என்று கூறி அஸ்வத்தாமாவை எதிர்த்தான். இருவருக்குமிடையே பயங்கரமான யுத்தம் ஏற்பட்டது. பாண்டியன் அதிசயப் போர் புரிந்தான். அஸ்வத்தாமாவின் கிரீடம், பாண்டியனால் அறுத்து எறியப்பட்டது.

இறுதியில், பாண்டிய மன்னனின் இரு கைகளும், தலையும் அஸ்வத்தாமாவினால் வெட்டிக் கீழே தள்ளப்பட்டன.
பாண்டியன் கொல்லப்பட்ட பிறகு, கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, ‘இந்த யுத்தம் சீக்கிரமாகவே முடிக்கத் தக்கது’ என்பதை அர்ஜுனனுக்கு வலியுறுத்தினார்.

மேலும் யுத்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2