ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 84
சண்டையும், சமாதானமும்
கிருஷ்ணர் சொன்னார், ‘அர்ஜுனா, தருமபுத்திரன் வேண்டுமென்றே உன்னைக் கோபிக்கவில்லை. உனக்குக் கோபத்தைத் தூண்டி விட்டால், நீ கர்ணனைக் கொல்வதில் மேலும் முனைவாய் என்பதற்காகவே, அவர் உன்னைப் பார்த்து, சுடுசொற்களைப் பயன்படுத்தினார். கர்ணன் ஒருவன் கொல்லப்பட்டால் போதும், கௌரவப் படைகளை முழுவதுமாக தோற்கடித்து விடலாம் என்பது, யுதிஷ்டிரரின் எண்ணம். நீ அவர் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை. தருமபுத்திரரையும் கொல்லாமல், நீயும் உன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஒரே வழி தான் இருக்கிறது.
‘நீ என்ன செய்தால், அவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவராகக் கருதப்படுவாரோ , அந்தக் காரியத்தை நீ செய்ய வேண்டும்.
‘அர்ஜுனா! ஒரு மனிதன் கௌரவத்துடன் வாழும் போது தான், அவன் உயிருடன் இருப்பதாகக் கருதப்படுவான். கௌரவம் இழந்து பெரிய அவமானத்தை ஒரு மனிதன் சந்திக்கும் போது, அவன் இறந்தவனாகவே நினைக்கப்படுகிறான். அப்படிப்பட்ட கௌரவம் பெற்று வாழும் தருமனை, நீ ஏக வசனத்தில் ‘நீ’ என்று அழைத்துப் பேசி விட்டால், அவர் கௌரவம் இழந்து, அதனால் உயிர் இழந்தவராகவே கருதப்படத் தக்கவராவார். நீயும் உன் சபதத்தை நிறைவேற்றியவனாவாய்; தருமரும் உயிரோடிருப்பார்.
கிருஷ்ணரின் யோசனையை ஏற்று, அர்ஜுனன், யுதிஷ்டிரரைப் பார்த்து பேசத் தொடங்கினான். ‘போர்க்களத்திலிருந்து வெகு தூரம் விலகியிருக்கும் ’நீ’ என்னைப் பற்றிப் பேச அருகதையற்றவன் என்பதை முதலில் தெரிந்து கொள்.
‘கௌரவர் தரப்பின் மிகப் பெரிய வீரர்களையெல்லாம் எதிர்த்துப் போராடும் திருஷ்டத்யும்னன் - அவன் என்னைப் பேசத் தகுதியுடையவன் - ‘நீ’ அந்தத் தகுதி இல்லாதவன்.
‘செயற்கரிய செயல்களை யுத்த களத்தில் செய்து கொண்டிருக்கிறானே பீமன், அவன் என்னைப் பேசத் தகுதியுடையவன்; ‘நீ’ அந்தத் தகுதி இல்லாதவன்.
‘பகைவர்களை அடக்கும் பீமன் என்னை நிந்திக்கட்டும். பகைவர்களிடமிருந்து பலரால் காப்பாற்றப்படும் உனக்கு அந்தத் தகுதி கிடையாது.
‘உயிரில் ஆசையை விட்டுப் போர் புரிந்து கொண்டிருக்கிறார்களே, நகுல, சகாதேவர்கள், அவர்கள் என்னை நிந்திக்கட்டும்; நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அவர்களோ உன்னை மாதிரி பேசத் துணியவில்லை. ஆனால், நீயோ வீரனல்ல; கோழை; நீ எப்படி என்னை நிந்தித்துப் பேசலாம்.....?
‘உனக்கு எது இஷ்டமானதோ, அதை நிறைவேற்றவே என் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், உன்னை என்னால் திருப்தி செய்ய முடியவில்லை என்றால், நீ யாராலும் திருப்தி செய்ய முடியாத பேராசைக்காரன். உன்னால்தான் நாங்கள் காட்டில் வாழ நேர்ந்தது. உன்னால்தான் நாங்கள் ராஜ்ஜியத்தை இழந்தோம். என் மகன் அபிமன்யுவை இழந்தேன்.
‘நன்றி மறந்தவனே, நீ சூதாடியதால் அல்லவா, நமக்கு இந்தக் கதி நேர்ந்திருக்கிறது. உன்னால் இழக்கப்பட்ட ராஜ்ஜியத்தை எங்கள் மூலமாகத் திரும்பப் பெற விரும்புகிறாய். உனக்கு வெட்கமாக இல்லையா....?
‘சூதாடுவதனால் வரும் கேட்டினை சகாதேவன் முதற்கொண்டு எல்லோரும் எடுத்துச் சொன்னதை நீ கேட்கவில்லை. அதனால்தான் நாங்கள் நரகவாழ்க்கையை அனுபவித்தோம்.
