ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 104

 மேகலா : கிருபர் கூறிய நல்ல வார்த்தைகளை ஏற்க மறுத்தான் அஸ்வத்தாமா. ‘தர்மத்தின் பாதை பற்றிய உங்கள் விளக்கங்கள் சரியானவையே. ஆனால், ஒன்றை மறந்து விட்டீர். தர்மத்தின் அணை பாண்டவர்களால் தான் முதலில் உடைக்கப்பட்டது. அதனால் தான் இந்த யுத்த களத்தில் அநீதி மிகுந்து விட்டது. தர்மத்தின் அணையை உடைத்தவர்களே, இந்த அநீதிகளைத் தாங்க வேண்டியவர்கள். நீர் ஏன் அவர்கள் செய்த இழிசெயல்களை நிந்திக்காமல் இருக்கிறீர்? என்னைப் பொறுத்த வரையில் அவர்களையெல்லாம் நான் பழிக்குப் பழி வாங்காமல் விடப் போவதில்லை. இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தி, அவர்கள் உறங்கும் நேரத்தில், அவர்களைக் கொன்று விடப் போகிறேன்’.

இவ்வாறு கூறிய அஸ்வத்தாமா, ரதத்தில் ஏறி அமர்ந்து, பாஞ்சாலர்களின் பாசறையை நோக்கிப் புறப்படுவதற்குத் தயாரானான். அப்பொழுது கிருபர், கிருதவர்மா இருவரும், ‘சுகமோ, துக்கமோ எதுவாயிலும் நம் மூவருக்கும் சமமே!’ என்று கூறி, அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

பாஞ்சாலர்களின் பாசறை வாயிலில் அவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மிகவும் பயங்கரமான ஒரு உருவம், நெருப்பைக் கக்கிக் கொண்டு, யாராலும் அணுக முடியாத வகையில் பாசறைக்குப் பாதுகாப்பு அளிப்பதை அஸ்வத்தாமா கண்டான்.

பாஞ்சாலர்களின் பாசறையைக் காத்து நின்ற அந்த பூதத்தை அழித்து விடும் நோக்கத்தோடு, அதன் மீது ஆயுதங்களை அஸ்வத்தாமா ஏவத் தொடங்கினான். அஸ்வத்தாமாவின் ஆயுதங்கள் அந்த பூதத்தின் மேல் பட்டு அழிந்து போயின. தன்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் வீணாகிப் போனதும், என்ன செய்வது என்று தெரியாமல், நாலாபுறமும் நோக்கினான். அப்போது சற்றும் இடைவெளி இல்லாமல் ஆகாயம் முழுவதும் பல கிருஷ்ணர்களால் நிரப்பப்பட்டது போன்ற தோற்றத்தை அவன் கண்டான். வியக்கத்தக்க இந்தக் காட்சி, அவனுடைய நம்பிக்கையைத் தகர்த்தது. அவனுடைய மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. நல்ல நண்பர்களின் அறிவுரைகளைக் கேட்காதவர்கள் பேராபத்தை அடைவார்கள் என்பது உண்மையாகிப் போயிற்று. இதையும் கருத்தில் கொண்டு, ‘நான் நினைத்த காரியத்தையும் முடிப்பதில் உறுதியாய் இருக்க வேண்டும் என்றால், இந்த பூதத்தைக் கடக்காமல் முடியாது. வெறும் மனித முயற்சியால் ஆகும் காரியம் எதுவும் கிடையாது. ஆகையால், நான் முக்கண் முதல்வனை, சடைமுடி கொண்டவனை, உமையாள் மணாளனை, அந்த சிவபெருமானை சரணடையப் போகிறேன்’ என்ற முடிவுக்கு வந்து, பரமசிவனை நோக்கித் துதி செய்யத் தொடங்கினான்.

”என்றும் நிலைத்திருப்பவரே! மங்கள உருவம் படைத்தவரே! கைலாய மலையில் வசிப்பவரே! வேண்டும் வரங்களை அள்ளித் தருபவரே! நீல கண்டரே! தக்ஷனுடைய யாகத்தை அழித்தவரே! எல்லோருக்கும் ஈஸ்வரரே! உம்மை நான் சரணடைகிறேன். தபஸ்விகளுக்கெல்லாம் நீரே கதி! உலகங்களைச் சிருஷ்டிப்பவரும் நீரே! அழிப்பவரும் நீரே! உயர்ந்தவர்கள் எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவர் நீரே! அப்படிப்பட்ட உயர்ந்தவரான உம்மை நான் சரணடைகிறேன். என்னால் கடக்க முடியாத பேராபத்தை நான் இப்போது சந்தித்திருக்கிறேன். உமது கருணை கிட்டினால் தான், இந்தக் காரியத்தை என்னால் நிறைவேற்ற முடியும். ஈஸ்வரரே! சர்வபூதோபஹாரத்தினால் உம்மை பூஜிக்கப் போகிறேன். ஐம்பூதங்களாகிய காற்று, நீர், அக்னி, அண்டவெளி, நிலம் இவை யாவும் அடங்கிய என்னுடைய சரீரத்தையே உமக்கு பலியாகக் கொடுத்து விடுகிறேன்” என்று அஸ்வத்தாமா சிவனைத் துதி செய்து, தன்னையே பலி கொடுக்கத் தயாராகிய பொழுது, அவன் எதிரில் பொன்னிறமான மேடையும், அதன் மீது கொழுந்து விட்டு எரியும் அக்னியும் தோன்றியது. அதைச் சுற்றிலும் சிவகணங்கள் தோன்றின. அஸ்வத்தாமா தன்னுடைய கைகளைக் குவித்துக் கொண்டு, ‘ஈஸ்வரனே! துரோணரின் மகனாகிய, இந்த அஸ்வத்தாமா என்ற பெயருடைய நான், இப்பொழுது இந்த அக்னியில் என்னை ஹோமமாக அர்ப்பணிக்கிறேன். என்னைப் பலியாக ஏற்றுக் கொள்ளும்’. இவ்வாறு சொல்லி விட்டு அஸ்வத்தாமா தீயில் விழப் போகும் அந்த நேரத்தில், அவன் முன்னே பரமசிவனார் காட்சியளித்தார்.

அஸ்வத்தாமாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ஈஸ்வரன் பேசலுற்றார். ‘போற்றுதலுக்குரிய உயர்ந்த செயல்களையே புரியும் கிருஷ்ணனால், தூய்மை, தவம், பக்தி ஆகியவற்றுடன் மனம், சொல், சரீரம் ஆகியவை ஒருங்குபட நான் பூஜிக்கப்பட்டிருக்கிறேன். கிருஷ்ணனை விட எனக்கு இனிமையானவன் வேறு எவனும் கிடையாது. ஆகையால், அந்தக் கிருஷ்ணனுக்கே நல்லவையெல்லாம் விளைந்தன. கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டவர்கள் மடிய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது’. இவ்வாறு கூறிய ஈஸ்வரன், தன்னுடைய சக்தியின் ஒரு அம்சத்தை அஸ்வத்தாமாவிடம் பிரவேசிக்கும்படி செய்தார். மிகச் சிறந்த ஒரு வாளையும் அஸ்வத்தாமாவிடம் அவர் கொடுத்தார். இப்படி ஈஸ்வரனின் அருளைப் பெற்ற அஸ்வத்தாமா, ஒளி வீசிக் கொண்டு திகழ்ந்தான்.

புதியதோர் சக்தி படைத்தவனாக அஸ்வத்தாமா, கிருபரையும், கிருதவர்மாவையும் அணுகி, ’உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பாஞ்சாலர்கள் கூட்டத்தை நாம் வீழ்த்துவது மிகவும் எளிதான காரியமே! இவர்களுடைய பாசறைகளில் புகுந்து, நான் எமனைப் போல் தாண்டவமாடப் போகிறேன்’ என்று சொல்லி, கிருபரையும், கிருதவர்மாவையும் பாசறையின் ஒரு வாசலில் நிறுத்தி விட்டு, அஸ்வத்தாமா அந்தப் பாசறையின் வேறு வாயில் வழியாக உள்ளே நுழைந்தான்.

பாசறையினுள் நுழைந்து, திருஷ்டத்யும்னன் எங்கே படுத்திருக்கிறான் என்பதைத் தேடிப் பார்த்து, அந்த இடத்தை அஸ்வத்தாமா அடைந்தான். உறங்கிக் கொண்டிருந்த திருஷ்டத்யும்னன் அருகில் வந்து நின்று, அவனைத் தன் காலால் எட்டி உதைத்தான்.

பெரும் பலம் கொண்ட வீரனாகிய திருஷ்டத்யும்னன் தூக்கம் கலைந்து எழுந்தான். அஸ்வத்தாமா மிகவும் கோபம் கொண்டவனாகத் தன் எதிரே நிற்பதை திருஷ்டத்யும்னன் பார்த்தான்.

மேகலா : யோசித்து யோசித்து யாரும் நினைக்காத முடிவை எடுத்திருக்கிறான் கிருஷ்ணா! பெரியோர்கள் சொல்வதைக் கேளாததன் பலன் என்னவாகும் என்று இவன் இன்னும் ஒரு முறை நிரூபிக்கிறான். இவன் தவமிருந்து சிவபெருமானாரை அழைத்தது இதற்குத்தானா?

கிருஷ்ணர் : பாவத்தை அழிக்கும் கடவுளை அழைத்து விட்டோம்; இனி நாமே கடவுளின் ஒரு அம்சம் தான் என்று நினைத்ததன் விளைவுதான் இந்த கோரத் தாண்டவம். இவன் நரம்பை உருவும் வரை இவன் வெறியாட்டம் தொடரத்தான் செய்யும். அடுத்து நடக்கப் போவதை நீ சொல்லு….

அடுத்து, துரியோதனன் உயிர் துறக்கும் காட்சியோடு அடுத்த பகுதியைத் தொடங்கலாம்….

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1