‘பீஷ்மரிடமே நேரில் சென்று, சிகண்டியின் மூலமாகத்தான் தான் கொல்லப்பட முடியும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டவன் நீ. உனக்காக அல்லவா அவர் வீழ்ந்தார்? துரோணரிடம் பொய்யைக் கூறியவன் நீ. அதனால்தான், திருஷ்டத்யும்னனால், துரோணரைக் கொல்ல முடிந்தது. உன்னுடைய இந்தச் செயலால், எனக்கு ராஜ்ஜியத்தை மீண்டும் அடைவதில் கூட விருப்பம் நீங்கி விட்டது. மீண்டும் உன்னுடைய அற்ப புத்தியால் வாய் பேசி, என்னைக் கோபமடையச் செய்யாதே’ என்று யுதிஷ்டிரரைப் பார்த்துக் கோபமாகப் பேசிய அர்ஜுனன், கத்தியை மீண்டும் உருவினான்.
இதைப் பார்த்த கிருஷ்ணர், ‘அர்ஜுனா! இப்பொழுது எதற்காகக் கத்தையை எடுக்கிறாய்?’ என்று கேட்டார்.
பெரும் துக்கத்தில் ஆழ்ந்த அர்ஜுனனோ, ‘யுதிஷ்டிரரைப் பார்த்து இவ்வளவு கடுமையாகப் பேசிய பிறகு, நான் உயிர் வாழ விரும்பவில்லை. என் தலையை நானே வெட்டிக் கொள்ளப் போகிறேன்’ என்று கூறினான்.
இதைக் கேட்ட கிருஷ்ணர், ‘அர்ஜுனா, சற்று நில். இப்பொழுது உன்னை நீயே புகழ்ந்து பேசுவாயாக! அப்படித் தற்புகழ்ச்சி செய்து கொண்டால், நீ இறந்தவனுக்குச் சமமாவாய்’ என்று கூறினார்.
தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது, தற்கொலைக்குச் சமானமாகும் என்று கிருஷ்ணர் எடுத்துக் காட்டியவுடன், தற்புகழ்ச்சியில் இறங்கினான், அர்ஜுனன். ‘’பினாகம்’ என்ற வில்லை உடைய பரமசிவனைத் தவிர, எனக்குச் சமமான வில்லாளி வேறு ஒருவன் கிடையாது. உமக்காகவே பல வெற்றிகளை நான் ஈட்டினேன். நீர் ‘ராஜசூய யாகம்’ நடத்த வேண்டும் என்பதற்காகவே, பல மன்னர்களை நான் தோற்கடித்தேன். இப்பொழுது, கர்ணனைக் கொல்வதில் முனையப் போகிறேன். அவனை நாசம் செய்வேன்’.
இப்படிப் பேசிய அர்ஜுனன், அதன் பிறகு, யுதிஷ்டிரனை வணங்கி நின்று, ‘என் மீது கருணை காட்ட வேண்டும். நான் செய்த பிழைகளைப் பொறுக்க வேண்டும். உமக்கு எது மகிழ்ச்சியைத் தருமோ, அதை நான் செய்கிறேன். கர்ணனைப் போரில் நான் கொல்வேன், அல்லது கர்ணனால் நான் கொல்லப்படுவேன். இது நிச்சயம்’.
அர்ஜுனன் பேசி முடித்த பிறகு, தருமபுத்திரன் எழுந்து, ‘அர்ஜுனா! நீ சொல்லியது போல் என்னால் உங்களுக்கெல்லாம் துன்பம் தான் நேரிட்டிருக்கிறதே தவிர, நல்லது எதுவும் நிகழவில்லை. நான் இழிவானவன். பாவி, பிறரை அவமதிப்பவன். என்னை உடனே கொன்று விடு. நீ என்னைக் கொல்லாவிட்டால், இப்பொழுதே நான் காட்டுக்குப் போய் விடுகிறேன். இவ்வளவு தூரம் அவமதிக்கப்பட்ட நான் இனி உயிர் வாழ விரும்பவில்லை’ என்று கூறிய தருமபுத்திரர், காட்டிற்குப் புறப்படத் தயாரானார்.
தருமனின் நிலையைக் கண்ட கிருஷ்ணர் சொன்னார், ‘யுதிஷ்டிரரே! காண்டீபத்தை வேறு ஒருவரிடம் கொடுக்கச் சொல்லி யாராவது அர்ஜுனனிடம் பேசினால், அவர்களைக் கொல்ல வேண்டும் என்பது அர்ஜுனனுடைய சபதம்.
(மேலும் பல சமாதானங்களைக் கூறி, கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்குப் புரிய வைக்கிறார். அதைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்)
Comments
Post a Comment